இந்திராதிகாரம் பிறந்த கதை! - 4 :  ஜூன் 14, 1975 - ஒருபோதும் கலங்க மாட்டேன்!

1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... பதவி விலகுவதில்லை என்பதை நோக்கி இந்திரா காந்தி...
இந்திரா காந்தி (கோப்புப் படம்)
இந்திரா காந்தி (கோப்புப் படம்)


பதவி விலகுவதில்லை என்ற நிலைப்பாட்டை நோக்கி இந்திரா காந்தி நகர்கிறார் என வெளிப்படையாகவே தோன்றத் தொடங்கிவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை பதவியிலிருந்து விலகியிருக்கலாமா என்பது பற்றி மூத்த தலைவர்கள் இருவருடன் ஆலோசித்தபோது, இருவருமே அதை எதிர்த்ததுடன் நாட்டுக்கே பேரபாயமாக முடியும் என்றும் எச்சரித்தனராம். ராஜிநாமா பற்றி நேரடியாக எதுவும் கூறாவிட்டாலும் தம்முடைய ஆதரவாளர்களைக் கைவிடப் போவதில்லை என்று இந்திரா காந்தி கூறியிருப்பதாகத் தெரிகிறது.

கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ் அவரைச் சந்தித்துவிட்டு வந்தபோது, அவர் ராஜிநாமா செய்ய மாட்டார் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், மற்றொரு முதல்வரோ இந்திரா காந்தி நியாயத்துக்கும் நிர்பந்தத்துக்கும் இடையே என்ன செய்வதெனத் தெரியாமல் திண்டாடுகிறார் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், நீதிமன்றம் எழுப்பிய இரு பிரச்சினைகள் பற்றி நேரடியாகக் கருத்துத் தெரிவித்த பிரதமர் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.

இந்திரா காந்தியின் வீட்டுக்கு வெளியே நடைபெறும் கூட்டங்கள் தொடர்ந்தன. பஞ்சாபிலிருந்து வந்திருந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசினார் இந்திரா காந்தி:

"1971 ஜனவரி 14 ஆம் தேதியிலிருந்தே அரசு ஊழியர் பதவியிலிருந்து யஷ்பால் கபூர் விலகிவிட்டார். அன்றிலிருந்து சம்பளமும் வாங்கிக் கொள்ளவில்லை. அதைவிட உங்களுக்கு வேறு என்ன சான்று வேண்டும்? (ஜன. 25 ஆம் தேதி வரை பதவியில் இருந்ததாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது). ஊழல் நடைமுறைகள் என்ற சொற்றொடர்தான் இந்தப் பிரச்சினை முழுவதற்கும் ஒரு தவறான திருப்பத்தை அளித்திருக்கிறது. நான் முறைகேடான காரியம் செய்ததாகத் தீர்ப்பில் கூறப்படவில்லை.

"நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோருபவர்கள்தான் அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்கவில்லை. நீதிமன்றம் 20 நாள்களுக்கு முழுமையான நிறுத்திவைப்பை அறிவித்திருக்கிறது. நீதிபதியைப் பற்றித் தாம் எதுவும் கூற விரும்பவில்லை.

"நமது எதிரிகளிடமிருந்து புது வகையான சவால்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை மக்கள் ஒன்றுபட்டும் தைரியமாகவும் உறுதியுடனும் இருந்து சமாளிக்க வேண்டும். நம்முடைய எதிரிகள் பலமிக்கவர்களாக இருக்கிறார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. ஏராளமான பணம் இருக்கிறது. என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு நம்மை ஒழித்துக் கட்ட அவர்கள் முயற்சி செய்வார்கள். இதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை"

பின்னர், பஞ்சாப், தில்லி, உ.பி. மக்களிடையே பேசுகையில், மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யப் போவதாக அறிவித்த இந்திரா காந்தி, பதவியில் நீடிப்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

"கடந்த நான்கு ஆண்டுகளில் துணைக் கண்டத்தில் நிலைத் தன்மையைக் குலைக்க முயன்ற சில வல்லரசுகளின் சவால்களை உறுதியுடனும் துணிவுடனும் நாடு சமாளித்தது.

