பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விரோத மொழியல்ல, சிநேக மொழி

மூன்றாம் உலகப் போர் திறனாய்வுக்கு நன்றி.நூலரங்கத்தில் தனித்துவம் தந்தமைக்கு மகிழ்ச்சி.

News image
Updated On :1 அக்டோபர் 2012, 8:16 pm

கவிஞர் வைரமுத்து

மூன்றாம் உலகப் போர் திறனாய்வுக்கு நன்றி.

நூலரங்கத்தில் தனித்துவம் தந்தமைக்கு மகிழ்ச்சி.

ஆயினும், அதில் சுட்டப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கு மறுமொழி தருவது எனது கடமையாகிறது.

ஒரு படைப்பை விமர்சிக்க விமர்சகனுக்குள்ள உரிமை, விமர்சனத்தை விமர்சிக்க ஒரு படைப்பாளிக்குப் பெரும்பாலும் இல்லையென்பதே இன்றைய ஊடக தர்மத்தின் இலக்கியச் சூழல்.

எனக்கந்த உரிமை இருப்பதாகவோ நீங்கள் எனக்கந்த உரிமையைத் தந்ததாகவோ கருதிக்கொண்டு இதனை எழுதுகிறேன்.

""நாவலாசிரியர் கவிஞராயிருப்பது ஒரு பலவீனமென்றும் - கவிதையை நாவலாகத் தருவதைப் போன்ற மொழிநடை பல தருணங்களில் துன்பியலிலும் அழகியலை ஏற்படுத்திவிடுகின்றது'' என்றும் எழுதியிருக்கிறீர்கள்.

கவிதை என்ற சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்குமே தவிர, சந்தனக்குழிக்குள் மூழ்கிப் போகவில்லை "மூன்றாம் உலகப் போர்'. உரைநடையின் ஊளைச்சதை குறைத்து மொழியைச் சிக்கென்று செய்யவும் திண்ணென்று கட்டவும் மட்டுமே கவிதைக்கூறுகளை அதில் விரவியிருக்கிறேன். வாழ்க்கையிலிருந்துதான் கவிதை கடைசியாய் மொழிக்கு வந்தது. எங்கள் வாழ்வு எவ்வளவு கவிதையால் இயங்குகிறதோ அவ்வளவு கவிதைகள் அந்தப் படைப்பிலும் பரவியிருக்கின்றன.

இன்னொன்று - கவிதை இழையாத உரைநடை மறுவாசிப்புக்கு உள்ளாவது அபூர்வம்.

புதுமைப்பித்தனும் - மௌனியும் மறுவாசிப்பில் இன்னும் உயிர்ப்போடிருப்பதற்குக் காரணமே உரைநடையின் உள் தளத்தில் இயங்கும் அவர்களின் கவித்துவம்தான்.

"துன்பியலை அழகியல் செய்துவிடுகிறது கவிதை' என்கிறீர்கள்; "அரேபியாவின் அத்தர் முழுவதையும் தேய்த்தாலும் என் கைக்கறை போகாதே' என்று ஒத்தல்லோ கதறுவது கண்ணீரில் காய்ச்சிய சாராயம்தான்.

அடிமைகளின் கண்ணீர்தான் "டாம்மாமா குடில்';

ஜிப்ரானின் காதல்வலிதான் "முறிந்த சிறகுகள்';

கண்ணகியின் கைம்மைதான் "சிலப்பதிகாரம்';

சீதையின் கண்ணீர்தான் "ராமாயணம்'

அவலங்களைக் கலை செய்வது மொழி; அந்த மொழியிலிருந்து அறம் தேடுவது வாழ்வு. எனவே ஒரு கலைப் படைப்பு துன்பியலை அழகியல் செய்வது சத்தியத்தை மீறுவது ஆகாது.

""இந்த நாவல் திரைக்காட்சி அடுக்குகளாகவே அமைக்கப்பட்டிருக்கிறது'' என்பது உங்களின் மற்றுமொரு கூற்று. அப்படியாயின் என் சொற்களின் உலகம் வெற்றி பெற்றுவிட்டது என்றே பொருள்.

இரண்டு கூறுகளால் இயங்குகிறது மனிதவாழ்வு. ஒன்று காட்சி உலகம்; இன்னொன்று சூட்சும உலகம். இந்த இரண்டு உலகங்களையும் பற்றிக்கொண்டுதான் இயங்குகிறது கலை. காட்சி உலகத்தைப் படிமங்களாலும் சூட்சும உலகத்தை உணர்வுகளாலும் நகர்த்தி நகர்த்தி உண்மைக்குப் பக்கத்தில் கொண்டுசெல்லும் நேர்த்தியிலிருக்கிறது ஒரு கலைப் படைப்பின் வெற்றி.

