ஒரே பட்ஜெட்டில் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்க முடியாது; பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மத்திய பட்ஜெட் மட்டுமே கருவியாக இருந்துவிடவும் முடியாது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய போது நிதியமைச்சர் உதிர்த்த முத்துகள் இவை. பிரணாபின் பட்ஜெட், பிரச்னைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு எதையும் முன்வைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பதையும் இந்த பட்ஜெட் அம்பலப்படுத்தியிருக்கிறது.
பட்ஜெட் என்பது நாட்டிலுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதையாவது பட்டியலிட வேண்டும். எல்லோரும் ஒப்புக்கொள்ளும் கருத்து இது. ஆனால், பிரணாபின் பட்ஜெட் சில பிரச்னைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அவற்றுக்குச் சாத்தியமே இல்லாத தீர்வுகளைச் சொல்லியிருக்கிறது. பிரச்னைகளின் வேரைப் பற்றி அக்கறை கொள்ளவேயில்லை.
பட்ஜெட் உரையில் மகாத்மா, நேரு, இந்திரா போன்றோரைப் புகழ்ந்தார் பிரணாப். அதே நேரத்தில் சாணக்கியரைப் பற்றிய தனது பிரமிப்பையும் அவர் வெளிக்காட்டத் தவறவில்லை. பிரணாபின் உரையை பொறுமையாகப் படித்துப் பார்த்தால், பிரச்னைகளை அணுகுவதில், காந்தி, நேருவைக் காட்டிலும் சாணக்கியரின் வழியையே அவர் பின்பற்றியிருப்பது தெளிவாகும். பட்ஜெட்டில் பிரதிபலிக்கும் அரசின் கொள்கையும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தரலாம் என்கிற சாணக்கியரின் உத்தியையே ஒத்திருக்கிறது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே, பிரணாபின் பட்ஜெட் நோயின் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப் பரிந்துரைத்திருக்கிறது. இதனால் நோய் இன்னும் தீவிரமாகப் போகிறதே தவிர குணமாகப் போவதில்லை.
உதாரணத்துக்கு விவசாயத்தை எடுத்துக் கொள்வோம். கடந்த நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.2,87,000 கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் ரூ.3,25,000 கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்குக்கும் பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கும் தொடர்பே இல்லை. கடன் கொடுக்கப் போவது வர்த்தக வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும்தான். பொதுமக்களின் சேமிப்பிலிருந்து இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
அப்படியிருக்கையில் அரசால் செய்ய முடிந்ததெல்லாம், விவசாயத்துறை மற்றும் விவசாயிகளின் கடன் பெறும் தகுதியை உயர்த்துவதுதான். அதாவது, விவசாயிகளுக்கு கடன் கொடுத்தால், அது திரும்பி வரும் என்கிற நம்பிக்கையை வங்கிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இதற்காக மலிவு விலையில் இடுபொருள் வழங்குவது, விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதை எளிமையாக்குவது போன்ற நடவடிக்கைளை அரசு செய்யலாம். கட்டமைப்புகளை வலுவாக்கி லாபகரமான விவசாயத்துக்கான சூழலை உருவாக்காமல், வெறும் இலக்குகளை மட்டும் நிர்ணயிப்பதெல்லாம் பலன் அளிக்காது.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக "இன்னொரு' சலுகையை பிரணாப் அறிவித்திருக்கிறார். யாரெல்லாம் குறித்த காலத்தில் கடன்களைத் திருப்பிச் செலுத்துகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வட்டியில் ஒரு சதவீதம் தள்ளுபடியாம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. கடன்களைத் திருப்பிச் செலுத்தி மானத்துடன் வாழ வேண்டுமென்றுதான் விவசாயிகள் விரும்புகிறார்கள். ஆனால் முடிகிறதா? பருவம் பொய்த்துப் போகிறது, விளை பொருளுக்கு நியாயமான விலையில்லை என்பன போன்ற காரணங்களால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதுதானே விவசாயிகளின் பிரச்னை. இதைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, தேவையற்ற சலுகைகளை அறிவிப்பது அவர்களை இன்னும் தண்டிப்பதாகவே அமையும்.
வேலையின்மையைத் தீர்ப்பதிலும் இதைப் போன்றதொரு உத்தியே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் 1 கோடியே 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், 1990-ல் இருந்து வெவ்வேறு அரசுகளும் இதைத்தான் கூறிவந்திருக்கின்றன. ஒரே வித்தியாசம், முன்பிருந்த ஒரு கோடி என்கிற எண்ணிக்கையில் இப்போது 20 லட்சம் கூடுதலாகியிருக்கிறது. அவ்வளவுதான். இந்த இலக்கு இதுவரை எட்டப்பட்டிருக்கிறதா? ம்கூம். எல்லாம் பேப்பரில்தான்.