"இத்தகைய சவால்களைக் கண்டு நான் ஒருபோதும் கலங்கவில்லை; எதிர்காலத்திலும் கலங்கப் போவதில்லை. இந்திரா ஒழிக கோஷங்களைக் கண்டும் பயப்படப் போவதில்லை. ஏழைகளுக்கு சேவை செய்யும் பாதையிலிருந்து நான் விலகப் போவதில்லை" என்றார் இந்திரா காந்தி.
 

'நீடிப்பதை நினைத்தும் பார்க்க முடியாது'

இந்திரா காந்தி பிரதமராக நீடிப்பதை நினைத்துப் பார்க்க முடியாதது என்று அலாகாபாத் நீதிமன்றத்தில் ராஜ்நாராயணுக்கு ஆதரவாக வழக்காடிய வழக்கறிஞர் சாந்திபூஷண் தெரிவித்தார்.

1971 தேர்தலில் ராய் பரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு,  அவர் எவ்வாறு பிரதமராக நீடிக்க முடியும் என்றும் அவர் வியப்புத் தெரிவித்தார்.

மும்பையில் பழைய காங்கிரஸ் கூட்டமொன்றில் பூஷண் பேசினார்:

"மக்களவை உறுப்பினராகத் தேர்வு பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டு அவையில் அமர்ந்திருக்கும் உரிமையை இழந்தவர் இன்னும் பிரதமராக நீடிக்க முடிவது நினைக்க இயலாதது.

"நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டவரால் உயர் பதவி வகிக்க முடியும் என்று எவ்வாறு நம்ப முடியும்?

"இந்திரா காந்தி ஊழல் நடத்தை குற்றம் செய்ததாகக் கூறிய நீதிபதி, அவருடைய சாட்சியத்தையும் நம்பவில்லை. அதாவது அவர் பொய் சாட்சியம் கூறினார் என்று பொருள். பொய் கூறியவர் என்று நீதிபதியால் குறிப்பிடப்பட்டவர் பிரதமராக நீடிக்க முடியுமா?

"தன் நாட்டு நீதிமன்றத்தால் பொய் சாட்சியம் கூறியவராக அறிவிக்கப்பட்டவரை மற்ற நாடுகள் நம்ப மறுக்கும். இந்திரா காந்தி தொடர்ந்து பதவி வகிப்பது சட்டப் பிரச்சினையைவிட தார்மிகப் பிரச்சினை.

"புதிதாக மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால்தான் 20 நாள்கள் தடையுத்தரவு தரப்பட்டது. இதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாகாது.

"தடை உத்தரவு அடிப்படையில், என்ன வந்தாலும் வரட்டும் என்ற போக்கை மேற்கொண்டு பிரதமர் பதவியில் நீடிப்பது தவறு. உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு வந்ததும் அது பற்றிய எல்லா பிரச்சினைகளும் மறுபரிசீலனைக்கு வரும்.

"நீதித்துறையின் சுதந்திரத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வந்தால் அது மரபுகளைப் புறக்கணிக்காது. வழக்கு முடியும் வரை நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ளவும் வாக்களிக்கவும் இந்திரா காந்தியை அனுமதிக்காது.

"ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடக்கியுள்ள இயக்கம் நாடு முழுவதும் பரவும்" என்றார் சாந்திபூஷண்.

நம்பிக்கை தெரிவிக்கும் நடவடிக்கைகள்

இதனிடையே, இந்திரா காந்தியின் தலைமை மீது நம்பிக்கை தெரிவிக்கும் நடவடிக்கைகள் பரவலாகத் தொடங்கின. முதல்வர்கள், தலைவர்கள், தொண்டர்கள் என்று அனைத்து நிலைகளிலும் பரவியது. இவையெல்லாமும் திட்டமிடப்பட்டவை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியபோதிலும் முழு வேகத்தில் தொடர்ந்தது.

இந்திரா காந்தியின் மீது முழு நம்பிக்கை தெரிவித்து மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆந்திர முதல்வர் ஜெ. வெங்களராவ் தலைமையில் ஆந்திர எம்.பி.க்களும் ஒடிசா முதல்வர் நந்தினி சத்பதி தலைமையில் ஒடிசா எம்.பி.க்களும் இந்திரா காந்தி மீது நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேபோல ஹரியாணா சட்டமன்ற காங்கிரஸ் கட்சியும் முதல்வர் சரத் சந்திர சின்ஹ தலைமையில் அஸ்ஸாம் காங்கிரஸும் இந்திரா காந்திக்கான ஆதரவை உறுதிப்படுத்தினர். மேற்கு வங்க காங்கிரஸ், சிக்கிம் முதல்வர் டோர்ஜி எல்லாரும்கூட.

