வங்கிகள் - வாய்ப்பும், சவாலும்!
இந்திய வங்கிகளின் வலிமை குறித்து சில வாரங்களாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது சர்வதேச தர நிர்ணய அமைப்பாகிய "மூடீஸ்' நிறுவனம். இந்திய வங்கிகளின் தரத்தை "ஸ்திரம்' ("ஸ்டேபிள்')


இந்திய வங்கிகளின் வலிமை குறித்து சில வாரங்களாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது சர்வதேச தர நிர்ணய அமைப்பாகிய "மூடீஸ்' நிறுவனம். இந்திய வங்கிகளின் தரத்தை "ஸ்திரம்' ("ஸ்டேபிள்') என்று இருந்ததை "நெகடிவ்' என ஒரு படி குறைத்து மதிப்பீடு செய்தது.
இதற்கு "மூடீஸ்' கூறிய காரணம் இதுதான்: வங்கிகளின் வாராக்கடன் அளவு கடந்த மார்ச் மாதம் 2010-ல் 2.27 சதவிகிதமாக இருந்தது. அது மார்ச் மாதம் 2011-ல் 2.31 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. இதனால் வங்கிகளின் லாபம் குறையக்கூடும் என்பதே.
"மூடீஸ்' நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தேவையற்றது, நியாயமற்றது என வல்லுநர்களும் மத்திய நிதி அமைச்சகமும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தது அல்லாமல் கண்டனமும் தெரிவித்தார்கள். இதற்குக் காரணம்:
இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக்கின்றன. தொழில்துறையில் சிறிதளவு மந்தம் ஏற்பட்டு அதனால் வாராக்கடன் அதிகரித்தால் கூட அது சர்வதேச பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே ஆகும். வங்கிகளின் மூலதனம் வலுவான நிலையில் உள்ளது. முக்கியமாக, "மூடீஸ்' குறிப்பிடும் வாராக்கடன் அளவு ஒட்டுமொத்த தொகையின் அளவு. அதேநேரம், சதவிகிதக்கணக்கில் பார்த்தோமேயானால், வாராக்கடன் குறைந்துள்ளது என்பதே உண்மை. 10 ஆண்டுகளுக்கு முன் நிகர வாராக்கடன் சதவிகிதம் 6 சதவிகிதமாக இருந்தது. அது தற்சமயம் வெறும் 2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. இந்த ஆணித்தரமான காரணங்களைச் சுட்டிக்காட்டித்தான் மத்திய அரசும் வல்லுநர்களும் "மூடீஸ்' செய்த தரக்குறைப்பு நடவடிக்கைக்கு மறுப்புத் தெரிவித்தனர்.
அமெரிக்க வங்கிகள் சரிவைச் சந்தித்தன என்றால், "சப்பிரைம்' என்கிற தரமற்ற வீட்டுக்கடன்களை வாரி வழங்கியதன் விளைவு அது. அதுமட்டும் அல்லாமல் ஊகபேரம், முன்பேரம் உள்ளிட்ட ஆபத்து நிறைந்த வழிமுறைகளின் (டிரெவேடிவ்) அடிப்படையில் பெரும் தொகைகளைக் கடனாக வழங்குவதில் ஈடுபட்டன. அன்று சர்வதேச அளவிலான தர நிர்ணய நிறுவனங்கள் எந்த ஓர் அமெரிக்க வங்கியின் தரத்தையும் குறைக்கவில்லை. "மூடீஸ்' போன்ற நிறுவனங்கள் அப்போது ஓர் எச்சரிக்கை மணி அடித்திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்?
ஐரோப்பிய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டவுடன் அந்தந்த நாட்டு அரசுகள் வங்கிகளுக்கு நிதி உதவி செய்து, வங்கிகளைத் தாங்கிப் பிடித்தன. இதனால் இப்போது அந்த நாட்டு அரசுகளே, கடனைத் திரும்பச் செலுத்திட இயலாமல் தவிக்கின்றன.
இந்திய வங்கிகளுக்கு அதுபோன்ற நிலை துளியும் இல்லை. ஆபத்துகள் நிறைந்த "டிரெவேடிவ்' வழிமுறைகளில் ஈடுபடுவதில்லை. மாறாக, பொதுமக்களிடமிருந்து திரட்டிய டெபாசிட் தொகைகளில் குறைந்தபட்சம் 24 சதவிகிதத் தொகையை அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. இதுதவிர 6 சதவிகித டெபாசிட்களை ரொக்கமாக ரிசர்வ் வங்கியிடம் வைப்புத் தொகையாக வைத்துள்ளன. இது ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளாகும். ஆக, 30 சதவிகித டெபாசிட்களை, கடன் கொடுப்பதற்குப் பயன்படுத்த முடியாது. இதனால், எதிர்பாராமல் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலும், பொதுமக்களின் டெபாசிட் தொகையைச் சிரமம் இல்லாமல் திருப்பிக் கொடுக்கும் நிலையில் உள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் மூலதன விகிதம் சிறிது குறைந்தாலும் மத்திய அரசு நிதி ஆதாரம் வழங்கி வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தத் தவறுவதில்லை.
