புதுமைகள் செய்யுமா புதிய மதிப்பீட்டுத் திட்டம்?

தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை பாடத்திட்டமும் அதற்கேற்பப் பாடநூல்களும் மட்டுமே அவ்வப்போது மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டில், மாநிலத்தில் இருந்த நான்கு வகையான பாடத்திட்டங
Updated on
3 min read

தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை பாடத்திட்டமும் அதற்கேற்பப் பாடநூல்களும் மட்டுமே அவ்வப்போது மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டில், மாநிலத்தில் இருந்த நான்கு வகையான பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டது. இதுவே பள்ளிக் கல்வித்துறையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் ஆகும்.

இதேபோன்று பள்ளித் தேர்வுகளிலும் அரசுத் தேர்வுகளிலும் வினாத்தாள் வடிவமைப்பு முறைகளைத் தவிர, பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மாநிலக் கல்வித்திட்டப் பள்ளிகளில் மாவட்ட அளவில் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டுப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில் முழுஆண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி வழங்கப்பட்டது. தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக மொத்தத்தில் 150-ம் 175-ம்கூட கருத்தில் கொள்ளப்பட்டன.

கடந்த கல்வியாண்டில் திடுமென தமிழகம் முழுவதுமாக 6, 7, 8-ம் வகுப்புகளில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சியளித்து அவர்கள் உயர்வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். நடப்புக் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.

பள்ளித் தேர்வுகள் இவ்வாறிருக்க, 10 மற்றும் 12}ம் வகுப்புகளுக்குரிய அரசுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் குழப்பம் பற்றிக் கூறத் தேவையில்லை.

கடந்த பல ஆண்டுகளில், இவ்விரு அரசுத் தேர்வுகளிலும் பிழையற்ற, குழப்பமில்லாத வினாத்தாள்கள் வந்ததாக வரலாறில்லை.

இத்துடன் மதிப்பீடு பற்றிய சிக்கல்கள் உயர் நீதிமன்றம்வரை சென்றுள்ளதையும் நாடறியும். இதுதான் கல்வித்துறை பள்ளிகளில் நடத்திவந்த தேர்வுமுறையும் மதிப்பீட்டு முறையும்.

இந்தத் தேர்வுமுறையில் மாணவர்கள் பாடத்தின் எந்தப் பகுதியிலிருந்து எத்தனை வினாக்கள் இடம்பெறும் என்பதைத் தெரிந்து, மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற்றுவந்தனர். உயர்ந்த மதிப்பெண் பெறுவதே கற்பதன் நோக்கமாகக் கருதப்பட்டது.

சமூகஅறிவியல் பாடத்தில் 90 மதிப்பெண் பெற்ற மாணவன்கூட பொதுஅறிவில் பின்தங்கியே காணப்பட்டான். இதனால் மதிப்பெண்ணை வைத்து மாணவனின் முழு வளர்ச்சியையும் தகுதியையும் மதிப்பீடு செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக இதே மாதிரியான தேர்வு முறைதான் தமிழகத்தில் இருந்து வந்தது. 2007-ல் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்விக்குழுவும் மதிப்பீட்டைப் பொருத்தவரை சிறப்பானதும் நுணுக்கமானதுமான திட்டம் எதையும் அறிவிக்கவில்லை.

மாணவனின் தனித்திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கோடிட்டுக் காட்டிவிட்டு, புதிய மொந்தையில் பழைய கள் என்றாற்போன்று, 500 மதிப்பெண்ணுக்கான தேர்வு முறையை மட்டுமே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக தேர்வு முறைகளைச் சீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு, தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டுத் திட்டத்தை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இப்புதிய மதிப்பீட்டுத்திட்டத்தை 2012 - 2013-ம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்புகளிலும், 2013 - 14-ம் கல்வியாண்டில் 9 மற்றம் 10 -ம் வகுப்புகளிலும் நடைமுறைப்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இத்திட்டம் தேசிய கல்விக் கொள்கை - 1986, தேசிய கலைத்திட்ட வரைவு - 2005, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மத்திய அரசு இடைநிலைக் கல்விக் குழு ஆகியற்றின் பரிந்துரைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசாணை கூறுகிறது.

