தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தொல்காப்பியர் நாள் ஒன்றைத் தருக!

கடந்த ஆட்சிக்காலத்தில் படிந்த மாபெரும் களங்கம் ஒன்று. துதிபாடிகளையே ஆதரிக்கப்போக, புலமையும் திறமையும் மூலையில் ஒடுங்கிப் போயின. தமிழறிஞர்கள், தமிழாசிரியர்கள், தமிழார்வலர்கள் என்போர் முற்றிலும் நடுவுநி

Updated On :20 செப்டம்பர் 2012, 12:11 am

கடந்த ஆட்சிக்காலத்தில் படிந்த மாபெரும் களங்கம் ஒன்று. துதிபாடிகளையே ஆதரிக்கப்போக, புலமையும் திறமையும் மூலையில் ஒடுங்கிப் போயின.

தமிழறிஞர்கள், தமிழாசிரியர்கள், தமிழார்வலர்கள் என்போர் முற்றிலும் நடுவுநிலையுடன் திகழ வேண்டும். கட்சி சாராது, மனத்தில் பட்ட நல்லனவற்றை, மனத் திண்மையுடன் எடுத்துரைத்து, நல்வழி காட்டுபவர்களாக விளங்க வேண்டும். அரசு அதை ஏற்கலாம் - ஏற்காது கைவிடலாம். மறுக்கலாம். அவை அரசின் முடிவு.

ஆயினும், நல்லதைச் சொல்லுதல் - வழியுரைத்தல் அரசுக்குப் பகை ஆகாது. அரசும் அதைப் பகையாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது.

""செவிகைப்பச் சொற்பொறுக்கும் ஆள்வோனை' இனங்காட்டினார் திருவள்ளுவர். கடிந்து அன்று, கருத்துரைக்கவே கூடாது என்று எதிர்பார்க்கக் கூடாது. அரசு சொல்வன, செய்வன அனைத்தையும் பாராட்டுபவர்களே அரசுக்கு வேண்டியவர் ஆகார்.

பல்வேறு கருத்துகளுக்கு இடம் தந்து, தனக்குச் சரியென்று பட்டதை நடைமுறைப்படுத்திச் செல்வதே நல்லரசாகும்.

கருத்து வேறுபாடு என்பது தமிழ் அறிஞர்கள் அல்லது பொதுவான அனைத்து வல்லுநர்களிடையேயும் வரும். அறிஞர் சிலர் கூறுவன, அரசை நல்வழிப்படுத்த எண்ணிக் கூறுவதால், அரசுக்கும் அவருக்கும் கருத்து வேறுபடும். ஆனால், அது பகையாகாது.

இன்று சித்திரை முதல் தமிழாண்டை எண்ணுவதா, தை முதல் எண்ணுவதா என்பதில் கருத்து வேறுபாடு உளது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகள் பற்றி, யான் அறிந்தவரை, தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு என்ற நிலையே இல்லை.

அரசன் பிறந்த ஆண்டை வைத்து அல்லது அவன் ஆட்சிக்கு வந்த ஆண்டை வைத்துக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை, மேலைநாட்டிலும் இதே நிலைதான். இன்று நாம் கி.மு. என்றும் கி.பி. என்றும் எழுதும் வழக்கமும் துல்லியமாகக் கணக்கிட்டு வந்ததன்று. கி.பி. நான்காம் நூற்றாண்டில், ஒரு பாதிரியாரால் வகுக்கப்பட்டு நிலைபெற்றுவிட்டது.

தமிழகம் - இந்தியா - என இங்கும் பல்வேறு ஆண்டுக் கணக்குகள் உள. இன்றும் மலையாளிகளும் பிறரும் ஆவணி முதல் நாளை, ஆண்டுத் தொடக்கமாகக் கருதும் வழக்கம் உளது.

கார் நாற்பது என்ற நூலில், கார்த்திகை முதல் நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்ட குறிப்பு உளது.

இன்று சித்திரை முதலாக எண்ணும் அறுபது ஆண்டுக் கணக்கும் தொடராண்டு அன்று.

உலகமெங்கும் இக் குழப்பம் இருந்ததாலேதான், இன்று ஆங்கில ஆண்டு முறை கி.மு., கி.பி. எனக் கூறுமாறு நிலைபெற்று விட்டது.

இன்றைய நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை சித்திரையை முதலாகக் கொள்ளும் வழக்கம் நிலைபெற்றுள்ளது. ஆயினும், இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழறிஞர் கூடி, தை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தனர்.

மிகுந்த ஆராய்ச்சி எல்லாம் இன்றி, மேற்போக்கான சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

நாள்மீன் - நட்சத்திரத்தை வைத்து நாள்கள் கணக்கிடப்பட்டன. இன்று பரணி நாள், கார்த்திகை நாள் என்பர். முதல் தேதி, இரண்டாம் தேதி என்பதில்லை.

