தேர்தல் வந்தாலே, பெரும்பாலான அரசியல்வாதிகள் விவசாயிகளின் தோழர்களாகிவிடுகிறார்கள். இலவசங்கள், கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அவற்றில் தலையாய இடம்பிடிப்பது விவசாயக் கடன் தள்ளுபடி.
கடன் தள்ளுபடி என்பது தேவையானதுதான் என்று அதை ஆதரிப்பவர்கள் கூறுவார்கள். 2ஜி அலைக்கற்றை ஊழலில் மோசடி செய்யப்பட்ட தொகை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு செலவழிக்கப்பட்ட தொகை ஆகியவற்றை ஒப்பிடும்போது விவசாயக் கடன் தள்ளுபடி தொகை மிகச் சிறியதுதான் என்பது போன்ற பல விவரங்களை கடன் தள்ளுபடி ஆதரவாளர்கள் தங்கள் வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் கூறுவார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்கரவர்த்தியின் அறிக்கையும் கடன் தள்ளுபடி ஆதரவாளர்களுக்கு கூடுதலாக உதவிசெய்யும் வகையில் அமைந்துவிட்டது. கடந்த 13 ஆண்டுகளில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் கோடியில் 95 சதவீதம் பெரு முதலைகளே பயனடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், சில வங்கியாளர்களும், பொருளாதார நிபுணர்களில் ஒரு பிரிவினரும் விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்த்து வருகின்றனர். அவர்கள் எண்ணிக்கையிலும் குறைவானவர்கள் அல்ல; அவர்களது வாதங்களும் புறந்தள்ளக்கூடியவை அல்ல. கடன் தள்ளுபடி என்பது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற மனப்பான்மையையே தகர்த்துவிடுகிறது, எனவே, இது அறநெறிக்கு எதிரானது என்று அவர்கள் கூறுகின்றனர்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு வசதியிருக்கும் விவசாயிகளும்கூட கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை. மாறாக அடுத்த கடன் தள்ளுபடி அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திவிட்ட பிறகு வரும் கடன் தள்ளுபடி அறிவிப்பால் எந்தப் பலனும் கிடைக்காது என்பது அவர்களது முந்தைய அனுபவமாக உள்ளது. காரணம், கடன் தள்ளுபடி என்பது நிலுவையில் உள்ள கடனுக்குதானே தவிர, ஏற்கெனவே திருப்பிச் செலுத்தப்பட்ட கடனுக்கு அல்ல. முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்கள் இதன் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு பாராட்டாக கடன் தள்ளுபடி அமைவதுடன் மேலும் அவர்களுக்கு உதவியும் கிடைக்கிறது என்றும் நேர்மையான விவசாயிகள் கருதுவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடன் தள்ளுபடி மற்றும் கடன் மறு சீரமைப்பு போன்றவற்றால் ஏற்படும் பாதகங்கள் குறித்து மேலும் சில வாதங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள். அவை மேலும் பொருத்தமுள்ளதாகவும் வலுவானதாகவும் இருப்பதால் அவற்றுக்கு மறுப்பு கூறுவது கடினமானதாக உள்ளது. அதில் ஒன்று - கடன் தள்ளுபடியின் பலன் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளைச் சென்றடைவதில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விவசாயிகளில் 84.97 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். இத்தகைய விவசாயிகளில் 75 சதவீதம் பேருக்கு முறையான, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் இருந்து கடன் கிடைப்பதில்லை என்பதை பல்வேறு ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. அதனால், இந்தக் கடன் தள்ளுபடித் திட்டத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. விவசாயிகளில் 40 சதவீதம் பேர் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. அவர்களுக்கு கடனும் கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியால் பலனும் கிடைப்பதில்லை.
