தியாகிகளின் வாரிசுகளும் போராடுகிறார்கள்!
மகாத்மா காந்தி வழியில் அகிம்சை முறையிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் இந்திர தேசிய ராணுவப் படையிலும் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடினர். அந்தமான் சிறையில் ஆங்கிலேயர்களால் கொ


மகாத்மா காந்தி வழியில் அகிம்சை முறையிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் இந்திர தேசிய ராணுவப் படையிலும் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடினர்.
அந்தமான் சிறையில் ஆங்கிலேயர்களால் கொடூரமாக அடைக்கப்பட்டு இருந்த சிலருக்கு மட்டும் சுதந்திரத்துக்குப் பின்னர் ஓய்வூதியத்தை (மதிப்பூதியம்) மத்திய அரசு வழங்கியது. பின்னர் இத்திட்டம் 1972-ம் ஆண்டு அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
1973-ம் ஆண்டு தியாகிகளுக்கு "தாமிரப் பத்திரம்' எனும் விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து, 1974-ம் ஆண்டு குடும்ப ஓய்வூதியத் திட்டமும் அறிவிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு வழங்குவது போல், மாநில அரசுகளும் ஓய்வூதியத்தை வழங்கத் தொடங்கின.
தொடர்ந்து, தியாகிகளின் மகன் அல்லது மகளுக்குப் படிப்படியாக சில சலுகைகளை அரசுகள் வழங்கத் தொடங்கின. அதன்படி, 1980-ம் ஆண்டு தொழிற்கல்வி நிறுவனங்களில் சில இடங்களும், 1987-ம் ஆண்டு வங்கிக் கடனில் முன்னுரிமையும், 1989-ம் ஆண்டு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
இந்த ஆண்டு நடைபெற்ற கவுன்சலிங்குகளில், மருத்துவப் பிரிவில் 3 இடங்களும், பொறியியல் பிரிவில் 11 இடங்களும் தியாகிகளின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் தகுதியான நபர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.
1947-ம் ஆண்டுக்கு முன் இளைஞராக இருந்து போராடியவர்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். 62 ஆண்டுகள் கழித்து, இவர்களுக்குப் படிக்கும் வயதில் மகனோ அல்லது மகளோ எவ்வாறு இருக்க முடியும்? இச்சலுகை அறிவிக்கப்பட்டது முதல் வெகு சிலரே பயன்பெற்றுள்ளனர் என்பதை அரசு அறியும்.
1999-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இத்திட்டத்தின்படி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் சிலரே பயன் பெற்றனர். பெரும்பான்மையாக மொழிப்போர் தியாகிகளே பயன் அடைந்தனர். எனவே, தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் பேரன் அல்லது பேத்திகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
"வாரிசு என்பது சம்பந்தப்பட்டவரின் கணவன், மனைவி, மகன், மணமாகாத மகள் ஆகியோரையே சாரும். ஆனால் இந்த விளக்கப்படி அதே உறவுமுறைகளைக் கணக்கில் கொண்டால், தற்போது அவர்கள் பெரும்பாலும் வயது வரம்பைக் கடந்தவர்களாகவே இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. எனவே யார், யார் வாரிசுகள் என்பதை அரசு தீர்மானிக்கலாம்' என்று ஓர் அரசு ஆணையே உள்ளது. இந்த அரசு ஆணையின் மூலமே, கல்வி, வேலைவாய்ப்புகளை சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன் மற்றும் பேத்திகள் பெறலாம் என்று அரசு ஆணை வெளியிட்டு, அவர்களைப் பயன்பெறச் செய்யலாம். இதையும் காலம் தாழ்த்தினால் அவர்களும் சலுகைகள் பெற முடியாமல் போகும் நிலை ஏற்படும்.
தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் குறைகளைக் களைய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று ஓர் அரசு உத்தரவு உள்ளது. ஆனால், வேலூர், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே 3 மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைகளில் முதல் வகுப்பு மருத்துவச் சிகிச்சை பெறலாம் என்று 1974-ம் ஆண்டில் தமிழக அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், மருத்துவ வசதி பெறுவதும் இயலாத நிலையில் உள்ளது என்கின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆங்கிலேய அரசு கட்டாயப்படுத்தி வெளியேற்றியது. இதனால் சொந்த ஊரைவிட்டு குடிபெயர்ந்தவர்கள் வெளியூர்களில் புறம்போக்கு, நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள் என குடிபெயர்ந்தனர். இவர்களில் பலர் பட்டா கோரி போராடியும், வருவாய்த் துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்.
மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகத்தில் இரண்டு பக்கத்தில் ஏதேனும் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்த்தால் மட்டும் போதுமா?
நீதி, நேர்மை, சகோதரப் பாசம், நாட்டுப்பற்று, நன்னெறிகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை இன்றும் வளரும் தலைமுறையினருக்குச் சொல்லித் தருகிறோம் அல்லவா? அதுபோல தேசத் தலைவர்கள் மற்றும் தியாகிகளைப் பற்றியும் இளைஞர்கள், மாணவர்களுக்குச் சொல்லித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் நாட்டுக்காகப் பாடுபட்டவர்களை தேசிய குடும்பமாக அறிவித்துள்ளதைப் போல இந்தியாவிலும் தியாகிகள் குடும்பத்தையும் தேசிய குடும்பமாக அறிவிக்க வேண்டும், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகளோடு சேர்க்காமல் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்குத் தனி சலுகைகள், தேசிய நல வாரியம், பேரன் அல்லது பேத்திகளுக்கு அரசின் சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே தியாகிகள் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...