கையும் காலும்தான் மிச்சம்!

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்பது மெய்ப்பட்டு, இன்றைக்கு விவசாயிகள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றைக்கு இங்கு
Updated on
4 min read

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்பது மெய்ப்பட்டு, இன்றைக்கு விவசாயிகள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றைக்கு இங்கு வந்தனவோ அன்றிலிருந்தே விவசாயம், சிறு தொழில்கள், கிராமப்புறத்தின் தனித்தன்மைகள் போன்ற யாவும் நசிந்து வருகின்றன.

 விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 5,56,193 என்று தேசியக் கணக்குத் தகவல் அறிக்கை சொன்னாலும், அதைவிட அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்பதுதான் உண்மைக் கணக்காக இருக்கும். விவசாயிகள் தற்கொலைப் பிரச்னையில் முதல் ஐந்து இடங்களில் மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் 48.6 சதவிகிதத்தினர் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் ஆந்திரம் முதலிடம். தமிழகம் இரண்டாமிடம். அதாவது, 74.5 சதவிகிதத் தமிழக விவசாயிகள் விளைச்சல் பாதிக்கப்படுவதால் மூலதன செலவினங்களுக்கும் அமைப்புசார்ந்த, அமைப்புசாராத குடும்பச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 விவசாய நிலங்களின் அளவும் குறைந்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வீட்டுமனைகள் என 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. கிராமப்புறத்தில் வாழ்வது சிரமம் என்று பலர் நகர்ப்புறத்தை நோக்கி வந்துவிட்டனர். விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் வருவதில்லை. விவசாயிகள், நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிடுவதாலும் நகரத்துக்குச் சென்று வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றும் எண்ணி விவசாயத்தை ஒருவர் பின் ஒருவராகக் கைவிடத் தொடங்கி இருக்கிறார்கள்.

 கிராமப்புற மக்கள்தொகை 10 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது என்று 2011 கணக்கெடுப்பு சொல்கிறது. ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பும் கிராமப்புற மக்கள்தொகை குறைந்து வருவதைக் காட்டுகிறது. கிராமத்திலிருந்து பிழைக்க முடியாது என்ற நிலையில்தான் விவசாயிகள் நகர்ப்புறத்துக்கு இடம் பெயர்கின்றனர்.

 வறட்சி, விளைபொருள்களுக்கு ஆதரவற்ற விலை, கடன் சுமை போன்றவற்றால் விவசாயிகளுடைய சமூக நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயமே என்று மார்தட்டிக் கொள்ளும் அரசு, விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய பொருளாதாரச் சட்ட திட்டங்களை இன்னும் திருப்திகரமாக வகுக்கவில்லை என்பதே உண்மை. பசுமைப் புரட்சி, மானியங்கள் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்டும் அவை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குச் சரியாகச் சென்றடையாமல் இடைத்தரகர்கள் பயன்பெறும் நிலைதான் தொடர்கிறது.

 விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும்பொழுது, அவர்களிடம் எந்தவித பிணையும் கேட்கக் கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடன் வாங்க விவசாயிகள் வங்கிக்குச் சென்றால் வங்கி அதிகாரிகள், உன் கூரை வீட்டை நம்பி எப்படி கடன் கொடுப்பது என்று விரட்டியடிக்கும் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. ரிசர்வ் வங்கியின் அறிவுரை கடைப்பிடிக்கப்படாததால், அங்குள்ள விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி, வட்டிக்கு மேல் வட்டி கட்டி மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

 தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை வெட்டி அறவை செய்ய முடியாமல் விரக்தியோடு, நன்கு வளர்ந்த கரும்பைத் தீயிட்டுக் கொளுத்துகிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒரு சமயம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தன் கரும்பை யார் வேண்டுமானாலும் வெட்டி எடுத்துச் செல்லுங்கள் என்று தண்டோரா போட்டு அறிவித்தார்.

