தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்களை 5 சதவீதம் குறைத்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வில் பொதுப் பிரிவினர் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பெரும்பாலானோரின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. தற்போது தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் அந்த இடங்கள் நிரம்பிவிடும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை உண்மையிலேயே அனைவருக்கும் பொறியியல் கல்வி வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவா அல்லது பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கக் கூடாது என்பதற்காகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் சுமார் 454 பொறியியல் கல்லூரிகள் மூலம் 1.65 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மேலும் 50 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவற்றின் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் இடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 5,81,251. பொறியியல் படிப்புக்கான தகுதி மதிப்பெண்களை அரசு குறைத்துள்ளதன் மூலம் இவர்களில் சுமார் 1.65 லட்சம் பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவர்.
இதன்படி பார்த்தால், பிளஸ் 2 முடித்தவர்களில் சுமார் 25 சதவீதம் பேர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்கின்றனர்.
ஆண்டுக்கு தமிழகத்திலிருந்து மட்டும் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். இது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றே நினைக்கத் தோன்றுகிறது. பொறியியல் படிப்பு முடித்ததும் பன்னாட்டு நிறுவனங்களில் கைநிறைய சம்பளம், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்ற நிலை எல்லாம் எல்லோருக்கும் சாத்தியப்படும் என்று கூற முடியாது. பெரிய, புகழ்பெற்ற அதுவும் நகர்ப்புறங்களில் இருக்கும் கல்லூரிகளில்தான் பன்னாட்டு நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வை நடத்தி மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்கின்றன. ஆனால், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தென்மாவட்டங்களில் அதுவும் கிராமப்புறங்களில்தான் அதிகம் உள்ளன.
இக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் பயிலும் மாணவர்களுடன் பே ôட்டிபோட இயலாது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளும் இவர்கள் அனைவரிடமும் இருப்பதில்லை. இதுபோன்ற பொறியியல் கல்லூரிகளில் படிப்பை ஏதோ "முடித்துவிட்டு' சரியான வேலை கிடைக்காமல் திண்டாடும் பொறியியல் பட்டதாரிகள் ஏராளம்.
மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைபார்க்கும் பி.இ. பட்டதாரிகளும் இருக்கின்றனர். வெறும் ரூ.5 ஆயிரத்துக்கு வேலைபார்க்கும் பி.இ. பட்டதாரிகளும் இருக்கின்றனர். பரவலான கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பைத் தேர்வு செய்யாமல் ஒரே கல்வி, ஒரே வேலை என்ற நோக்கில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பி.இ. படிப்பதன் விளைவு இது.
வெறும் எண்ணிக்கையால் ஏற்பட்ட இடைவெளி என்று மட்டும் இதைக் கூறிவிட முடியாது. அனைத்துக் கல்லூரிகளின் தரமும் ஒன்றுபோல இருப்பதில்லை. பல பொறியியல் கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள் இருப்பதில்லை. தங்கள் கல்லூரியில் பி.இ. முடித்த மாணவர்களையே 5-ம் ஆண்டில் விரிவுரையாளராக நியமனம் செய்யும் கல்லூரிகள் பல உள்ளன. போதிய அனுபவம் இன்றி பாடம் சொல்லித் தரும் இந்த ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்கள் எப்படி முழுத் தகுதியுடன் படிப்பை முடிக்க முடியும்?
மருத்துவம், பி.இ. போன்ற உயர்கல்வி பயில சராசரி மாணவர்களைவிட கூடுதல் தகுதி அவசியம். நுழைவுத் தேர்வு முறை பல்வேறு காரணங்களைக் கூறி நீக்கப்பட்டு, தற்போது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, எதிர்காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக பிளஸ் 2 தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற நிலைகூட ஏற்படலாம்.
ஆனால், போதிய வேலைவாய்ப்பு இன்றி பொறியியல் படிப்புகளுக்கு கூடுதல் இடங்களை ஏற்படுத்துவதும், தகுதி மதிப்பெண்களைக் குறைத்து இன்னும் அதிகம் பேருக்கு பி.இ. படிக்க வாய்ப்பு வழங்குவதும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்று கருதவே இடமுண்டு.
பி.இ. படிப்புக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டாலும் அதன் மீதான மோகம் குறையவில்லை. இப்படியே ஆண்டுக்கு ஆண்டு பி.இ. இடங்களை அதிகரித்துக் கொண்டே போனால், மற்ற கலை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.