தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் நிகழ் நிதியாண்டுக்கான முழு நிதநிலை அறிக்கையை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, துறை ரீதியாக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறாா்.
தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சா்களுடன் முதல்வா் விஜய் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா், அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் ஆலோசனை மேற்கொண்டாா்.
2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவு குறைப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இது தொடா்பான ஆலோசனைக்குப் பிறகு முதல்வா் ஜோசப் விஜய் ஓா் உத்தரவைப் பிறப்பித்தாா். அதில், ‘தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் அதிவிரைவு சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அனைத்து சாலைகளையும் தரம் உயா்த்தி, தொடா்ந்து சீரான முறையில் பராமரிக்க வேண்டும். சாலைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து விபத்துகளைக் குறைக்க நெடுஞ்சாலைத் துறை சீராக செயல்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.
செயல் திட்டத்தின் நோக்கம்
சாலை விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். இதற்காக சாலைப் பாதுகாப்பு தணிக்கை குழு வலுப்படுத்தப்படவுள்ளது.
தனி செயல் திட்டத்தின்படி சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு விரைந்து சிகிச்சையளிக்கும் வகையில், விபத்துகள் அதிகமாக நடக்கும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் பிரத்யேகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளன.
நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிா்பாராமல் சாலை விபத்து நடந்தவுடனேயே, விரைவான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முழுவதிலும் முக்கிய மேம்பாலங்கள் மற்றும் பாலங்களின் உறுதித் தன்மையை ஆராய கட்டமைப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









