கருத்து வேறுபாடுகள் அண்ணாவின் அன்பிற்குக் குறுக்கே ஒருபோதும் நின்றதில்லை என்பதை விளக்க ஒரு நிகழ்ச்சி.
ஒரு சமயம் அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது கம்பராமாயணத்தை எரித்தது பற்றி பேச்சு வந்தது. அதை நான் வன்மையாகக் கண்டித்தேன். அவர் எழுதிய "கம்பரசம்' என்ற புத்தகத்தையும் கடுமையாக விமர்சித்தேன். மேல்நாட்டுக் கவிஞர்கள் காமச்சுவையே கலக்கவில்லை என்றும், கம்பன் மட்டும்தான் அப்படி எழுதி இருப்பதாகவும் அந்தப் புத்தகத்தில் அண்ணா குறிப்பிட்டிருந்தார். அவர் மேற்கோள் காட்டியுள்ள ஆங்கிலக் கவிஞர் ஒருவர் காமச்சுவை கலந்து எழுதியிருப்பதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அண்ணா சொன்னார்:
""பெரியார் கம்பராமாயணத்தைக் கொளுத்தச் சொல்லிவிட்டார். நான் ஒரு வக்கீல் போல அவர் கட்சியை ஆதரித்து அதற்குத் தேவையான வாதங்களைச் சொல்லியிருக்கிறேன். ஒரு வக்கீல் எதிர்க்கட்சி நியாயங்களையும் எடுத்துச் சொல்வார் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்?'' எனக் கேட்டார்.
அதற்குப் பிறகு அவர் எனக்குச் சொன்ன ஆலோசனைதான் முக்கியமானது. ""உனக்குத் தமிழில் நல்ல சொல்லாட்சி ஏற்பட வேண்டுமானால் கம்பராமாயணத்தையும் திருவாசகத்தையும் நன்றாகப் படி'' என்று அண்ணா சொன்னார்.
அரசியல்வாதி அண்ணாவை விட இலக்கியவாதி அண்ணா எந்த விதத்திலும் உயர்ந்தவராகவே எனக்குத் தென்படுகிறார். பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றி பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் பிரைல்ஸ் ஃபோர்டு ""அரசியலுக்கு நேருவால் ஏற்பட்ட லாபம் இலக்கியத்திற்கு நஷ்டமாக முடிந்துவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனம் அண்ணாவுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
("திரும்பிப் பார்க்கிறேன்' என்ற நூலில் பி.சி.கணேசன்)
எப்பொழுதுமே ஜெமினியின் படங்களுக்கு மட்டும் நடிகர்களின் கால்ஷீட் வெளிப்படங்களை விட சற்றுக் கூடுதலாகவே தேவைப்படும். அதற்கு ஏற்றவாறு சம்பளமும் தரப்படும். அவர் (எஸ்.எஸ்.வாசன்) என்றைக்குமே சமரசத் தயாரிப்பாளர் அல்லர்.
ஒருமுறை, "இரும்புத்திரை' அல்லது "மோட்டார் சுந்தரம்பிள்ளை' என்று நினைவு, ஒரு காட்சியில் சிவாஜிகணேசன் நடிக்கிறார், நடிக்கிறார், நடித்துக்கொண்டே இருக்கிறார்!
அந்த ஷாட்டைத் திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள், எடுக்கிறார்கள், எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இறுதியில் பொறுமை இழந்த சிவாஜிகணேசன் ""இந்த டேக்காவது ஓ.கே. ஆகுமா?''
இதற்கு வாசன் சொன்ன பதில்:
""மிஸ்டர் சிவாஜி கணேசன்! நீங்க பெரிய நடிகர், அதில் சந்தேகம் இல்லை. இது மிகப் பெரிய ஸ்டுடியோ, அதிலேயும் எந்த சந்தேகமும் இல்லை. நீங்க எத்தனை தடவை வேணுமின்னாலும் நடிக்கக் கூடியவர். நாங்க எத்தனை டேக் வேணுன்னாலும் எடுக்கக் கூடியவங்க. எத்தனை தடவைங்கறது முக்கியமில்லை. என்ன ரிஸல்டுங்கறதுதான் முக்கியம். உங்களுக்கு டயர்டா இருந்தா சொல்லுங்க. இதோட பேக்-அப் பண்ணிட்டு, நாளைக்கு எடுத்துகிடுவோம்''
இதற்கு சிவாஜி சொன்ன பதில்:
""ஸாரி, என்னும் எத்தனை டேக் வேணுமின்னாலும் எடுத்துக்கலாம். நான் ரெடி''
இந்த விவரத்தை சிவாஜியே ஒருநாள் என்னிடம் சொல்லி, ""நம்ம ஊரு அய்யரு ரொம்பப் பொல்லாதவருப்பா!'' என்று சிரித்தார்! தன்னைப் போலவே வாசனும் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதால் அப்படி நம்ம ஊர் அய்யர் என்று உரிமையும் உறவும் கொண்டாடினார் சிவாஜி!
("எம்.ஜி.ஆர்- சிவாஜி என் இரு கண்கள்' என்ற நூலில் ஆரூர்தாஸ்)
இராமனுக்குப் "பெருமாள்' என்று பெயர். அந்தப் பெருமாளே பூஜித்து வந்ததால் "பெரிய பெருமாள்' எனப் பெயர் பெற்றவர் ஸ்ரீ ரங்கநாதர்.
ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கும் அழகே தனி. தென்திசைக்கும் திருமுகம். வடதிசைக்கு முதுகு. மேற்கே தலை. கிழக்கே பாதம் என்று படுத்திருக்கிறார். விபீடணன் வேண்டியதால் தென் திசை இலங்கை நோக்கிப் படுத்தார் என்பதால்-
"குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கி'
என்று அருளினார் ஆண்டவனில் ஆழ்ந்த ஆழ்வார்.
ஆனால் ஆழ்வாரில் ஆழ்ந்த உரையாசிரியர்களோ தென்திசை நோக்கிய திருக்கோலத்துக்கு வேறு காரணம் கண்டார்கள். முரட்டு சமஸ்கிருதம் வழங்கும் வடதிசைக்கு முதுகு காட்டி, ஆழ்வார்களின் ஈரத்தமிழ் நடைபோடும் தென்திசைக்கு முகம் காட்டினார் என்று அனுபவித்தார்கள். முதுகு காட்டுவதைவிட முகம் காட்டுவதே மரியாதை என்பதால், தமிழுக்குத் தலை வணங்கும் பெருமாளாக இதனை உணர்ந்தனர். மதுரகவி ஆழ்வார் நீங்கலாக மற்றைய பதினோரு ஆழ்வார்களும் பாடிப் பரிகசித்த பதி இந்தத் திருவரங்கம். கடல் நிறக்கடவுள் எந்தை காவிரிக் கரையில் கை வைத்துப்படுத்தது இந்தத் தமிழ்த் தாகம் தணிவதற்குத்தான்...
("ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம்' என்ற நூலில் சுகி.சிவம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுக்கு அழைப்பாணை

பிகாா் இளைஞா்களை கடத்தி வேலைக்கு சோ்த்துவிட்டு பணம் பறித்த 4 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது

மருத்துவரிடம் நகை, பணம் அபகரிப்பு: திருச்சி சிவா எம்.பி. மகள் மீது புகாா்

மோட்டாா் சைக்கிளில் சாகசம்: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



