உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மின்சிக்கனம் தேவை இக்கணம்!

மின்சாரம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மின்சாரத்தின் அவசியத்தை எல்லோரும் உணர்ந்திருப்பதால் அதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியதில்லை. தொழில் நிறுவனங்கள் மற்றும் கணினித்துறை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:35 am

ஆ. சண்முகவேலாயுதன்

மின்சாரம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மின்சாரத்தின் அவசியத்தை எல்லோரும் உணர்ந்திருப்பதால் அதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியதில்லை. தொழில் நிறுவனங்கள் மற்றும் கணினித்துறையின் வளர்ச்சி, வீட்டுக்கு வேண்டிய உபகரணங்கள், விவசாயத்துக்குத் தேவையான பம்பு செட்டுகள் இவற்றின் பெருக்கத்தால் ஆண்டுதோறும் மின் தேவை கூடிக்கொண்டே போகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மின் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தமிழகத்துக்குக் குறைந்தபட்சம் 8,000 மெகாவாட்டிலிருந்து அதிகபட்சம் 12,000 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. வெவ்வேறு நாள்களில் மட்டுமல்ல, ஒரே நாளில் பல்வேறு நேரங்களில்கூட மின்சாரத்தின் தேவை மாறுபடும். ஆனால், மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடியாது. தேவைக்கேற்ப மின் உற்பத்தியை கூட்டியோ அல்லது வெளியில் வாங்கியோ சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு என்ற நிலையே தொடர்கின்றது. தற்பொழுது தமிழகத்தில் சராசரியாக 3,000 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு (பற்றாக்குறை) உள்ளது.

இத்தகைய நிலையில் நாம் உடனடித் தீர்வாக சில நடவடிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையுடன் பல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி போன்றவைகளின் இருப்பு இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே வரும் என்ற நிலையில், விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக உருவான அணுமின் சக்தி அவசியமாகின்றது. கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்த்து இப்பொழுதுதான் முடிவுறும் நிலையில் உள்ளது. எதிர்ப்பு காரணமாக தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் இருந்த நிலைமைப்படி, கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தி தொடங்கினாலும் அதனால் தமிழகத்துக்குப் பெரிய பயனொன்றும் இருப்பதாக இல்லை. அதன் மொத்த மின் உற்பத்தியும் மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட்டு அதிலிருந்து ஒரு பகுதி மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்படுவதாக இருந்தது. இப்போது கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தியில் 50 விழுக்காடு தமிழகத்துக்குத் தரப்படும் என்கிற பிரதமரின் உறுதிமொழி நிலைமையை மாற்றித் தமிழகத்தின் மின் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்வதாக அமைகிறது.

தேவையான பாதுகாப்புகளுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியைத் தொடங்கினால் அது தமிழகத்துக்குப் பெரும் பயனைத்தரும். உடனடியாக 1,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் சிறந்த அறிவியல் விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த சமூக விஞ்ஞானியும்கூட. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வும் தமிழக மக்கள்மீது அதீத பாசமும் கொண்டவர். அவர்தம் வார்த்தைகளில் உண்மை மட்டுமே உறுதியாக இருக்கும் என நாம் நம்பலாம்.

அவர் தமது அறிக்கையில் கூடங்குளம் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். உடனடியாக மின் உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்க வேறு வழி இல்லாத நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் தனது உற்பத்தியைத் தொடங்கினால் இருண்டு கிடக்கும் தமிழகத்தின் தினப்படி வழக்கமாகிவிட்ட மின்வெட்டை கணிசமாகக் குறைக்கலாம். அதன்மூலம் தற்பொழுது தொழிற்கூடங்களில் உள்ள தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதுகாப்பதோடு, புதிய தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் முடியும்.

தமிழ்நாட்டில் தனியார் வசம் உள்ள டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் சுமார் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலம் ஒரு லிட்டர் டீசலில் இருந்து 3 முதல் 4 யூனிட்டுகள் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். அதன் மூலம் சுமார் 1,300 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தித் திறன் செய்யக்கூடிய அளவுக்குத் தொழிற்கூடங்கள் உள்ளன.

ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்தால் யூனிட் ஒன்றுக்கு ரூ.14 முதல் ரூ.17 வரை செலவாகும். உற்பத்திச் செலவு அதிகமாவதால் சந்தையில் போட்டியிட முடியாத நிலை உருவாகும் என்ற அச்சத்தால் பல தொழில் முனைவோர்கள் ஜெனரேட்டரைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

தற்பொழுது தொழிற்கூடங்கள் உற்பத்தி செய்வதற்கு வாங்கும் மூலப்பொருள்கள், இயந்திரங்கள் போன்றவற்றுக்குச் செலுத்தும் மத்திய, மாநில வரித்தொகையைத் தத்தமது கணக்கில் வரவு வைத்துக்கொண்டு, உற்பத்தி செய்து விற்கப்படும் பொருள்களுக்குச் செலுத்த வேண்டிய வரியில் கழித்துக் கொள்கின்றனர்.

