மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சிறு தொழில் சிறக்குமா? சீரழியுமா?

உலகிலேயே முதலாளித்துவ நாடு என்றால் அமெரிக்காதான். ஆயினும், அங்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அமெரிக்காவிலும் மிகப்பெரிய செலவாளி அமெரிக்க அரசுதான். பல்வேறு காரணங்களால் அம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:00 am

ஆ. சண்முகவேலாயுதன்

உலகிலேயே முதலாளித்துவ நாடு என்றால் அமெரிக்காதான். ஆயினும், அங்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அமெரிக்காவிலும் மிகப்பெரிய செலவாளி அமெரிக்க அரசுதான். பல்வேறு காரணங்களால் அமெரிக்க அரசு கொள்முதலில், அரசு செலவிடும் திட்டங்களில் சிறு நிறுவனங்களுக்கு நல்ல முறையில் வாய்ப்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே அங்கு சிறு வியாபாரச் சட்டம் உள்ளது.

 ஒவ்வோராண்டும் அரசு கொள்முதல் திட்டங்களில் குறிப்பிட்ட விழுக்காடு சுமார் 23% பொது சிறு நிறுவனங்களுக்கும், 5% மகளிர் நிறுவனங்களுக்கும், 5% சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கும், பிறருக்கும், 3% செவ்விந்தியர் போன்றோருக்கும் ஆகமொத்தம் 38% சிறு தொழில் நிறுவனங்களுக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக அங்கு அமல்படுத்தும் முறை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

 இந்தியாவைப் பொறுத்தமட்டில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பைத் தருவது சிறுதொழிற்சாலைகள்தான். ஆகையால் மத்திய, மாநில அரசுகள் சிறுதொழிலை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகளை வழங்குவதையும், வழங்க வேண்டியதையும் கூறி வருகின்றன. சிறுதொழிலைப் பற்றிப் பேசாத அரசாங்கமோ, அரசியல்வாதியோ இருக்க முடியாது. ஆயினும், பல நேரங்களில் உண்மை மாறுபட்டதாக உள்ளது. இதனைக் கடந்தகால வரலாறும் தெளிவுபடுத்தும்.

 ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் உள்ள சிறுதொழிலை வளர்க்க பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவது வழக்கம். குறிப்பாக, அரசின் கொள்முதலில் அந்த மாநிலத்திலேயே சிறுதொழில் நிறுவனங்களிடம் பொருள்களை வாங்கினால் அந்த மாநிலத்துக்குக் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும்.

 அந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு; வணிகவரி வருவாய்; தொழில் முன்னேற்றத்தால் அந்த வட்டார வளர்ச்சி; அனைத்துக்கும் மேலாக, அந்த மாநிலத்திலேயே செலவிடப்படுவதால் கிடைக்கும் பணச் சுழற்சி.

 தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு அரசுதான் மிகப்பெரிய செலவாளி. சாலைகள் அமைத்தல், கட்டடங்கள் கட்டுதல், மின்வசதி ஏற்படுத்துதல், போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் இப்படிப் பல்வேறு வகைகளில் மிகப்பெரிய செலவினங்களை அரசு செய்து வருகிறது. ஆகையால், தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் வகையில் பல்வேறு சிறுதொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

 இந்த வகையில் சிறு தொழில்களுக்கு அரசு கொள்முதலில் விலைச் சலுகை வழங்குவதற்கான 31-3-59 தேதியிட்ட அரசாணை எண். 633 மற்றும் 1.3.68 தேதியிட்ட அரசாணை எண். 831 ஆகியவை பிறப்பிக்கப்பட்டன.

 ஆயினும், பெரிய அளவில் சிறிய தொழில்கள் பயன்பெறவில்லை என்பதால் 31.1.77 தேதியிட்ட அரசாணை எண்.110 வெளியிடப்பட்டது. அப்பொழுது ஆளுநராக மோஹன்லால் சுகாதியா இருந்தார். இதனால் சிறுதொழில்கள் அரசு கொள்முதலில் பெரிய அளவில் ஈடுபட்டன. இதற்குப் பின்பு இதில் சில மாற்றங்களுடன் 27.10.88 தேதியிட்ட அரசாணை எண். 1141 வெளியிடப்பட்டது. அப்பொழுது பி.சி. அலெக்ஸôந்தர் ஆளுநராக இருந்தார்.இதில் இன்னும் மாற்றங்களுடன் 3-5-1991 தேதியிட்ட அரசாணை எண். 330 வெளியிடப்பட்டது. அப்பொழுது பீஷ்ம நாராயண்சிங் ஆளுநராக இருந்தார்.

