கர்நாடக முதல்வரான டி.கே. சிவகுமாருக்கு விஜய் வாழ்த்து!கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவுகரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!
/

இளமை குன்றாமல் இருக்க...

மக்களுக்கு வயது ஏற ஏற முதுமை உண்டாகிறது; நோய்கள் தாக்கத் தொடங்குகின்றன; நரையும் திரையும் உண்டாகின்றன. ஆனால் மனிதனோ சங்க காலத்திலும் சரி, இன்றைய கணினி யுகத்திலும் சரி மூப்பு வெளியே தெரியாமல், நரை, திரை

Updated On :20 செப்டம்பர் 2012, 6:09 pm IST

மக்களுக்கு வயது ஏற ஏற முதுமை உண்டாகிறது; நோய்கள் தாக்கத் தொடங்குகின்றன; நரையும் திரையும் உண்டாகின்றன. ஆனால் மனிதனோ சங்க காலத்திலும் சரி, இன்றைய கணினி யுகத்திலும் சரி மூப்பு வெளியே தெரியாமல், நரை, திரை, நோய் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறான்.

சங்கச் சான்றோரான பிசிராந்தையார், ஆண்டுகள் பல ஆனாலும் நரை, திரை இல்லாமல், நோய், நொடியின் தாக்குதலுக்கு ஆளாகாமல் வயது ஆனது மிகுதியும் வெளியே தெரியாமல் விளங்கினார். அவரைப் பார்த்தவர்களுக்கு இது மிகுந்த வியப்பை உண்டாக்கியது. அவர்கள் அவரைப் பார்த்து, ""ஆண்டுகள் பல ஆகியும், நரை இல்லாமல் இருப்பது எங்ஙனம் உங்களால் முடிகிறது?'' என வினவினர். ""நீங்கள் அப்படி வினவுவதால், அதற்கு உரிய காரணங்களைக் கூறுகிறேன் கேளுங்கள்'' என்று இளமை குன்றாமல் இருப்பதற்கான வழிமுறையைப் பிசிராந்தையார் கூடி இருந்த மக்களுக்கு ஒரு பாடல் மூலம் எடுத்துரைத்தார். அவரது சீரிய மறுமொழியைத் தன்னகத்தே கொண்ட புறப்பாடல் இதோ:

 ""யாண்டுபல வாக நரைஇல ஆகுதல்

  யாங்கா கியர்?' என வினவுதிர் ஆயின்,

  மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

  யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்

  அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை

  ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்

  சான்றோர் பலர்யான் வாழும் ஊரே''            (191)

பிசிராந்தையார் அருளிச் செய்த இந்த அரிய புறப்பாட்டில், இளமை குன்றாமல் இருப்பதற்கான வழிமுறை, காரண காரியத்துடன் காட்டப்படுகிறது.

வயதானாலும் நரைதிரை இல்லாமல் அழகாகவும் இளமையாகவும் தோன்றுவதற்குத் தான் உலகில் எல்லோருக்கும் உள்ளார்ந்த விருப்பம் இருக்கும். ஆனால் அதற்கான உண்மையான வழிமுறை யாருக்குத் தெரியும்? ஒருவேளை தெரிந்தாலும், யார் மற்றவர்க்குத் தெரிவிக்கிறார்கள்? இதற்கு இடையே ஒருசிலர், தவறான வழிமுறைகளையும் கற்பித்து விடுகிறார்கள். அவர்கள் கற்பிக்கும் செயற்கையான, தவறான வழிமுறைகளால் செலவும் மிகுதியாகிறது; வேண்டாத பின்விளைவுகளும் உண்டாகின்றன. மேலும், அவ்வழிமுறைகள், பலகாலம் கழித்து ஒருவருக்கு வரவிருக்கும் நரைதிரைகளையும் மூப்பு, பிணிகளையும் மிக விரைவில் வரவழைத்து, இளமையிலேயே முதுமையை உண்டாக்கி விடுகின்றன; தீராத மனக் கவலையைத் தந்து விடுகின்றன.

கோப்பெருஞ்சோழனின் உயிர் நண்பர் பிசிராந்தையார் காட்டும் வழிமுறை எளிமையானது; இயல்பானது. அது, மக்களை உண்மையாகவே இளமை உணர்வில் வைத்திருப்பது; நிலையானது என்றும், எங்கும், எப்போதும் வாழ்வு தருவது. இன்னும் சொல்லப் போனால், வீண் செலவுக்கு வழிவகுக்காது; பின்விளைவுகளை உருவாக்காது. நரைதிரை உண்டாகாமல், நோய், நொடி இல்லாமல் முதுமையே அணுகாமல் நீண்ட காலம் இளமையாகவே இருக்க வேண்டும் என்று சற்றும் நினைத்துப் பார்க்காதவர்களைக் கூட, அவர்கள் அறியாமலே அந்நிலையில் இருத்தி வைப்பது. இதுவே முதுமையை ஓடஓட விரட்டுவதற்கான ஒரே வழி. இனி, பிசிராந்தையாரின் சொற்களில் அவ்வழிமுறை குறித்துக் காண்போம்.

""நான் முறையான இல்வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். என் மனைவி குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற மாட்சிமை மிக்க குணங்கள் பொருந்தியவள்; நல்ல அறிவும் கொண்டவள். என் மக்களும் அறிவு நிரம்பியவர்கள். என் பணியாளர்கள் இளைஞர்கள்; நான் நினைப்பதைத் தாம் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். என் நாட்டு வேந்தனும் முறையில்லாத செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டான்; அது மட்டுமன்றி, குடிமக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து அவர்களைப் பாதுகாப்பான். இவை மட்டும் அல்லாமல், யான் குடியிருந்து வருகின்ற ஊரில், கொள்கைப் பிடிப்பு கொண்ட சான்றோர் பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அறிவு நிரம்பி புலன்கள் அவிந்து அருளில் படிகின்ற உயரிய வாழ்க்கை முறையை உடையவர்கள். இவையே யான் நரைதிரை இல்லாமல் இளமையோடு இருப்பதற்கான காரணங்கள் ஆகும்''

பிசிராந்தையார் காட்டிய வழியில் எல்லோரும் வாழ முற்பட்டால், உலகத்தில் நரை, திரை உண்டாகாது; மூப்பு, பிணி அணுகாது; மக்களும் நீண்ட காலம் மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்வார்கள். மூதறிஞர் இளவழகனார் குறிப்பிடுவது போல், ""நற்குண நற்செயல்களே உடம்பை நோயில்லாமலும், நரை, திரை இல்லாமலும் இளமையாகவும் திருத்தமாகவும் வைக்கும் என்னும் அரிய பெரிய உண்மை இதன்கண் காட்டப்படுகிறது. இளமைக்காகவும், நோயின்மைக்காகவும் மருந்து முதலியன பயன்படுத்துவது சிறந்த முறையன்று என்பதும், நல்ல உணவு முதலியவற்றையும் விட நல்ல உணர்வு, செயல் முதலியவைகளே இதற்கு முதன்மையானவை என்பதும் இதிலிருந்து வெளிப்படும்''.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.