கூட்டணிக்கு ஆதரவு
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகள் முந்தைய தேர்தலைவிட 10% குறைந்திருப்பது திமுக ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியே. 2021சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக வாக்கு வித்தியாசமே வெறும் 3%தான். திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி போதும். இன்றைய அரசியல் சூழலில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறும் நிலையில் இல்லை. கூட்டணி ஆட்சியை மத்தியில் வரவேற்கிற மக்கள், மாநிலத்திலும் வரவேற்கும் சூழல் உருவாகி வருகிறது.
சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.
தனிப்பட்ட ஆசை
தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அவரது தனிப்பட்ட ஆசை. ஒவ்வொரு கட்சியும் அடுத்த ஆட்சி தங்களதுதான் என்று வசனம் பேசுவது அரசியல் களத்தில் நடப்பதுதான். அரசியல் கட்சிகள் தங்களது பலம், பலவீனம் என்ன என்பது பற்றி யோசிப்பது இல்லை. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை மறந்துவிட்டார்கள்.
மா. பழனி, கூத்தப்பாடி.
தவறல்ல...
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவினர் "நாளை நமதே, நாற்பதும் நமதே' எனும் கோஷத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டனர். ஆனால், முடிவு வேறு மாதிரியாக அமைந்தது. தேர்தல் வருமுன்பே இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பிரசாரம் செய்வது இயல்பே. ஆனால் தேர்தலுக்குப் பின்தான் உண்மை நிலவரம் தெரியவரும். என்றாலும் அமித் ஷாவின் எதிர்பார்ப்பு தவறல்ல.
கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.
மக்கள் கையில்...
அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா கூறவில்லை. பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் கூறினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களின் கடந்தகால வரலாற்றில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்பது நிரூபணமான ஒன்றாகும். தமிழக மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தனிக்கட்சி ஆட்சிக்கே தெளிவான முடிவை அளித்துள்ளனர். மேலும், தேசிய கட்சிகளின் ஆட்சியை தமிழக மக்கள் நிராகரித்து வந்துள்ளனர் என்பது உண்மை.
செய்யது முகம்மது, மேலப்பாளையம்.
தேர்தல் வியூகம்
எந்த ஒரு அரசியல் கட்சியின் உயர்நிலைத் தலைவர்களும், தங்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கும், நம்பிக்கையூட்டுவதற்கும் இதுபோல பேசுவது வாடிக்கைதான். ஆனால், அமித் ஷா போன்ற தேர்ந்த வியூக வகுப்பாளர் சொல்லும்போது அதிக கவனம் பெறுகிறது. இது, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உயர்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தலைவர்களை கூட்டணியின் தலைமையான திமுகவிடம் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை கேட்கத்தூண்டும். திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும்.
ஜெயந்திநாதர், கரூர்.
எடுபடாது
கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறினாலும் தனித்தே ஆட்சி என அதிமுகவினர் கூறிவருவதும் முரண்பாடான தகவலாக உள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் முழுவடிவம் பெறவில்லை. 1967-இல் முதன்முதலாக காங்கிரசை வீழ்த்த முன்னாள் முதல்வர் அண்ணா கூட்டணி அமைத்தபோது திமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைத்தது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெறும், எந்த கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் எனக் கணிக்க இயலாத சூழ்நிலையில் அமித் ஷாவின் கணிப்போஅறிவிப்போ எடுபடாது என்பதே நிதர்சனம்.
உ .இராசமாணிக்கம், கடலூர் .
அதிகாரக் குரல்
தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது வேடிக்கையானது. எதிர்க்கட்சிகளை தன் அதிகார வலிமையால் அடக்கிப் பணியவைத்து தன்வசப்படுத்தும் அமித் ஷாவின் அதிகாரக் குரலாகத்தான் இதைக் கருதமுடியும். தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது நகைச்சுவையாக உள்ளது.
எஸ்.சிறீகுமார், கல்பாக்கம்.
தேர்தலுக்குப்பிறகே...
தமிழக வாக்காளர்கள் என்றும் கூட்டணி ஆட்சியை ஆதரித்தது கிடையாது. வேறு வழியில்லாமல் அதிமுகவுடன் வலிய வந்து எல்லா நிபந்தனைகளையும் ஏற்று கூட்டணி கண்ட அமித் ஷா, கூட்டணி ஆட்சிதான் என்று வலியுறுத்த முடியாது. ஏனெனில், அதிமுகவுக்கு தவெக என்கிற நல்ல வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பே பெரும்பான்மை பெறுவதற்கான பலத்துடன் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் அதிமுக சமரசமாகாது. திமுக, அதிமுக, தவெக, சீமான் என நான்கு முனைப் போட்டி ஏற்பட்டால் வாக்குகள் சிதறி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலைகூட வரலாம். அப்போது கூட்டணி ஆட்சி சாத்தியப்படலாம்.
