வங்கிக் கடன் சரிவு ஏன்?
கடந்த சில தினங்களாக வெளிவரும் தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது. தொழில், சிறுதொழில் உள்ளிட்ட பல துறைகளுக்கு வங்கிகள் வழங்கும் ஒட்டுமொத்தக் கடன் தொகையின் அளவு குறைந்துள்ளது என்பதே அது. குறிப்பாக, கடந்த ஏப்


கடந்த சில தினங்களாக வெளிவரும் தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது. தொழில், சிறுதொழில் உள்ளிட்ட பல துறைகளுக்கு வங்கிகள் வழங்கும் ஒட்டுமொத்தக் கடன் தொகையின் அளவு குறைந்துள்ளது என்பதே அது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் வங்கிக் கடன்தொகை கணிசமாகச் சரிந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, தேசியமயமான வங்கிகள், தனியார் துறையில் உள்ள பழைய வங்கிகள், புதிய தலைமுறை வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்ட கடன் அளவு, முந்தைய காலங்களில் வழங்கப்பட்ட கடன்தொகையோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
துல்லியமாகச் சொல்லுவதெனில், சென்ற ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கிகள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வழங்கியுள்ளன.
2010-ம் ஆண்டில் அதே மூன்று மாதங்களில், ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, வங்கிக் கடன் குறைந்ததற்கு வட்டிவிகிதம் உயர்ந்திருப்பதே காரணம் என்று சில வங்கிகளின் தலைவர்கள் கூறுகிறார்கள்.
2010-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரை பாரத ரிசர்வ் வங்கி பத்து முறை கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே ரிசர்வ் வங்கியின் நோக்கம் என்பது தெரிந்ததே.
ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தும்போதெல்லாம், வணிக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தொழில் கடன், சிறுதொழில் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது வழக்கம்.
இந்த நிலையில், அடுத்துவர உள்ள நிதி மற்றும் கடன் கொள்கை அறிவிப்பின்போது, வட்டியை உயர்த்த வேண்டாம் என்று இந்திய வங்கிகள் சம்மேளனம், பாரத ரிசர்வ் வங்கி கவர்னரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்கள், தங்கள் நிதித் தேவைக்கு வங்கிகளை மட்டும் நம்பியிருக்கவில்லை. அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும் கடன் வாங்கிக் கொள்கின்றன. முக்கியமாக, யூரோ வணிகக் கடன்கள் மற்றும் மாற்றத்தக்க அன்னிய வணிக பாண்டுகள் (ஃபாரின் கரன்சி கன்வர்டிபிள் பாண்டுகள்) வாயிலாகவும் கடன் வாங்குகின்றன.
"தொழில் துறையில் மந்த நிலை தலைதூக்குகிறதோ? அதனால்தான் வங்கிக்கடன் குறைகிறதோ?' என்கிற கேள்விகளை சிலர் எழுப்புகிறார்கள். ஆனால், "அது உண்மையல்ல' என்று பல வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முக்கியமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் பிரபல வங்கியாளருமான கே.வி. காமத் "மந்த நிலை தலைதூக்குகிறதோ?' என்ற கருத்துடன் உடன்படவில்லை. மாறாக, இந்தியாவில் தொழில் உற்பத்தி, வெளிநாடுகளை நம்பியிருக்கவில்லை.
உள்நாட்டில் உள்ள 120 கோடி மக்களையும், அவர்களது வாங்கும் திறனையும்தான் நம்பியுள்ளது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுகல், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகள் அதீதமாகக் கடன்பட்டுள்ளன. அந்தக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில், அந்த நாடுகளில் அடுத்து என்ன நேருமோ என்கிற நிலையற்ற தன்மை நீடிக்கிறது. அது இந்தியாவை ஓரளவேனும் பாதிக்கக் கூடும்.
அண்மையில் பாரத ரிசர்வ் வங்கி, மூன்றாவது "நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை (ஃபினான்ஷியல் ஸ்டெபிலிட்டி ரிப்போர்ட் - எஃப்.எஸ்.ஆர்.) வெளியிட்டுள்ளது. முந்தைய இரண்டு அறிக்கைகள் 2010-ம் ஆண்டு மார்ச் மாதமும், டிசம்பர் மாதமும் வெளிவந்தன. இந்த அறிக்கையின் நோக்கம், இந்தியாவில் உள்ள நிதி தொடர்புடைய உயர்நிலை அமைப்புகளின் நிலைமையை ஆய்வு செய்து, முடிவை அறிவிப்பதுதான். அந்த அமைப்புகளின் ஸ்திரத்தன்மை மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதும், அதற்கான வழிகாட்டுதல்களைத் தெரிவிப்பதும்தான் ரிசர்வ் வங்கியின் நோக்கம்.
இந்திய வங்கித் துறை சிறப்பான ஸ்திரத்தன்மையுடன் திகழ்வதை ரிசர்வ் வங்கி அழுத்தம்திருத்தமாக உறுதி செய்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளபோதிலும், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் தொடர்ந்து வலுவுடன் உள்ளன என்று எஃப்.எஸ்.ஆர். தெரிவிக்கிறது.
இந்திய நிதிச் சந்தைகள் எவ்விதமான அழுத்தங்கள் இன்றி இயங்குகின்றன என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை மேலும் கூறுகிறது. இவை சாதகமான அம்சங்கள்.
