பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

துணைவேந்தரைத் தெரிவு செய்ய...

பல்கலைக்கழகம் என்பது உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் ஒரு

News image
Updated On :11 டிசம்பர் 2012, 7:23 pm

ஒப்பிலா மதிவாணன்

பல்கலைக்கழகம் என்பது உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் ஒரு கல்விக்களம். அதனை ஒரு தனி நிறுவனமாக எண்ணாமல், மக்கள் வாழ்க்கைத் தரத்தை உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சியின் வேராகவும், விழுதாகவும் பார்க்க வேண்டும். சிறப்பும் பொறுப்பும் வாய்ந்த உயர் கல்வி நிறுவனத்தை மேலாண்மை செய்பவரே துணைவேந்தர். தன் ஆளுமைச் சிறகுகளால் உயர் கல்வியை மேலெடுத்துச் செல்லவேண்டிய கடப்பாடுடையவர். சிக்கலான பொழுதுகளில் நிதானமாகச் செயல்பட்டு, பொதுநலத்துடன் முடிவெடுக்கும் திறனாளர்.

 நிர்வாகத் திறனும் அறிவாற்றலும் நாட்டுப்பற்றும் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டில் அக்கறையும் உடையவர்களே சிறந்த துணைவேந்தர்களாகக் கடந்த காலங்களில் பரிணமித்துள்ளார்கள். அத்தகையவர்களால்தான் சமுதாயத் தேவைக்கேற்ப உயர் கல்வியில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரவும் சிறந்த மனித வளங்களை உருவாக்கவும் முடியும். உலகளாவிய நிலையில் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தவும் தக்கவைத்துக்கொள்ளவும் இயலும். இத்தகு பொறுப்பு வாய்ந்த துணைவேந்தர் பதவி நியமனமானது சீர்மையும் செழுமையுமாக அமைவதோடு தொலைநோக்குச் சிந்தனையோடு அமைவது விரும்பத்தக்கது.

  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்குப் பொதுவாக மூவரடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழு நிதி, நிர்வாகம், கல்விப்புலம், தனிமனித  பின்புலம் ஆகியவற்றில் தெளிவும், திறனும், அறிவும், ஒழுங்கும் நிரம்பப்பெற்ற பொருத்தமானவர்களின் தன்விவரக் குறிப்பினைச் சேகரித்து அல்லது கேட்டுப்பெற்று அவர்களுள் மூவரின் பட்டியலைப் பல்கலை வேந்தருக்குப் பரிந்துரைக்க வேண்டிய பொறுப்புடையது. இதுவே பல்கலைக்கழகச் சட்ட விதி.

  இதற்கு மாறாக, இப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கோருவதும் அதனை ஏற்பதும் தவறான நடைமுறையாகும். விண்ணப்பம் அனுப்புவது முறைகேடானது என்பதற்கு   "ஆய்ந்தெடுப்புக் குழு' என்ற சொல்லாட்சியே சான்று. அந்தக் குழு தக்காரைத் தேடிக் கண்டறிய வேண்டும். விண்ணப்பம் வாங்கிப் பொறுக்கி எடுக்கக்கூடாது.

   "துணைவேந்தர் பதவிக்கு எண்பது விண்ணப்பங்கள்வரை வரப்பெற்றுள்ளன' என்னும் செய்தியை நாளேடுகளில் படிக்கும்போது அப்பதவிக்குரிய பெருமையும் மதிப்பும் சீர்குலைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

 பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளின்படி, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் நடப்புத் துணைவேந்தரின் பணிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட வேண்டும். ஒரு பல்கலைக்கழகப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தரின் பணிக்காலம் நிறைவுபெறும் நாளன்று புதிய துணைவேந்தர் பொறுப்பேற்றுக்கொள்வதே ஆரோக்கியமான நடைமுறை.

  ஒரு மாநிலத்திற்கு ஆளுநரும் முதல்வரும் எவ்வளவு முக்கியமானவர்களோ அதுபோன்று பல்கலைக்கழகத்தை வழிநடத்துவதற்கும், உரிய நேரத்தில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் துணைவேந்தர் முக்கியமானவர். துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகம் ஒருநாள் கூட இயங்கக்கூடாது என்னும் நிலை எதிர்காலத்தில் உருவாக வேண்டும். அதுதான் தொய்வில்லாத உயர்கல்வி வளர்ச்சிக்குப் பேருதவியாக அமையும். 

 துணைவேந்தரின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் என்பது பின்பற்றப்பட்டு வரும் மரபு. மூன்றாண்டுகள் என்பது மிகவும் குறுகிய காலமே ஆகும். புதிதாக நியமிக்கப்படும் துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் சூழலையும் சிக்கல்களையும் உள்வாங்கிப் புரிந்துகொள்ளவே ஏறத்தாழ ஆறு மாதங்களாவது ஆகிவிடும். நிதிநிலையைச் சீர்செய்து, உள்கட்டமைப்பை வளர்த்தெடுத்துத் திட்டப்பணிகளை ஒருங்கிணைத்து எதிர்ப்புகளைச் சமாளித்துச் செயல்படுவதற்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டு காலம் போதுமானதல்ல.  எனவே நடுவண் பல்கலைக்கழகங்களைப் போல பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக உயர்த்தலாம். அவ்வாறு உயர்த்தும்போது, "ஒருவர் ஒரு முறை மட்டுமே துணைவேந்தராக இருக்கலாம்' என்பதையும் வரையறுக்கலாம்.

