தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

கண்டிப்பு-தண்டிப்பு அவசியமே!

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை~என்னும் குறளில் வள்ளுவனின் வாக்குப்படி ஒருவருக்கு அழியாத உயர்ந்த செல்வம் கல்வியே. ஏனைய செல்வங்கள் சிறந்தவைகளாகாது என்பது அழிக்க முடியாத உண்மை.  

Updated On :20 செப்டம்பர் 2012, 10:19 pm IST

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை~என்னும் குறளில் வள்ளுவனின் வாக்குப்படி ஒருவருக்கு அழியாத உயர்ந்த செல்வம் கல்வியே. ஏனைய செல்வங்கள் சிறந்தவைகளாகாது என்பது அழிக்க முடியாத உண்மை.

  மனித வளர்ச்சியில் மிகவும் அவசியமானது கல்வி. கல்வியின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகும். ஆனால் இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படக் காரணம், மேலை நாடுகளைவிட கல்விக்கென அதிக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. குறிப்பாக, பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் வேலைவாய்ப்பு இன்மை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதேசமயத்தில் கல்விக்கான உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், கல்வியின் உள்ளார்ந்த அர்த்தமான ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் போன்றவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

  மேலும் சமூகம் - பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் இணக்கமின்மை காரணமாகவும் அவ்வப்பொழுது எழும் நிகழ்வுகள், ஊடகங்களின் ஆதிக்கம், கலாசாரச் சீரழிவுகள் ஆகியவை மாணவர்களின் மனோபாவத்தைத் திசைதிருப்பி மனங்களைச் சிதைக்கின்றன. மாணவர்கள் உடலையும் உள்ளத்தையும் துன்புறுத்தும் தண்டனைகள் கூடாது என அரசாணை 12, நாள் 17-1-2007-ல் அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் பிரதிபலிப்பாக பள்ளிகளில் கண்டிப்பு - தண்டிப்பு இன்மையால் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கச் சீர்கேடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

  ஆசிரியர்களை மதித்து வந்த மாணவர்கள், தற்பொழுது அவர்களை அவமரியாதைக்கு உள்ளாக்கி அலட்சியப்படுத்தவும் துணிந்துவிட்டார்கள். பள்ளிக்கு உரிய நேரத்தில் வருதல், கூட்டு வழிபாட்டுக் கூட்டத்துக்கு வரிசையாக வந்து நிற்பது, வகுப்பில் அமைதியாக அமர்வது, வீட்டுப்பாடம் இவற்றுக்கு எல்லாம் எதிர்மறையாக மாணவர்கள் செயல்படத் தொடங்கினர். தற்பொழுது அவர்களிடையே அத்துமீறிய செயலாகப் பள்ளிக்கு வராமலிருத்தல், தாமதமாக வருவது, ஆண்டு பொதுத் தேர்வில் அடுத்த மாணவனைப் பார்த்து எழுதுதல் அல்லது கேட்டு எழுதுதல், துண்டுத்தாள் வைத்து எழுதுதல், மீறித் தடுத்தால் உதவிக் கண்காணிப்பாளர்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற நிகழ்வுகள் அன்றாடப் பத்திரிகைச் செய்திகளாக வெளிவருகின்றன.

  10, 12-ம் வகுப்புகள் ஆண்டு பொதுத் தேர்வுக் காலங்களில் தேர்வு நடத்தும் தலைமைக் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும் படை ஆகியோருக்கு எவ்விதமான பணிப்பாதுகாப்பும், உயிர்ப்பாதுகாப்பும் இல்லை. ஆனால் தேர்வுகள் ஏதோ சம்பிரதாயங்களாகத்தான் நடந்தேறி வருகின்றன.

