சமநிலை குறையும்
கடலுக்குச் செல்லும் நதி நீரை மாற்றி நிலத்தில் பயன்படுத்தினால் சில அறிவியல் பாதிப்புகள் ஏற்படும். நதி நீர் கடலுக்குச் செல்லாமல் தடுக்கப்படும்போது, கடலோர சூழல் பாதிக்கப்படும். மேலும், மாங்குரோவ் காடுகள் அழியும் அபாயம் ஏற்படும். நிலத்துக்குள் உப்புநீர் ஊடுருவல் அதிகரிக்கும். நிலத்தடி நீர் உப்பாகி விவசாயம் பாதிக்கப்படும். கடலோர மணல் அடுக்கு, கரையோர அரிப்பு வேகமாகும்.
பசுமைச் சூழல் சீர்குலையும். நீர் சுழற்சி இயற்கை சமநிலை குலையும். இதனால், நீண்ட காலத்தில் மனித வாழ்வுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளையும்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
பகிர்தலே சிறந்தது
இறைவன் கொடுத்த வரமான நதி நீர், அனைத்து மக்களுக்கும் பொதுவானது. இந்த நதி சில மாநிலங்கள் வழியாக ஓடுவதால் அது தங்களுக்குச் சொந்தம் என்று சிக்கல் ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அடுத்த மாநிலத்துக்கு ஓடிச் செல்லும் நதியைத் தடுத்து நிறுத்துவது தவறாகும். நதி நீர் இணைப்பு ஏற்பட்டால், அனைத்து மாநிலங்களுக்கும் எல்லா நதி
களும் சொந்தமாகிவிடும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், மாநில அரசு ஒவ்வொன்றும் ஒற்றுமையுடன் தங்கள் மாநிலத்தில் பாயும் நதியின் நீரை அடுத்த மாநிலங்களுக்கும் பகிர்ந்தளித்தால் இது போன்ற எந்த ஒரு சிக்கலும் வராது.
பிரகதாம்பாள், கடலூர்.
காலதாமதமாகும்
தற்போது நடைமுறையில் இருக்கும் நதி நீர்ப் பகிர்வை ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தின்படி அதற்குரிய மேலாண்மை அமைப்பின் ஆணைப்படி தொடர்புடைய மாநிலங்கள் கடைப்பிடிப்பது அவசியம். எல்லா நதிகளையும் இணைத்து நதி நீர்ப் பகிர்வு சிக்கலுக்குத் தீர்வு காண்பது ஏட்டளவில் பேசுபொருளாகவே உள்ளது. அதை நிறைவேற்றுவது பெரும் செலவுடன் கூடிய நீண்ட கால அவகாசம் கொண்டதொரு மாபெரும் மகத்தான திட்டம். அது ஒரு தலைமுறை தாண்டிய அளவுக்கு தாமதமாகும். குடியரசு துணைத் தலைவர் சுட்டிக் காட்டியிருப்பது நீண்ட கால அடிப்படையிலான ஒரு நிரந்தர முடிவாகும்.
இரா. இரவிக்குமார், சென்னை.
இன்றியமையாதது
குடியரசு துணைத் தலைவரின் கூற்று முற்றிலும் சரியே. இன்றைய மத்திய அரசு நாடு முழுமைக்கும் "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்தல்' என்று அனைத்திலும் ஒற்றுமை என்பதைப் பறைசாற்றுகிறது. இவை அனைத்துக்கும் மேலாக நீர் தேவை இன்றியமையாதது. ஒரு பக்கம் மழை, வெள்ளம் அழிவு, மற்றொரு பக்கம் வறட்சி- பஞ்சம் என்பதுடன், மாநிலங்கள் இடையே சண்டை சச்சரவுகளைத் தீர்க்க ஒரே வழி நதி நீர் இணைப்பு மட்டுமே. குடியரசு துணைத் தலைவரின் கருத்து பலமுறை பலராலும் பகிரப்பட்டாலும் இந்த முறை நதி நீர் இணைப்பு வழிந்தோடினால் வாடிய பயிர் வளம் பெறும்.
நா. குழந்தைவேலு, மதுரை.
தென்னக நதிகளையாவது...