இதன்படி பாடநூல்களுக்கு வெளியே பள்ளி மாணவர்களிடம் பொதிந்துள்ள பல்வகைத் திறமைகளை ஊக்குவித்துச் சோதித்தறிவதும், அதை வகுப்புகளுக்குரிய பாடப்பகுதிக்கான எழுத்துத் தேர்வுகளோடு இணைத்து மதிப்பீடு செய்து தேர்ச்சி வழங்குவது என்பதும் கற்றல் விளைவாகிய மதிப்பீட்டில் ஏற்படவிருக்கும் மிகப்பெரிய பயனுள்ள மாற்றமாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பு சற்றேறக்குறைய இது மாதிரியான அக மதிப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்காகப் பயிற்சிகள் தரப்பட்டு, சிறப்புப் பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டன. ஆனால், அத்திட்டம் வகுப்புத் தேர்ச்சிக்குச் சிறிதும் கருத்தில் கொள்ளப்படாததால் ஆசிரியர்கள் அதில் போதுமான அக்கறை காட்டவில்லை. கல்வித்துறையும் கண்டுகொள்ளாமல்விட்டதால், அத்திட்டம் இருந்தஇடம் தெரியாமல் போய்விட்டது.

அடுத்த கல்வியாண்டில் (2012-13) நடைமுறைக்கு வரவிருக்கும் தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டுத் திட்டக் கூறுகள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்த நிலையில் அமைக்கப்பட்டிருப்பதால், எதையும் யாரும் புறக்கணிக்க முடியாது. இதன் சிறப்பம்சம் இதுவே ஆகும்.

புதிய மதிப்பீட்டுத்திட்டத்தின்படி ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாக அமையும். ஒவ்வொரு பருவத்திலும் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இருவகை மதிப்பீடுகள் நடத்தப்படும். உடனடி மதிப்பீடு பாடம் சார்ந்தது, பாடம் சாராதது என இரண்டு உட்கூறுகளைக் கொண்டது.

உதாரணமாக, உடனடி மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, ஒருபருவத்துக்குரிய காலத்தில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு அவனது அறிவியல் ஆசிரியர், பேச்சு, விவாதித்தல், படைப்பாற்றலை வெளிப்படுத்துதல், சாரணியம், குழுச் செயல்முறைகள் போன்ற பாடம் சாராத பகுதிகள் ஏதாவது ஒன்றில் ஒவ்வொன்றும் 5 மதிப்பெண் கொண்டதாய் 6 முறை மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றுள் மிகச்சிறந்த நான்கைத் தேர்வு செய்து 20-க்கு மதிப்பெண் வழங்க வேண்டும்.

இத்தேர்வின் அடுத்த பகுதியாக, இந்தப் பருவத்துக்குரிய அறிவியல் பாடப்பகுதி, உடற்கல்வி, நன்னெறி ஆகியவற்றில் 6 வகுப்பறைத் தேர்வுகள் நடத்தி, அவற்றுள் சிறப்பான நான்குக்கு 5 மதிப்பெண்வீதம் 20-க்கு மதிப்பெண் கொடுக்க வேண்டும்.

உடனடி மதிப்பீடு பருவம் முழுவதிலும் அவ்வப்போது நடத்தப்படும். இருவகைத் தேர்வுகளும் முடிந்தபின் மொத்தம் 40 மதிப்பெண்ணுக்கு மாணவன் பெற்ற மதிப்பெண்ணைக் கிரேடுகளாக அறிவிக்க வேண்டும் என அரசாணையில் குறிக்கப்பட்டுள்ளது. அடுத்தது பருவ இறுதி மதிப்பீடு. இது பருவத்தின் கடைசி வாரத்தில், அப்பருவத்துக்குரிய பாடப்பகுதியில், வினாத்தாள் கொடுத்து நடத்தப்படும் எழுத்துத் தேர்வாகும். 60 மதிப்பெண்ணுக்குரிய இத்தேர்விலும் மாணவர்களுக்கு கிரேடு முறையே வழங்கப்படும். பின்னர், உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு ஆகிய இரண்டின் மதிப்பெண்களையும் கூட்டி, அந்தப் பருவத்துக்குரிய மாணவனின் தகுதிநிலைகுறித்து கிரேடு வழங்கப்படும். இது ஒரு பருவத்துக்குரிய மதிப்பீட்டு முறை.

