இந்திராதிகாரம் பிறந்த கதை! - 8 :  ஜூன் 18, 1975 - இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா

1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... மறக்க முடியாத முழக்கம் - இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்துக்கு வரும் இந்திரா காந்தி!
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்துக்கு வரும் இந்திரா காந்தி!

பிரதமர் இந்திரா காந்தியின் மீது முழு நம்பிக்கை தெரிவித்து நாடாளுமன்ற (புது)  காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தில்லியில் இந்த நாள் மாலையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இந்திரா காந்தி வாழ்கவெனக் கோஷமிட்டு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

பிரதமராக இந்திரா காந்தி நீட்டிப்பது நாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது என்று குறிப்பிடும் இந்தத் தீர்மானத்தை மூத்த தலைவர் ஜெகஜீவன் ராம் முன்மொழிய, ஒய்.பி. சவாண் வழிமொழிந்தார்.

இந்தத் தீர்மானத்தின் மூலம் கட்சிக்குள் இந்திரா காந்தியின் தலைமைக்கு இருந்த குறைந்த அளவு எதிர்ப்பும்கூட குறைந்துவிடும்; ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் சிறிது எதிர்ப்பு நிலவ வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டது.

ஆனால், நீதிமன்றம் நிபந்தனைகளே விதித்தாலும் பிரதமர் பதவியில் இந்திரா காந்தி தொடருவதையும் மழைக்காலக் கூட்டத் தொடரைக் கூட்டாமல் இருப்பதையும்கூட மூத்த தலைவர்கள் ஆதரிக்கின்றனர்.

இந்தக் கூட்டத்துக்குக் கட்சிக்குள்ளேயே இளந் துருக்கியர் என அழைக்கப்படும் மோகன் தாரியா, சந்திரசேகர், கிருஷ்ணகாந்த் போன்றோர் வரவில்லை. இவ்விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே மோகன் தாரியா எதிர்க்கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சந்திரசேகரும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இவர்களைக் கூட்டத்துக்கு அழைத்துவர பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவர்கள் வரவில்லை. இதேபோல செயலர் ராம்தன், லட்சுமிகாந்தம்மா ஆகியோரும் வரவில்லை.

"ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்பட நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று அங்கங்களும் பலமாக இருக்க வேண்டும். இவற்றில் எதுவும் பலவீனமடைவதை காங்கிரஸ் சகித்துக்கொள்ளாது. நீதித் துறையைப் பொருத்தவரை அச்சம், விருப்பு, வெறுப்பு இல்லாமல் சுயேச்சையாக நீதித்துறை செயல்படுவது ஜனநாயகத்துக்கு அவசியம்" என்றார் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெகஜீவன் ராம்.

"இந்திரா காந்தி நமது தலைவர். அவரே இனியும் நமது தலைவராக இருப்பார். அவர் நமது பிரதமர், அவரே நமது பிரதமராகத் தொடர்ந்து இருப்பார். மக்களைக் குழப்ப எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கையும் இந்திய மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளுடன் பின்னிப் பிணைந்தது. இந்திய மக்களிடமிருந்து இந்திரா காந்தியைப் பிரிக்க முடியாது. இந்திராவுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் இந்தியாவுக்கு நடக்கும்; இந்தியாவுக்கு நடப்பதுதான் இந்திராவுக்கும்" - இப்படிப் பேசியவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒய்.பி. சவாண்.

இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா என்பதுதான் இந்திய அரசியல் வாழ்க்கையின் அடிப்படை உண்மை என்பதைக் கட்சி உறுதி செய்துள்ளது. துப்பாக்கி வேட்டிலிருந்தோ காலிகளின் கல்வீச்சிலிருந்தோ அதிகாரம் பிறக்கவில்லை என்பதைக் கட்சி நிரூபித்திருக்கிறது. மக்களின் விருப்பத்திலிருந்தே அதிகாரம் பிறக்கிறது என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் மக்களுடைய விருப்பப்படி நாட்டில் ஆட்சி நடத்தப்படும் - கண்ணை மூடிக்கொண்டு இந்திரா காந்தியின் ஆதரவாளராகத் திகழ்ந்த புது காங்கிரஸ் கட்சியின் தலைவரான டி.கே. பரூவா. இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா என்ற இவருடைய இந்தச் சொற்களே பின்னாளில் நெருக்கடி நிலைக் காலத்தில் பெரு முழக்கமாக மாறியது.