அ. யாழினிபர்வதம், சென்னை.
வியப்பில்லை!
தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அவருக்கு அதிமுக கூட்டணி மீது இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அரசியலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தேர்தலில் போட்டியிடும் அனைவரும் விரும்புவதுதான். அதேபோல்தான் அமித் ஷாவும் எண்ணி இருக்கிறார். அதிமுக மீது அதீத நம்பிக்கை வைத்த மத்திய அமைச்சரும் இவ்வாறு சொல்வதில் துளிக்கூட வியப்பில்லை. நேர்மறையான எண்ணத்துடன் பேசும் அமித் ஷாவை பாராட்டுவோம்.
உஷா முத்துராமன், மதுரை.
உண்மையாக இருக்கலாம்
தேர்தல் சூழலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தாங்கள் சார்ந்துள்ள கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறுவது இயற்கை. எனினும் தமிழகத்தில் வலுவான கூட்டணியின் பின்னணியில் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது இங்கு நோக்கத்தக்கது. தேசத்தின் பிரதமராக மூன்றாவது முறை மோடி வந்தபிறகு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற செயல்பாடுகள் அவருக்கான ஆதரவு அலையை அதிகரித்துள்ளது உண்மை. தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பும் தன்மையும் வெளிப்படையாகத் தெரிகிறது. இதனால் அமித் ஷா கூறியுள்ளது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
ஏற்புடையதே...
மத்தியில் 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக தனிப் பெரும்பான்மையோடு வென்ற போதும், கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளித்து, கூட்டணி அரசாகவே ஆட்சி அமைத்தது. எனவே, அதை மாநில ஆட்சியிலும் பாஜக எதிர்பார்ப்பதில் குறைகூற முடியாது. மேலும், தமிழகத்தில் உள்ள பாஜக பழைய பாஜக அல்ல; 18 சதவீத வாக்குவங்கியுடன் வலிமை பெற்றிருக்கும் புதிய பாஜக. எனவே, அதன் வலிமைக்கேற்ப அக்கட்சி தொகுதிகளைப் பெறும்போது, இயல்பாகவே அது கூட்டணி ஆட்சியை நோக்கியே கொண்டுசெல்லும். அமித் ஷாவின் கூட்டணி ஆட்சிக் கருத்து ஏற்புடையதே.
முகதி.சுபா, திருநெல்வேலி.
வாய்ப்பில்லை
பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை அடித்தட்டு மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படாததால்தான் தமிழகத்தில் பாஜகவினால் வேரூன்ற முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தெளிவாகத் தங்கள் நிலையை வெளிப்படுத்தவில்லை. உட்கட்சிப் பூசல்களால் பிளவுபட்டு நிற்கும் பாமக, கூட்டணிக்கு வலுசேர்க்கும் நிலையில் இல்லை. வலுவான கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுகவை வீழ்த்துவது எளிதல்ல. தேர்தலில் வென்று அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பதும் அவ்வளவு எளிதல்ல. அமித் ஷாவின் கூற்றுப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இன்றைய சூழலில் சிறிதும் இல்லை.
கே.ராமநாதன், மதுரை .
தொண்டர்களை உற்சாகப்படுத்த...
தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது அவரின் விருப்பம். மேலும், பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முயற்சி. அதிமுக, திமுக இரண்டு கட்சிக்கும் மீண்டும் மீண்டும் வாக்களித்து தமிழக மக்கள் பழக்கப்பட்டுள்ளதை வைத்தும் கூறியிருக்கலாம். தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; ஆட்சியைப் பிடிப்போம் என்பதுதானேதொடர்ந்து வரும் வாக்கியம்! இப்படிக் கூற இந்திய பிரஜைகள் அனைவருக்கும் உரிமை உண்டு.
ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
காத்திருப்போம்...
யாருடன் யார் கூட்டணி என்று கூறுவதில்கூட இவ்வளவு குழப்பம் ஏன்? அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? அல்லது பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? அமித் ஷா அறிவித்துவிட்டார்; ஆனால் அதை ஆமோதிப்பவர் அமைதியாக உள்ளார். கூட்டணி குறித்து அமித் ஷா பேசும்போது, அருகில் இருந்த எடப்பாடிவசம் ஒலிபெருக்கியைக் கொடுத்துப் பேசச் சொல்லியிருந்தால் குழப்பம் அப்போதே தீர்ந்துபோய் இருக்கும். இன்னமும் செல்லவேண்டிய தொலைவு அதிகம் உள்ளது.
என்.பாபு அருள் ஜோஷ், களக்காடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.