திட்டத்தை முடக்காதீர்கள்; சீரமையுங்கள்
அ டித்துக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், சாதாரண நாயைக்கூட வெறிநாய் என்று கூறுவார்கள். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கும் இப்போது அந்த நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதை ஒழிக்க வ


அ டித்துக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், சாதாரண நாயைக்கூட வெறிநாய் என்று கூறுவார்கள். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கும் இப்போது அந்த நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அந்தத் திட்டம் தோற்றுப்போனதைப் போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலக வங்கியும் தன்பங்குக்கு இந்தத் திட்டத்துக்கு எதிரான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது.
பொருளாதார மேம்பாட்டுக்கும் வறுமை ஒழிப்புக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் போன்றவை தடையாக இருப்பதாக 2009-ம் ஆண்டுக்கான "உலக வளர்ச்சி அறிக்கை'யில் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. சிறிய மற்றும் குறு நகரங்களை மேம்பாடு அடையச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இதுபோன்ற திட்டங்கள், மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்கின்றனவாம். கிராமப்புறங்களில் இருந்து நகரப்புறங்களுக்கு மக்களை இடம்பெயரச் செய்தால்தான் அவர்களை மேம்படுத்த முடியும்; அதனால், மக்கள் இடம்பெயர்வதைக் குறைக்கும் இதுபோன்ற திட்டங்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்கிறது உலக வங்கி.
நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களும் தோல்வியடைந்த பிறகு கடந்த செப்டம்பர் 2005-ல் ஆண்டில்தான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதையடுத்து ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தப்பூரில் இந்தத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 200 பின்தங்கிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இரு கட்டங்களாக மேலும் 413 மாவட்டங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. 2006-2007 மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ. 11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதுவே, 2009-10 இடைக்கால பட்ஜெட்டில் ரூ.30,100 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதுபோக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் 10 சதவீத நிதியளிக்கின்றன.
மற்ற திட்டங்களைப் போல் அல்லாமல், வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு சட்டப்பூர்வமான உரிமையை இந்தத் திட்டம் வழங்குகிறது. இதன்படி, கிராமப் பகுதிகளில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் தினக்கூலி வேலைக்கு பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்கப்படுகிறது. அனைவரும் 5 ஆண்டுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பதிவு செய்த 15 நாள்களில் அவர்களுக்கு வேலை தர வேண்டும் என்பது விதி. வேலை செய்யும் இடம் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து 5 கி.மீ. தூரத்துக்குள் இருக்க வேண்டும். வேலை தர முடியவில்லை என்றால், அதற்குத் தனியாகப் படி வழங்கப்படும். வேலை தரப்படாத முதல் 30 நாள்களுக்கு நான்கில் ஒரு பங்கு சம்பளம் தரப்பட வேண்டும். அதன் பிறகும் வேலை இல்லையென்றால் பாதி சம்பளத்தை தந்தாக வேண்டும். இந்தத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு கிடைக்கும். அதேபோல், 5 கி.மீ.க்கு அப்பால் உள்ள இடத்தில் வேலை தரப்பட்டால், அதற்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற ஏழைகளுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாள்களாவது வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புதான் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். வேலை தருவதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், உற்பத்தியைப் பெருக்குவதிலும், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும்.