எனக்கு என்ன நேர்கிறது என்பது ஒரு பொருட்டல்ல

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் இந்திரா காந்தி ஆற்றிய உரை இந்த காலகட்டத்தின் ஹைலைட் என்றால் வியப்பில்லை. ஏறத்தாழ அவர் என்ன நினைக்கிறார், கட்சி / தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யப் போகிறது / போகின்றனர் என்பதை இந்த உரையில் கோடிட்டுக் காட்டிவிட்டார்:

"நான் பதவியில் நீடிப்பது எதிர்க்கட்சிகள் என்ன விரும்புகின்றன என்பதைப் பொருத்தது அல்ல. என்னுடைய சொந்தக் கட்சி மற்றும் இந்திய மக்களின் விருப்பத்தைப் பொருத்தது. நான் வகுத்துச் செயல்படுத்திய தீவிரமான  கொள்கைகள் மீதான எதிர்ப்பு காரணமாக 1969 முதலே என்னுடைய ராஜிநாமாவை எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.

"பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் லட்சியங்களை நோக்கி முன்னேறுவதிலும் கட்சிப் பணிகளை அமலாக்குவதிலும் என்னிடம் தயக்கம் இருக்காது. இந்தப் பிரச்சினையில் தில்லியிலும் மாநிலத் தலைநகர்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஏழைகளும் பலவீனமான பிரிவினரும் என் மீது வைத்துள்ள அன்பைக் காட்டுகின்றன. இதைக் கண்டு என் உள்ளம் நெகிழ்கிறது.

"1969-ல் கட்சி பிளவுண்டபோது இருந்ததைவிட இப்பொழுது மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். பணம் கொடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துவருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது கண்டிக்கத் தக்கது. இது மக்களுக்கு நியாயம் செய்வதாகாது. மக்களின் அன்பு என் உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

"சிறிது காலமாகவே கொதித்துக் கொண்டிருந்ததுதான் தற்போதைய நெருக்கடி. புது காங்கிரஸுக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்ந்ததன் விளைவு இது. இந்தச் சவாலைத் தெளிவாகவும் துணிவாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

"எனக்கு என்ன நேர்கிறது என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால், இந்திய மக்களுக்கு என்ன நேர்கிறது என்பது மிக முக்கியமாகும். நாடு பலவீனமடைவதை அனுமதிக்க முடியாது.

"உள்நாட்டு நிலைமையை மட்டுமின்றி சர்வதேச நிலைமையையும் காங்கிரஸார் நினைத்துப் பார்க்க வேண்டும்.

"உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக இந்தியா  போரில் ஈடுபடலாம் என பாகிஸ்தான் தலைவர்கள் கூறிவருவது துரதிருஷ்டவசமானது.

"இந்திய மக்கள் அசட்டுத் துணிச்சலான செயல்களில் இறங்க மாட்டார்கள்.  அவர்களுடைய மன முதிர்ச்சியைக் குறைத்து மதிப்பிடலாகாது. காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயலுகிறார்கள். அவ்வாறு நேரிட்டால் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பது பெரும் சிரமமாகிவிடும்.

"காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் நாட்டின் ஒற்றுமையையும்  ஒருமைப்பாட்டையும் காக்க முடியும்.

"கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு நின்று எதிர்க்கட்சிகளின் தில்லமுல்லுகளை முறியடிக்க வேண்டும்"

_ என்றார் இந்திரா காந்தி.

முழு நம்பிக்கையும் விசுவாசமும்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, பிரதமர் இந்திரா காந்தியின் மீது முழு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மான விவரம்:

"நாட்டை எதிர்நோக்கியுள்ள கடும் சவால்களை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி பேரவை கவனத்தில் கொள்கிறது. பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வால் அதிகரித்துள்ள பண வீக்க நிலைமை இன்றைய உலகத்தைப் பாதித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக வறட்சியான நிலைமை நிலவுகிறது. இது நம்முடைய பொருளாதாரத்தில் கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய மக்களில் பெரும்பாலோரைப் பாதித்துள்ளது. அராஜக, குழப்ப நிலைமைகளைத் தோற்றுவிக்க வகுப்புவாத சக்திகளும் பிரிவினை, பிளவு சக்திகளும் சீர்குலைப்பு சக்திகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. மேலும் நம்முடைய ஜனநாயகத்தின் சமூக - பொருளாதார அடித்தளத்தைப் பலவீனப்படுத்தி அரசியல் நிலையில்லா தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்படுகின்றன. நமக்கு விரோதமான சக்திகளின் அந்நிய ஆக்கிரமிப்பு அபாயம் நீங்கவில்லை.