காவிரிப் பிரச்னையில் பெரும்பாலும் பல ஆண்டுகள் மழைப் பொழிவால் மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தைவிட கர்நாடகத்தில் தேசிய கட்சிகளே நீண்ட நெடுங்காலமாக ஆண்டு வந்தும்கூட தேசிய மனப்பான்மை இல்லாது போனதுதான் துரதிருஷ்டவசமானது . மாநில அளவிலான பிளவுபட்ட உணர்வைத் தவிர்த்து எல்லோரும் இந்தியர் என்கிற உணர்வுடன் குறைந்தபட்சம் தென்னக நதிகளை இணைத்து விட்டால் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அரசியல்வாதிகளால் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை பொய்த்து வருகிற நிலையில் ஒரே தீர்வு பொதுமக்களின் வருண ஜெபம் மட்டும்தான்!
மருதூர் மணிமாறன், இடையன்குடி.
தேசப்பற்றுள்ளோர் விருப்பம்
இந்தியா போன்ற பெரிய ஜனநாயகக் கட்டமைப்பு கொண்ட நாட்டில், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட பொதுவான திட்டங்கள் கட்டாயம் தேவை. அதிகமான நீர் கடலில் கலந்து வீணாகப் போவதை இந்தத் திட்டம் தடுத்து, தேவையான பகுதிகளின் நீர் ஆதாரத்தைப் பெருக்க நல்ல வழி அமைத்துக் கொடுக்கும். பல ஆண்டுகளாக கருத்தளவில் அவ்வப்போது பேசப்பட்டுவரும் இந்தத் திட்டம், நடைமுறைக்கு வந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதே தேசப்பற்றுள்ள ஒவ்வொருவரின் விருப்பம். சுயநலமிக்க மாநில அரசியல் இந்தத் திட்டத்தின் உருவாக்கத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
அனன்யா, பொள்ளாச்சி.
முயற்சிக்க வேண்டும்
நதிநீர் இணைப்புதான் தீர்வு என்று வாய்மொழியாகச் சொல்லிவிட்டு கடந்து செல்வதைவிட அதற்கான நிதி ஆதாரம், சாத்தியக்கூறுகள்- இப்படி பல கட்டமாக ஆராயப்பட வேண்டும். நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறே பல மாநிலங்களுடனும் அண்டை நாடுகளுடனும் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்த பிறகுதான், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குடியரசு துணைத் தலைவர் சொல்லக் கூடியவற்றில் தீர்வு உண்டு. ஆனால், தீவிரமான முயற்சிகளை விடாப்பிடியாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
சூழலைப் பாதிக்கும்
இந்தியாவில் நதிகள் இணைப்பு ஏற்படும் நிலையில், நீரைப் பகிர்ந்தளிப்பதில் மாநிலங்களுக்கு இடையே மோதல் போக்குகள் உருவாகி சட்ட ரீதியிலான அரசியல் சர்சைகள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும், இயற்கையான நதி ஓட்டத்தைத் தடுப்பதன் மூலம் காடுகள் அழிதல், மீன் வளம் மற்றும் பல்லுயிர் சூழல்கள் பாதிப்பு போன்ற தீவிர சுற்றுச்சூழல் சிக்கல்கள் உருவாகும். அனைத்து மாநிலங்களிலும் மண்ணின் தன்மைகள் வெவ்வேறாக இருக்கும் நிலையில் நதிகள் இணைப்பு அதீத விளைச்சலுக்குப் பலன் தருமா? என்பது குறித்த தெளிவுகள் இல்லை. எனவே, நதி நீர்ப் பகிர்வு சிக்கலுக்கு நதி நீர் இணைப்பு ஒருபோதும் தீர்வாகாது.
பிரசன்னா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
தடுப்பணைகள் கட்டுதல்
நதி நீர்ப் பகிர்வு சிக்கலுக்கு தீர்வு காண நதிகளை இணைக்க வேண்டும் என்ற குடியரசு துணைத் தலைவரின் கருத்து சரிதான். அத்துடன் மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நதி நீரை உரிய தடுப்பணைகள் கட்டி, தேக்கி வைத்து அந்தந்த மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நீர் மேலாண்மைத் திட்டங்கள் வகுத்து அதைச் செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். அரசியல் நோக்குடன் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக மாநில அரசுகளும் அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.
ராம், ஈரோடு.