நீர்ப் பாதுகாப்பு, நீர் சேகரிப்பு, வனப் பாதுகாப்பு, மரம் நடுதல், கால்வாய் அமைத்தல், நீர்நிலைகளைச் சீரமைத்தல், நிலங்களை மேம்படுத்துதல், சாலைகள் அமைத்தல், வெள்ளத்தடுப்பு அமைப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இந்தப் பணிகள் நேர்மையாகச் செயல்படுத்தப்பட்டால் கிராமங்கள் மேம்படுவதுடன் வேளாண்மையும் வளர்ச்சியடையும் என்பது உறுதி.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, 2008-09-ம் ஆண்டில் 4.46 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததாகவும், 27.12 லட்சம் பணிகள் தொடங்கப்பட்டு, 12.03 லட்சம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது. முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் கூடுதலாக சுமார் 1 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பற்றி அரசு கூறும் பெருமைகளை ஏற்றுக்கொள்ள ஒரு பிரிவினர் மறுத்து வருகின்றனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், விவசாயப் பணிகளைச் செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள்; விவசாயிகள் அதிகமாகக் கூலி தரவேண்டியிருக்கும்; இதனால், விவசாயிகள் வேறு பணிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படாலாம் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது. உணவுப் பாதுகாப்புக்கு இந்தத் திட்டம் அச்சுறுத்தலாக இருப்பதுடன் வேலையின்மையும் பெருகும் என இவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஊழல், திறமையின்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு குற்றச்சாட்டையும் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். இதற்கு ஆதரவாக சிஏஜி அறிக்கையையும் காட்டுகிறார்கள். சம்பளம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், ஒதுக்கப்பட்ட நிதி சரிவரப் பயன்படுத்தப்படாததையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. நாட்டின் தேவையை ஒப்பிடுகையில், இந்தத் திட்டத்தால் கிடைக்கும் பலன் மிகக் குறைவு என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஒருவருக்கு சராசரியாக ஆண்டுக்கு 100 நாள்கள்வரை பணி வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்திருக்கிறது. ஆனால், 2006-07-ம் ஆண்டில் பதிவு செய்தவர்களில் வெறும் 3.2 சதவீதம் பேருக்கு மட்டும் 100 நாள்கள் வேலை கிடைத்தது. மற்றவர்களுக்கு சராசரியாக 18 நாள்கள்தான் வேலை கிடைத்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் முற்றிலுமாக மறுத்திருக்கிறது. 10 சதவீதம் பேர் 100 நாள்கள் வேலை செய்ததாகவும், சராசரியாக 44 நாள்கள் வேலை கிடைப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அமைச்சகம் தெரிவித்துள்ள புள்ளி விவரங்கள் சரியாக இருந்தாலும்கூட, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இது போதுமானதல்ல.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் அதிகமாக நடக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும்கூட, மற்ற திட்டங்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவுதான். வேலை செய்வோருக்கு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கணக்குகள் தொடங்கி சம்பளத்தை வரவு வைப்பது, திட்டத்தைச் செயல்படுத்துவதில் கிராமப் பஞ்சாயத்துகளையும் இணைத்துக் கொள்வது போன்ற நடைமுறைகளைச் செயல்படுத்தினால், ஊழல் இன்னும் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
மற்ற திட்டங்களைக் காட்டிலும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதில் இந்தத் திட்டம் முன்னிலையில் இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் வேலை பெறுவோரில் 30.9 சதவீதம்பேர் தாழ்த்தப்பட்டோர் என்றும் 24.1 சதவீதம்பேர் பழங்குடியினர் என்றும் சி.பி.சந்திரா, ஜெயதி கோஷ் ஆகிய பொருளாதார நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கிராப்புறங்களில் வீட்டில் துணி துவைப்பது, சமைப்பது, சுத்தம் செய்வது என்று முடங்கியிருக்கும் பெண்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இந்தத்திட்டதால் பயன்பெறுவோரில் பெண்கள் மட்டும் 48.9 சதவீதம் பேர். பெண்கள் அதிகம்பேர் சம்பாதிப்பதால் குடும்பச் சுகாதாரம், கல்வி போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும் என்பது உண்மை. பெண்களைப் பொருத்தவரை இது மிகப்பெரும் சாதனையாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்வோரில் சிலர் சிறிய மற்றும் விளிம்பு நிலைய விவசாயிகள். தங்களிடம் இருக்கும் நிலத்தை மேம்படுத்துவதற்கு தங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விவசாயத்தைக் கைவிடுவது தவிர்க்கப்படுகிறது. ஆகையால், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் வேளாண்மை பாதிக்கப்படும் என்பதோ உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதோ தவறான கருத்தாகும். அதேபோல், இந்தத் திட்டம் மக்கள் இடம்பெயருவதைக் குறைக்கிறது என்கிற உலக வங்கியின் குற்றச்சாட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
என்னதான் விமர்சனக் கணைகள் வீசப்பட்டாலும், தேசிய ஊரக வேலைவாய்புத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை மறைக்க முடியாது. செயல்படுத்துவதில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தத் திட்டத்தை இன்னும் ஆக்கப்பூர்வமானதாக மாற்ற முடியும். சிஏஜி அறிக்கையும் இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறதே தவிர, திட்டமே தோற்றுப் போய்விட்டது என்று கூறிவிடவில்லை. ஆக, இப்போதைக்கு செய்ய வேண்டியது வேலைவாய்ப்பை கேட்பதற்கு மக்களுக்கு உரிமையளிக்கும் இந்தத் திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான், வெற்று விமர்சனங்களை வீசிக் கொண்டிருப்பதல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...