தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

விவசாயிகளின் கோரிக்கைகள்

தேர்தலுக்கு முன்பு எல்லா அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்குப் பல வாக்குறுதிகளை அள்ளி வீசின. அந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டிய தருணம் இது. அதிலும் குறிப்பாக, சொன்னவற்றைச் செயல்

Updated On :20 செப்டம்பர் 2012, 11:19 am

தேர்தலுக்கு முன்பு எல்லா அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்குப் பல வாக்குறுதிகளை அள்ளி வீசின. அந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டிய தருணம் இது. அதிலும் குறிப்பாக, சொன்னவற்றைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சிக்கு நிறையவே இருக்கிறது.

 வளர்ச்சியை முன்னிட்டு இந்திய அரசு எட்டுவிதமான இயக்கங்களைத் தொடங்க இருப்பதாக தனது உரையில் குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

 அவற்றில் ஐந்து இந்த ஆண்டுக்குள் தொடங்கப்பட்டுவிடும் என்றும் அவர் உறுதியளித்தார். அந்த ஐந்தில் ஒன்று நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்.

 ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோர்கூட விவசாயத்துக்கு கூடுதல் உதவி தேவை என்பதையும், இஸ்ரேலிய கூட்டுப் பண்ணை போன்ற நவீனங்களைப் புகுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

 இவையெல்லாம் நனவாக வேண்டுமென்றால், தேர்தலுக்கு முன்னரே விவசாயிகள் கோரியது போல, "நேரடிப் பண மாற்றம்' உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியாக வேண்டும்.

 தேர்தலின்போது மட்டுமே மக்கள் பிரச்னைக்கு அரசியல்வாதிகள் காதுகொடுப்பார்கள். மற்ற நேரங்களில், நல்லது நடக்க வேண்டுமானால், மக்களுக்காகப் போராடுவோர்தான் குரல் எழுப்பி அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி தர வேண்டியிருக்கும். இது வழக்கமான ஒன்றுதான்.

 அவ்வாறே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் இணைந்து நீடித்த வேளாண்மைக்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தங்களது கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளன. விவசாயிகளுக்கு வருமான உதவி, பண மாற்றம் உள்ளிட்ட வசதிகளை அளிப்பது அவற்றுள் முக்கியமானவை.

 இந்தக் கோரிக்கைகள் எல்லாம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பொருந்தக்கூடியவை. பயிர் செய்வோருக்கு நிலையான வருவாய் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக விவசாயிகளின் உண்மையான வருமானத்தைக் கணக்கிட்டு, அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வருவாயைப் பரிந்துரை செய்வதற்காக வருவாய் ஆணையம் ஒன்றை அமைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

 இதுபோன்ற ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆதரவளித்துள்ளார். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டதுடன், கூடுதலாகச் சில சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்தது. இதனால், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைந்திருக்கிறார்கள். அப்படியானால், விவசாய வருவாய் ஆணையத்தை அமைத்து அதன்மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் கிடைப்பதை உறுதி செய்ய அரசால் முடியாதா என்ன?

 விவசாய வருவாய் ஆணையம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் ஆந்திரப் பிரதேச விவசாயிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

 அந்த ஆணையம் பலவித அணுகுமுறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். முதலாவதாக, வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலைகள், உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

 குறைந்தபட்ச ஆதரவு விலையானது, தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரை செய்வதைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும். மாநில அளவில் வேளாண் விலைகளை நிர்ணயிக்க தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

 இரண்டாவதாக, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் வேலையாள்களுக்குத் ஊதியம் தருவதற்கு விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். ஆண்டுக்கு நூறு நாள்கள் வரையிலான கூலியை இடுபொருள் மானியமாக அரசே தர வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் போன்றே இதையும் செயல்படுத்த முடியும்.

 மூன்றாவதாக, கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும். விவசாயத்தை மையமாகக் கொண்ட சிறுதொழில்களை மேம்படுத்தினால், விவசாயிகளின் வருவாய் நேரடியாக அதிகரிப்பதுடன், மக்கள் இடம்பெயர்வதும் குறையும்.

 நான்காவதாக, சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகள் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

 மேற்கூறிய நான்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பிறகும் விவசாயிகளுக்குப் போதிய வருவாய் கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே, விவசாயிகளுக்கு நேரடியான வருவாய் உதவி அளிக்க வேண்டிய தேவை எழுகிறது.

 அதற்காக, விவசாயத்தில் ஈடுபடும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையை முதலில் ரூ.15 ஆயிரமாக நிர்ணயித்துப் பின்னர் ஆண்டுதோறும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். வேலை செய்யாமல் பணம் கேட்கிறார்கள் என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது.

 விவசாயத்தில் ஈடுபட்டு விளைச்சலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறோம் என்கிற நிபந்தனையின் பேரிலேயே விவசாயிகள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

 இயற்கை முறையில் விவசாயம் செய்வதால், இடுபொருள் செலவு குறைவதையும், உற்பத்தி நீடித்திருப்பதையும் நாட்டின் பல பகுதிகளிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த மாதிரியான பாரம்பரிய விவசாயத்துக்கு அரசு உதவி செய்வதன் மூலம் நாடு முழுவதும் நீடித்த வேளாண்மையை உறுதி செய்ய முடியும்.

 பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்புக் கிடைக்கும். இயற்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்யப்படும் வரையில், மரபீனி மாற்றப் பயிர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நியாயமானதே.

 பாரம்பரிய விவசாயத்தின் நற்பலன்களை அனைவருக்கும் எடுத்துக் கூறும் வகையில், பிரசார இயக்கங்களையும், பயிற்சி மையங்களையும் ஏற்படுத்துவதும் அரசின் கடமையாகும்.

 புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், நாட்டில் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டுவிடவே விரும்புகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அரசு வேலையோ, விவசாயம் சாராத வேறு வேலையோ உருவாக்கித் தர அரசால் முடியுமா? நிச்சயமாக முடியாது. அதனால், நேரடியாக பண உதவி செய்வது உள்ளிட்ட உதவிகள் மூலமாக அவர்களை விவசாயத்திலேயே தக்க வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

 உண்மையில், விவசாயிகளுக்கு நேரடியாகப் பண உதவி செய்வது ஒன்றும் அரசுக்குப் பெரிய சுமையாக இருக்கப் போவதில்லை. சமூகத்துக்குத் தேவையான செலவாகவே இது கருதப்பட வேண்டும்.

 சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியாவைப் பாதுகாத்ததே வேளாண்மைதான் என அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அந்த வேளாண்மையைப் புறக்கணிப்பதும், உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதும் நாட்டைச் சிக்கலான நிலைக்குத் தள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.