ஆனால், டீசலுக்கு இந்தச் சலுகை கிடையாது. டீசலுக்காகச் செலுத்தப்படும் கலால் வரி மற்றும் வணிக வரியைத் தொழிற்கூடங்கள் வரவில் வைத்துக்கொள்ள அனுமதித்தால் மட்டுமே ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறையும். இதன் மூலம் கணிசமான மின் உற்பத்தியைத் தொழிற்கூடங்கள் ஜெனரேட்டர்கள் மூலம் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தரலாம். டீசலைப் பொருத்தமட்டில் வணிகவரி 5% (சுமார் ரூ. 2 மட்டுமே) உள்ளது. இது மாநில அரசுக்குச் சேரும். ஆனால், கலால் வரி மற்றும் சுங்கவரி போன்றவைகளால் ஒரு லிட்டருக்கு ரூ.14 வரை மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ஏனைய மூலப்பொருள்களுக்கு உள்ளதுபோல கலால் வரியை உற்பத்தியாளர்கள் வரவு வைத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தித்தர மத்திய அரசை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

இந்த மதிப்பு கூட்டப்பட்ட வரிச்சலுகை வழங்கப்பட்டால், அதனால் மத்திய அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு கூடுதல் உற்பத்தி காரணமாக கலால் வரியின் மூலம் ஈடுசெய்யப்பட்டுவிடும். மேலும், டீசலைத் தவறாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தை நீக்க யூனிட்டுக்கு டீசல் அளவை நிர்ணயித்து மின்சார வாரியம் ஜெனரேட்டரிலிருந்து கிடைக்கப்பெறும் மின்சாரத்தை அளவிட மீட்டர்கள் பொருத்தலாம். (பர்னஸ் ஆயில் போன்ற பொருள்களுக்கு மேற்கூறிய மதிப்புக்கூட்டப்பட்ட வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.)

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததன் மூலம், தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதுபோல், மின் சிக்கன சேமிப்புத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். குண்டு பல்புகளைத் தவிர்த்துவிட்டு சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்துதல், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களில் பழைய மோட்டார்களை (ஐஎஸ்ஐ தரத்துக்குக் குறைவானவை) புட்வால்வுகள், துருப்பிடித்த கலாய் குழாய்களுக்கு மாற்றாக புதியன வாங்குவதற்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் உயரழுத்த / குறைவழுத்த மின் கம்பி விகிதாசாரத்தைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மின் சிக்கனத்துக்கு / சேமிப்புக்கு வழி காண வேண்டும்.

இந்த உபகரணங்கள், பொருள்கள் அனைத்தையும் உற்பத்தி செய்யக்கூடிய தரமும் திறமையும் உடையதாக சிறு தொழில் விளங்குகிறது. இதனால் இப்பொருள்களை சிறுதொழில் துறைகளிடமிருந்து மட்டுமே வாங்கினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கலாம். இப்பணியை நிறைவேற்ற மின்வாரியம் தனிப்பிரிவுகளை அமைத்து போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

அலுமினியம், இரும்பு போன்றவைகளை உருக்கிப் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கும், பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கும் 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்சக்தி மூலம் சூடேற்றி பின்புதான் உற்பத்தியைத் தொடங்க முடியும். அதற்குக் கணிசமான மின்சக்தி செலவிட வேண்டியுள்ளது.

அத்தகைய தொழிற்சாலைகளுக்கு மாதத்தில் 20 முதல் 23 நாள்கள் வரை தொடர்ச்சியாக செயல்பட்டு பின்பு சேர்ந்தாற்போல் விடுப்பு கொடுக்கலாம். இதன் மூலம் மின்சக்தி சேமிக்கப்படும். உற்பத்தி செலவும் குறைவதோடு, மின்சக்தி விரயமாவதும் தவிர்க்கப்படும்.

எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாகிக் கொண்டுதான் வரும். அதற்காகப் பல்வேறு உற்பத்தித் திட்டங்கள் தொடக்க நிலையில் உள்ளன. அவற்றை விரைவுபடுத்தி செயலாக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் காற்றாலைகள் உள்ளன. அவற்றின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச்செல்ல தேவையான கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் நீண்ட கடற்கரை உள்ளது. கடற்கரைகளிலும், கடலின் உள்புறங்களிலும் காற்றாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுக்குமாடிக் கட்டடத்தில் காற்றாலைகள் / சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கு வழிகாண வேண்டும். வீடுகளின் மாடியில் சூரியஒளி / காற்றாலை போன்றவைகள் மூலம் உற்பத்தி செய்யப் பயன்படும் கருவிகளுக்கு என்ன மானியம் கிடைக்கும், கடன் எங்கு எவ்வளவு கிடைக்கும் என்பன போன்ற விவரங்களை மக்களிடம் பரப்ப வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்கள் / பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்பொழுது அவர்களிடம் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்திக்கு முதலீட்டுத் தொகை வசூலிக்கலாம். அத்தகைய பெரிய தொழிற்சாலைகளை அவர்கள் மேலும் விரிவுபடுத்தும் பொழுதெல்லாம் கூடுதல் முதலீட்டுத் தொகை வசூலிக்கப்பட வேண்டும்.

குறுகிய காலத்திட்டங்களையும், தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து அமல்படுத்தினால் உடனடிப் பற்றாக்குறையைப் பெருமளவுக்குக் குறைத்திட முடியும். அதேநேரத்தில் தொலைநோக்குத் திட்டங்களை உணர்வுப்பூர்வமாக அமல் செய்வதன் மூலம் எதிர்காலத் தேவைகளையும் சமாளிக்கலாம்.

கடந்த பல ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால் தமிழ்நாடு மின்சார வாரியம் மிக மோசமான கடன் சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதனால் பல கட்டமைப்பு மற்றும் முன்னேற்றப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பயனீட்டாளர்களின் நிலையையும் மனதில்கொண்டு, மின் கட்டணத்தை ஒரே தவணையில் உயர்த்துவதற்கு மாறாக இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் மின்சார வாரியம் தமது பணிகளைத் திறம்படத் தாமதமின்றி செயல்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.