அப்படியானால், புதிய இலக்கு எட்டப்படும் என்பதை எந்த அளவுக்கு நம்பலாம் என்பது புரிந்திருக்கும். உண்மையைக் கூறுவதென்றால், பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக இருந்த காலத்தில்கூட வேலைவாய்ப்பின்மை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. இப்போது வளர்ச்சிவீதம் வெகுவாகச் சரிந்திருக்கிறது. 9 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இலக்கு, வளர்ச்சிக்கு மட்டும்தான். இங்கு சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டினாலும், அதன் பலன் சாதாரண மக்களுக்குக் கிடைக்காது என்பதுதான் இதன் உட்பொருள்.
அளவுக்கு அதிகமான நிதிப் பற்றாக்குறையின் வெளிப்பாடே வெகுஜனத்துக்குப் பயன்படாத, வேலைவாய்ப்பை உருவாக்காத இந்தப் பட்ஜெட். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்துக்கும் அதிகமாகப் பற்றாக்குறை இருப்பதால், செலவைக் குறைத்துக் கொள்ள அரசு விரும்புகிறது. செலவைக் குறைத்துக் கொள்வதென்றால், புதிதாக எதிலும் அரசு முதலீடு செய்யாது. முதலீடு செய்யாவிட்டால் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?
உண்மையில் மனிதவளம் போன்ற சரியான துறைகளில் அதிகமாக முதலீடு செய்தால்தான் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். அதாவது அதிகமாக முதலீடு செய்வதால், வேலைவாய்ப்புகளும் மக்களின் வருவாயும் பெருகும். மக்களின் வருவாய் அதிகரித்தால் நீடித்த வளர்ச்சியை அடைய முடியும். ஆனால், அரசின் அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கிறது. ஒருபுறம் கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு இலக்கு வைத்திருக்கும் அரசு, மறுபுறம் அதற்கு நேர் எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.
கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் இந்த நிலைதான். நடைமுறையில் ஒத்துவராத, உண்மை நிலவரத்துக்குத் தொடர்பில்லாத திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக வட்டியில்லாக் கடன்களை வழங்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக பல்வேறு நிலைகளில் கல்வியைப் பாதியில் கைவிடுவோர்தான் அதிகம். கல்லூரிவரை ஏழைகள் செல்வதே அரிது. வறுமையை ஒழிப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதவரை, பெரும்பாலான ஏழைகள் பள்ளிக் கல்வியைக்கூட நிறைவு செய்ய முடியாது. அப்படியிருக்கையில், உயர்கல்விக்குக் கடன்கள் வழங்குவதும், வட்டியைத் தள்ளுபடி செய்வதும், உதவித் தொகைகள் வழங்குவதும் எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை.
தரமற்றுப் போன அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. சாமானியருக்கு இதுதான் தேவை.
இந்த அடிப்படை விஷயத்தைக் கண்டுகொள்ளாமல், எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவது பற்றி அரசு பேசிக்கொண்டிருக்கிறது. அரசின் இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்வதற்கான எந்த அறிகுறியும் பட்ஜெட்டில் தெரியவில்லை.
பட்ஜெட்டில் ஓய்வூதியத்துக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சலுகையை ஓய்வூதிய நிதியைக் கையாளும் நிறுவனங்கள்தான் அனுபவிக்கப் போகின்றனவே தவிர, மக்களுக்குப் பலன் ஒன்றும் இல்லை.
உண்மையில், ஓய்வூதியத் திட்டத்தில் சேருவோருக்கு சிறிய தொகை கிடைத்தாலும்கூட அதற்கும் வரிவிதிப்பு உண்டு. ஓய்வூதியத் திட்டமே ஏமாற்றுவேலை என்கிறபோது, இதில் வரிச்சலுகை அளிப்பது இன்னொரு போலி நடவடிக்கையாகத்தான் இருக்க முடியும்.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், பொருளாதார வளர்ச்சி ஒன்றே அரசின் இலக்காக இருக்கும்போது, எல்லாவற்றையுமே அரசு வர்த்தகரீதியாகத்தான் பார்க்கும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மாயாஜாலத் திட்டங்கள் அனைத்தும் அரசின் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றன. இப்படிப்பட்ட அரசிடம், சமூக அக்கறையை எதிர்பார்க்கலாமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

