இதுவரையில்லாத வகையில் ஒன்றை உருவாக்குகிறவரைப் "படைப்பாளி' என்றும் இருப்பதை மேலும் அதிகமான செயல்திறனுடனோ, வேறு வகையாகச் செயல்படக்கூடிய திறமையுடனோ மாற்றியமைப்பவரைப் "புதுப்புனைவர்' என்றும் குறிப்பிடுகிறார்கள். கணினியை முதன்முதலாக உருவாக்கியவர் "படைப்பாளி'.
ஒரு பெரிய அறை முழுவதும் அடைத்துக் கொண்டிருந்த கணினியைக் கையில் எடுத்துக்கொண்டு போகிற அளவுக்குச் சுருக்கியவர்களும், அதற்குப் புதிய புதிய பயன்பாடுகளைக் கண்டுபிடித்தவர்களும் "புதுப்புனைவர்கள்'. ஒரு சமூகத்தின் புதிய சிந்தனைத் திறன்களுக்கும் செயலாக்கத் திறன்களுக்கும் அளவுகோலாக அதிலுள்ள படைப்பாளிகள் மற்றும் புதுப்புனைவர்களின் எண்ணிக்கை அமையும். அது அச்சமூகத்தின் செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் காரணமாகவும் இருக்கும்.
அமெரிக்காவில் தமது படைப்புகளுக்குக் காப்புரிமை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அதனால்தான் அமெரிக்கா தொழில் நுட்பத்தில் முதன்மை நிலையை வகிக்கிறது. அங்குள்ள தொழிற்சாலைகளும் ஆய்வகங்களும் தமது ஊழியர்களைப் படைப்பாளிகளாகவும் புதுப்புனைவர்களாகவும் பரிமளிக்க ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பராமரிக்கின்றன.
இப்போது சாதாரணமானவையாகத் தோன்றுகிற கண்டுபிடிப்புகள் அவற்றைப் படைத்தவர்களைக் கோடீஸ்வரர்களாக்கியிருக்கின்றன. பீர் டப்பியைக் கையாலேயே திறக்கும் வகையில் அதன் மூடியை வடிவமைத்த ஓர் இளைஞரின் குடும்பம், ஒவ்வொரு டப்பிக்கும் "ஒரு சென்ட்' என்ற வீதத்தில் 50 ஆண்டுகளுக்கு "ராயல்டி' எனப்படும் உரிமைத் தொகையைப் பெற்று வந்தது. பீர் டப்பிகள் கோடிக்கணக்கில் விற்பனையாகிறவை.
தீ என்பது கட்டுக்கடங்காத ஆவேசத்துடன் பெருங்காடுகளைச் சுட்டுச் சாம்பலாக்கி ஆதி மனிதர்களையும் விலங்குகளையும் அச்சுறுத்தி வந்த ஒரு பொருள். ஆனால், குளிர் காலத்தில் ஓர் இருண்ட குகைக்குள் கையது கொண்டு மெய்யது போர்த்தி வெடவெடத்து நடுங்கிக் கொண்டிருந்த ஓர் ஆதி மனிதன், சிறிய குச்சிகளில் தீப்பந்தங்களை உருவாக்கிக் குகையினுள் வெளிச்சத்தையும் கதகதப்பையும் உண்டாக்கினான். குகைவாயிலில் சுள்ளிகளைக் குவித்துத் தீ மூட்டிக் கொடிய விலங்குகள் குகைக்குள் நுழையாமல் தடுத்தான்.
காட்டுத் தீயில் சிக்கி வெந்துபோன விலங்குகளின் சுவையும் காய்கள், கிழங்குகள், விதைகள் ஆகியவற்றின் சுவையும் கூடி விடுவதைக் கண்ட இன்னொருவன், சிறிய அளவில் தீ மூட்டிச் சமையல் செய்யும் கலைக்கு வித்திட்டான். அவர்களே மனித சமூகத்தின் முதல் புதுப்புனைவர்களாவர்.
இந்தச் சாதனைகள் இன்றைய பார்வையில் மிகச் சாதாரணமானவையாகத் தோன்றலாம். ஆனால், அவை பெரும் சிக்கல்களுக்கும் விபத்துகளுக்கும் பின்னரே நிகழ்த்தப்பட்டிருக்கும். பலர் தீக்காயம்பட்டு அல்லது புகையில் மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கக்கூடும். அவர்கள் மனித குலத்தின் முன்னேற்றத்துக்காகத் தமது இன்னுயிரை இழந்த தியாகிகளாகப் போற்றப்பட வேண்டியவர்கள்.
மனித இனம் கற்காலத்திலிருந்து உலோக யுகத்துக்கு முன்னேறியது இத்தகைய சிறு சிறு புதுப்புனைவுப் படிகளில் ஏறித்தான். ஒவ்வொரு புதுப்புனைவும் ஒரு தனி மனிதன் தான் தற்செயலாகக் காண நேர்ந்த சம்பவத்தைக் கூராய்வு செய்து, சிந்தித்துப் புரிந்துகொண்டு அதைத் தன் நோக்கத்திற்கேற்ப மாற்றியமைத்துச் செயல்வடிவம் தந்து, சோதித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்திப் படிப்படியாகச் சீர்திருத்திச் செம்மைப்படுத்தியதன் விளைவுதான்.
