வன்முறையா? நன்முறையா?

தலைநகர் தில்லியில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்நாட்டுப் பாதுகாப்புக்குத் தீவிரவாதிகளின் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக இருப்ப
Updated on
3 min read

தலைநகர் தில்லியில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்நாட்டுப் பாதுகாப்புக்குத் தீவிரவாதிகளின் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக, நாட்டின் இடதுசாரி தீவிரவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம், மதவாதம், இனமோதல் ஆகியன மிகப்பெரிய சவாலாகும். இவற்றைச் சமாளிக்க மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று பேசியுள்ளார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரத் தாக்குதல்களில் புதிதாகத் தலைதூக்கியுள்ள பயங்கரவாதக் குழுக்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. இதனால் இந்தியா பயங்கரவாதத்துக்கு இலக்காகும் நாடு என்ற நிலையில் அப்படியே உள்ளதாகக் கூறியுள்ளார். 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2010-ம் ஆண்டில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களின் எண்ணிக்கை குறைந்து, ராணுவத்தினரின் உயிர் இழப்பும் குறைந்திருக்கிறது. ஆனால், பொதுமக்களின் இறப்பு மட்டும் அதிகரித்திருக்கிறது.

சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையும் கவலையளிப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். அவருக்கு மட்டுமா, அனைவருக்குமே கவலையளிக்கும் செய்திதான்.

இந்த வன்முறைகளுக்குக் காரணம் என்ன என்று கண்டறிந்து அதைப் போக்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் படைபலத்தையே நம்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எல்லைதாண்டிய பயங்கரவாதம் பற்றிப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்நாட்டில் தொடரும் வன்முறையைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது ஏன் என்பதுதான் தெரியவில்லை.

நமது பொருளாதாரம் நிலையான வேகத்தில் வளர்ந்து வருகிறது. உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாராட்டத்தக்க வகையில் இருந்தது. அது விரைவில் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை எட்டிவிடும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் அடிக்கடி சொல்லி வருகின்றனர்; குடியரசுத் தலைவரும் அதையே வழிமொழிகிறார்.

ஆனால், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் விலைவாசி விண்ணைத் தொடுவது ஏன்? இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவது விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்குத்தானா? ஏழை, எளிய, நடுத்தர மக்களை எத்தனை காலம் ஏமாற்றுவது?

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு சில குடும்பங்களின் சொத்துகளின் மதிப்பு பல மடங்காகப் பெருகியிருப்பது உண்மை. இந்தியப் பணக்காரர்கள் உலகப் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர் என்பது புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை. இந்த உண்மைகளுக்குப் பின்னால் ஏராளமான உண்மைகள் இருக்கின்றன.

நாட்டு மக்களுக்காகவே உணவை உற்பத்தி செய்யும் ஏழை விவசாயி, தான் வாங்கிய சொற்பக் கடனுக்காக "ஜப்தி' நடவடிக்கைகளுக்கு உள்ளாகிறார். தொழிலதிபர்கள் வாங்கிய கடன்கள் "வாராக் கடன்'களாகி, அவர்களது பெயர்களை வெளியிடவும் விதிகளில் இடமில்லை என்று அறிவிக்கப்படுகிறது. "சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்' என்பதை நாம் நம்ப வேண்டும்; வெள்ளைப் பணத்தின் நிலையே இதுவென்றால் கறுப்புப்பணத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

""இந்திய அரசியல்வாதிகளாலும், தொழிலதிபர்களாலும் நாட்டின் வளம் சர்வசாதாரணமாகச் சூறையாடப்பட்டுள்ளது. அந்தப் பணம் முழுவதும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாட்டின் பணத்தைச் சூறையாடி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து முழு விவரத்தைத் தர மத்திய அரசு தயங்குவது வேதனையளிக்கிறது...''

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசைச் சாடியுள்ளனர். அப்போதும் மத்திய அரசு கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை வெளியிட மறுக்கிறது. கறுப்புப்பண விவரங்கள் அளித்த நாட்டுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகவே கூறுகிறார்.

வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமி என்று மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள லீக் டென்ஸ்டைன் என்ற நாடு சொல்லப்படுகிறது. இங்கு செயல்படும் சுவிஸ், ஜெர்மனி நிறுவன வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

அந்த நாட்டு விதிகளின்படி வெளிநாட்டினரின் வங்கிக் கணக்குகள் ரகசியம் காக்கப்படுகின்றன. அந்த நாட்டில் சுவிஸ், ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த சுமார் 15 வங்கிகள் உள்ளன. இதில் எல்.டி.ஜி. என்ற வங்கியில்தான் வெளிநாட்டினர் பெரிய அளவில் பணத்தைக் குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெர்மனி அரசு தன் உளவுத்துறை மூலம் இந்த வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளது. சுமார் 1,400 வெளிநாட்டினர் இந்த வங்கியில் கறுப்புப் பணத்தைச் சேமித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் 87 பேர் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று தெரிய வருகிறது. இந்த விவரங்களை ஜெர்மனி அரசிடமிருந்து இந்திய அரசு பெற்றுவிட்டதாகவும், ஆனால் இந்தத் தகவல்களை வெளியிட மறுப்பதாகவும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேட் மலானி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இல்லாவிட்டால், இந்தச் செய்திகள் எல்லாம் நாட்டு மக்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்.

உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரால் இந்த நாட்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. அவர்கள் தம் தாய்நாட்டிலேயே அகதிகளாக மாறும் அவலம்; அனாதைகளாகத் திரியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், நகரங்களிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஓடும் அவலநிலை அரசுகளுக்குத் தெரியாதா?

"சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்ற பெயரால் ஆண்டாண்டு காலமாக உழவுத்தொழில் செய்துவந்த அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டன. மிச்சம் மீதியிருந்த நிலங்களும் உள்ளூர் நிலத்தரகர்களால் வீட்டுமனைகளாகப் பங்கு போட்டுக் கொள்ளப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு, உறுதியளித்தபடி வேலைகேட்டு அலைகிற கூட்டம் படும்பாடு கொஞ்சநஞ்சமா?

கடலோரங்களை முறைப்படுத்தும் சட்டம் மூலம் மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டல்லவா! அவர்கள் கிளர்ந்து எழுகிறபோதெல்லாம் சட்டங்களைத் திருத்துவதாகக் கூறிவிட்டு, பதுங்கிப் பாய்கிற போக்கையே அரசியல் தந்திரங்களாக அரசுகள் கையாள்கின்றன. இதற்காக இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் கண்டும், காணாமலும் இருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்!

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் மற்றும் வன உரிமைச் சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவிப் பழங்குடி மக்களை மலை மற்றும் வனப்பகுதிகளிலிருந்து துரத்திவிட்டு, அந்த இடங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் போக்கை என்னென்பது? அந்த மலைப்பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை இந்திய மற்றும் அயல்நாட்டுத் தொழிலதிபர்களுக்குப் பங்கு போட்டுக் கொடுக்க மத்திய, மாநில அரசுகள் துடிக்கின்றன; படைபலத்துடன் செயல்படுகின்றன.

கேட்டால், தொழில் வளத்தைப் பெருக்குகிறார்களாம்; "தேசம் முன்னேற வேண்டாமா?' என்று கேட்கின்றனர். அந்தப் பழங்குடி மக்கள் நாகரிகம் அடையவே நகரங்களுக்குக் கொண்டுவரப்படுகிறார்களாம். "அவர்கள் நாகரிகம் அடைய வேண்டாமா?' என்றும் கேட்கின்றனர். மீன்களைக் கடலிலிருந்து மீட்டு, கரையில் விட்டு வளர்க்க முடியுமா?

நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகளாகிவிட்டன. இத்தனை ஆண்டுகள் அறியாமையிலேயே வைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பறியாத பாமரமக்கள் எங்கே போவார்கள்? எப்படி வாழ்வார்கள்? கடலில் மூழ்கித் தத்தளிப்பவர் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு உயிர்பிழைக்கவே நினைப்பார். அப்படித்தான் மலைவாழ் மக்களும் தீவிரவாதிகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் மேல் ஆத்திரப்பட்டு என்ன பயன்? வன்முறையை ஒழிப்பதற்கு வன்முறை தீர்வாகுமா?

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு இவற்றால் அலைக்கழிக்கப்பட்ட மக்களின் எழுச்சியே எகிப்து மற்றும் டுனீசியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம். இந்த மக்கள் எழுச்சியின் தொடர்ச்சியே லிபியா, ஏமன், ஈரான், அல்ஜீரியா, பஹ்ரைன் முதலிய நாடுகளிலும் தொடர் போராட்டங்களாக உருவெடுத்துள்ளன.

நீதி தவறிய மன்னனை மட்டுமா, மதுரையையே எரித்தாள் கண்ணகி. "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகுஇயற்றி யான்' என்றார் திருவள்ளுவர். "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதியார் கோபம் கொண்டார். "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே' என்று கொதித்தெழுந்தார் பாரதிதாசன். இவையெல்லாம் வன்முறைக்கான அறைகூவலாகக் கொள்ளலாமா?

""அகிம்சை என்பது தீமையானவைகளையெல்லாம் எதிர்த்துப் போராடுவதிலிருந்து ஒதுங்கியிருந்து விடுவதல்ல. இதற்கு மாறாக, நான் கருதும் அகிம்சை, அதிகத் தீவிரமானது. தீமைகளை உண்மையில் எதிர்த்துப் போராடுவதும், பதிலுக்குப் பதில் செய்து விடுவது என்பதும் இயல்பாகவே தீமையை அதிகரிப்பதாகும். ஆகையால், அதைவிட அகிம்சை அதிகத் தீவிரமானது'' என்று காந்தியடிகள் கூறுகிறார்.

எனவே, நியாயத்துக்காகப் போராடுவது வன்முறையாகாது. அதைவிடச் சிறந்த நன்முறையும் கிடையாது. எந்த அரசும் படைபலம் கொண்டு மக்களை வென்றதாக வரலாறும் கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com