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முத்தரப்புக் கூட்டம் கூட்டி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள் என்றும், கரும்பு வாகன வாடகை சரியாக வழங்குவதில்லை என்றும் விவசாயிகள் குறை கூறுகின்றனர். கரும்பை அறவை செய்யப் பதிவு செய்து 18 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலைமையால் அடிமாட்டு விலைக்குக் கரும்பை விற்க வேண்டியுள்ளது.

 தென்னை உற்பத்தி விவசாயிகளின் நிலைமையும் மோசமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட நோயால் பல மரங்கள் பட்டுப்போய் விட்டன. நிவாரணம் கிடைக்காமல் தென்னை விவசாயிகளும் போராடி வருகின்றனர்.

 1960-ம் ஆண்டு நெல் மூட்டை ரூ. 30. சிமெண்ட் மூட்டை அப்போது ரூ.5-க்கு கிடைத்தது. சிமெண்ட் விலை பன்மடங்கு ஏறிவிட்டது. ஆனால், நெல்லுக்கு விலை அதற்கேற்றவாறு ஏறியதா என்றால் இல்லை. மிளகாய், பருத்தி உற்பத்தி செய்யும் மானாவரி விவசாயிகளுக்கு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஆதரவான நல்ல விலை கிடைக்கிறது.

 ஓராண்டுப் பராமரிப்பில் வாழை பயிரிட்டு ஒரு வாழைப்பழம் 10 பைசாவுக்கு விவசாயியிடம் வாங்கி, நகரத்தில் ரூ.1.50-க்கு விற்கப்படுகிறது. இந்த ஓராண்டு காலத்தில் காற்றின் சீற்றத்தால் சில சமயங்களில் வாழை மரங்கள் சாய்ந்து அழிவதும் உண்டு. தரகரின் லாபம் உறுதி என்றும் விவசாயிக்கு எஞ்சுவதெல்லாம் கையும் காலும்தான் என்றும் விவசாயிகளின் நிலைமை தொடர்கிறது.

 விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை கட்டுப்படியான வகையில் நிர்ணயிக்க சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கம் பாராமுகமாகவே உள்ளது. இப்படித் தொடர்ந்து இடைத்தரகர்களால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதால் செலவில்லாமல் பல கிராமங்களில் கருவேல மரங்களை நட்டுவிட்டனர்.

 தமிழகத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னையால் விவசாயிகள் நீர் ஆதாரங்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். கிராமப்புறங்களில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் தூர்வாராமல் நீர்ப்பிடிப்பு குறைந்து வருகிறது. விவசாயிகள் சார்புத் தொழிலாக நடத்தும் பால் பண்ணைகளையும், ஆட்டுப் பண்ணைகளையும் தொடர்ந்து நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.

 1870-ல் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சமும் பட்டினியும் சொல்லில் அடங்கா. அந்தக் காலகட்டத்தில்கூட நமது இயற்கை விவசாயத்தைக் கைவிடாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தோம். பணப் பயிர்கள் மூலம் பணப்புழக்கம் ஏற்பட்டதன் விளைவாக டெல்டா பிரதேசத்தில் நெல்லை மாற்றி பணப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. காவிரி டெல்டாவில் நெல்லும் ஒன்றுபட்ட நெல்லை, கோவை மாவட்டங்களில் பருத்தி, நெல், தென்னையும் ஒன்றுபட்ட ராமநாதபுரம், நெல்லை மாவட்டத்தில் மிளகாய், சோளம் மற்றும் பருப்புப் பயிர்கள் ஒன்றுபட்ட வடாற்காடு, தென்னாற்காடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் நிலக்கடலையும் தென்னாற்காடு, தஞ்சை மாவட்டங்களில் கரும்பும் என ஆண்டாண்டு காலமாகப் பயிரிடப்பட்ட நடைமுறைகள் இன்றைக்கு இல்லை.