"நம்முடைய மக்களின் நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் அகில இந்தியத் தன்மை வாய்ந்த ஒரே நிறுவனம் இந்திய தேசிய காங்கிரஸ்தான், எனவே, இப்போதைய சிரமங்களுக்கு இடையே நாட்டுக்கு வழிகாட்டி, நம்முடைய சமூக பொருளாதார அமைப்புகளில் பெரிய, முக்கியமான மாறுதல்களைச் செய்து முன்னேற்றிச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு வழிகாட்ட இந்திரா காந்தி தலைவராக இருக்கும் வாய்ப்பு அதற்குக் கிடைத்தது. அவருடைய (இந்திரா காந்தியினுடைய) உத்வேகம் மிகுந்த தலைமையின் கீழ் இந்த மாறுதல்களுக்கு வேண்டிய அடித்தளத்தை அமைப்பதில் கணிசமான, குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

"பல துறைகளில் - பொருளாதாரம், சமூகம், அரசியல், தொழில்நுட்பத் துறைகளில் - நம்முடைய அரசின் குறிப்பிடத் தக்க சாதனைகளுக்கு இந்திரா காந்தியின் உத்வேகம் மிக்க தலைமையே காரணம். அவருடைய தலைமையின் கீழ், உலக நாடுகளின் மத்தியில் நம்முடைய நாடு கௌரவமான இடத்தைப் பெற்றுள்ளது.

"இன்றைய எழுச்சி மிக்க இந்தியாவின் சின்னமாகவும் மக்களுடைய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவராகவும் இந்திரா காந்தி திகழ்கிறார். முன்பு எப்போதையும்விட காங்கிரஸுக்கும் தேசத்துக்கும் அவருடைய தலைமையும் வழிகாட்டலும் இப்போது தேவை.

"அவரிடம் இந்தக் கூட்டம் தன்னுடைய முழு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் உறுதி செய்கிறது. அவர் தொடர்ந்து பிரதமராக நீடிப்பது நாட்டுக்கு இன்றியமையாதது என்று கருதுகிறது."

வதந்திகள், புளுகுகள், புரளிகள்

இந்தக் கூட்டத்துக்கு முன் வழக்கம்போல இல்லத்தின் முன் நடைபெறும் கூட்டங்களும் நடைபெற்றன. வழக்கமான பேச்சு. பலமான குற்றச்சாட்டுகள்!

"என் இல்லம் நோக்கி ஒவ்வொரு நாளும் வரும் மக்கள் திரளை என்னால் தடுத்து நிறுத்த இயலாது. நாடு முழுவதுமிருந்து அவர்களாகவேதான் மக்கள் வருகிறார்கள்.

"நான் மக்களுக்குத் தொண்டாற்றக் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக என் உயிரை வாங்கும் முயற்சிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு வருகிறேன். சிலர் பலவிதமான வதந்திகள், புளுகுகள், புரளிகளை எல்லாம் பரப்பி வருகிறார்கள். நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

"என்னுடைய ராஜிநாமாவை எதிர்க்கட்சிகள் கோருகின்றன. ஆனால், அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவர்கள் இதற்கு முன்னால்கூட இவ்வாறு கோரியிருக்கிறார்கள். ஏன், என் மீது எந்த வழக்கும் இல்லாதபோதும்கூட இந்தக் கோரிக்கை இருந்து வந்துள்ளது.

"இந்திரா ஒழிக என்ற கூச்சல் எனக்கோ அல்லது இந்த நாட்டுக்கோ புதிதல்ல. பல ஆண்டுகளாகவே இந்த கோஷமும் எனக்கெதிரான இயக்கமும் இருந்து வருகின்றன.

"ஏழைகளுடையவும் ஒடுக்கப்பட்ட மக்களுடையதுமான வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கான வேலைத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியும் என்னுடைய அரசும் மும்முரமாகத் தொடங்கியதிலிருந்தே என்னைப் பிரதமர் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்துவருகிறது.