பிரதமர் இந்திரா காந்தியை காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பிரதமரின் அழைப்பின் பேரில் அவர் தில்லி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் டி.கே. பரூவாவையும் பின்னர் மத்திய அமைச்சர் ஜகஜீவன் ராம் ஆகியோரையும் சந்தித்தார்.

ஜூன் 21 ஆம் தேதி தில்லியில் பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் 23 ஆம் தேதி பேரணியொன்றை நடத்துவது பற்றியும் புது காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது.

சிறப்புக் கூட்டம் நடத்துக!

சிக்கலான இந்த நிலைமை பற்றி விவாதித்து முடிவு எடுப்பதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொண்டு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொறடாவான ஜோதிர்மயீ பாசு கடிதம் எழுதியுள்ளார்.

தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்துக்கும், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்துக்கும் இடைப்பட்ட சுமார் அரை மணி நேரம் இந்திரா காந்தி மக்களவை உறுப்பினராக இருந்திருக்க முடியாது; ஆக, பிரதமராகவும் இருந்திருக்க முடியாது. எனவே, அந்த அரை மணி நேரம் அரசும் இல்லை என்றாகிறது. மக்களவையின் மிகப் பெரிய கட்சியின் தகுதி வாய்ந்த தலைவரை அமைச்சரவை அமைக்க அழைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் அதைச் செய்யவில்லை. அரசியல் சட்டம் விதித்துள்ளபடி குடியரசுத் தலைவர் என்ற முறையில் உங்கள் கடமையை நீங்கள் செய்யவில்லை என்றும் பாசு குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டங்களை நடத்துமாறு அத்தியாவசிய சேவைத் துறையினரை தில்லியில் அரசு உயர் அலுவலர்களே கேட்டுக்கொள்வதாக ஜனசங்கம், பழைய காங்கிரஸ், பாரதிய லோகதளம் ஆகியவை குற்றம் சாட்டின.

தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன், மின்சார நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு தில்லியின் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் திடீர்திடீரென வேலையை விட்டுப் போய்விடுவதால் பேருந்து போக்குவரத்தும் மின் விநியோகமும் பாதிக்கப்படுகின்றன. உடனடியாக இவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் பெரும் கிளர்ச்சி மேற்கொள்ளப்படும் என்றும் கட்சிகள் எச்சரித்தன.

தகுதியிழந்துவிட்டார்!

பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான தார்மிகத் தகுதியை இந்திரா காந்தி இழந்துவிட்டார் என்று குற்றம் சாட்டிய இளந்துருக்கியர் தலைவரான மோகன் தாரியா, இந்திராவிடம் தங்கள் விசுவாசத்தை நிரூபித்துக் காட்டுவதற்காக புது காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர். தலைமைப் பொறுப்பேற்க இந்திரா காந்தியைத் தவிர யாருமில்லை என்று கூறுவது, ஜகஜீவன் ராம், சவாண், ஸ்வரண் சிங் போன்றோரை அவமதிப்பதாகவும் அபாயகரமான தனிநபர் சர்வாதிகாரத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீடிக்க வேண்டும்: எம்ஜிஆர்

சிதம்பரம் அருகே கிள்ளையில் அண்ணா சிலையைத் திறந்துவைத்துப் பேசிய அதிமுக பொதுச்செயலர் எம்.ஜி.ஆர்., இந்தத் தருணத்தில் நாட்டின் முன்னுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க இந்திரா காந்தியைப் போன்ற திறமையான தலைவர்கள் யாருமில்லை; அவர் அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பின்னால் நெருக்கடி நிலை அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் மிக மோசமான வகையில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டது. இந்த ஒடுக்குமுறையில் பெரியளவிலான பாதிப்பை எதிர்கொண்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமும் அதன் வெளியீடுகளும். இந்தப் பிரச்சினையின் தொடக்கத்திலேயே தீர்ப்பு பற்றி மிகக் கறாரான, தெளிவான  தலையங்கத்தை, இந்த நாளில், எழுதியிருந்தது தினமணி.

