எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க 3 மாத காலக்கெடுவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இன்றைய காலகட்டத்தில் விசாரணை என்பதே மிகவும் தாமதமாக நடைபெறுகிறது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :10 ஜூன் 2026, 4:36 am IST

பயனற்ற தீர்ப்பு

இன்றைய காலகட்டத்தில் விசாரணை என்பதே மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. குறிப்பாக, 2016}இல் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தோற்றது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தற்போதுதான் வந்துள்ளது. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என வந்த தீர்ப்பால் எந்தப் பலனும் இல்லை. ஒவ்வொரு வழக்கும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். விசாரணை முடிந்த அன்றே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கும்போது மட்டுமே தீர்ப்பின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

நிலுவை வழக்குகள்

வரவேற்க வேண்டிய தீர்ப்புதான். நாடு முழுவதும் பல லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு சரியானது. ஏழை, எளியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. முதல் நடவடிக்கையாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து வழக்குகளை எளிதாக நடத்தவும், விரைந்து நீதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்ன. இராஜேந்திரன், சித்தலப்பாடி.

மிகச் சரியானது

நீதிமன்றங்களில் அதிகமாக வழக்குகள் தேங்கக் கூடாது. அதனால், மூன்று மாத காலக்கெடுவுக்குள் அதற்கான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது மிகவும் சரியானது. ஆறப் போடப்படப்பட்ட வழக்கில் தீர்ப்பு நேர்மையாக இருக்குமா என்பது சந்தேகமே. அதனால், மூன்று மாதங்களுக்குள் என்றால் அதன் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு மிக நேர்மையான தீர்ப்பு கிடைக்கும் என்பதால்தான், உச்சநீதிமன்றம் இப்படி ஒரு காலக்கெடுவை கொடுத்திருப்பதாக எண்ணலாம். இந்தத் தீர்ப்பால் வழக்குகளின் தேக்கம் குறையும்.

பிரகதாம்பாள், கடலூர்.

கடைசிப் புகலிடம்

விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க மூன்று மாத காலக்கெடுவை உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்தது சரியே. அதே நேரத்தில் உயர்நீதிமன்றங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு, நீதிபதிகளின் எண்ணிக்கை உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்த நல்லதொரு உத்தரவை உயர்நீதிமன்றங்கள் மட்டுமல்லாமல், மற்ற விசாரணை நீதிமன்றங்களும் அமல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ஒரு சாமானியனின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம்தான். அங்கிருக்கும் நீதிபதிகள் அந்த மனிதருக்கு தெய்வத்துக்கு ஒப்பானவர்கள்.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

விசாரணைக்கும் காலக்கெடு

மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப நீதிமன்றங்களில் நீதிபதிகள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மற்ற துறைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வழக்குரைஞர்களாக பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைவு. நீதித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க போதிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க 3 மாத காலக்கெடுவை விதித்திருக்கிற உச்சநீதிமன்றம் விசாரணை எத்தனை மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் காலந்தாழ்த்திச் செல்வதையும் அனுமதிக்கக் கூடாது.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

எண்மமயமாதல்

உச்சநீதிமன்றம் 3 மாத காலக்கெடுவில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறியது நல்ல முன்னேற்றம். ஆனால், இதை நடைமுறையில் சாத்தியப்படுத்த தொழில்நுட்பம் மட்டுமே முக்கியம். அனைத்து ஆவணங்

களும் எண்ம (டிஜிட்டல்) வடிவில் கிடைக்க வேண்டும். எண்மமயமாக்கல் மூலம் சாட்சியங்களும், ஆவணங்களும் வேகமாக கிடைக்கும். மேலும், நாட்டில் நீதித் துறை விரிவாக்கம் அவசியம். கூடுதலாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டால் வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்படும். இது குற்றங்களைக் குறைப்பதற்கும், தீர்ப்புகளை வேகமாக வழங்குவதற்கும் உதவும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

நம்பிக்கை அதிகரிக்கும்

இந்தத் தீர்ப்பின் மூலம் விசாரணை நிறைவடைந்த வழக்குகளில் தீர்ப்பளிக்க ஏற்படும் காலதாமதங்கள் தவிர்க்கப்படுவதுடன், மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பாகும். வழக்காடுபவர்களுக்கு ஏற்படும் பண விரயமும், மன உளைச்சலும் தவிர்க்கப்படும். நீதிபதிகளுக்குப் புதிய உற்சாகமும் உத்வேகமும் கிடைக்கும். தீர்ப்புகளின் நம்பகத்தன்மையும் வெளிப்படைத் தன்மையும் மேன்மை பெறும். எனினும், தற்போது நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தீர்ப்புக்காகத் தேங்கி நிற்கும் நிலையிலும், சிக்கலான வழக்குகளை எதிர்கொள்ளும் நிலையிலும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் நடைமுறையில் சாத்தியப்படுவது கடினமானதே !

கே. ராமநாதன், மதுரை.

