ரூபாயின் மதிப்பு நம் கையில்தான்

இந்திய ரூபாயின் மதிப்பு தேய்கிறது என்று சொன்னால், நம்மில் எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.
Updated on
4 min read

இந்திய ரூபாயின் மதிப்பு தேய்கிறது என்று சொன்னால், நம்மில் எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. ஆனால், அந்த தேய்மானத்தின் தாக்கம், ஒவ்வொரு இந்திய குடிமகனின் தினசரி வாழ்க்கையில் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் நேரடியாகக் காண முடியும். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், அந்த பாதிப்புகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

மற்ற உலக நாடுகளின் கரன்சிகளின் அன்றாட மதிப்போடு ஒப்பீடு செய்துதான், இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த ஒப்பீடுகளில், சர்வதேச கரன்சியான அமெரிக்க டாலர்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. சுருங்கச் சொன்னால், ஒரு டாலரை வாங்குவதற்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்பதை வைத்துதான், ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. டாலர் போன்ற அன்னியச் செலாவணிகளின் விலை ஏற்றத்தைத்தான், ரூபாயின் மதிப்பு குறைந்தது என்று சொல்கிறோம். 2011-இல், டாலருக்கு எதிரான இந்த மதிப்பு, ரூ.45 ஆகவும், மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, ரூ. 53 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8, 2013 இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாகும். ஏனென்றால், அன்றுதான், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 60-ஐ தாண்டி சரிந்து, விவரம் அறிந்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. கடந்த இரண்டு வருடங்களில், இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 30 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இழந்த மதிப்பு சுமார் 12 சதவிகிதத்திற்கு மேலாகும்.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடியது இதற்கு ஒரு காரணம். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளும், இந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டு சர்வதேச வியாபாரத்தின் அளவுகோலாக விளங்கும் நடப்புக் கணக்கில் அகன்று கொண்டிருக்கும் விரிசல், ரூபாயின் மதிப்பைத் தாக்கி, அதை தலைகுனிய வைக்கும் முக்கிய காரணியாகும். நாட்டின் கச்சா எண்ணெய் தேவைகளில், 70 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தை வகிக்கும் தங்க இறக்குமதிக்கு, காலம் கடந்து தற்போதுதான் சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இறக்குமதிகளுக்கு அன்னியச் செலாவணி,பெருமளவில் தேவைப்படுகிறது.

ஏற்றுமதிகள் மூலம் நாம் அந்த அன்னியச் செலாவணியை முழு அளவில் ஈட்டினால்தான், நடப்புக் கணக்கு சமமாகும். வரவுக்கு அதிகமாக, அன்னியச் செலாவணியைச் செலவு செய்வதால், நடப்புக் கணக்கில் ஓட்டை விரிவடைந்து, ரூபாயின் மதிப்பைத் தாக்கி, அதை வலு இழக்கச் செய்கிறது.

இதன் பாதிப்புகள், அன்றாட வாழ்வில், காலை முதல் இரவு வரை நாம் பயன்படுத்தும் பொருள்களின் விலையில் எதிரொலிக்கிறது. இதனால், நம் மாதாந்திர பட்ஜெட், நம் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி, நம்மைக் கடனாளி ஆக்கிக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, நாம் காலையில் பயன்படுத்தும் பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்பில் ஒன்றான டூத் பேஸ்ட்டை எடுத்துக்கொள்வோம். இந்திய கம்பெனி, தன் தாய் கம்பெனிக்கு குறிப்பிட்ட லாபத் தொகை மற்றும் முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்ட ராயல்டியை, அன்னியச் செலாவணியில் அனுப்ப வேண்டும். அன்னியச் செலாவணியை அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால், அந்தச் சுமை பெரும்பாலும், தயாரிப்புப் பொருள்களின் விலையில்தான் பிரதிபலிக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் மற்ற தயாரிப்புப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.

இந்திய ரூபாயின் மதிப்பிழப்பால், எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடும் தொகை அதிகமாகும். அதனால், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே போகும் அபாயம் காத்திருக்கிறது.