 இந்த முக்கியமான மூன்று அரசாணைகள் வெளியான காலங்களிலும் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்சியில் சிறுதொழில்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாணைகள் வழங்கப்பட்டன. இதனால் தமிழகச் சிறுதொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பயன்பெற்றன.

 இதுதவிர, சுமார் 430 பொருள்கள் தமிழகச் சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்துதான் வாங்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது (2.12.87 தேதியிட்ட அரசாணை எண்.810).

 ஆயினும், 1996-ல் தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ஒரு வடஇந்திய அதிகாரி இருந்தார். அவர் அரசு கொள்முதலில் தமிழக சிறு தொழில்களுக்கு வழங்கப்படும்சலுகைகளைத் தீவிரமாக எதிர்த்து வந்தார். வேறுசில அதிகாரிகளும் சிறு தொழில் சலுகைகளை எதிர்த்த காரணத்தால் 19-2-1997 தேதியிட்ட அரசாணை எண். 75 பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை மூலம் சிறு தொழிலுக்கு வழங்கப்பட்ட அத்தனை சலுகைகளும் பறிக்கப்பட்டன.

 அரசாணை எண்.810 மூலம் தமிழகச் சிறுதொழில்களுக்காக அரசுக் கொள்முதலில் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், அரசாணை எண். 330 மூலம் கொடுக்கப்பட்ட விலைச் சலுகையும் ரத்து செய்யப்பட்டது.

அரசாணை எண். 75 பிப்ரவரி 1997-ல் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக டிசம்பர் 1996 கடைசி வாரத்தில் தலைமைச் செயலர் தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது அன்றைய சிறுதொழில் துறைச் செயலராக இருந்த சோசம்மா தலைமைச் செயலரை அணுகி, தான் கிறிஸ்துமûஸயொட்டி கடைசி வாரம் விடுமுறையில் கேரளம்செல்வதாகவும், அந்தத் துறையைச் சார்ந்த தான் இல்லாமல் முடிவெடுப்பது சரியாக இருக்காது என்றும், பத்து தினங்கள் ஆய்வுக் கூட்டத்தைத் தள்ளி வைக்குமாறும் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. துறைச் செயலர் இல்லாமல் சிறு தொழிலைப் பாதிக்கும் அரசாணை எண். 75 பிறப்பிக்கப்பட்டது.

 இந்த அரசாணை 75-ஐ எதிர்த்து சிறுதொழில் சங்கங்கள் பல்வகைப் போராட்டங்களை நடத்தின. மத்திய அரசு அன்றைய சிறுதொழில் வளர்ச்சி ஆணையர் இரண்யாவை அனுப்பி கிண்டி சிறுதொழில் சேவை நிறுவனத்தில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியது. அவர்களும் சிறுதொழில் சலுகைகளைத் தொடர வேண்டும் என்று அறிக்கை தந்தார்கள். ஆயினும், சுமார் 350 பொருள்களை ஒதுக்கீடு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மற்ற பொருள்களுக்குச் சலுகைகள் மறுக்கப்பட்டன.

 சிறு தொழில் சங்கங்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக 2001-ல் சிறு தொழில் சலுகைகளை சட்டசபையில் விவாதித்து சட்டபூர்வமாக விலைச்சலுகை தரப்பட்டது. அன்றைய நிதியமைச்சர் சி. பொன்னையன் சிறு தொழில் முக்கியத்துவம், அமெரிக்க அரசு தரும் சலுகைகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி சுமார் ஒரு மணி நேரம் விவாதத்துக்குப் பதிலளித்தார். இதன் விளைவாக, தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தில்விலைச்சலுகை 16.11.2001 தேதியிட்டு புதிய ஷரத்தாகச் சேர்க்கப்பட்டது. இதன் பயனாக, பல சிறு தொழில் நிறுவனங்கள் பயனடைந்தன.