 இப்படி ஆதியில் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட இயற்கை விவசாய நெறிமுறைகளை நாமே மாற்றிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவே இப்போது விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விபரீத நெருக்கடியாகும்.

 வெளிநாட்டினர் மான்சாண்டோ விதைகள் கொண்டு வந்து நம் நாட்டில் விதைத்து நம் பூமிக்குக் கேடு செய்தனர். நம்மிடம் இருந்த விதைகளைத் திருடி அப்புறப்படுத்தியதால்தான் கேடு தருகிற இம்மாதிரி விதைகளை வாங்குகிற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.

 கடந்த காலங்களில் மான்சாண்டோ விதைகளால் பருத்திக் காய்கள்கூட வெடிக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் போராடி நஷ்டஈடு பெற்றனர்.

 தமிழகத்தில் 1933-ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நெல்லை மாவட்டத்தில் மணியாச்சி விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடியபோது குண்டடிபட்டு ஒரு விவசாயி மடிந்தார். 1965-லிருந்து விவசாயிகள் போராடி, 35 பேருக்கு மேல் காவல் துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகியுள்ளனர். நாராயணசாமி நாயுடு இயக்கம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தது. ஆனாலும் தான் என்ன பயன்? விவசாயியின் பிரச்னைகளும் தீரவில்லை. நிலையும் உயர்ந்தபாடில்லை.

 இந்நிலையில் குறைந்தபட்சம் சில நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

 விவசாயிகளைக் கடன் தொல்லையிலிருந்து முழுவதுமாக மீட்க வேண்டும். கடனுக்கான வட்டியை 4 சதவிகிதமாகக் குறைப்பதோடு கூட்டு வட்டியும் ரத்து செய்ய வேண்டும். வறட்சி, வெள்ள காலங்களில் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

 பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவாக்க வேண்டும். விலை ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, சீரான லாபகரமான விலையை விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு வழங்க ஒரு நிதியம் ஏற்படுத்த வேண்டும். விவசாய உற்பத்திப் பொருள்களில் இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும். பயிர் இழப்புக்கு ஆளாகும் விவசாயிகளைப் பாதுகாக்க பேரிடர் நிதியம் ஒன்றை அமைக்க வேண்டும்.

 தொழில் சார்ந்த விவசாய முறையைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் தற்கொலை குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு அதைத் தடுக்கக் கூடிய வகையில் சட்டவடிவமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயப் பண்டங்களின் இறக்குமதியைப் பெருமளவில் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும்.

 இக்கோரிக்கைகளை நன்கு பரிசீலனை செய்தால் விவசாயத்துக்கு விடிவுகாலம் ஏற்படும். விடுதலைக்குப் பின் விவசாய நலன் கருதிப் பல குழுக்கள் அமைத்தும் அவற்றின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கும்பகர்ண தூக்கத்தில் தூசிபடிந்த நிலையில் உள்ளன. விவசாய சங்கத் தலைவர் மறைந்த பானுபிரதாப் சிங், சரத்ஜோஷி போன்றோர் பலமுறை அகில இந்திய அளவில் விவசாயிகளின் போராட்டங்களை நடத்தி விவசாயத்தை ஒரு தொழிலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

 விவசாயத்துக்கு வேண்டிய இடுபொருள்களான விதை, ரசாயன உரங்கள் மற்றும் ரசாயன மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு, தங்களுடைய குழந்தைகள் அருகில் உள்ள நகரத்தில் படித்தால் அதற்கான செலவு ஆகியவற்றையும் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய சொந்த மண்ணின் மணத்தைச் சுவாசித்து, தன் தொழிலைச் செய்துகொண்டே வருகின்றான்.

 இந்த உழைப்பால்தான், இந்திய உணவு நிலைமையில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று பெருமை கொள்கிறது. இந்நிலை ஆரோக்கியமாக நீடிக்க வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகளின் கடைக்கண் பார்வை விவசாயிகள் மீது விழவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com