நாம் குளிக்க மற்றும் துணி துவைக்க தினசரி பயன்படுத்தும் சோப்பு தயாரிப்பில் சில பெட்ரோலியப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதை தயாரிப்பில் பயன்படுத்தும் சோப்பு போன்ற அன்றாடப் பயன்பாட்டு பொருள்களின் விலை உயரும்.

கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் ஒரு சுழல் போன்றது. அதனால், பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகமாகி, அது பொது மக்களின் அன்றாடத் தேவைகளான அரிசி, பருப்பு முதல், கட்டுமான பொருட்கள வரை, விலை ஏற்றத்தை உண்டு பண்ணும். இதனால், பணவீக்கம் அதிகரித்து, அதனால் ஏற்படும் கூடுதலான தீமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

அன்னியச் செலாவணியின் விலை ஏற்றத்தால், தங்கள் தயாரிப்புகளில் இறக்குமதி பொருள்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் செலவுக் கணக்கு அதிகரிக்கும். உதாரணமாக, சமீபத்தில் செயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, அவர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் இயங்கும் பிளாஸட் ஃபர்னேஸýகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான நிலக்கரியை ஆண்டுதோறும் பத்து மில்லியன் டன்கள் வரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றனர். அன்னியச் செலாவணியின் ஒவ்வொரு ரூபாய் விலை ஏற்றத்தினால், அந்த நிறுவனம் வருடத்திற்கு 125 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும். இதனால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பொருள்கள் யாவும் விலை ஏற்றம் காணும்.

பெரும்பாலும் வங்கிக் கல்விக் கடன் மூலம்தான், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, உயர் கல்விக்காக அயல் நாடுகளுக்கு அனுப்புகின்றனர். இதற்கான அன்னியச் செலாவணி, தவணை முறையில்தான், கடன் வழங்கும் வங்கிகளால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. அதே அளவு அன்னியச் செலாவணிக்கு அதிக தொகை கொடுக்க வேண்டியிருப்பதால், பெற்றோர்களின் கடன் தொகை அதிகரிக்கிறது. இதனால், வெளிநாட்டுக் கல்வியைப் பற்றி பெற்றோர்கள் கூடுதலாகச் சிந்திப்பர்.

வெளிநாடுகளில், தங்கள் வியாபாரத் தேவைகளுக்காக கடன் வாங்கியிருக்கும் இந்திய நிறுவனங்களின்பாடு திண்டாட்டம்தான். கடனைத் திருப்பிச் செலுத்த, அன்னியச் செலாவணியை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால், அவர்களின் லாபம் குறைந்து, வங்கி கடன் அதிகரிக்கும். அதற்கான வட்டித் தொகையும் அதிகரிக்கும். இந்த திடீர் அதிர்ச்சிகளை தாங்கிகொள்ள முடியாத சில நிறுவனங்கள் திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்படும். இதனால், இந்திய உற்பத்தித் திறனில் பாதிப்பு ஏற்பட்டு, வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். வேலை இழப்புகள், பல சமூக அசம்பாவிதங்களை விளைவிக்கும் சக்தி படைத்தவைகளாகும்..

எந்த நோய்க்கும் மருந்து உண்டு என்றாலும், அதன் பக்க விளைவுகளையும் கூடவே அனுபவித்தாக வேண்டும். இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால், அதிகப் பயனடைவது ஏற்றுமதித் துறையாகும். ஏற்றுமதி மூலம் பெறப்படும் அன்னியச் செலாவணிக்கு ஈடாக அதிக இந்திய நாணயம் கிடைப்பதுதான் இதற்கு காரணம். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைமை, உள்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் வேகமாக வளராதது மற்றும் சில மாநிலங்களில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை ஆகியவை ஏற்றுமதி துறையின் வேகமான வளர்ச்சிக்கு தடைக் கற்களாக நிற்கின்றன.

