காத்திருக்கும் கடமை...!

திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் காணப்பட்ட தமிழகத் தேர்தல் களம் கடைசிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.  இத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக (திரைப்பட) கதாநா
Updated on
2 min read

திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் காணப்பட்ட தமிழகத் தேர்தல் களம் கடைசிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

 இத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக (திரைப்பட) கதாநாயகர்களும், வில்லன்களும், காமெடியன்களும் களம் இறங்கினாலும் உண்மையான கதாநாயகன் தேர்தல் ஆணையம்தான்.

 தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் பணப் பட்டுவாடாவை ஓரளவாவது தடுத்து நிறுத்தி அத்தனை கட்சிகளையும் தலையில் கைவைக்கச் செய்திருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு இத்தனை அதிகாரமா என மக்கள் மனதில் சிறு நம்பிக்கையை விதைத்துள்ளது. மொத்தத்தில் மக்களுக்குக் கதாநாயகனாகவும், அரசியல் கட்சிகளுக்கு வில்லனாகவும் காட்சியளித்தது.

 தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பிடிபட்ட பணம், பணபலத்தின் மீது அரசியல் கட்சிகள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்தியது.

 பிரசாரத்தைப் பொறுத்தவரை, தனிநபர் தாக்குதல்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல என்றாலும், இத் தேர்தலில் அதைக் கட்சி சார்பின்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்கள் நம் அரசியல்வாதிகள்.

 தமிழக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். வளர்ச்சிக்காக அமைச்சர்கள் பாடுபடவில்லை என யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் தங்களது சொத்து வளர அவர்கள் அரும்பாடுபட்டிருப்பது தெரியவரும்.

 இவர்கள் அனைவருக்குமே முழுநேரத் தொழிலே அரசியல்தான்; பிறகு எப்படி, வேறு எந்தத் தொழில் மூலம் இவர்களுக்குச் சொத்து சேர்ந்தது என அப்பாவியாகக் கேள்வி கேட்கக் கூடாது. இப்போதைக்கு அரசியலைத் தவிர, வருமானம் கொழிக்கும் தொழில் வேறு ஏதாவது இருக்கிறதா என்ன?

 தலைவன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி... வாக்காளர்கள் மட்டும் என்ன அப்பாவிகளா? கருத்துக் கணிப்பு ஒன்றில் பதில் அளித்துள்ள வாக்காளர்களில் சுமார் 48 சதவீதம் பேர் கடந்த தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்ததாகவும், 31.5 சதவீதம் பேர் பணம் வாங்கிக்கொண்டு தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என மலைக்கச் செய்துள்ளனர்.

 எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போவதில்லை; வாக்களிப்பதற்கு வாங்கும் பணமாவது மிஞ்சட்டுமே என நினைக்கிறார்கள்போலும் வாக்காளர்கள்.

 ஆட்சியின் சாதனைகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என ஆளுங்கட்சியும், ஆட்சியின் சோதனைகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என எதிர்க்கட்சிக் கூட்டணியும் முழங்குகின்றன. ஆனால், உண்மையில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது யார் தெரியுமா? வாக்களிக்காத வாக்காளர்கள்தாம்.

 ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபட்சமாக 60 முதல் 70 சதவீத வாக்குகளே பதிவாகின்றன. அதிலிருந்துதான் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. வாக்களிக்காத சுமார் 30 முதல் 40 சதவீத வாக்காளர்களும் வாக்களித்தால், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் முடிவுகளே மாறக்கூடும்.

 வாக்காளர் அடையாள அட்டை இல்லாதது, தேர்தல் நாளன்று வெளியூரில் இருப்பது போன்ற காரணங்களால் வாக்களிக்காமல் இருப்பதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பது (அவர்கள் என்னதான் காரணம் கூறினாலும்) ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று.

 ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிப்போம் என்ற பொதுவான நினைப்பும் பலரிடம் உள்ளது. தங்கள் வாக்கு வீணாகப்போவதை விரும்பவில்லை என்கிறார்கள் இவர்கள். இது ஒரு தவறான முடிவு. சுயேச்சையாகவே இருந்தாலும், நல்லவர் என நினைத்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள்.

 உண்மையான சேவை எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வர அது உத்வேகமாக இருக்கும். விலைவாசி குறைய வேண்டும், மின்வெட்டு இருக்கக் கூடாது, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் வர வேண்டும், வேலைவாய்ப்புப் பெருக வேண்டும் எனக் கருதுகிறீர்களா, முதலில் கடமையைச் செய்யுங்கள், பின்னர் பலனை எதிர்பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com