பல சமயங்களில் தனி மனிதனின் சிந்தனையில் உதித்துச் செயல்வடிவம் பெற்ற கண்டுபிடிப்புகள் பலர் கூடித் திட்டமிட்டு அணுகுமுறைகளை உருவாக்கிக் கூட்டு முயற்சியால் சாதித்த புதுப்புனைவுகளை விடச் சிறப்பானவையாக அமைந்து விடுவதுண்டு.
அரசுத் துறைகளால் நிர்வகிக்கப்படும் தேசிய ஆய்வகங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கிற சாதனைகளைவிட, தனி நபர்களின் சாதனைகள்தான் அதிக அளவில் பரிசுகளையும் விருதுகளையும் வெல்கின்றன.
400 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கி முதலில் இத்தாலியப் பிரபுக்களின் விளையாட்டுக் கருவியாகத்தான் மதிக்கப்பட்டது. திறந்தவெளி அரங்குகளில் விளையாட்டு வீரர்களையும், நாடக மேடைகளில் நடிகர்களையும் தெளிவாகப் பார்க்க அவை உதவின. ராணுவத்தினர் எதிரிப்படைகளின் நடமாட்டத்தைத் தொலைவிலிருந்தே கண்காணிக்கவும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தினர். ஒரு ரோம் நகரத்துப் பிரபு தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து கொண்டு, டைபர் நதியில் நீராடிக் கொண்டிருக்கும் பெண்களை ரசிக்க உதவும் ஒரு பெரிய தொலைநோக்கியை அமைத்துத் தருமாறு கலிலியோவைக் கேட்டுக் கொண்டார்.
கலிலியோ பல புதிய கருவிகளை உருவாக்கிய படைப்பாளி. அவர் தற்செயலாக வானத்தை நோக்கித் தன் தொலைநோக்கியைத் திருப்பியபோது கண்ட காட்சிகள், அக்காலத்தில் நிலவிய பல கருத்துகளைப் பொய்யாக்கி வானவியலை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறும்படி செய்தன. அவர் தொலைநோக்கி அமைப்பில் செய்த புதுப்புனைவுகள், புலனாகும் பிரபஞ்சத்தின் எல்லையைப் பல மடங்கு தள்ளிப்போகச் செய்தன.
இன்று புலனாகாத பிரபஞ்சத்தையும் எட்டிப் பார்க்கிற தொலைநோக்கிகள் உருவாகியுள்ளன. கண்ணுக்குப் புலனாகும் ஒளிக்கதிர்களைத் தவிர "ரேடியோ' கதிர்களையும் "எக்ஸ்' கதிர்களையும் "மைக்ரோ' அலைகளையும் குவித்துப் பிம்பங்களை உருவாக்குகிற தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய யுவதியை "வதனமே சந்திர பிம்பமோ' என வர்ணித்தால் அடிக்க வருவாள். கலிலியோவின் தொலைநோக்கிகள் சந்திரனின் பரப்பில் ஏராளமான வட்டக்குழிகள் சிறிதும் பெரிதுமாக நிறைந்திருக்கின்றதையும், சூரியனின் ஜோதி வடிவ வட்டத்தில் கரும்புள்ளிகளிருப்பதையும் காட்டின.
வியாழனை "நான்கு நிலவுகள்' சுற்றி வருவதையும் அவர் கண்டுபிடித்தார். பழமைவாதிகளும் மதப்பூசாரிகளும் அதிர்ச்சியுறும் வகையில் அவை இருந்தன.
கடவுள் மாசு மருவற்ற, குற்றம் குறையற்ற வகையில் பிரபஞ்சத்தைப் படைத்திருப்பதாக நம்பிப் பிறருக்கும் போதித்து வந்த பூசாரிகளுக்கு, நிலவிலிருக்கும் களங்கங்களும் சூரியனின் கரும்புள்ளிகளும் ஏற்க முடியாதவையாக இருந்தன.
பிரபஞ்சம் முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பூமியைச் சுற்றி வருவதாக நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, வியாழனைச் சுற்றி நான்கு நிலவுகள் ஓடுவதாகச் சொல்வது விபரீதமாகப்பட்டது. அவர்கள் தொலைநோக்கியின் நம்பகத்தன்மையையே சந்தேகித்து அதன் மூலம் தெரிவதெல்லாம் "மாய பிம்பங்கள்' என்று புரளி பரப்பினார்கள். கலிலியோவைச் சிறையிலிட்டுக் கொடுமைப்படுத்தினார்கள். ஆயினும் இறுதியில் விஞ்ஞானம் வென்றது. கலிலியோவை இழிவுபடுத்தியது தவறு என போப்பாண்டவரே பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்கும்படியானது.