இது ஒருபுறம் இருக்க, "மூடீஸ்' நிறுவனம் வங்கிகளின் தரத்தைக் குறைத்த மறுநாளே, மற்றொரு சர்வதேசத் தர நிர்ணய நிறுவனமான "ஸ்டேண்டர்டு அண்டு பூர்' இந்திய வங்கிகளின் தரத்தை உயர்த்தி உள்ளது. தர உயர்வுக்கு அந்த அமைப்பு கூறிய காரணங்கள்:
இந்திய வங்கிகளின் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் உலகில் உள்ள மிகச்சிறந்த வங்கி நியதிகளுடன் ஒப்பிடக் கூடியவை. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களும் கண்காணிப்பும் உயர்தரமானவை. அதுமட்டுமல்லாமல், கடந்த காலங்களில் சர்வதேச அளவில் வங்கிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டபோது, இந்திய வங்கிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்த பெருமை இந்திய ரிசர்வ் வங்கிக்கு உண்டு என்று "ஸ்டேண்டர்டு அண்டு பூர்' கருத்துத் தெரிவித்துள்ளது.
இப்படியாக, மத்திய அரசு நிதி அமைச்சகம், வல்லுநர்கள் மற்றும் "ஸ்டேண்டர்டு அண்டு பூர்' தர நிர்ணய நிறுவனம் தெரிவித்த கருத்துகள் முக்கியம் என்றாலும், இந்திய வங்கிகளின் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கருத்துத் தெரிவிக்கக்கூடிய அமைப்பு ரிசர்வ் வங்கி அல்லவா?
ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள ""இந்திய வங்கித் துறையின் போக்கும் முன்னேற்றமும்'' என்கிற ஆவணத்தில் மிக முக்கியமான தகவல்கள் உள்ளன.
சர்வதேச அளவில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியின்போது, இந்திய வங்கிகள் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு அடிப்படைக் காரணம் என்ன? கடன் வழங்கியதில் வங்கிகள் காட்டிய ஆழமான கவனம், காலத்தை வென்ற நெறிமுறைகள், தேவையான அளவு திரட்டி வைத்திருந்த நிதி ஆதாரம் மற்றும் மேம்பட்ட நிதி மேலாண்மை, நியாயமான லாப விகிதம் என வங்கித்துறையை ரிசர்வ் வங்கி படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இதற்கு ஏதுவாக இருந்த சூழலையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதால், வங்கிகள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதே அது. பாரம்பரியமான தொழில்துறைகள் தவிர, புதிது புதிதான தொழில்நுட்பத் துறைகளில் வங்கிகள் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் பெருகியுள்ளன.
அதேநேரம், எச்சரிக்கை உணர்வுடன் அணுக வேண்டிய துறைகளும் உள்ளன. உதாரணத்துக்கு, ரியல் எஸ்டேட் துறையை கோடிட்டிக் காட்டியுள்ளது ரிசர்வ் வங்கியின் புதிய ஆவணம். இதுபோன்ற துறைகளில் கடன் வழங்கும்போது, ஒவ்வொரு கடன் விண்ணப்பத்தையும் நுணுக்கமாக பரிசீலித்து சரியான முடிவு மேற்கொள்வது ஒரு சவால் எனலாம்.
மற்றொரு சவால், "பேசல்-3' என்கிற புதிய விதிமுறையின்படி, வங்கிகள் கூடுதல் மூலதனம் திரட்டியாக வேண்டும். பங்குச் சந்தை தற்சமயம் மந்தமாக இருப்பதால், கூடுதல் நிதி ஆதாரத்தை திரட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதே நேரம் அனைத்து வங்கிகளும் தங்கள் நிதி தேவைகளுக்கு மத்திய அரசின் கையை எதிர்பார்ப்பதும் சாத்தியம் அல்ல.
