தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எதிர்பார்ப்பு இல்லாத மத்திய பட்ஜெட்!

பிப்ரவரி 26-ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் தாக்கல் செய்யும்வரை, வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் அம்சங்கள் குறித்து எதுவும் வெளியில் தெரியப் போவதில்லை. பட்ஜெட

Updated On :20 செப்டம்பர் 2012, 10:27 am

பிப்ரவரி 26-ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் தாக்கல் செய்யும்வரை, வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் அம்சங்கள் குறித்து எதுவும் வெளியில் தெரியப் போவதில்லை. பட்ஜெட் பற்றிய எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, பெட்டியிலிருந்து பூனை வெளியே வரட்டும் என்கிற பழைய சொல்வழக்குத்தான் நினைவுக்கு வருகிறது.

அந்தக் காலத்துச் சந்தைகளில் கோழிகள், பன்றிகள் போன்றவற்றை விற்பனைக்காக உயிருடன் வைத்திருப்பார்கள். அவற்றை வாங்க வருபவர்கள், பன்றிகளையும் கோழிகளையும் முதலில் பார்த்துவிட்டு எது வேண்டுமெனத் தேர்ந்தெடுத்து வியாபாரியிடம் கூறுவர். அவர் ஒரு சிறிய சாக்குப் பையில் அதைக் கட்டிக்கொடுப்பார். வாங்குபவர் எளிதாக வீட்டுக்குக் கொண்டு செல்வதற்காக இந்த ஏற்பாடு.

சில மோசடி வியாபாரிகள், சாக்குப் பையில் பன்றிக்குப் பதிலாக பூனையைக் கட்டிக் கொடுத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பன்றிகளைவிட பூனைகள் விலை குறைந்தவையாகவும் எளிதாகக் கிடைப்பவையாகவும் இருந்தன என்பதால் வியாபாரிகளுக்கு இந்தத் தந்திரத்தால் நல்ல லாபம் கிடைத்தது. சந்தையிலேயே அந்தப் பையை வாடிக்கையாளர் திறந்தால் குட்டு வெளிப்பட்டு மானம் போவதுடன் நஷ்டஈடும் தர வேண்டியிருக்கும் என்பதால் வியாபாரிகள் மிகக் கவனமாக நடந்துகொண்டனர். வீட்டுக்குப் போய் பையைத் திறந்த பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டதையே அந்த வாடிக்கையாளர் உணருவார்.

இந்த மோசடி வர்த்தகம் கச்சிதமாக நடப்பதற்கு அந்தப் பூனைகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்வதைக் கவனிக்க வேண்டும். சாக்குப் பையில் இருக்கும்போது, அவை "மியாவ்' எனச் சத்தமிட்டிருந்தால் அப்போதே வாடிக்கையாளர் சுதாரித்துக் கொண்டுவிடுவார். வியாபாரியின் நிலை சிக்கலாகிவிடும். வீட்டுக்குப் போய் மிகத் தாமதமாகவே உண்மை தெரியவருவதால், வாடிக்கையாளரால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

பிரணாப் முகர்ஜி கொண்டுவரப் போகும் பட்ஜெட் பெட்டியும் இதைப் போன்றதுதான். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சாமான்ய மக்களுக்குச் சலுகைகள் என்பவை போல அவர் பேசிக் கொண்டிருப்பதற்கும், உண்மையில் பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் அறிவிப்புகளுக்கும் தொடர்பு இருக்காது என்றே தெரிகிறது.

மத்திய புள்ளியியல் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட வளர்ச்சி தொடர்பான புள்ளிவிவரங்கள் பட்ஜெட் தயாரிப்பதில் கொஞ்சம் சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கும் என்பதால் பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியில் இருக்கிறார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.44 லட்சத்து 53 ஆயிரத்து 64 கோடியாக இருக்கும் என மத்திய புள்ளியியல் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இதன்படி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் எனத் தெரிகிறது. முந்தைய ஆண்டில் இந்த மதிப்பீடு 6.7 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கியும் நேர்மறையான வளர்ச்சி இருக்கும் என மதிப்பிட்டிருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் வளர்ச்சி வீதம் இவற்றைவிட அதிகமாக இருக்கும் என்பதில் பிரணாப் முகர்ஜி உறுதியாக இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை 7.75 சதவீதம் அல்லது அதற்குமேல் வளர்ச்சி வீதம் இருக்கலாம் எனக் கருதுவதாகத் தெரிகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதால், நிதிப்பற்றாக்குறை விகிதமும் குறையும் என்பது நிதியமைச்சருக்கு மகிழ்ச்சியான விஷயம். அதனால், இந்த பட்ஜெட்டில் தற்போதைய 6.8 சதவீத பற்றாக்குறையைக் காட்டிலும் குறைவான பற்றாக்குறை விகிதமே மதிப்பீடாகக் காட்டப்படும். உண்மையில், பற்றாக்குறை மதிப்பு நடப்பாண்டைக் காட்டிலும் வரும் நிதியாண்டில் அதிகமாகத்தான் இருக்கப் போகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதால் விகிதாசார அளவில் பற்றாக்குறை குறைந்திருப்பது போலத் தெரிகிறது.