ஒரு புதிய படைப்பில் எண்ணற்ற புதுப்புனைவுகளுக்கான வாய்ப்புகளிருப்பதற்குத் தொலைநோக்கியும் கணினியும் சிறந்த எடுத்துக்காட்டுகள். கூர்மதியும் சிந்தனைத்திறனும் மிக்கவர்கள் எந்தவொரு படைப்பிலும் அத்தகைய வாய்ப்புகள் இருப்பதைக் காண முடியும்.
விண்வெளிக் கலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓர் உலோகக்கலவை உறுதிமிக்கதாயும் அதேசமயத்தில் லேசானதாயும் இருப்பதைக் கண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவ்வுலோகத்தை ஊனமுற்றோரின் மாற்று உறுப்புகளை உருவாக்கப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியது இதற்கு எடுத்துக்காட்டு.
புதுப்புனைவுகளுக்கும் படைப்புகளுக்கும் சாமானியர்கள் எப்போதும் வரவேற்பளிப்பார்கள் என்று சொல்ல முடியாது. விலங்குகளால் இழுக்கப்படாமல் ரயில் எஞ்சின் ஓடுவது "சூனியக்கார மாயம்' என்று எதிர்த்தவர்கள் உண்டு. அவர்களையும் மீறித்தான் ரயில் போக்குவரத்து இன்று இன்றியமையாத ஒன்றாகியிருக்கிறது.
ஒரு நாட்டில் அறிவார்ந்த இயக்கமுறைகளும் அறிவியல் பிரக்ஞையும் உயிர்ப்புடனிருப்பதற்குப் புதிய படைப்புகளும் புதுப்புனைவுகளும்தான் அடையாளம். படைப்பாளிகளையும் புதுப்புனைவர்களையும் அடையாளம் கண்டு போற்றிப் பராமரிப்பதுதான் நாடு முன்னேற வழி என்று கடந்தகால வரலாறுகள் காட்டும்.
நம் நாட்டிலும் முன்னொரு காலத்தில் படைப்புகளும் புதுப்புனைவுகளும் தோன்றிக் கொண்டிருந்தன. இந்திய விவசாயிகளின் சாதனங்கள் ஐரோப்பிய விவசாயிகளின் சாதனங்களைவிட முன்னேறியவையாக இருந்த காலமும் உண்டு. ஆனால் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மன்னர்களும் பிரபுக்களும் விஞ்ஞானிகளுக்குப் புரவலராக இருந்து ஆதரித்ததால் அங்கு தொழிற்புரட்சி தோன்றியது. இங்கிலாந்தின் ராயல் விஞ்ஞானச் சங்கம், பிரான்சின் அறிவியல் அகாடமி ஆகியவை அறிவியல் ஆய்வுகளை ஊக்குவித்தன.
நம் நாட்டு மன்னர்கள் நுண்கலைகளை ஆதரித்துச் சிற்பிகளையும் ஓவியர்களையும் கவிஞர்களையும்தான் ஊக்குவித்தனர்.
அக்பர் மன்னருக்குப் போர்த்துகீசியத் தூதர் ஒரு கடிகாரத்தைப் பரிசளித்தபோது அது எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிய யாருமே அக்கறை காட்டாததால் அதைத் தூக்கி மூலையில் போட்டு விட்டார்.
துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் இருந்ததால்தான் பாபர், இந்திய மன்னர்களை முறியடித்து அடிமைப்படுத்த முடிந்தது. ஐரோப்பியர்களின் புதுமையான ஆயுதங்கள்தான் இந்தியாவைக் "காலனியாக்க' உதவின.
இன்று வேறுவிதமான "காலனியாதிக்கம்' நம்மை அடிமைப்படுத்த முயல்கிறது. மேலை நாடுகளிலிருந்து தொழில் நுட்பங்களைப் பெற வேண்டுமானால் அவர்களிடம் தாள் பணிய வேண்டியிருக்கிறது. மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் முதல் அணு ஆற்றல் தொழில்நுட்பம் வரை பல துறைகளின் தொழில்நுட்பங்களை நமக்களிக்க மேலை நாடுகள் பல நிபந்தனைகளை விதிக்கின்றன.
போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் புதிய படைப்புகளுக்கும் புதுப்புனைவுகளுக்கும் கூடுதலான விலை கிடைக்கிறது. வெளிநாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்கள் அங்குள்ள ஆய்வகங்களிலும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றிப் பல படைப்புகளையும் புதுப்புனைவுகளையும் ஆக்கி, நோபல் பரிசு உள்படப் பல விருதுகளைப் பெறுகின்றனர்.
அறிவார்ந்த சொத்துரிமைகளை உறுதி செய்யப் புதிய படைப்புகளுக்கும் புதுப்புனைவுகளுக்கும் காப்புரிமை பெற்றிருக்கின்றனர். அவர்கள் இந்தியாவிலேயே தங்கிச் சாதனைகள் படைக்க ஏதுவாக இங்குள்ள சூழ்நிலைகள் அனுமதிக்காதது வருந்தக்கூடிய நிகழ்வு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