  துணைவேந்தருக்குள்ள "தகுதி வயதை', எழுபது வரை உயர்த்தித் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதுபோன்று துணைவேந்தருக்குக் "குறைந்தபட்ச வயது' வரம்பையும் கொண்டுவர வேண்டும். காரணம், சில முடிவுகள் எடுப்பதற்கு வயது முதிர்ச்சியுடன் கூடிய அனுபவ ஆற்றலும் தேவைப்படுகிறது.

 பொறியியல், மருத்துவம், சட்டம், கால்நடை, விவசாயம் போன்ற தொழில்சார் படிப்புகளுக்குத் தனிப்பல்கலைக்கழகங்கள் வந்த பிறகு அந்தத்துறைகளில் இருந்து பொதுப் பல்கலைக்கழகத்திற்கு ஒருவரைத் துணைவேந்தராக்குவது சிறிதும் பொருத்தமில்லாதது. ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கோ, பொறியியல் பல்கலைக்கழகத்திற்கோ, சட்டப் பல்கலைக்கழகத்திற்கோ பொதுப் பல்கலைக்கழகத்திலிருந்து எந்தப் பேராசிரியரும் இதுவரை நியமனம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

 அவ்வாறு எதிர்பார்ப்பதும் நல்லதல்ல. எனவே தமிழகத்தின் பொதுப் பல்கலைக்கழகங்களுக்குப் பொதுப்பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக்கல்லூரி ஆசிரியர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் தகுதியானவர்கள் இருப்பின் முன்னுரிமை வழங்கலாம். அப்போதுதான் பல்வேறு பட்டப்பிரிவுகளில் செய்யவேண்டிய மாறுதல்களும் நிர்வாகச் சீரமைப்புகளும் முறையாகவும் விரைவாகவும் நடைபெறும். 

  பல்கலைக்கழக நிலையில் பெரும் பேராசிரியர்களும் அறிவியல் அறிஞர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். நீதித்துறையிலும் ஆட்சித்துறையிலும் அறிவுலகில் புதுமை சேர்க்க வேண்டும் என்னும் வேட்கைகொண்ட பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். அரசியலிலும் கூட சிறந்த கல்வியாளர்களும் அறிஞர்களும் இல்லாமல் இல்லை. இதுபோன்றவர்களை எல்லாம் சற்றும் எண்ணிப்பாராமல் சுயநிதிக் கல்லூரிகளின் ஆசிரியர்களைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாக ஆக்க நினைப்பது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாகத் தெரியவில்லை. துணைவேந்தர் பதவி என்பது பொறுப்பு மிகுந்த மரியாதைக்குரிய ஒரு பதவி. அந்தப் பதவியைக் கொச்சைப்படுத்தினால் எதிர்காலம் இருண்டு போகும்.

  நியமனத்தில் கட்டாயம் கவனிக்கவேண்டிய சில அம்சங்கள்:

 1. ஆய்ந்தெடுப்புக்குழு உறுப்பினர்களை அமைக்கும்போதுகூட அந்த உறுப்பினர்கள் துணைவேந்தர் பதவிக்கு இணையான பதவிகளில் இருந்தவராக, நீதியரசர் பதவிக்குச் சமமான பதவிகளில் இருந்தவராக, ஆட்சித்துறைப் பொறுப்பில் இருந்தவராக, பல்கலைக்கழகத் துறைத்தலைவர் பதவிக்கு இணையான நிலையில் இருந்தவராக உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அவ்வாறு அமையும் போதுதான் அந்தக்குழு சரியாகச் செயல்பட முடியும்.

 அந்தக் குழுவின் ஒருமித்த முடிவாக மூன்றுபேர் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட வேண்டும். ஆளுக்கொன்று என்று பங்குபோட்டுப் பரிந்துரை செய்வது அழகல்ல.

 2. ஆய்ந்தெடுப்புக் குழுவால் உரியவர்களைத் தேடிப்பெறுவதில் இடர்ப்பாடுகள் இருந்தால் கல்வி அமைச்சரோ, கல்வியாளர்களோ, கல்விச்செயலரோ, உயர்கல்வி தொடர்புடைய அமைப்புகளோ சிலபெயர்களை, "இவற்றையும் கருதிப்பாருங்கள்' என்று குழுவுக்கு அனுப்பலாம். இறுதி முடிவெடுப்பது குழுவினரின் உரிமையாகும்.

 3. அரசு தன்பொறுப்பில் பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் நடத்தும்பொழுது, இவற்றில் உள்ள எல்லோரையும் புறக்கணித்துவிட்டுச் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்தும், கற்பித்தலுக்கும் ஆய்வுப்பயிற்சிக்கும் இடமில்லாமல் ஆய்வு மையங்களாக மட்டுமே செயல்படும் நிறுவனங்களிலிருந்தும் இப்பதவிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுப்பது முறையாகத் தெரியவில்லை.

 4. ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் செயல்படும் ஒருவரை அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு மற்றொரு பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமிக்க முயலுவதும் தவறு, ஆக்குவதும் தவறு.

  துணைவேந்தர் என்பவர் பல்கலைக் கழகத் தலைவர் மட்டுமன்று. ஒட்டுமொத்த உயர்கல்வியின் ஓர் அங்கம் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஒற்றைத்தூணாக நின்று உயர்கல்வியைக் காத்துநிற்பவர். எதிர்கால இந்தியாவின் மரியாதையைக் காக்கவல்ல தலைவர்களையும், தலைசிறந்த அறிவியல் அறிஞர்களையும், ஆட்சித்துறை வல்லுநர்களையும், அறிவுலக மேதைகளையும், உருவாக்கித் தருபவை பல்கலைக்கழகங்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அவற்றின் மரியாதையைக் காப்பதிலும் போற்றுவதிலும் இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் பொறுப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.