மாசுபடுதலைத் தவிர்க்கவும்
பல்வேறு வகையான கழிவு நீர், ஆலைக் கழிவுகள் எனத் தொடர்ந்து நதி நீரில் இணைந்து இருக்கிறதே தவிர, அதைத் தடுக்க மனிதர்கள் முயற்சிப்பதில்லை. அதற்கான முறையான சுத்திகரிப்பு கொள்கைகளும், செயல்பாடுகளையும் நடைமுறையில் சாத்தியப்படுத்துதலும் தேவையான ஒன்று. அதைச் செய்தாலே அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் போதிய அளவுக்கு பலன் தரத் தொடங்கும். நதிநீர் இணைப்பு சாத்தியப்படாத காரியமாகவே கானல் நீராகவே இருந்தாலும், அதன் வரலாறு பதிவாகியபடி தொடர்கிறது.
உத்தமன்ராஜா, அச்சன்புதூர்.
நல்லிணக்கம் ஏற்படும்
இது குறித்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், யாரும் இதை தன்முனைப்புடன் எடுத்துச் செல்லவில்லை என்பது வேதனைக்குரியது. வடக்கில் பனி உருகி பெருவாரியான தண்ணீர் வெளியேறி, வெள்ளத்தை உருவாக்குகிறது. அபரிமிதமான மழை காரணமாக வெள்ளம் ஏற்படுகிறது. உபரி நீர் கடல் நீராகி வீணாகிறது. இதுதான் தற்போதைய நிலை. வெள்ளம் ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாத நீரை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு தேசத்தில் மாநில மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட, இந்த நதிகள் இணைப்பு ஓர் ஆரம்பப் புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
எஸ். வேணுகோபால், சென்னை.
நிரந்தரத் தீர்வு
நதி நீர் இணைப்பே நிரந்தரத் தீர்வாகும். மொழிவாரியாக மாநிலங்கள் எப்போது பிரிக்கப்பட்டதோ, எப்போது மாநிலக் கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியதோ, அப்போதே "என் நதி, என் நீர்' என்ற எண்ணம் வந்துவிட்டது. அதன் விளைவே நதி நீரை பிற மாநிலங்களுக்கு விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு அடிப்படைக் காரணம், மாநில அரசின் அரசியல் காரணங்கள்தான். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது அத்தனை எளிதானதல்ல என்பதே உண்மை. குறைந்தபட்சம் மாநிலங்களுக்குள் ஓடும் நதிகளையாவது இணைத்தால் போதும்; அதுவே இப்போது சாத்தியப்படும்.
கலைப்பித்தன், கடலூர்.
மகாகவி கூறியதுபோல்...
ஒருபுறம் வெள்ளத்தால் அழிவதும், மறுபுறம் வறட்சியால் வாடுவதும் வழக்கமாக உள்ளது. இதைப் போக்க ஒரே வழி நதி நீர் இணைப்பு மட்டுமே. இந்தக் கோரிக்கை இன்று- நேற்று அல்ல, பல ஆண்டுகளாவே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. "வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்' என அன்றே மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஆனால், இதுவரை மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி செய்வோர் சொல்கிறார்களே தவிர செய்வதில்லை. முதலில் மாநிலத்தினுள் ஓடும் நதிகளை இணைக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
ஒருங்கிணைந்த தீர்வாக...
நதி நீர் இணைப்பு, நீர்ப் பகிர்வுச் சிக்கல்களுக்கு ஒரு முக்கியமான பூகோளத் தீர்வாக இருக்கலாம்; ஆனால், அதுவே இறுதித் தீர்வாகாது. 2018-ஆம் ஆண்டு காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய சமநிலையான நீர்ப் பகிர்வும், அதைத் தொடர்ந்து செயல்படும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுபவமும் காட்டுவதுபோல, மாநிலங்களின் ஒத்துழைப்பு, அறிவியல் அடிப்படையிலான முடிவுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியே நீடித்த தீர்வுக்கு அடித்தளமாகும். எனவே, நதி இணைப்பை ஒரே தீர்வாக அல்ல, ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மையின் ஒரு பகுதியாக அணுகுவதே சிறந்த வழியாகும்.
பிரகாஷ். ஆர்., வத்ராயிருப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைகளை வெட்டுவோம்! சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

அரசப் பதவி என்பது சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவா்

இந்தியாவுக்கு எதிராகப் போர்! பாகிஸ்தான் மிரட்டல்

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