இப்படிப் பற்றாக்குறை பட்ஜெட்டுடன் நாட்டைக் கொண்டு செல்வது சிரமமான விஷயம்தான் என்றாலும், முன்னேறிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் பற்றாக்குறை விகிதம் மிகக் குறைவானதாகவே இருப்பதாக நிதியமைச்சர் சுட்டிக் காட்டுகிறார். இது உண்மைதான். இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 6.8 சதவீதமாகவும் மாநில பட்ஜெட்டுகளின் பற்றாக்குறையையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 11 சதவீதம் என்கிற அளவிலும் இருக்கின்றன. ஆனால், வளர்ந்த நாடுகளில் இது 14 சதவீதமாக இருக்கிறது.

இருந்தபோதிலும், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் நோக்கங்களுக்கு இணங்க நிதிப் பற்றாக்குறையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நிதியமைச்சர் விரும்புவதாகவே தெரிகிறது.

பொருளாதார வளர்ச்சி தற்போது ஓரளவுக்குத் திருப்தியாக இருக்கிறது என அவரே கருதுவதால், வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் சலுகைத் திட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெறுவதற்கு இதுவே சரியான தருணமாக இருக்கும்.

அடுத்ததாக, சரக்கு மற்றும் சேவை வரி, நேரடி வரி விற்பனைக் குறியீடு ஆகியவற்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த பட்ஜெட்டைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், இந்த பட்ஜெட்டில் பிரணாப் இதையெல்லாம் அறிமுகப்படுத்த மாட்டார். இது நிறுவன உலகத்துக்கு ஆசுவாசம் தரும் செய்தியாகும்.

இது ஒருபுறம் இருக்க, வளர்ச்சியில் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கும் உண்மை மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

புள்ளியியல் நிறுவனம் அளித்திருக்கும் தகவலின்படி வேளாண்துறை வளர்ச்சி வீதம் மைனஸ் 0.2 சதவீதமாக இருக்கிறது. அதாவது எதிர்மறை வளர்ச்சி. வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருக்கும் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேரைப் பாதிக்கும் விஷயம் இது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேருக்கு வேளாண்மைதான் வேலைவாய்ப்பை வழங்கும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு வெறும் 17 சதவீதம் மட்டுமே. வேளாண்மையில் ஈடுபடுவோரின் தனிநபர் வருவாய் மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

புள்ளியியல் நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் தேசிய வருவாய் ரூ.51 லட்சத்து 18 ஆயிரத்து 594 கோடி. இதன்படி 117 கோடி மக்களின் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு ரூ.43,749 அல்லது மாதத்துக்கு ரூ.3,646 எனக் கணக்கிடலாம். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். ஆனால் இந்த வளர்ச்சி, வறுமைக் கோட்டை ஒட்டியிருக்கும் மக்களின் வருவாயில் எதிரொலிக்கவில்லை என்பதுதான் பரிதாபம். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் இல்லையென்பதால், சாதாரண மக்களின் இதுபோன்ற பிரச்னைகளெல்லாம் இந்த பட்ஜெட்டில் பொருள்படுத்தப்படாது என்பது தெரிந்ததுதான்.

நிதியுதவிச் சலுகைகளை விலக்கிக் கொள்வதன் ஒரு கட்டமாக மறைமுக வரிகளை அதிகரிப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். 13-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் சிலவும் பட்ஜெட்டில் இடம்பெறலாம். மற்றபடி பிரணாப்பின் பட்ஜெட் இன்ப அதிர்ச்சியாக எதையும் கொண்டுவரப் போவதில்லை. நாம் எதிர்பார்க்காத எதையும் அவர் அறிவிக்கவும் வாய்ப்பில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.