ஒரு வாசகன் அறிந்திராத உலகத்தைக் கட்டி எழுப்புவதிலும் அறிந்த உலகத்தைத் தொட்டு எழுப்புவதிலும் ஒரு படைப்பு தன் முழு மூச்சோடு முனைகிறது. சூட்சும உலகத்துக்கு வாசகனைக் கடத்திச் செல்லத்தான் காட்சி உலகத்தில் அவனைக் கையகப்படுத்துகிறான் படைப்பாளன். அது அனுமதிக்கப்பட்ட களவு. அதையேதான் நானும் புரிந்திருக்கிறேன்.

மூன்றாம் உலகப் போர் மேலும் 500 பக்கங்கள் கூடியிருந்தால் சர்வதேச அளவிலான விருதுகளுக்குத் தகுதி பெற்ற நூலாக அமைந்திருக்கும் என்ற ஆனந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

பக்கங்களைத் தீர்மானிப்பது வாசகனின் காலம்; மற்றும் படைப்பின் உள்ளடக்கம். வினைச் சொற்களுக்குக் கூட இடமில்லாத குறுஞ்செய்தி யுகத்தில் 800 பக்கங்களை உள்வாங்க ஒரு வாசகனுக்கு இன்று வாழ்க்கையில்லை.

சர்வதேச விருதுகளுக்கும் பக்கங்களுக்கும் சம்பந்தமில்லை. 2,840 பக்கங்கள் கொண்ட டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' நோபல் பரிசு பெறவில்லை (அதனால் அது குறைந்த படைப்பு என்று அர்த்தமில்லை).

1946-ல் நோபல் பரிசு வென்ற "சித்தார்த்தா' வெறும் 106 பக்கம்தான். 1954-ல் நோபல் பரிசு வென்ற எர்னஸ்ட் ஹெமிங்வேயின் "கடலும் கிழவனும்' வெறும் 96 பக்கம்தான். 1957-ல் நோபல் பரிசு வென்ற "தி ஸ்ட்ரேஞ்சர்' என்ற நாவல் வெறும் 123 பக்கம்தான். 1962-ல் நோபல் பரிசு வென்ற "ஆஃப் மைஸ் அண்ட் மென்' என்ற நாவல் வெறும் 112 பக்கம்தான்.

எனவே, கனத்த விருதுக்கும் புத்தகத்தின் கனத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

மனிதன் சாகாவரம் பெற்றவன் என்கின்ற எதிர்வாதம் நாவலில் முன்வைக்கப்படவில்லை என்பது உங்களின் இன்னொரு குற்றக் கூற்று.

மரங்களையும் சத்தியத்தையும் காப்பதற்காக மூத்த மகனை வெட்டிக் கொன்றுவிட்டுச் சரணடைகிறார் கருத்தமாயி. அத்துடன் மனிதத் தொடர்ச்சியோ வாழ்வின் தொடர்ச்சியோ அறுந்து போகவில்லை.

"புடிய விட்டுத் தனியா கெடந்துச்சு அப்பன் கடைசியா வெட்டுன மம்பட்டி. குனிஞ்சு எடுத்தான். மம்பட்டி புடிய ஒண்ணு சேத்தான் சட்டையக் கழத்திவச்சான்; வேட்டிய மடிச்சுக்கட்டுனான். அப்பன் விட்ட இடத்துலருந்து வாய்க்காச் செதுக்க ஆரம்புச்சான்' என்ற நாவலின் இறுதிவரிதான் உங்கள் வாதத்திற்கான ஒரே எதிர்வாதமாய் இருக்க முடியும்.

மற்றபடி நாவலை ஊடறுத்துப் பயணம் செய்த உங்கள் நேரிய பார்வையும் கூரிய வார்த்தையும் தினமணியை இன்னும் செழுமை செய்கின்றன என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்.

இது விமர்சனத்துக்கான விரோத மொழியல்ல; சத்தியத்துக்கான சிநேக மொழி.

("மூன்றாம் உலகப்போர்' புத்தகத்திற்கு எழுதப்பட்ட விமர்சனம் பற்றி கவிஞர் வைரமுத்துவின் கருத்து.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.