 வரலாறு காணாத வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக சிறு தொழில் கொள்கை தமிழக முதல்வர் கருணாநிதியால் 22-2-2008 அன்று வெளியிடப்பட்டது. (அந்தக் கொள்கையிலும் விலைச் சலுகை, கொள்முதல் ஒதுக்கீடு போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ளன).

 ஆயினும், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடையாக இருக்கிறார் என்ற கதையாக அரசுத் துறை, பல நிறுவனங்களில் விலை முன்னுரிமைச் சலுகை தர மறுப்பதால் கொள்முதல் ஆணைகள் வெளிமாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

 தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் அதிகமாக மருந்துப் பொருள்களை வாங்கி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. விலை முன்னுரிமைச் சலுகை மறுக்கப்பட்டு வேறு மாநிலங்களுக்குக் கொள்முதல் ஆணைகள் சென்றதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சிறு மருந்து உற்பத்தியாளர்கள் இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு (வரி அளவு, மின்கட்டணம் குறைவு காரணமாக) தங்களது தொழில் நிறுவனத்தை மாற்றிவிட்டனர்.

 ஆயினும், தமிழகத்திலேயே தொழில் நடத்த விரும்பிய சிலர் நீதிமன்றத்தில் முறையிட்டு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்புப் பெற்றனர். ஆனால், அதை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவக் கழகமும் மற்ற மாநில நிறுவனங்களும் மேல் முறையீடு செய்தன. அரசு சட்டத்தை எதிர்த்து அரசு நிறுவனமே நீதிமன்றத்தை அணுகியுள்ள புதுமையும் இங்கு நிகழ்ந்தது.

 அதேபோல் போக்குவரத்துக் கழகத்திலும் கொள்முதல் ஆணைகள் கிடைக்கப் பெறாத சிறு தொழில் நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி நல்ல தீர்ப்பைப் பெற்றன. ஆனாலும், அவர்களுக்கு இன்றுவரை விடிவு காலம் கிடைக்கவில்லை.

 தமிழ்நாடு மின்வாரியத்திலும், விலைச்சலுகை மறுக்கப்பட்ட காரணத்தால் சிறு தொழில் நிறுவனங்கள் நீதிமன்றம் சென்று நல்ல தீர்ப்பைப் பெற்றன.

 இப்படி சிறு தொழில் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தீர்ப்புப் பெற்றாலும் கொள்முதல் ஆணைகளைப் பெற முடியவில்லை.

 இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான சிறு தொழில் நிறுவனங்கள் நோய்வாய்ப்பட்டு நடத்த முடியாமல் தத்தளிக்கின்றன என்பதை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் காணலாம்.

 அந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் பதிவாகியுள்ள சுமார் 4 லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்களில் 79,778 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. அதாவது, சுமார் 20 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நல்ல கொள்கையை வகுத்தளித்துள்ளது. அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது. இச்சட்டங்களை அமல்படுத்தும்படி செய்ய சிறு தொழில் நிறுவனங்களால், பெரிய தொழில் நிறுவனங்களைப்போல் அரசிடம் வாதாடவும் பெறவுமான செயல்முறைகளைக் கையாள முடியாது. ஆகையால், தமிழகச் சிறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க -வளர்க்க அரசே முன்வந்து செயல்பட வேண்டும்.

 அரசு ஆணைகளையும், சட்டத்தையும், நீதிமன்றத் தீர்ப்பையும், கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

 தமிழகத்தில் அமல்படுத்தப்படும் முழு திட்டங்களைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 20% பொருள்களை தமிழகச் சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும் என்ற ஷரத்தை ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிச் சட்டத்தின் நெறிமுறைகளில் சேர்க்க வேண்டும்.

 எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை - சிறு தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க ஏதுவாக குறைந்தபட்சம் ஆறுமாத கால அவகாசம் தர வேண்டும். இக்காலத்தில் வளர்ச்சி ஏஜென்சிகள் மூலமாக சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சி, முதலீடு ஆகியவற்றுக்கு வகைசெய்ய வேண்டும். இல்லையென்றால் பெரிய நிறுவனங்களின் வியாபாரம்தான் ஏகபோகமாகப் பெருகும்.

கட்டுரையாளர்: (டான்ஸ்டியாவின் முன்னாள் தலைவர்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.