உலகம் எங்கணும் பயங்கரவாதம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மாபெரும் அழிவைச் செய்யும் இந்தப் பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் கடமை ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் இருக்கிறது; இதுபற்றி ஐ.நா. அவையும் பலமுறை உலக நாடுகளை எச்சரிக்கை செய்துள்ளது.
மனித குலம் நடந்து வந்த பாதை மலர்ப்பாதையல்ல என்பதும், கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதை என்பதும் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். மானிட வாழ்க்கை வம்பும் - தும்பும், சண்டையும் - சச்சரவும், போரும் - பூசலும் நிறைந்ததுதான். அறியாமை நிறைந்த அக்காலம் போலவே அறிவியல் வளர்ந்த இக்காலமும் இருந்து வருவதுதான் வேடிக்கை.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத்தை மறக்க முடியுமா? அதன்பிறகு மத்திய - மாநில அரசுகள் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருந்து வருகிறது. இதனால் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்திருக்கின்றன.
கார்கில் போரைத் தொடர்ந்து, இந்தியா பெற்ற படிப்பினைகள் பற்றி நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் மற்றும் மத்திய அமைச்சர் குழு நடத்திய ஆய்வுகளிலிருந்து பிறந்ததுதான் இந்தத் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்.
இதன் வடிவமும், உத்தேசிக்கப்பட்டுள்ள செயல்பாடு முறையும் மாநில அரசுகளின் செயல்திறனுக்குத் துணையாக இருக்குமே தவிர, அதற்கு மாற்றாக இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த மையத்தின் செயல்முறைகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தயாரித்துள்ளது. இந்த மையத்தின் அதிகாரங்கள் அதில் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய - மாநில அரசுகளின் ஒத்துழைப்பின் அவசியம் பற்றி அதில் தெளிவாக்கப்பட்டுள்ளன. இந்த மையம் சீராகச் செயலாற்ற வேண்டுமானால் மத்திய - மாநில அரசுகள் இடையே பரவலான கருத்தொற்றுமை இருக்க வேண்டியது அவசியம் என அறிக்கை கூறுகிறது.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மே 5 அன்று கூட்டப்பட்ட முதலமைச்சர்கள் மாநாட்டில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூடிக் கலைந்தனர் என்பதைத் தவிர, மத்திய அரசின் எண்ணமும், தீர்மானமும் நிறைவேறவில்லை.
மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் மாநிலங்களின் காவல்துறைக்கு உதவுவதற்குத் தானே தவிர, அவற்றின் அதிகாரங்களைப் பறித்து அவற்றுக்கு மாற்றாகச் செயல்படுவதற்காக அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைவதை வலியுறுத்திப் பேசியுள்ளார்.
பயங்கரவாதிகள் எந்த நில எல்லைக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதால் அவர்களை எதிர்க்க ஒருங்கிணைந்த அமைப்பு அவசியம் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) அமைக்க மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆணையைத் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். பயங்கரவாதத்தைத் தடுக்கும் உத்திகள் பற்றி ஆராய மாநில முதல்வர்கள் அடங்கிய துணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாத இந்த ஏற்பாட்டை உடனே கைவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். பொடா, தடா சட்டங்களைவிட மோசமானது; இந்த விஷயத்தில் மாநில அரசின் உரிமைக்குள் மத்திய அரசு தலையிடுவதாய் உள்ளது; இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் முதலமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. அப்போது தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் பற்றி விவாதிக்க முற்பட்டபோது 12 மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு கொண்டுவரும் பாதுகாப்பு அமைப்பு மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடுவதாகும் என்று அவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் பற்றி மட்டுமே விவாதிப்பதற்காகத் தலைநகரில் கூட்டப்பட்ட முதலமைச்சர்கள் கூட்டம் முடிவு எட்டப்படாமலேயே முடிந்துள்ளது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சமாதானம் எடுபடவில்லை.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள தீவிரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல வடிவங்களில் நம் நாட்டில் வன்முறை நிலவுகிறது. இதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பரவலான கருத்தொற்றுமை இருக்கிறது என்பதை பிரதமரே ஒப்புக்கொள்கிறார்.