காலி இடங்களை நிரப்புக

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. விசாரணை முடிந்து தீர்ப்புக்கு காத்திருக்கும் குற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கைதிகள் 3 மாத காலக்கெடுவில் தண்டனை அல்லது விடுதலை பெற உதவும். மேலும், சிவில் வழக்கில் தீர்ப்புக்கு காத்திருக்கும் மக்களின் கால விரயம் தவிர்க்க உதவும். நீதிமன்றங்களில் உரிய நேரத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க ஏதுவாக வழக்கின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிபதிகளை நியமிக்கும் வசதியை அரசு ஏற்படுத்துதல் அவசியம். நீதித் துறையில் உள்ள காலி இடங்களை நிரப்புவது மிகவும் முக்கியம்.

அ. குப்புசாமி, கடலூர்.

புனரமைக்க வேண்டும்

விசாரணை முடிந்து மூன்று மாத காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வெளியிட வேண்டும் என வரம்பு நிர்ணயித்துள்ளது வேதனை கலந்த வியப்பு. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி எனலாம். சமீபத்திய சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி குறித்த தீர்ப்பில், அனைத்துப் பலன்களையும் வெற்றி பெற்றவர் அனுபவித்த பிறகு, அவரது வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை எப்படி எடுத்துக் கொள்வது? நீதிமன்றக் கொள்கைகள், நெறிமுறைகளை கால நடைமுறை சூழலுக்கு ஏற்ற வகையில் புனரமைப்பது காலத்தின் கட்டாயம். எனவே, இனிமேலாவது தீர்ப்புகள் சரியான நேரத்துக்கு வரவேண்டும்.

மாறன் தமிழரசி, மேல்பட்டி.

வரவேற்கத்தக்கது

விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது என்பதற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை தீர்ப்பளிக்கவில்லை என்கிற விவகாரத்தின் கீழ் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வழக்குப் பதிவு செய்த ஓராண்டுக்குள் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்; மூன்று வாய்தாக்களுக்கு மேல் அளிக்கக் கூடாது உள்ளிட்ட சட்டங்கள் கொண்டுவந்தால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறையும்.

க. அருச்சுனன், செங்கல்பட்டு.

இனி தாமதமாகாது

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் அம்பலக்காரர்கள் அல்லது சமூகத் தலைவர்களால் ஆலமரத்தடி அல்லது புளியமரத்தடியில் உடனுக்குடன் வழக்குகள் தீர்வு காணப்பட்டன. சொத்து பிரச்னைகள், பாலியல் பிரச்னைகள், சிறு சிறு மனஸ்தாபங்கள் என அனைத்துமே நீதிமன்றம் சென்றதால், அந்த வழக்குகள் லட்சக்கணக்கில் தேங்கி விட்டன. வழக்கின் பலாபலன்களை அனுபவிக்க முடியாமல் வாதி}பிரதிவாதிகள் மறைந்து போவதுமான அவலங்கள் நடைபெறுகின்றன. வழக்குகள் சராசரியாக 6 முதல் 12 ஆண்டுகள் வரை நடைபெறுவதும், மேல்முறையீடுகளால் தாமதமாவதும், தீர்ப்புகள் தாமதமாவதும் விதியின் பயனோ என்னவோ?

ஆர்ஜி பாலன், திசையன்விளை.

குற்றங்கள் குறையும்

பல வழக்குகளில், விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள், சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதி இருவருமே ஓய்ந்து போய்விடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் இந்த 3 மாத காலக்கெடுவில் தீர்ப்பு என்ற உத்தரவால், மேற்கண்ட நிலை முற்றிலும் மாறும். இது, நீதித் துறைக்கு ஓர் மணிமகுடம். மேலும், இந்தத் தீர்ப்பால் தீர்ப்புகள் விரைந்து வழங்கப்படும்போது, தவறு செய்யத் தயங்குவார்கள். இதனால், குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும். நீதித் துறையின் முக்கிய நோக்கமே குற்றமற்ற சமுதாயத்தைக் கட்டமைப்பது என்ற வகையில் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியமானது.

கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.

நல்ல தீர்ப்பு

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள். தள்ளி வைக்கப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் வெற்றியைச் சுவைத்ததில்லை. குறுகிய காலத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சாட்சியங்களைக் கொண்டு மிக நல்ல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிட்ட வேண்டும் என்பதால் உச்சநீதிமன்றம் 3 மாத காலக்கெடுக்குள் எந்த ஒரு வழக்கையும் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று சொல்லி இருப்பது மிகவும் சரியானது. மூன்று மாத காலம் என்பது சரியான காலக்கெடுதான்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

கட்டாயச் சூழல்

விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சுமார் 5 கோடி வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. மேலும், வழக்குகள் தேக்கமடையாமல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது கட்டாயச் சூழலாகி விட்டது. இன்று தேங்கிக் கிடக்கும் வழக்குகள் இந்திய நீதிபரிபாலன முறையில் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. நிச்சயமாக தாமதிக்கப்பட்ட நீதியைத் தவிர்க்கவே உச்சநீதிமன்றம் இந்தக் காலக்கெடுவை விதித்திருக்கிறது. ஒரு நீதிமன்றத் தீர்ப்பு என்பது பாதிக்கப்பட்டவரின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்க வேண்டும். வழக்கின் விசாரணை தாமதமாகும்போது தீர்ப்பில் நீதி இருக்காது.

ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.