வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அண்மையில் வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் மடூரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
Updated on
3 min read

முரணானது

அண்மையில் வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் மடூரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மடூரோ ஈடுபட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தச் செயல்பாடுகள், ஐ.நா. சட்ட விதிகள் மற்றும் ஜெனிவா சர்வதேச சட்டங்களுக்கு முரணானதாகும். இந்தப் பிரச்னையில் அதிபரைக் கடத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா துணிந்து எடுத்தது தவறானது. எளிய நாட்டின் மீது வலிமையான நாடு தாக்குதல் நடத்தும் செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

எதேச்சதிகாரம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்து அந்த நாட்டின் மீது போர் தொடுத்திருப்பது ஏற்புடையது அல்ல. எண்ணெய் வளம் உள்ள ஒரு நாட்டை தன்வசமாக்க அமெரிக்கா நினைப்பது அநாகரிகம். நான் சொல்வதைத்தான் மற்ற நாடுகள் குறிப்பாக வெனிசுலா போன்ற சிறிய நாடுகள் கேட்க வேண்டும் என்று அமெரிக்கா சொல்வது எதேச்சதிகாரம். எனக்குத்தான் நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக்கொள்ளும் அதிபர் டிரம்ப்பின் இந்தச் செயல், மூன்றாம் உலகப் போருக்கு அச்சாரம் இடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மகாலிங்கம் வடிவேல், தாரமங்கலம்.

போர்க் குற்றம்

மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியல்ல என்பது மட்டுமல்ல, இது மோசமான போர்க் குற்றம் என்பதில் ஐயமில்லை. ஏராளமான பணபலம், படை பலம், ஆயுத பலம் இவற்றால் செருக்குற்று தானே உலகின் சக்கரவர்த்தி என்று நினைத்துச் செயல்படும் அதிபர் டிரம்ப்பை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் இது. உலகின் அனைத்து நாடுகளும் இந்த அடாவடிச் செயலை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். இன்று வெனிசுலாவுக்கு நேர்ந்த கொடுமை, நாளை வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

சுப்ர. அனந்தராமன், சென்னை.

அடாவடி நடவடிக்கை

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய செயல். முதலில் இது ஒரு ரகசிய நடவடிக்கை எனவும், பின்னர் எண்ணெய் நிறுவனங்களைக் கலந்து எடுத்த முடிவு எனவும் முன்னுக்குப்பின் முரணாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவர் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கை என்று அடாவடி நடவடிக்கைகளையே எடுத்து வருகிறார். எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் சிறிதளவும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகளால் அவர் முன்னாள் அதிபராகும் காலம் வெகு விரைவிலேயே வந்துவிடும்.

ஆ.ஜூட் ஜெப்ரிராஜ், கோவை.

பாராட்ட வேண்டும்

வெனிசுலா அதிபர் மடூரோ நாட்டுக்காகப் போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா இல்லை. வெனிசுலா அதிபராக இருந்தாலும் பயங்கரவாத்தை தன் முதல் செயலாக வைத்துக் கொண்டதுடன் போதைப் பொருள் போன்றவற்றை மிகச் சரளமாக உலவச் செய்தவர். இதுபோல குற்றங்கள் செய்பவர்களைச் சிறைபிடிப்பது மிகவும் கடினம். அந்தச் செயலை செய்து வெனிசுலாவுக்கு நல்லது செய்திருக்கும் அமெரிக்காவுக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டலாம்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

கண்டனத்துக்குரியது

வெனிசுலாவிலிருந்து போதைப் பொருள்கள் அமெரிக்காவுக்குக் கடத்தி வரப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அத்துமீறி அந்த நாட்டுக்குள் நுழைந்து அதிபர் மடூரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது கண்டனத்திற்குரியது. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவே இந்த நடவடிக்கையை அதிபர் டிரம்ப் எடுத்துள்ளார். கொலம்பியா, கிரீன்லாந்து, கியூபா, மெக்ஸிகோ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ள அதிபர் டிரம்ப்பின் செயல் சர்வாதிகாரத்தின் உச்சம்.

பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

காத்திருந்து கொத்தியது

வல்லரசு நாடு என்று தன்னைத்தானே கூறிக் கொள்ளும் அமெரிக்கா பிற நாடுகளின் விவகாரத்தில் நுழைந்து மத்தியஸ்தம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான். வெனிசுலா மீதும் அதன் எண்ணெய் வளங்கள் மீதும் அமெரிக்காவுக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது. கழுகு தனது இரைக்காக காத்திருப்பதுபோன்று, காத்திருந்து கொத்திச் சென்றுள்ளது அமெரிக்கா. முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிபரை அந்நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்வதை சரி என்று எப்படிச் சொல்ல முடியும்?