தலையங்கம்

அலகாபாத் தீர்ப்பு

ஜூன் 12 என்பது சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் அழியாத இடம் பெறுகிறது. 1971-ல் நடந்த லோகசபைத் தேர்தலில், உ.பி.யிலுள்ள ரேபரேல்லி தொகுதியிலிருந்து இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் ஹைகோர்ட் அன்று தீர்ப்பளித்தது. தன்னுடைய தேர்தல் வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளுவதற்காக பிரதம மந்திரி இந்திரா காந்தி ஊழல் முறைகளைக் கையாண்டார் என்ற புகார்களில் இரண்டை கோர்ட்டார் ஏற்றுக்கொண்டனர். எனவே, அவருடைய தேர்தல் செல்லுபடியாகாதென்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் இயற்கையான விளைவாக, பிரதம மந்திரி இந்திரா காந்தி ஆறு வருஷ காலத்திற்கு லோகசபை, ராஜ்ய அசெம்பிளி தேர்தல்களில் போட்டியிட முடியாதென்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பிரதம மந்திரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்யவிருக்கிறார். ஒரு சாதாரண மெம்பரின் தேர்தல் செல்லாது என்பது வேறு, ஒரு பிரதம மந்திரியின் தேர்தல் செல்லாது என்பது வேறு. சாதாரண மெம்பர் தன் மெம்பர் பதவியைத்தான் இழப்பார். ஆனால், பிரதம மந்திரியின் நிலைமை அப்படியில்லை. யூனியன் சர்க்காருக்கே அது சட்டபூர்வமான ஒரு நெருக்கடியை உண்டுபண்ணிவிடுகிறது. இதை முன்னிட்டு தனது தீர்ப்பின் அமல் இருபது நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படும் என்று நீதிபதி சின்ஹா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அப்பீல் தாக்கல் செய்யப்பட்டால், அதன் மீது சுப்ரீம் கோர்ட்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். இன்றுள்ள நிலைமை இதுதான்.

கோர்ட் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிஷங்களுக்குள்ளேயே பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன. ஆனால், சட்டப்படி பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. தீர்ப்பின் அமல் இருபது நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் இதுதான். ஆனால், இது வெறும் சட்ட நுட்பத்தைப் பற்றிய பிரச்னை மட்டுமல்ல. "ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்'' என்று ஆங்கிலத்தில் கூறப்படுவதுண்டு. அதாவது நாட்டை ஆளும் பொறுப்புடையவர்களைப் பற்றி எந்தப் புகாரும் எழுவதற்கு இடமிருக்கக் கூடாது. இந்தியாவில் பிரதம மந்திரி பதவியை வகிப்பவருக்கு இது பொருந்தும். சட்டப்படி பிரதமர் உடனே பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் இல்லையென்றாலும், தார்மிகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரப்படுவதில் அசாதாரணமானது எதுவுமில்லை. ஹைகோர்ட்டுகளின் தீர்ப்புக்கு எப்போதுமே தனி மதிப்புண்டு. சில தினங்களுக்கு முன்பு கேரள சர்க்காரின் அப்பீல் ஒன்றைத் தள்ளுபடி செய்து, சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக்கால நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அளித்துள்ள ஒரு தீர்ப்பில்கூட இந்த உண்மையை எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆயினும் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி முடிவு தெரியும் வரையில், பிரதம மந்திரி தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்.