கோள் மீன் - கிரகப் பெயர்களை வைத்து ஞாயிறு, திங்கள் எனப் பெயரிட்டனர்.

மதியம் - சந்திரனை வைத்து, முப்பதுநாள் கொண்ட மதியத்தை - திங்களைக் கணக்கிட்டனர்.

ஞாயிறு - தென்திசைச் செலவு, வடதிசைச் செலவு என இரண்டாகப் பகுக்கப்பட்டு, அதன் வடதிசைச் செலவை வைத்து, தை முதல்நாள் அது வருவதால், தமிழ் ஆண்டினை, அதன் அடிப்படையில் கணக்கிடலாம் என எண்ணினர்.

நாள்மீன், கோள்மீன், மதியம், ஞாயிறு - இவற்றை வைத்துக் காலக் கணக்கிட்டனர் என்பதில், ஒரு தொடர்பு உளது.

இதுதவிர, தை முதல் நாளைத் திருவள்ளுவர் நாள் எனக் குறிப்பிட்டு, அந் நாள்களில் திருவள்ளுவரை வணங்கிக் கொண்டாடலாம் என அறிவுறுத்தினார்.

இவ்வாறு திருவள்ளுவர்க்குரிய ஆண்டு, கிறித்தவ ஆண்டுக்குச் சரியாக 31 ஆண்டுகள் முற்பட்டது என மறைமலையடிகள் கூறினார். அம்முதுபெரும் சான்றோர் கருத்து. அதனால், அனைவராலும் ஏற்கப்பட்டது.

அதாவது இன்று கிறித்தவ ஆண்டு 2011 என்றால், திருவள்ளுவராண்டு 2011+31=2042 எனக் கொண்டனர். இதன் மூலம் தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு கிடைக்கிறது என்பதே, அறிஞர்கள் இதனை ஏற்பதற்கு முக்கியமான காரணமாகும்.

கடந்த நூற்றாண்டு முதல் அனைத்து ஆட்சியிலும் இது ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது.

மேலைநாட்டிலும் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆயினும் பெரிதும் பயன்பாடு கருதி, தனி ஒருவர் சொன்னது நிலைபெற்றுவிட்டது.

எனவே, இன்றைய தமிழக அரசும் - இன்றைய சூழலுக்கேற்பச் சித்திரை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுவதை எங்ஙனம் மறுக்கவோ தடுக்கவோ இல்லையோ, அதுபோலத் தை முதல்நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டையும் அவரவர் விருப்பப்படி கொண்டாட இடம் தந்து, அரசு இரண்டையும் ஆதரிப்பதே முறையாகும்.

மேலும் இன்றைய தமிழக அரசு, வரலாற்றில் இடம்பெறுமாறு, ஒன்று செய்யலாம்.

சித்திரை முதல் நாளை - அல்லது சித்திரை நிறைமதி (பௌர்ணமி) நாளைத் தொல்காப்பியர் நாள் என்று குறிப்பிட்டு, அந் நாளன்று தொல்காப்பியரை எல்லோரும் நினைவுகூரும் நாளாக ஆணை பிறப்பிக்கலாம்.

தொல்காப்பியரின் காலம் பற்றிய ஆய்வுக்கு முடிவு காண்பது கடினம். ஆயினும், அம் மொழி முதல்வனை, மொழியறிஞனை, தமிழ்க் காப்பாளனை நினைவு கூர, நாம் ஒரு நாளை முடிவு செய்வது எவ்வகையிலும் தவறாகாது.

சித்திரை, வைகாசி - இளவேனிற் காலம்; வசந்த காலம். அந்த நாளில்தான் மாமதுரைக் கூடல்நகரில் மன்னன் தலைமையில், புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்டு, மக்கள் அவற்றைச் "செவிநுகர் கனிகள்' என உண்டு மகிழ்ந்தனர் எனக் கலித்தொகையில் வருகிறது.

நிலன் நாவில் திரிதரூஉம்

நீள்மாடக் கூடலார்

புலன் நாவில் பிறந்தசொல்

புதிதுண்ணும் பொழுதன்றோ

என வரும் சித்திரையில், தொல்காப்பியரேகூடத் தம் நூலை அரங்கேற்றியிருக்கக் கூடும்.

எவ்வாறாயினும் சித்திரைத் திங்களைத் "தொல்காப்பியர் நாள்' என அறிவித்து, அதன்மூலம் உலகத் தமிழர் அனைவரும் அச் சான்றோனை நினைத்துக் கொண்டாட வைப்பின், அச் சிறப்பு எதிர்வரும் காலமெல்லாம் போற்றப்படும்.

தமிழக அரசு இதை நன்கு சிந்தித்து ஏற்கும் என்று தமிழார்வலர் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.