  பள்ளியில் கண்டிப்பு - தண்டிப்பு குறைவின் காரணமாக சிறு சிறு குறும்புகளாக ஆரம்பித்து தற்பொழுது ஆசிரியர்களையும், கல்வி உயர் அலுவலர்களையும் தாக்குகின்ற அளவுக்கு வந்துவிட்டார்கள். பள்ளியில் மாணவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துதல், வகுப்பறையில் ஆபாசமான முறையில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்துதல் போன்ற சமூக விரோதச் செயலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

  மறுபக்கம் தமிழக அரசு தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும்வண்ணம் நெருக்கடி காரணமாகவும், மாணவர்களின் நல்வாழ்வு கருதி, ஆசிரியர்கள் கண்டிக்கும்போதும் பள்ளி அல்லது வீட்டை விட்டுச் செல்லுதல், தற்கொலை முயற்சி, தற்கொலை செய்து கொள்ளுதல் ஆகியவற்றில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். இவற்றுக்கான காரணம் ஆசிரியர்தான் எனக் கருதி பொதுமக்கள், ஆசிரியர் - பள்ளியைத் தாக்குதல், கைது மற்றும் தாற்காலிக வேலை நீக்கம் போன்ற பெரும் பாதிப்புகளுக்கு ஆசிரியர்கள் உள்ளாகிறார்கள்.

  இவற்றுக்கான அடிப்படைக் காரணத்தை நன்றாகச் சிந்தனை செய்து பார்க்கும்பொழுது மாணவரின் மனநிலை போக்கு மற்றும் பெற்றோரின் விழிப்புணர்வு இன்மையே என்பது தெள்ளத் தெளிவாகிறது.

  தற்பொழுது பிள்ளைகள் செய்யும் செயலை உற்றுநோக்கி அதற்கேற்றாற்போல் வழிநடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு விருப்பம் இல்லாத பாடத்தைத் திணிக்கக் கூடாது. அதிக மதிப்பெண் பெற வேண்டும் என அவர்களைக் கருவிகளாக இயக்கக் கூடாது.

  தமிழக அரசு அக்கறை செலுத்தும் வண்ணம் பள்ளிகளில் மாணவர்களின் மனநிலையைச் சீர்படுத்தி நெறிப்படுத்த வேண்டும். அதற்கு பள்ளிக்கு ஓர் ஆலோசகர் நியமனம் செய்யப்பட வேண்டும். தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். சிறப்பாகத் தேர்வு நடத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அரசாணை 12-ல் உரிய திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

  மாணவர்களின் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கக் கூடாது என கூறுகின்றனர். குற்றவாளிகளின் மனநிலை பாதிக்கப்படும் என்பதற்காக நீதிபதிகள், அவர்களை விடுதலை செய்ய முடியுமா? குற்றவாளி திருந்த வேண்டும் என்றாலும் திருத்தப்பட வேண்டுமென்றாலும் அதற்குரிய தண்டனை அளிக்கப்படத்தானே வேண்டும்.

  அதேபோலத்தான் மாணவர்கள் தவறுகள் இழைக்கும்பொழுது அவர்களைத் திருத்த தண்டனை என்பது அவசியமாக வேண்டும். ஆனால், அதேவேளையில் மாணவர்களின் தவறுகளுக்கேற்ப தண்டனை முறையை மாற்றி அளிக்கலாம்.

  வீண் வதந்தி பரப்புவது, ஆசிரியரைத் தாக்குவது, பள்ளிக்குச் சேதாரத்தை உருவாக்குவது போன்ற செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவை எதிர்காலச் சந்ததியைப் பாதிக்கும்வண்ணம் கல்வி பாழாகிவிடும். டாக்டரை மருத்துவமனையில் தனியாகவோ, கூட்டாகவோ தாக்கினால் 3 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நஷ்டஈடாக அபராதத் தொகையும் விதிக்கப்படும். மருத்துவ சேவையில் குறைவு இருப்பதாக எவரேனும் கருதினால் சட்டரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என தமிழக அரசு சட்டம் 48, நாள் 2-12-2008-ல் குறிப்பிட்டுள்ளது.   அதேபோல கல்விக்கண் திறக்கும் புனிதமான தொழிலையே மேற்கொள்ளும் ஆசிரியரைத் தாக்கினால் டாக்டரைப்போல் பாதுகாப்புச் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை விட வேண்டும்.

   ஆசிரியர்கள் மீது புகார் எழுமானால் துறைவாரியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அல்லது சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் கல்வி, கற்றல் சூழல் சிறப்பாக நடைபெறும். தமிழக அரசின் அத்தியாவசியப் பணியான கல்வி, மருத்துவம், காவல்துறை இவை மூன்றில் கல்வியைப் பாதுகாக்க வேண்டியது தலையாய கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.