ஆனால், இதைப் பற்றி ஆளும் கட்சியினர் மேற்கொண்டுள்ள நிலை வியப்பளிப்பதாயிருக்கிறது. இந்திரா காந்தியின் தலைமை நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானதென்றும், அவருடைய தலைமையைக் காப்பாற்றித்தான் ஆக வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். புது காங்கிரஸின் இளைஞர் பிரிவினர் இன்னும் ஒருபடி மேலே போகிறார்கள். புதுடில்லியில் உள்ள நேரு படையினர்' பிரதமரின் இல்லத்திற்கு முன்பு கூடி, "துப்பாக்கி குண்டுகளுக்கும், லாத்திகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். உங்களைக் காப்பாற்றுவோம்" என்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். மேற்கு வங்காளத்திலுள்ள புது காங்கிரசின் இளைஞர் பிரிவினர் "தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று கோஷங்கள் எழுப்பியிருக்கின்றனர். மேற்கு வங்க நிதி மந்திரியான சங்கர் கோஷ், "எந்தக் கோர்ட்டின் தீர்ப்பும் இந்திரா காந்தியின் தலைமையை வீழ்த்த முடியாது" என்று அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார். "இந்தத் தீர்ப்பு ஜனநாயகம், காங்கிரசின் சோஷலிஸ்ட் கொள்கை மீதான ஒரு தாக்குதலாகும். மக்களின் தீர்ப்புதான் முக்கியமேயொழிய கோர்ட்டின் தீர்ப்பு முக்கியமல்ல" என்று மேற்கு வங்க நிதி மந்திரி கூறியிருப்பது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒதுங்கி நிற்பவர்களுக்குக்கூடப் பெரும் வேதனையையும்,  அதிர்ச்சியையும் அளித்திருக்கும். பொதுவாக புது காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்களைப் பார்க்கும்போது அவர்கள் நம்ப முடியாத ஒரு நடைமுறையை வகுக்க முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் ஒரு அளவுக்கு ஏற்படத்தான் செய்கிறது.

பார்லிமெண்ட்,  நிர்வாகம், நீதி பரிபாலனம் ஆகிய மூன்றுதான் நம் நாட்டு ஜனநாயக அமைப்பின் அஸ்திவாரங்களாகும். காலத்திற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவது பார்லிமெண்டின் பொறுப்பு. அப்படி நிறைவேற்றப்படும் சட்டங்கள், அரசியலமைப்பின் வரம்புக்குட்பட்டிருக்கின்றனவா என்று பரிசீலனை செய்து தீர்ப்பளிக்க வேண்டியது நீதி பரிபாலனம் செய்யும் கோர்ட்டுகளின் பொறுப்பு. சட்ட வரம்புகளுக்குட்பட்டு ஆட்சி நடத்த வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு. யாருக்கு அதிக அதிகாரம் என்ற கேள்வி இங்கு எழவில்லை. இந்த மூன்று பிரிவுகளும் இணக்கமாகச் செயல்பட்டால்தான் பார்லிமெண்டரி ஜனநாயக அமைப்பு சீராக நடக்கும். ஆனால் கோர்ட் தீர்ப்புகளைவிட மக்களின் தீர்ப்புதான் முக்கியம் என்று மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள் பேச ஆரம்பித்தால், அது கோர்ட்டுகளின் அடிப்படையை மட்டுமன்றி, ஜனநாயக அமைப்பின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறிந்து விடும். இம்மாதிரி பொறுப்பற்ற பேச்சுகள், 'சர்வாதிகாரத்தை நோக்கி இந்திரா காந்தி போய்க்கொண்டிருக்கிறார்' என்ற புகார்களை ஊர்ஜிதம் செய்வது போலாகும். இம்மாதிரி சந்தேகங்களை தலைமையினர் உடனடியாகப் போக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புதான் இறுதியானது. அதன் தீர்ப்பு என்னவாயிருந்தாலும் அதன்படி நடப்போம் என்று தலைமையினர் தெளிவாக அறிவிக்க வேண்டும். மக்கள் தீர்ப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. மக்கள் தீர்ப்பை அறிய வேண்டுமானால் குஜராத் அசெம்பிளி தேர்தல் முடிவுகள் நம் கண் முன்பு இருக்கின்றன.

*

அடுத்த  வாரம் மேல் முறையீடு

அலாகாபாத் தீர்ப்பை எதிர்த்து அடுத்த வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன. இதற்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் பிரதமர் இந்திரா காந்தியின் சார்பில் வழக்கறிஞர்கள் தாதா சாஞ்சியும் சுனந்தா பண்டாரேயும் ஆஜராவார்கள்; என்.ஏ. பால்கிவாலா வாதிடுவார் என்றும் தெரிகிறது.

இதையும் படிக்க.. இந்திராதிகாரம் பிறந்த கதை! - 5 :  ஜூன் 15, 1975 - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே முடிவு

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து - தொடரும்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com