"இந்தியா சக்தி மிக்க நாடாகவும் நவீன சமுதாயமாகவும் விளங்க வேண்டுமென்பதே நமது முயற்சி. ஆனால், நிலைத்தன்மையின்மையை உண்டாக்கி, நாட்டை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் முழு முயற்சி செய்கின்றன. நான் உள்ள வரையில், இந்த நாட்டு மக்கள் என்னுடன் இருந்துவரும் வரையில் இந்தியா ஊனமடைவதற்கு இடங்கொடுக்க மாட்டோம்.

"நம்மால் வறுமையைப் போக்க இயலவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது. பல நூற்றாண்டுகளாக ஊறிப்போன வறுமையை இரண்டோர்  ஆண்டுகளில் ஒழித்துவிட முடியாது. நமது சமூகத்திலிருந்து வறுமையை விரட்ட சிறிது காலம் பிடிக்கும்.

"பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான புதுப் பொருளாதார வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டபோது நான் ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். நாட்டிலிருந்து வறுமையை விரட்ட சில நடவடிக்கைகள் தேவைப்படுமென்றும் ஒருமுகமான முயற்சி வேண்டுமென்றும் கூறியிருந்தேன்.

"மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஒத்துழைப்பதற்குப் பதிலாக ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்க்கட்சிகள் காலைவாரிவிடப் பார்க்கின்றன. இந்தியாவை பலவீனமான நாடாக்க சில அந்நிய சக்திகளும் நாடுகளும் முயன்றால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், நம்முடைய மக்களே அதைச் செய்வதுதான் புரியவில்லை.

"சர்வதேச, உள்நாட்டுத் துறைகளில் இந்தியா பின்பற்றும் கொள்கைகளுக்காகவும் லட்சியங்களுக்காகவும் உலக நாடுகள் முழுவதும் இந்தியா மீது மதிப்பு வைத்துள்ளன."

பச்சை பாசிசம்!

பிரதமர் பதவியிலிருந்து விலக இந்திரா காந்தி மறுப்பதால் நேரிட்டுள்ள நிலைமை பற்றி விவாதிப்பதற்காக மக்களவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வரும் 21 ஆம் தேதி மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லானைச் சந்தித்து வலியுறுத்துவதென இந்திய கம்யூனிஸ்ட் தவிர்த்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக ஜனசங்கத் தலைவர் ஏ.பி. வாஜபேயி தெரிவித்தார்.

இந்திரா காந்தியின் செயல்பாடுகள் எங்கும் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. நிர்வாகம் நிலைகுத்தி நிற்கிறது. வெளிநாடுகளில் நம் நாட்டைப் பற்றிய மதிப்பீடுகள் களங்கப்பட்டுள்ளன. அரசியல் அறநெறியைப் பற்றிய பிரச்சினை இது. இந்த அரசியல் அறநெறியை மீண்டும் மக்களவையால் மட்டுமே நிலைநாட்ட முடியும்

நீதிமன்றத் தீர்ப்பை மீறுவது, அணிவகுப்புகளை நடத்துவது, சொந்த நலன்களுக்காக மக்கள்தொடர்பு சாதனங்களை வெட்கமின்றிப் பயன்படுத்துவது போன்றவையெல்லாம் என்னவென்று அவரிடமிருந்து (இந்திரா காந்தியிடமிருந்து) தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதுதான் பச்சை பாசிசம்! என்றும் வாஜபேயி குறிப்பிட்டார்.

இந்திரா காந்தியைச் சுற்றியுள்ள காகிதக் கோட்டை தகர்ந்துவிட்டது. அவர் மட்டுமே அட்டை போல பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அரசியல் சட்டத்தைச் செயலற்றதாக்க இந்திரா காந்தி திட்டமிட்டு வருவதாகக் கேள்விப்படுகிறேன். அவர் இல்லை என்றால் அவர்கள் இல்லை என்பதால்தான் காங்கிரஸ்காரர்கள் அவருக்கு இவ்வளவு பலத்த ஆதரவைத் தருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

இன்றைய நிகழ்வுகள் மூலம் காங்கிரஸின் நிலைப்பாடு ஏறத்தாழ தெளிவாகிவிட்டது.

இதையும் படிக்க.இந்திராதிகாரம் பிறந்த கதை! - 9 :  ஜூன் 19, 1975 - குழப்பவில்லை, தெளிவாக இருக்கிறார்கள்!

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து - தொடரும்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com