அதேநேரம், உலக அளவில், பல நாடுகளில் மந்த நிலையிலிருந்து மீட்சி அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தடைபடுகிறது என்பதைக் கூற ரிசர்வ் வங்கி தவறவில்லை.
இது ஒருபுறமிருக்க, இப்போது வெறும் 50 சதவீத மக்களே வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த சதவிகிதத்தை விரைந்து உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் இலக்கு.
கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட "எளிய கணக்குகள்' திட்டம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் கையிருப்பு பூஜ்யத்தைத் தொட்டாலும் ஆட்சேபம் இல்லை என்பன போன்ற திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. எனவே, மக்களைச் சென்றடையக்கூடிய புதிய திட்டங்கள் தேவை.
2,000 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமங்களில் 2012 மார்ச் மாதத்துக்குள் வங்கிச் சேவை வழங்கப்பட வேண்டும் என்பது புதிய இலக்கு. இதற்காக வங்கிகள் சின்னஞ்சிறு கிளைகளைத் தொடங்கலாம் அல்லது "பேங்கிங் கரஸ்பாண்டெண்ட்' முறையை உருவாக்கி அவர்கள் மூலம் வங்கிகள் தங்கள் அடிப்படைச் சேவைகளை வழங்கலாம். படிப்படியாக சேவைகளின் அளவை விரிவுபடுத்த வேண்டும் என்பது இப்போதைய புதிய திட்டம்.
இதன்மூலம் குக்கிராமங்களிலும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற லட்சியமும் ஈடேறும். அதேநேரம், மகாத்மா காந்தி ஊரகப் பகுதி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஊதியம் பயனாளிகளுக்குச் சரியான முறையில் போய்ச் சேருவதையும் உறுதி செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் 4,600 கிராமங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமங்கள் அனைத்திலும் 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வங்கிச் சேவை கிடைக்க உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட வங்கிகள் முனைப்புடன் செயல்படத் தொடங்கிவிட்டன.
அதேநேரம், உலகமயமாக்கலின் விளைவாக உலகம் தழுவிய போட்டிகளைச் சமாளிப்பதற்கு வங்கிகள் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டியுள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்திய வங்கிகள் அண்மைக்காலமாக வெளிநாடுகளில் பெரிய அளவில் கிளைகளைத் திறந்து வருகின்றன. அன்னியச் செலாவணி, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்புடைய பல துறைகளில் நிபுணத்துவத்துடன் செயல்பட வேண்டிய தருணம் இது.
ரிசர்வ் வங்கியின் நியதிகளின்படி, வெளிநாடுகளில் திறக்கப்படும் கிளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வெளிநாடுகளின் வங்கிகள் இந்தியாவிலும் கிளைகளை அமைத்து வருகின்றன. இதனால் ஏற்படக்கூடிய போட்டி மிகவும் கடுமையாகவே இருக்கும்.
வங்கி நெறிமுறைகளைப் பொறுத்தவரை, வெளிநாட்டு வங்கிகளைவிட, இந்திய வங்கிகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய இரட்டை லட்சியத்தை அடைவதற்கான பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றுள்ளன.
ரிசர்வ் வங்கி, தன் பங்குக்கு, வணிக வங்கிகளைக் கண்காணிப்பதிலும், வழிநடத்துவதிலும் எப்போதுமே சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் "சப் - பிரைம்' கடன்களால் நேர்ந்த நிதி நெருக்கடிக்குப் பிறகு, வெளிநாட்டுப் பொருளாதார வல்லுநர்கள், பாரத ரிசர்வ் வங்கியின் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படையாகவே பாராட்டியுள்ளனர் என்பது நினைவுகூரத் தக்கதாகும்.
இந்தியாவில் வங்கிச் சேவை வழங்குவதில், பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், அரசுத்துறை வங்கிகளின் பொறுப்பு அந்த அளவுக்கு அதிகம் என்பது வெளிப்படை.
வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டதற்குப் பிறகு, ஆள் எடுப்பது ஏறக்குறைய நின்றுவிட்டதால் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சத் தேவையைவிட குறைவாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் உள்ளன. இந்தக் குறைபாடு உண்மையெனில், இது களையப்பட வேண்டும். தவறினால், இலக்குகளை எட்டுவதில் இடர்ப்பாடு ஏற்படக்கூடும்.
ஒருபக்கம், தொழில்துறை, சிறு தொழில், குறுந்தொழில், வீட்டுக்கடன், சில்லரைக்கடன், விவசாயக்கடன், ஊரக வளர்ச்சிப் பணிக்கான கடன்களின் ஒட்டுமொத்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இன்னொருபக்கம், வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இன்னமும், வெறும் 50 சதவீத மக்களே வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்ற நிலை நீடிக்கக் கூடாது; விரைந்து முன்னேற்றம் காண வேண்டும்.
இத்தகைய லட்சியங்களை அடைவதற்கு ஏதுவாக, வங்கிகளின் நிதி ஆதாரம், செயல்திறன், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் வங்கிகள் மேன்மேலும் வலுவுடன் திகழ வேண்டும். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் இதற்கு ஏற்ப அமைய வேண்டும். முக்கியமாக, வங்கிச் சேவையின் பலன் அதிகபட்ச மக்களைச் சென்றடைய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...