இந்திய ரூபாயின் சரிவைத் தடுக்க, ரிசர்வ் வங்கி அன்னியச் செலாவணி கையிருப்பை, வங்கிகள் மூலம், அவ்வப்பொழுது சந்தையில் விற்கிறது. இதனால் ஏற்படும் அதிக அன்னியச் செலாவணி புழக்கத்தால், அதன் விலை தாற்காலிகமாகக் குறையும். ஆனால், சில மாத இறக்குமதிக்கு மட்டும் தற்போது கையிலிருக்கும் அரிய பொருளான அன்னியச் செலாவணியை இவ்வாறு செலவிட்டால், அதன் இருப்பு குறைந்து, நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு, இந்திய அரசு கடன் வாங்க வேண்டியிருக்கும். அதற்கான வட்டி சுமையை, வரிகள் மூலமாக ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன் முதுகில் சுமக்க நேரிடும்.

அன்னியச் செலவாணி துறையில் நிலவி வரும் ஸ்பெகுலேட்டிவ் வர்த்தகங்கள் அதன் மதிப்பின் ஸதிரத்தன்மையை குலைக்கும் சக்தி படைத்தவைகளாகும். இதை மனதில் கொண்டு, அம்மாதிரி வர்த்தகங்களின் பலனை குறைக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி சமீபத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி, ரூபாயின் புழக்கம் குறைந்து, ஸபெகுலேட்டிவ் வணிகத்தில் முதலீடுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக சிறிதளவு உயர்ந்த ரூபாயின் மதிப்பால், இந்த முயற்சி குறுகிய கால பலனை அளித்திருக்கிறது என்று கருதலாம். அதேசமயத்தில், இந்த நடவடிக்கையின் பக்க விளைவுகளை மனதில் கொள்ளவேண்டும்.

ரூபாயின் புழக்கத்தை முடக்கும் முயற்சிகள், வட்டி விகிதத்தை அதிகரிக்க செய்யும். இதனால், தொழில் நிறுவனங்களின் வட்டி செலவினங்கள் அதிகரிக்கும். அதை எதிர்கொள்ள சக்தியற்ற நிறுவனங்கள் கடன் வாங்கி தொழில் செய்வதை தவிர்க்க முற்படும். இதனால், நாட்டின் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஜி.டி.பி குறையும்.

ஜி.டி.பி குறைந்தால், சர்வதேச சந்தையில், இந்தியாவின் மதிப்பீடு (ரேட்டிங்) குறையும். மதிப்பீடு குறைந்தால், நாணயத்தின் மதிப்பு மேலும் குறையும். பணவீக்கம் அதிகரித்து, அதனால், சாதாரண குடிமகன் அதிக அளவில் பாதிக்கப்படுவான்.

இந்தச் சூழலில், ஏற்றுமதி நிறுவனங்கள்,நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாட்டிக்கொண்டால், அது நாட்டின் ஏற்றுமதியையும், நடப்புக் கணக்கையும் பாதித்துவிடும். இது இந்திய நாணயத்தின் மதிப்பு மேலும் குறைய வழி வகுத்துவிடும்.

நிலைமையைச் சமாளிக்க, இந்திய அரசாங்கம் தன் பங்குக்கு, பாதுகாப்பு உள்பட பல துறைகளில் அதிக அன்னிய முதலீடுகளுக்கு வழி வகுத்திருக்கிறது. ஆனால், இந்த முதலீடுகள் ஒரே நாளில் வந்து விடக்கூடியவை அல்ல. அதற்கு அன்னிய முதலீட்டாளர்கள், சில அடிப்படை நிகழ்வுகளை எதிர்பார்க்கின்றனர். ஊழல் குறைந்த, ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாகத் திறமையுள்ள நடுவன் அரசாங்கம் அதில் முதலாவதாகும்.

அதற்குறிய சூழலை இந்திய அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்தால்தான், அன்னிய முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் நம் நாட்டில் அவர்கள் பணத்தை, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய முன்வருவார்கள். ஆகவே, இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் வல்லமை பொருளாதார காரணிகளுக்கு மட்டும் உட்பட்டவை அல்ல அதற்கு முன்னோடியாக சில அரசியல் மாற்றங்களும் நிகழ வேண்டும். அதை நிகழ்த்தும் வல்லமை, சாதாரண குடிமகன்களான நம் கையில்தான் உள்ளது.

60-ஐ தாண்டி நிற்கும் ரூபாயின் வயோதிகத் தன்மையைக் குறைத்தால்தான், நம் அன்றாட வாழ்வு ஓரளவு மேம்படும் என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com