தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

யானைகளின் வாழ்வாதாரப் போராட்டம்!

நம்முடைய வீட்டின் ஒரு பகுதியை எவரேனும் ஆக்கிரமித்தால் நமக்கு வரும் கோபத்துக்கு அளவே இருக்காது. ஆக்கிரமித்தவருடன் சண்டை, நீதிமன்ற வழக்கு வரை நாம் சென்று விடுவோம். அதேபோன்றதொரு பிரச்னையைத்தான் உலகின் அற

Updated On :19 செப்டம்பர் 2012, 10:44 pm

நம்முடைய வீட்டின் ஒரு பகுதியை எவரேனும் ஆக்கிரமித்தால் நமக்கு வரும் கோபத்துக்கு அளவே இருக்காது. ஆக்கிரமித்தவருடன் சண்டை, நீதிமன்ற வழக்கு வரை நாம் சென்று விடுவோம். அதேபோன்றதொரு பிரச்னையைத்தான் உலகின் அறிவுவாய்ந்த விலங்கினமாக கருதப்படும் யானைகள் இப்போது இந்தியக் காடுகளில் அனுபவித்து வருகின்றன.

 யானைகள் தங்களுடைய இருப்பிடத்தைத் தக்கவைப்பதற்கும், வாழ்வதற்கும் மனித இனத்துடன் போராடிக்கொண்டிருக்கின்றன.

 மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் காலம் காலமாக யானைகள் தங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. ஆனால், மனிதன் காடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியவுடன் யானைகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தன. அவை தன்னுடைய இரையைத் தேடியும், நீரின் ஆதாரங்களைத் தேடியும் மனிதன் வாழும் இடத்துக்கு வரத்தொடங்கி ஏராளமான போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன.

 இந்த வாழ்வாதாரப் போராட்டத்தில் மனிதனுக்கும், யானைகளுக்கும் இழப்புகள் அதிகரித்துகொண்டே செல்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களான தேனி, கம்பம், வால்பாறை, ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்ததாக செய்திகள் அடிபடும். அவ்வாறு புகும் யானைகளை வனத்துறையினரின் உதவியுடன் கிராம மக்கள் விரட்டி அடிப்பர். ஆனால் யானைகள் வந்த இடம் ஒரு காலத்தில் அவைகள் பயணப்பட்ட வழித்தடமாக இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை. அவற்றின் இடத்தைத்தான் நாம் ஆக்கிரமித்துள்ளோம் என்பது மனிதன் மறக்க மறுக்கும் உண்மை.

 யானைகளின் வழித்தடத்தை மனிதன் ஆக்கிரமித்துள்ளதால்தான் இந்தப் பிரச்னை எழுகிறது எனத் தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்தியாவில் 32 ஆயிரத்து 900 யானைகள் உள்ளதாக 2011-ம் ஆண்டு பதிவான யானைகள் கணக்கெடுப்பு கூறுகிறது. அதில் அதிகபட்சமாக தென் இந்தியாவில் 17,000 யானைகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 6,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக இன்னும் வெளிவராத கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

 இதேபோல் ஆப்பிரிக்காவில் யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விலங்குகள் நல அமைப்பு அண்மையில் எச்சரித்தது. இந்திய யானையைவிட ஆப்பிரிக்க யானைகள் பலம் வாய்ந்தவை. இப்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டன. ஆப்பிரிக்க யானைகளின் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக அவற்றை பல சட்டவிரோத கும்பல்கள் வேட்டையாடி வருகின்றன.

 தமிழகத்தில் நீலகிரி, முதுமலை, ஏற்காடு போன்ற பகுதிகளில் யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகளும் சொகுசு விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

 இதனால் யானைகள் அந்த வழியாகச் செல்ல முடியாமல் கிராமங்கள், வயல்கள் வழியாகச் செல்கின்றன. இதனால் உயிர்ப்பலி, பயிர் நாசம் நடக்கிறது. இதையடுத்து, அழிந்துபோன யானைகள் வழித்தடத்தைக் கண்டறியுமாறு மத்திய அரசு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

 7,360 ஏக்கர் பரப்பளவைக் கண்டறிந்து அதை யானைகள் வழித்தடம் என தமிழக அரசு அறிவித்தது. இந்தப் பகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. அவற்றை காலி செய்ய மறுத்து அந்தப் பகுதியில் உள்ள சொகுசு வீட்டு உரிமையாளர்களும் மக்களும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

 அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநில அரசு, தனது மாநிலத்தில் வசிக்கும் மக்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பராமரிக்க வேண்டும். எனவே, யானைகளின் வழித்தடங்களில் உள்ள பகுதியில் உள்ள சொகுசு விடுதி உரிமையாளர்களும் பாரம்பரியமாக அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் 3 மாதத்துக்குள் இடத்தைக் காலி செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசு மிகச்சிறந்த மாற்றிடம் அல்லது நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

 ஆனால், இவற்றையெல்லாம் மனிதர்கள் எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாமோ நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி "அலர்ட் இண்டிகேட்டர்' எனும் கருவியை யானைகளின் வழித்தடத்தில் பொருத்தி யானைகளின் நடமாட்டத்தைத் தெரிந்து கொள்கிறோம்.

 இதனால் யானைகளின் தாக்குதலில் இருந்து மனிதனைக் காப்பாற்றி விடுகிறோம், யானைகளை விட்டுவிடுகிறோம். இதேபோன்ற நிலை தொடர்ந்தால் ஆப்பிரிக்க யானைகளுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்திய யானைகளுக்கு ஏற்படும்.

 காடுகள் மற்றும் விலங்குகள் குறித்தும் மனிதன் எப்போதுமே சிந்தித்தது கிடையாது, சுயநலமாகவே சிந்திக்க பழகிவிட்டான். ஆனால், ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதே உண்மை. பெருகி வரும் மக்கள்தொகை காரணமாகவும் மனிதனின் பேராசை காரணமாகவும் காடுகள் பெரிதும் சுருங்கிவிட்டன.

 நாட்டில் மனிதன் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோன்ற உரிமைகள் காட்டில் வாழும் யானைகளுக்கும் இருக்கின்றன. வாழ்வதற்கு மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தனை உரிமைகளும் விலங்குகளுக்கும் இருக்கின்றன. எனவே, உரிமைகள் எங்கெல்லாம் பறிக்கப்படுகின்றதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும். இப்போது அப்படிப்பட்ட புரட்சியைத்தான் யானைகள் செய்துகொண்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.