மவ்லவீ. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

கொண்டாட வேண்டும்

மடூரோ குறித்து முழுவதுமாகத் தெரிந்தவர்கள், அமெரிக்காவைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். எந்த நாட்டு மக்களும் தங்களது வீட்டையும், நாட்டையும் நாசம் செய்யும் போதைப் பொருள்களை ஒழிக்கவே விருப்புவார்கள். இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பவர்களை வெறுப்பர்.

இப்படி வெறுப்பை அனைவரிடமும் சம்பாதித்துக் கொண்டவர்தான் வெனிசுலா அதிபர். அதைத் தெரிந்து கொண்ட அமெரிக்கா,

மடூரோவை சிறைபிடிக்கத் திட்டமிட்டு வெற்றியும் கண்டதால், அதன் துணிச்சலைப் பாராட்டத் தோன்றுகிறது.

பிரகதாம்பாள், கடலூர்.

வல்லான் வகுத்ததே...

வெனிசுலா அதிபரை அமெரிக்கா தடாலடியாகக் கைது செய்தது உலக அரங்கில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலாளித்துவ மனப்பாங்கில் ஒருபடி மேலே சென்று "தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்று சொல்லும் செய்தியாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்கிற பழமொழிக்கேற்ப தனது அத்துமீறலை அம்பலப்படுத்தி இருப்பது, உலகில் அமைதி வேண்டுவோருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

சோ.உலகநாதன், ராமேசுவரம்.

ஆதாரம் இல்லாமல்...

மடூரோவை அமெரிக்க ராணுவம் சிறைபிடித்ததை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடுமையாகக் கண்டித்துள்ளது. அமெரிக்காவின் செயல் சர்வதேச சட்டத்தை மீறியதாகும். குற்றச்சாட்டுகள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக உரிய ஆதாரங்கள் வெளியிடாமல் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். வெனிசுலா மக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது

அமெரிக்காவும், அதன் அதிபர் டிரம்ப்பும் அண்மைக்காலமாக பேசுபொருளாக இருந்து வருகிறார்கள். டிரம்ப்பின் செயல்

பாடுகள் உலக நாடுகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் பதற்றத்துடன் இருப்பதை உணர முடிகிறது. பெரிய அண்ணனாக அமெரிக்கா திகழ்ந்தாலும் ஒரு நாட்டின் அதிபரைக் கைது செய்து சிறையில் அடைப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலக நாடுகள் ஒன்றிணைந்து டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

அபாயகரமானது

டிரம்ப்பின் நடவடிக்கை போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறினாலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கை நடைபெற்றது என்று மடூரோ தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதில் நியாயம் இருக்கிறது. உலக அளவில் ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் இதைக் கண்டித்துள்ளன. கைகள் கட்டப்பட்ட நிலையில் மடூரோ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டது அபாயகரமான முன்னுதாரணமாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் காழ்ப்புணர்வையும் காட்டுவதாக உலகளாவிய அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

நல்ல செயல்

வெனிசுலா அதிபர் மடூரோ பெரிய குற்றவாளி. அதிலும் சமுதயத்தையே சீரழிக்கும் போதைப் பொருள்களை கடத்திய குற்றவாளி என்பதை அமெரிக்கா கண்டறிந்து அவரை சிறைபிடித்திருப்பதைப் பாராட்டலாம். இதற்காக அமெரிக்காவின் பல ரகசிய திட்டங்களைப் பார்க்கும்போது, அந்த நாட்டை மனமுவந்து பாராட்டலாம். இந்தச் செயல் சரியா என்று கேட்டால் நூறு சதவீதம் சரியான செயல்தான்.

உஷாமுத்துராமன், மதுரை.

எண்ணெய்க்காகவே...

தென் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான வெனிசுலா போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் மடூரோவைச் சிறைபிடித்துச் சென்றது ஐ.நா. ஒப்பந்தம், சர்வதேசச் சட்டத்துக்கு எதிரானது. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கமும் அதற்குக் காரணம். அடுத்து துணை அதிபர் மூலம் அது நிறைவேறியும் உள்ளது. கியூபா போன்ற சில நாடுகளைத் தவிர பிற நாடுகள் இந்தச் செயலைக் கண்டிக்கவில்லை.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com