""நான் உயர உயரப் போகிறேன், நீயும் வா'' என்றொரு பழைய திரைப்படப் பாடல் உண்டு. அது, காதலுக்குப் பொருத்தமான பாடல்.
இன்றைக்கோ அந்தப் பாடல் மிகவும் பொருத்தமாக இருப்பது, ஏழைகளைக் கண்ணீர் சிந்தவைக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு. ஒவ்வொரு பொருளும் தன் வி(நி)லை உயர்ந்ததும் அடுத்த பொருளை இப்படித்தான் பாட்டுப் பாடி கைநீட்டி அழைக்கிறது.
ஒருபுறம் வெள்ளப்பெருக்காலும், மறுபுறம் வறட்சியாலும் அரிசி, பருப்பு, தானியங்கள் போன்ற உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருக்க, மத்திய அரசோ தன் பங்குக்கு பெட்ரோல், டீசலின் விலையையும் உயர்த்திக் கொண்டிருக்கிறது.
மக்கள் விலை உயர்வால் வாய்விட்டுக் கதறிக்கொண்டிருக்க, "மெüனகுரு'வோ விலை உயர்வை நியாயப்படுத்த மட்டுமே திருவாய் மலர்கிறார். மற்ற நேரங்களில் அவருக்கு மெüனம் மட்டுமே "கை'கொடுக்கிறது.
"இன்பம் தனியாக வரும்; துன்பம் துணையுடன் வரும்' என்பார்கள். டீசல் விலை உயர்வுடன், குடும்பத்துக்கு 6 சிலிண்டர் மட்டுமே என்ற கட்டுப்பாடும் அமலுக்கு வரும் என்கிறது மத்திய அரசு.
ஏற்கெனவே, கிராமங்களே விறகு அடுப்புகளைவிட்டு விடுதலைபெறத் தொடங்கிவிட்ட நிலையில், நகரங்களில் அவை காட்சிப் பொருளாகிவிட்டது.
மண்ணெண்ணெயைப் பொறுத்தவரை வெளிச்சந்தையில் யானை விலை, குதிரை விலை. ரேஷன் மண்ணெண்ணெயோ இரண்டு சிலிண்டர் இருந்தால் கிடைக்காது.
ஒரு சிலிண்டர் இருந்தால் மூன்று லிட்டர் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த மூன்று லிட்டரும் ரேஷன் கடை விற்பனையாளர் மனது வைத்தால்தான். அப்படியே கிடைத்தாலும் மூன்று லிட்டர் எத்தனைப் பொழுதுக்கு அல்லது நாளைக்கு? எனவே, மண்ணெண்ணெய் ஸ்டவ்களும் பரண் மீது படுத்துறங்கி பல காலம் ஆகிவிட்டது.
வசதியில்லாவிட்டாலும் வயிறு என ஒன்று இருப்பதால் மின்சார அடுப்புகளை வாங்க வேண்டிய நிலை.
ஆனால், அடுப்புகளைக்கூட வாங்கிவிடலாம். மின்சாரம்...? அது எப்போது வரும், எப்போது போகும் என்ற கேள்விக்கு விக்கிரமாதித்தனால்கூட விடை சொல்ல இயலாது.
ஆக, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே நடுத்தர, ஏழைக் குடும்பங்களுக்கு இப்போதைய ஒரே ஆறுதல். அப்படியிருக்க, அதிலும் கைவைத்து, கட்டுப்பாடு விதித்து "ஆறு, ஆறு' என்கிறது மத்திய அரசு. எப்படி ஆறும் மக்கள் மனம்?
"பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வை' என்பார்கள். பொன் விலையும் கிடுகிடுவென உயர்ந்து இல்லத்தரசிகள் காதணியையே மறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், காதுகளில் பொன்தான் இல்லையே "பூவையாவது' வைப்போம் என முடிவுகட்டிவிட்டனபோலும் அரசுகள்.
பரமபதங்களில் அத்தியாவசியப் பொருள்கள் "விலைவாசி என்ற ஏணி' மூலம் விறுவிறுவென ஏறுகின்றன.
ஏணிகளைப் பார்த்தறியா ஏழைகளும், நடுத்தர மக்களும் வறுமைப் பாம்புகளால் தீண்டப்பட்டு, வாழ்வை முடித்துக்கொள்ளும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எத்தனையோ பேரின் உழைப்பில் உருவாகி, நாள், நேரமெல்லாம் குறித்து, தீவிர முன்னேற்பாடு பணிகளெல்லாம் செய்யப்பட்டு விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் வேகம் நமக்கு ஆச்சரியம்தான். ஆனால், அந்த வேகத்தைப் பின்னுக்குத் தள்ளி நம்மை விழிபிதுங்க வைக்கிறது, எந்தவித முன்னேற்பாடும் இன்றி நாள்-நேரமெல்லாம் பார்க்காமல் திடீரென உயர்ந்துவிடும் விலைவாசி.
பொருள்கள் விலை உயரும்போதெல்லாம் "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா' என்ற தமிழ் சித்தர்களின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படித்தான் ஒவ்வொரு பொருளும் விலை உயர்ந்துகொண்டே போகும் எனத் தெரிந்துதானோ என்னவோ அன்றைக்கே பாடிவைத்திருக்கிறான் தமிழ்ப் புலவன்.
தமிழர்கள் சில விஷயங்களில் தீர்க்கதரிசிகள்தான். ஆனால், கல்லையும், மண்ணையும் காய்ச்சிக் குடிக்கக் கற்பித்திருந்தாலும், இந்தக் காலத்தில் அதிலும் ஒரு சிக்கல். கல்லுக்கும் மண்ணுக்கும் எங்கே போவது?
என்னதான் தடைவிதித்தாலும், அதிகாரிகளின் கண்ணில் பொன்னையோ, மண்ணையோ தூவிவிட்டு, மணல் கொள்ளையர் மண்ணையெல்லாம் இரவும் பகலும் அள்ளிவிடுகிறார்களே! கற்களையெல்லாம் "கிரானைட் கொள்ளையர்' கவனித்துக் கொள்கிறார்களே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