இதேபோன்று மூன்று பருவங்களிலும் தனித்தனியாக மதிப்பீடுகள் நடத்தப்படும். ஒரு பருவத்துக்குரிய பாடப்பகுதி அடுத்த பருவத்துக்கு வராது. உடனடி மதிப்பீடுகளுக்கான பாடம் சாராத செயல்முறைகள் மதிப்பீட்டுக் குழு, பயிற்சிப் பட்டறை ஆகியவற்றில் வடிவமைக்கப்பட்டு விளக்கங்களுடன் பள்ளிகளுக்கு வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் வெற்றி தமிழகத்தின் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் செயல்பாட்டைப் பொறுத்ததாகும். பருவ இறுதி மதிப்பீடாகிய எழுத்துத் தேர்வு ஆசிரியர்களுக்குப் பழகிப்போன முறை. ஆனால், 40 மதிப்பெண்ணுக்குரிய உடனடி மதிப்பீடு மிகுந்த பொறுப்புணர்வோடு செய்யப்பட வேண்டியதாகும்.

மூன்று பருவங்களுக்குமாக 36 முறை உடனடி மதிப்பீடுகள் செய்து, அவற்றுள் 24 மதிப்பீடுகளைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இது ஆசிரியர்களுக்குக் கூடுதல் வேலை என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

ஆனால், அறிவாற்றல் நிறைந்த எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பேற்றுள்ள ஆசிரியர்கள் இதைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். ஒரு மாணவனின் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்வதில் தளர்ச்சியோ கவனக்குறைவோ ஏற்பட்டால், அவனது 40 சதவிகிதக் கல்வி முடமாகிப் போய்விடும் என்பதை ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாடம் சாராத பகுதிகளில் உடனடித் தேர்வுகளைச் சரியான கால இடைவெளியில் நடத்தாமல், ஒரே நாளில் ஒட்டுமொத்தமாகப் பதிவேடுகளை நிரப்புவதால் திட்டம் பயனற்றதாய்ப் போய்விடும். வகுப்பின் மாணவர் எண்ணிக்கை, அரசு தரும் பிறபணிகள் எனக் காரணம் காட்டாமல் ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையோடு இந்த மதிப்பீட்டு முறையைச் செயல்படுத்தினால் தேசியக் கட்டுமானத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள்.

கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அளிக்கும் பயிற்சியுடன், ஆய்வு அலுவலர்கள் புதிய மதிப்பீட்டு முறையில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது மிகமிக அவசியமானதாகும். மதிப்பீட்டுத் திட்டத்தின் நடைமுறைச் செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை மாவட்ட வாரியாகக் கலந்தாய்வு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தில் உடனடி மதிப்பீட்டுக்கு 40 சதவிகித மதிப்பெண் ஒதுக்கீடு செய்திருப்பது சற்று அதிகமானதாகும். இதனால் இம்மதிப்பீடு முறையாக நடத்த முடியாத சூழலில் அதனால் மாணவனுக்குப் பேரிழப்பு ஏற்படும் என்பதுபற்றி அரசு பரிசீலனை செய்வது நல்லது. எனவே மதிப்பீடுகளின் எண்ணிக்கையையும் மதிப்பெண் அளவையும் சிறிதளவு குறைக்கலாம்.

கல்வியின் தரம் என்பது வாழ்க்கையின் அனைத்துவகைப் பரிமாணங்களின் தரத்தையும் உயர்த்தும் மனப்பான்மை கொண்டது என்று கூறுகிறது தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு. அதற்குக் கற்பித்தலைப் போன்று மதிப்பீடும் முழுமையானதாகவும் தகுதியுடையதாகவும் இருக்க வேண்டும்.

புதிய மதிப்பீட்டுத் திட்டம் மாணவனின் மனன அறிவைச் சோதிப்பதோடு பலவகையான மனத் திறன்களையும் மதிப்பிட உதவுகிறது. எனவே, இதன் மூலம் முழுமையான ஆளுமை வளர்ச்சி சாத்தியமாவதுடன் தமிழகத்து மாணவச் சமுதாயம் புதுமையில் பூத்த மலர்களாய் கற்றது பொய்யாது, கருதியது இயற்றுபவராய் உதயமாகும் என்பதும் உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com