இருப்பினும் இந்தத் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் ஏற்படுவதை மாநில அரசுகள் ஏற்க மறுப்பது ஏன் என்பதை மத்திய அரசாங்கம் எண்ணிப் பார்க்க மறுக்கிறது. இதற்கு முன்பே பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
இதுவும் போதாது என்று மாநில அரசின் அனுமதிக்கெல்லாம் காத்திராமல் இந்தியா எங்கிலும் விசாரணை நடத்தக்கூடிய தேசிய புலனாய்வு ஏஜென்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த அதிகாரக் குவிப்பின் தொடர்ச்சியாகத்தான் உளவுப் பிரிவுக்குக் காவல்துறைக்குரிய அதிகாரங்களை அளிக்கும் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்கிடத் திட்டமிடப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு வானளாவிய அதிகாரங்கள் சேர்க்கப்படுகின்றன. மாநில அரசுக்கு இருக்கிற அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றன.
பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மாநில அரசின் சம்மதம் இல்லாமலேயே இம்மையம் குற்றவாளிகளின் இருப்பிடத்தைச் சோதனையிட முடியும். அவர்களின் சொத்துகள் மற்றும் அவர்கள் வசமுள்ள ஆவணங்களைக் கைப்பற்ற முடியும். மேலும் அவர்களைக் கைது செய்யவும் முடியும். இவ்வாறு பல அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாக இம்மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த அமைப்பு ஒரே நேரத்தில் உளவுப் பிரிவாகவும், காவல்துறையாகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படும் எனத் தெரிகிறது. மேலும் மாநிலக் காவல்துறையினர் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்த மையத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் விதிகளும் இதில் உள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி குற்றவாளிகளைக் கைது செய்வது, அவர்கள் மீது வழக்குப் போடுவது, வழக்கை நடத்துவது ஆகியவை மாநில அரசின் காவல்துறை அதிகாரமாகும்.
மாநில அரசின் சம்மதத்தோடு அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே மையப் புலனாய்வுத் துறை எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியும். மாநில அரசின் கைகளில் மட்டுமே இருந்துவரும் இந்த அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொள்ளவே இந்த மையம் ஆர்ப்பாட்டத்தோடு வருகிறது. மாநில அரசுகள் ஒன்றாக எதிர்ப்பதன் காரணம் புரிகிறதா?
மாநில அரசுகளின் அதிகாரத்தின்கீழ் இருந்து வந்த கல்வித்துறை போன்றவற்றை பொதுப்பட்டியலின் கீழே கொண்டு வந்து, மாநில அரசுகளின் பல உரிமைகள் ஏற்கெனவே பறிக்கப்பட்டிருக்கின்றன.
மத்தியில் ஆளும் வாய்ப்பு கிடைத்தால் இவற்றை வரவேற்பதும், எதிர்க்கட்சியானால் அவற்றைக் கடுமையாக எதிர்ப்பதும் அரசியல் கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலக் காவல்துறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அரசுக்குப் போட்டியாகவும், அதிகாரத்தில் பங்காளியாகவும் வரும் இந்தத் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
எந்தவிதப் பயங்கரவாதமாயினும் அதை மனிதகுலம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், அதற்கான சமூக அரசியல் காரணங்களையும் அலசிப் பார்ப்பது நல்லது. வெளிநாட்டு பயங்கரவாதத்துக்கு மதம் பின்னணியாக இருந்தபோதும், உள்நாட்டுத் தீவிரவாதங்களுக்கு ஏழை எளிய பாட்டாளி மக்கள் புறக்கணிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் காரணங்களாகும்.
வன்முறை எந்த உருவத்தில் வந்தாலும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காரணம் என்னவென்றே தெரியாமல் ஒரு பாவமும் அறியாத அப்பாவி பொதுமக்களையும், பொது உடைமைகளையும் அழித்திட யாருக்கும் உரிமை இல்லை. இதனைப் பொறுப்புள்ள அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாதுதான்.
இந்திய அரசாங்கம் என்பது இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் ஆட்சியாகும். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி அரசாங்கம் அனைத்து மாநிலங்களையும் அனுசரித்துப் போக வேண்டிய கடப்பாடு கொண்டது. அதிகாரங்களைப் பங்குபோட்டுக் கொள்வதற்குப் பதிலாக அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளுவது சரியா?
மக்களாட்சியில் அதிகாரங்கள் எல்லாம் மக்களிடமிருந்தே பிறக்கின்றன. இன்றைய அரசாங்கம் நாளைக்கு இருக்குமா என்பதை மக்களே முடிவு செய்வார்கள். ஆகவே, "உரிமை வேண்டுமா? உறவு வேண்டுமா?' என்ற கேள்வி எழுமானால் உரிமையோடு கூடிய உறவு வேண்டும் என்றே மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.