தேவையான உத்திகள்
சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டம் என்பது பாராட்டப்பட வேண்டியது. விபத்துப் பகுதிகளைக் கண்டறிவது, தேவையான மாற்றங்களைச் செய்வது, தணிக்கைக் குழு அமைப்பது, உடனடி சிகிச்சைக்கு பிரத்யேக மருத்துவமனைகளை அமைப்பது என இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். ரோந்துப் பணிகள், மீட்புக் குழுக்கள் என வருமுன் காக்கவும் வந்தபின் காப்பாற்றவும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திச் செயல் திட்டத்தை முழுமை பெற வைக்க வேண்டும். தேவையான உத்தியைக் கையாண்டு முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு வெற்றித் திட்டமாக்க வேண்டும்.
பி. சுந்தரம், வெண்ணந்தூர்.
பள்ளிப் பாடமாக...
சுய வேகக்கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் தேவை; அதுவே விபத்தைத் தவிர்க்கும் முதன்மைக் காரணியாக இருக்கும். அனைத்து வேகக் கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சாலையைக் கடப்பது, நடப்பது என அனைத்திலும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியம். மேலும், பள்ளிகளில் பாடத்திட்டமாக வைத்து தேர்வில் மதிப்பெண்கள் அளிக்கும் வகையில் கேள்வித்தாள் வரை இந்த விழிப்புணர்வைக் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், மாற்றத்தைப் பள்ளிகளிலிருந்து கொண்டு வந்து மாணவர்கள் மனதில் பதிய வைக்கும்போதுதான் அது மாறாமல் இருக்கும்.
டி. சேகரன், மதுரை.
தேவையான திட்டம்!
இன்றைய உலகில் மனித இனத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாகவும், பேரிடராகவும் விளங்குபவை சாலை விபத்துகள். ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்கின்றன. அதற்குக் காரணம் மனிதத் தவறுகளே. இந்தச் சூழலில் "விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் உருவாகும் செயல் திட்டம் வரவேற்கத்தக்கது. இந்தத் திட்டம் அனைத்து மக்களும் செயல்படுத்தும் வகையில் எளிமையாகவும், புறக்கணிக்கத் தூண்டும் விதத்தில் இல்லாமலும் இருக்குமேயானால், "விபத்தில்லா தமிழ்நாடு' என்ற நிலையை அடைய முடியும் என எதிர்பார்க்கலாம்.
இரா. முருகன், காத்தான் விடுதி.
தடுக்கலாம்!
சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்பது சாலை விதிகளை நாம் முற்றிலும் உணர்ந்து செயல்படாததையே காட்டுகிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசு கொண்டுவரும் செயல் திட்டமானது ஓட்டுநர், போக்குவரத்துத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவர்கள் தரும் ஆலோசனைகளை ஒருங்கிணைத்து செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இதனடிப்படையில் செயல் திட்டத்தை ஏற்படுத்தினால் 50% சாலை விபத்து உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.
சீனி. மணி, பூந்தோட்டம்.
விதி மீறல் அதிகம்
சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு காலத்தின் கட்டாயம். நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையும், சாலைகள் அகலப்படுத்தப்பட்டாலும் அவற்றில் நிகழும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது என்பதை மறுக்க இயலாது. இதற்கான காரணங்களில் முதன்மையானது போதை. அடுத்து, போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கையும் அதிகம். விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எல்லாவற்றையும் விட சாலைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சுய பாதுகாப்பு சிந்தனை மிகவும் அவசியம்.
அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
சிறந்த முன்னெடுப்பு
தனி செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளது சிறந்த முன்னெடுப்பு. பெரும்பாலான சாலை விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுத்தப்படுவதாகவே உள்ளன. கனரக சரக்கு மற்றும் போக்குவரத்து வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது விபத்துகள் நிகழ ஏதுவாகின்றன. சாலையில் பயணிக்கும் அனைவரும் உரிய சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்கி விபத்தில்லா பயணங்களை முன்னெடுப்பதே முதன்மையானது.
அ. குப்புசாமி, கடலூர்.
தண்டிக்க வேண்டும்
உலகில் சாலை விபத்துகள் நிகழும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது; மாநில அளவில் தமிழ்நாடு உள்ளது. போக்குவரத்து சமிக்ஞைகளை அலட்சியப்படுத்தும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டு தண்டனை அளிக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் உயிர்மீது ஆசை இல்லாதவர்களாக மாறிவிட்டார்கள். கார் வைத்திருப்போர் தங்களது பிள்ளைகளின் கார் ஓட்டும் ஆசைக்கு உடன்பட்டு, அவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாகிறார்கள். இவர்களைத் தண்டிக்க வேண்டும்.
கு.ப. இரகுநாதன், பூவிருந்தவல்லி.
போதைக்குத் தடை
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. இதற்கு கவனக் குறைவு, அதிவேகமாக பயணித்தல், கால்நடைகள், இயந்திரக் கோளாறு, தூக்கம் எனப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், அவற்றுள் மிக முக்கியமானது மது அல்லது போதைப் பொருள் பயன்பாடு. ஒருவரது சம நிலையைக் குலைத்து அவரையும் பிறரையும் விபத்துக்குள்ளாக்குவது இந்தப் போதையே. செயல் திட்டத்தில் மது மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். போதையை ஒழித்தால் எல்லா துறைகளிலும் வளர்ச்சிப் பாதை நிச்சயமாக உருவாகும்.
