சமூக அக்கறை கொண்டவர்
மருத்துவர் ச. ராமதாஸின் அரசியல் ஓய்வு அறிவிப்பு தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசியல் களத்தில் அரசியல் தவிர்த்து, பெரும்பாலான சமூக அவலங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் முதல் கண்டனக் குரல் மருத்துவர் ராமதாஸிடமிருந்தே வெளிப்படும். சமூக அக்கறையுள்ள அரசியல் தலைவர்களில் என்றுமே முதல் இடம் இவருக்குத்தான். ஜாதியப் பார்வையில் இவரது கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டது நம் துரதிருஷ்டமே.
திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
மருத்துவராக இருந்திருக்கலாம்
மருத்துவர்களான ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் போற்றுதலுக்குரிய மருத்துவ சேவைகளைத் தொடர்ந்து செய்து வந்திருந்தால், அவர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பெருமையளிப்பதாக இருந்திருக்கும்; அவர்களின் மருத்துவ சேவைகளால் பலனடைந்த ஏழை, எளிய மக்களுக்கும் அவர்கள் மனித வடிவில் தெய்வங்களாகத் தெரிந்திருப்பார்கள். அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்து கட்சியைப் பலப்படுத்த மாறி மாறி கூட்டணி வைத்து தங்களது உயரத்தை இழந்ததுதான் மிச்சம்.
ராஜன், தூத்துக்குடி.
வரவேற்கத்தக்கது
மருத்துவர் ராமதாஸின் இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டது என்றாலும், வரவேற்க்கத்தக்கது. இந்த உலகில் எல்லா இயக்கங்களும் பூமியில் பிறந்து, வளர்ந்து, செயல்பட்டு, கடுமையாக உழைத்து பின்பு ஓய்வு எடுப்பது என்பது இயல்பானதுதான். பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைமுறையில் உள்ளதுதான். மிகச் சிறந்த வகையில் தனது மகன் அன்புமணியை உருவாக்கியுள்ளார். திருக்குறளில் கூறியுள்ளதுபோல மகன் அன்புமணி மிகச் சிறந்த அளவில் புகழ் பெற்றதைக் கண்டு பெருமை அடைந்து நன்றாக ஓய்வெடுப்பதே சிறப்பு.
டி. சேகரன், மதுரை.
தனிப்பட்ட விருப்பம்
பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். வயது முதிர்வு ஏற்பட்டால் மறதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்ற ரீதியில் ஓய்வு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. "அரசியல் குறித்து இனிவரும் காலங்களில் ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்' என்று கூறி இருப்பதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக, பாமக சார்பில் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்படுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அரசுக்கு ஒரு படிப்பினையாக அதை எடுத்துக் கொள்ளலாம்.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
விவசாயிகள் நலன் நாடியவர்
மருத்துவர் ராமதாஸ் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்த தலைவராகவும் அறியப்படுகிறார். குறிப்பாக நீர்வள பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை வளங்கள் மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பான பல்வேறு கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அவரது முடிவு, பொதுவாழ்வில் அவர் உருவாக்கிய சிந்தனைகளின் மதிப்பைக் குறைக்காது. மாறாக, அவரது அனுபவம், விவசாயத்தின் மீது கொண்ட அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு, புதிய தலைமுறைக்கு
வழிகாட்டும் ஊக்கமாக அமையும்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
இளையோருக்கு வழிவிட்டு...
அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கான சரியான காரணத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிக்கவில்லை. வயது முதிர்வு காரணமாக அரசியலில் ஈடுபாட்டுடன் அவரால் பணிகளைச் செய்ய முடியவில்லை. அதனால்தான் அவர் ஓய்வு முடிவை அறிவித்திருக்கலாம். மகனுடன் மீண்டும் சேர்ந்து விட்டதால், அவருக்கு அரசியலில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் என்ற எண்ணத்தில்கூட அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கலாம். இளையோர்களுக்கு வழிவிடுவதும் நல்ல முடிவுதான்.
நந்தினி கிருஷ்ணன், சென்னை.
வியப்பளித்தது
மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வந்த அறிவிப்பு வியப்பாக இருந்தது. அரசியலில் அனுபவம் மிக்கவர்கள்தான் இருப்பார்கள். அந்த அனுபவத்தால் அரசியலில் நன்றாக பரிணமிக்க முடியும்; தன் மகன் தன்னைப்போல உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில்கூட ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். அரசியலில் பல சாதனைகளை புரிய அன்புமணி ராமதாஸுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகத்தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கலாம்.
பிரகதாம்பாள், கடலூர்.
நல்ல முடிவு
சற்று காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றே கருத வேண்டியுள்ளது. பொதுவாக அரசியல் தலைவர்கள் 80 வயதிலாவது ஓய்வு பெறுவது அவருக்கும், அவரைச் சார்ந்த கட்சிக்கும் நலன் பயக்கும். குறிப்பாக, தனது வாரிசு கட்சியில் அடுத்த நிலையில் தயாராக இருக்கும்போது, இது போன்ற முடிவுகளை விரைந்து அறிவிப்பது நன்மை பயக்கும். சற்றே காலதாமதமான முடிவானாலும் நல்ல முடிவுதான்.
அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
முன்னுதாரணம்
வன்னியர் சமுதாய மக்களுக்காக "பாட்டாளி மக்கள் கட்சி' தொடங்கப்பட்டு நாளடைவில் தேர்தல் ஆணையம் மூலம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆனது. தொடக்கம் முதலே பல ஆண்டுகளாக கூட்டணிக்கு உதவும் ஒரு கட்சியாகவே இருந்துவரும் நிலையில், தனது வயது முதிர்வு காரணமாக அரசியல் வாழ்க்கையில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என மருத்துவர் ராமதாஸ் சொல்லியிருப்பது நல்லது. குறிப்பாக, அவரது உடல்- மன நலனுக்கு இந்த முடிவு நன்மை பயக்கும். மற்றவர்களுக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணம். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இதைப் பின்பற்றலாம்.
அனன்யா, பொள்ளாச்சி.
களம் பல கண்டவர்
சமூக நீதி, இட ஒதுக்கீடு எனப் பல போராட்டங்கள் நடத்தி களம் கண்டவர் மருத்துவர் ராமதாஸ். அவர் தனது 88-ஆவது பிறந்த நாள் விழாவில் "இனி அரசியல் குறித்துப் பேச மாட்டேன்; கட்சிப் பொறுப்பு முழுவதும் மகன் அன்புமணி ராமதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது; இனி சந்திக்க வருபவர்கள் அரசியல் பேசாமல், உடல் நலன் குறித்து மட்டுமே விசாரியுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை மிகச் சரியான முடிவாகத்தான் பார்க்க வேண்டும். 80 வயதைக் கடந்த அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலக வேண்டும் என வழிகாட்டி உள்ளார் மருத்துவர் ராமதாஸ். அவரது செயல் எல்லோராலும் வரவேற்கப்படும் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
க. அருச்சுனன், செங்கல்பட்டு.
வித்தியாசமான தலைவர்
சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பே இந்த முடிவை ராமதாஸ் அறிவித்திருக்க வேண்டும். வாரிசு அரசியலை வைகோவுக்கு முன்பு எதிர்த்தவர். தன் கட்சியினருக்கு மக்கள் பிரதிநிதிகள் பதவியை பெற்றுத் தந்தவர். வன்னியர் சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட்டவர். நிழல் பட்ஜெட் மட்டுமே இதுவரை தாக்கல் செய்து விட்டு, நிஜத்தில் அரசியலில் இருந்து ஓய்வு அறிவித்த ராமதாஸ் ஒரு வித்தியாசமான அரசியல் கட்சித் தலைவர்தான்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்.
பெருமை சேர்க்கும்
மகனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டது ராமதாஸுக்குப் பெருமை சேர்க்கும். முன்னதாக, தந்தை- மகனிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தின. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புகார் தெரிவித்தது என்பது நிகழ்ந்திருக்கக் கூடாதவை. அரசியலில் வயதுக்கேற்ற மன முதிர்ச்சி மிக அவசியம். அதுவே ஒரு தலைவருக்கு அழகு சேர்க்கும். மாறாக, அது இல்லாமல் எவ்வளவு கல்வி பயின்றிருந்தாலும் அவை பயனற்று போகும்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
தவிர்க்கப்பட முடியாதவர்
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களது பெரும்பான்மையைக் காட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலின்போது போட்டியிட நிபந்தனைகள், கோரிக்கைகள், விரும்பிய தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது போன்ற அரசியல் கணக்குகளை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டவர் பாமக நிறுவனர் ராமதாஸ். இவரது தலைமையின் கீழ் தமிழகத்தின் தவிர்க்க முடியாத பலமிக்க கட்சியாக பாமக உருவெடுத்தது என்றால் அது மிகையல்ல. தன் மகன் அன்புமணியிடம் அவர் கட்சியின் எதிர்கால வளர்ச்சியை ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து, அவரது பங்களிப்பில்லாத வெற்றிடத்தை நிரப்ப அந்தக் கட்சியினர் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
இரா. இரவிக்குமார், சென்னை.
மொழித் தொண்டாற்றலாம்
மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பதை மகனுடனான அரசியல் கருத்து வேறுபாட்டின் பிரதிபலிப்பாகவும் கருதலாம். நன்கு சிந்திக்க கூடிய அரசியல்வாதியாக அவர் இருந்தாலும், அவரின் சமூக நீதிக் கோட்பாடுகள் குறிப்பிட்ட ஜாதி வளையத்துக்குள்ளாகவே முடங்கி விட்டது. பல ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட அவர், தமிழின் மேன்மைக்காக பாடுபட வேண்டும். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், தமிழ்த் தொண்டு தொடர வேண்டும்.
இரா.செல்வமணி, பாப்பாக்குடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அரசியலில் இருந்து சித்தராமையா விலகல்!

அரசியலில் ராமதாஸுக்கு ஓய்வில்லை: பாமக தலைவா் அன்புமணி திட்டவட்டம்!

அரசியல் துறவறம் அறிவித்தார் ராமதாஸ்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