சர்வதேச தரத்தில் நிதி மேலாண்மை மற்றும் ஆய்வு அறிக்கைகளைத் தயாரிக்கும் பணியை வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நடைமுறையை இந்திய வங்கிகளும் கடைப்பிடிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு, தொழில்நுட்பம், பயிற்சி பெற்ற மனிதவளம் ஆகியவற்றை உருவாக்குவதும் ஒரு சவால் என்றால் மிகை அல்ல.
தற்போது வெறும் 50 சதவிகித மக்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். இவர்கள்கூட பலர் ஏதோ பெயரளவில் கணக்கு வைத்திருக்கிறார்களே தவிர, அந்தக் கணக்குகளில் சொல்லிக் கொள்ளக்கூடிய அளவில் இருப்பு இருக்கிறதா, இவர்களுக்கு ஏதேனும் ஒருவகை கடன் இருக்கிறதா, வேறு சேவையைப் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியே! இந்த நிலையை மாற்றி "பினான்ஷியல் இன்குலேஷன்' என்கிற அனைவரையும் உள்ளடக்கிய வங்கித் துறை முன்னேற்றத்தை எட்டிப்பிடிப்பதுதான் மிகப்பெரிய சவால்.
அதேநேரம் வாய்ப்புகளுக்கும் குறைவில்லை. வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலில், மக்களிடையே சேமிப்பு உருவாக்கம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தச் சேமிப்பை முதலீடுகளாக மாற்றும் வாய்ப்பை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலநேரங்களில் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டி வரலாம். அதேநேரம், கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவும் வேண்டி இருக்கும்.
இந்த நிலையை எதிர்கொள்வதற்கு, வருவாய் ஈட்டுவதற்கு வட்டியை மட்டும் நம்பி இருக்காமல், வட்டி அல்லாத பிற சேவைகள் தொடர்பான வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், அன்றாடச் செயல்பாடுகளில் செலவைக் கட்டுப்படுத்துவதும்தான் ஒரே வழி. எடுத்த எடுப்பில் இது எளிதல்ல என்றாலும் இந்த வழியைத் தொடர்ந்து மேற்கொண்டால், வெற்றிவாய்ப்பு அதிகம். வளர்ந்த நாடுகளில் இது சாத்தியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவை என்பதை ஒரு சவாலாகப் பார்க்காமல், ஓர் அரிய வாய்ப்பாகவே பார்ப்பது நல்ல பலன் அளிக்கும்.
அனைத்துத் தரப்பு மக்களையும் வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் விதமாக சூழல்களை உருவாக்க வேண்டும். இதற்காக ஏற்கெனவே, பாரத ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதாரணத்துக்கு, 5,000 மக்கள்தொகை கொண்ட பகுதியில் ஒரு வங்கிக்கிளை நிறுவப்பட உள்ளது. இந்த இலக்கு 2012-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன. புதிய திட்டத்தின் கீழ், மேலும் ஒரு லட்சம் கிளைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் பல கோடி புதிய வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்குக் கிடைப்பார்கள்.
இந்த ஏற்பாடும் இலக்கை எட்டுவதற்குப் போதுமானதல்ல. ஆகையால், ஒரு கூடுதல் திட்டமாக, 2,000 பேர் மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களிலும் 2012-க்குள் வங்கிச் சேவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முழுமையான வங்கிக் கிளைகளாக இல்லாவிடினும், "பேங்கிங் கரஸ்பாண்டெண்ட்' (வங்கிப் பிரதிநிதி) முறையை ஏற்படுத்தி, அவர்கள் மூலம் வங்கிகளின் அடிப்படைச் சேவை வழங்கப்பட உள்ளது. படிப்படியாக இந்தச் சேவையை விரிவுபடுத்தவும் வழிவகை காணப்படும். இந்தப் புதிய அணுகுமுறையின் வாயிலாக 73,000 குக்கிராமங்களில் வங்கிகளின் குறைந்தபட்ச சேவையாவது கிடைக்கும்.
மேற்கூறிய திட்டங்களின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவை ஒருபக்கம். இன்னொருபக்கம், வங்கிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கணிசமான அளவு வைப்புத்தொகை கிடைக்கும்.
உலகமயமாக்கச் சூழலில், வங்கிகளுக்கு அவ்வப்போது புதிய, புதிய சவால்கள் தோன்றக்கூடும். அதேநேரம், ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளுக்கு உள்பட்டு, புதிய, புதிய உத்திகள் மூலமும், தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலமும், வங்கிகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும், வருவாயையும் பெருக்கிக்கொள்ள முற்பட வேண்டும். இதர துறைகளைப்போலவே, வங்கித் துறையிலும், சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் கொள்வதற்குப் பயில வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...