தோ. லட்சுமி நரசிம்மன்,
காட்டுமன்னார்கோவில்.
மக்களுக்கும் பொறுப்பு
செயல் திட்டமானது, அறிவிப்புடன் நின்று விடாமல் முழுமையாக நடைமுறைக்கு வருவதுதான் உண்மையான வெற்றியாக அமையும். சாலை விபத்துகளைக் குறைப்பது என்பது ஒரு திட்டத்தின் வெற்றி மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், பல உயிர்களைக் காப்பாற்றும் மனிதநேயப் பணியுமாகும். எனவே, அரசு-காவல் துறை-பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால்தான் "விபத்தில்லா தமிழகம்' என்ற இலக்கை அடைய முடியும். சாலைப் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களின் கடமையும் ஆகும்.
க. குமார், அரக்கோணம்.
அரசுக்குப் பாராட்டு
விபத்து என்றாலே எதிர்பாராமல் நடைபெறுவதுதான். ஆனால், சில சாலை விபத்துகள், ஓட்டுபவரின் கவனக்குறைவாலும், விதிகளை மீறுவதாலும் நிகழ்கின்றன. குறிப்பாக, மது அருந்திவிட்டும் கைப்பேசியில் பேசிக்கொண்டும் வாகனத்தை ஓட்டுவது ஒழுக்கமற்ற ஆபத்தான செயல்கள். இந்நிலையில், சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியும், இது போன்ற தனி கவனம் ஈர்க்கும் செயல் திட்டத்தை உருவாக்கி, அவை மூலமாக விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழக அரசு முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. ஏனெனில், சாலை விபத்துகள் குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அனன்யா, பொள்ளாச்சி.
கவனிக்க வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய ஓர் அவசியமான விஷயமாக இது கருதப்படுகிறது. பத்துபேர் சாலையில் பயணிக்கிறார்கள் என்றால், குறைந்தது எட்டு நபர்களின் காதுகளில் ஹெட் செட் இருக்கிறது. கால்நடைகள் மீது மோதியும், சாலையில் காய வைக்கப்பட்டிருக்கும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் மீது சறுக்கியும் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கிறார்கள் அல்லது காயமடைகிறார்கள். ஆகவே, இந்தத் தனி செயல் திட்டத்தில் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுப்பிரமணிய பாண்டியன், நெய்வேலி.
நல்ல நோக்கம்
கடந்த 10 ஆண்டுகளாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மூலை முடுக்கெல்லாம் மூன்று சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்றைய பொருளாதார நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றார்போல் இவை அதிகரித்துள்ளது ஒருபுறம் மகிழ்ச்சியே. அதே சமயத்தில் தரமற்ற சாலைகளாலும், வாகன நெருக்கடிகளாலும், சில பொறுப்பற்ற விவேகமற்ற ஓட்டுநர்களாலும் விபத்துகளும் பெருகியுள்ளன என்பது கவலை அளிக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் "விபத்தில்லா தமிழகம்' என்ற நோக்கத்துடன் தனி செயல் திட்டம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
தே.ச. மங்கை, திருநெல்வேலி.
மாறப் போவதில்லை
சாலை விபத்துகளைத் தவிர்க்க தவெக அரசு தனி செயல் திட்டம் அறிமுகம் செய்ய முடிவெடுத்தது வெறும் அறிவிப்பாக மட்டுமே அமைய வாய்ப்புள்ளது. எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாதது, ஓட்டுநர் உரிமம் இன்றியும், ஓட்டுநர் உரிம வயதை எட்டாமலும், கைப்பேசியில் பேசிக் கொண்டு என பல்வேறு வடிவங்களில் விபத்துகள் நடைபெறுவதும் உயிரிழப்புகள், பொருள்சேதம் ஏற்படுவதும் அன்றாட வாழ்வில் இயல்பாகிவிட்டது. தற்போதைய இந்த முயற்சி எந்த வகையைச் சார்ந்தது என்று புரியவில்லை.
சி. கார்த்திகேயன், சாத்தூர்.
செயல்பாட்டுக்கு வர வேண்டும்
இது போன்ற தனி செயல் திட்டங்கள் ஒரு புதுமையான முயற்சியாக இருந்தாலும் இதன் மூலம் விபத்துகள் பாதியளவு குறைந்தாலும் அதுவே ஒரு சாதனைதான். அறியாமையும், அலட்சியமும்தான் விபத்துகளை ஏற்படுத்துகின்றன என்பது எதார்த்தமான உண்மை. சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது, ஹெல்மெட் அணிவது போன்றவை விபத்து நிகழ்ந்தால் வாகனத்தை ஓட்டுபவரை மட்டுமன்றி எதிரில் வருவோரையும் காப்பாற்றும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தனி செயல் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் தரும் என்பதை விட உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில்தான் விபத்தில்லா தமிழகம் உருவாகும்.
எல்.ஆர். சாலமன், மயிலாடுதுறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