கடன் தள்ளுபடிக்கு எதிராக மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது முந்தைய வாதத்தைவிட வலுவானது. "கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு விவசாயிக்குப் புதிதாக கடன் வழங்கப்படுகிறது. தனது நிலத்தில் விவசாயத்தின் மூலம் முந்தையக் கடனை அடைக்கக் கூடிய அளவுக்கு வருவாய் ஈட்ட முடியவில்லை என்றால், அதே விவசாயி அதே நிலத்தில் உழுது பயிரிட்டு, தனது குடும்பச் செலவுகளையும் கவனித்துக் கொண்டு, விவசாயப் பணிகளுக்கும் செலவழித்து, சீரமைக்கப்பட்ட முந்தையக் கடனையும், புதிய கடனையும் எப்படி அடைக்க முடியும்' என்று எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒன்று, தனக்குக் கடன் கொடுக்க யாராவது முன்வந்தால், அவர் மேலும் கடன் வாங்க வேண்டும், அல்லது கடன் வலையில் சிக்கி சின்னா பின்னமாக வேண்டும் அல்லது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்ற பழிக்கு ஆளாக வேண்டும். இந்தக் கொடுமையான சுழலில் சிக்காமல் இருக்க வழியே இல்லையா?
மனஉறுதி இருந்தால் இப் பிரச்னைக்கு தீர்வுகள் உள்ளன. விவசாயிகளின் வருவாயைப் பாதுகாத்ததன் மூலம் விவசாயத்தையும் பாதுகாத்த வெற்றிகரமான அனுபவங்கள் சர்வதேச அளவில் நிறைய உள்ளன. சீனா கம்யூனிஸ்ட் நாடு என்பதால் அதைப் பின்பற்ற தயக்கம் இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்திய அரசு பின்பற்றலாம். அதற்கு இந்தியாவில் எதிர்ப்பு இருக்காது. ஏனென்றால், சீர்திருத்தத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் அமெரிக்க ஆதரவாளர்களாகவே உள்ளனர்.
விவசாயத்தைத் தவிர, மற்ற பெரும்பாலானவற்றை அமெரிக்க அரசு, சந்தைப் பொருளாதார மயமாக்கிவிட்டது. சந்தைப் பொருளாதார விவகாரத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற விரும்பும் நமது பொருளாதார வல்லுநர்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவசாய விவகாரத்திலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நல்லது.
விவசாயிகளுக்கு மற்ற நாடுகளில் எத்தகைய ஆதரவுக் கரத்தை அரசு நீட்டுகிறது என்பது குறித்து "நீடித்த விவசாயத்துக்கான மையம்' என்ற அமைப்பின் சார்பில் அண்மையில் ஆய்வு செய்தேன். அதில், அமெரிக்காவில் 8 விதங்களில் விவசாயிகளுக்கு அந்த நாட்டு அரசு உதவிகளைச் செய்து வருகிறது. அதில் "மார்க்கெட்டிங் லோன்' என்ற அம்சம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கை எழுப்பப்படும் நமது நாட்டுக்கு தீர்வாக இது அமைய வாய்ப்பு உள்ளது.
தொடக்கத்தில், "மார்க்கெட்டிங் லோன்' என்பது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக வடிவமைக்கப்பட்டது. விளைபொருள் வரத்தை சமன் செய்யவும், ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் கொள்முதல் விலையை சமாளிக்கும் வகையிலும் குறுகிய கால கடனாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை உடனடியாக விற்பனை செய்யாமல், எப்போது சந்தையில் தேவை அதிகமாக உள்ளதோ அப்போது விற்பனை செய்யும் வகையில், அதுவரை தான் விளைவித்த பொருள்களைப் பாதுகாக்கவும், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் கடன் (மார்க்கெட்டிங் லோன்) உதவியை அரசு வழங்குகிறது.
இந்த உதவி இல்லாமல் போனால், பணத் தேவைக்காக, தான் விளைவித்த பொருள்களை உடனடியாக விற்பனை செய்யும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். அதன் மூலம், பொருள்களின் வரத்து அதிகரிப்பதால், மிகக் குறைந்த விலைக்கே தான் விளைவித்த பொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படும்.
இப்போது விவசாயிகள் தங்கள் விளைபொருளை அடமானம் வைத்து அமெரிக்க விவசாயத் துறையிடமிருந்து கடன் பெறுகிறார்கள். விளைபொருளை அடமானம் வைப்பதால், அவர்கள் கடனை அடைக்கமுடியாவிட்டாலும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை. நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு தங்கள் விளைபொருளை விற்பனை செய்தால், விவசாயிகள் கடனை ரொக்கமாகவே திருப்பிச் செலுத்துகின்றனர். சந்தை விலை மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் குறைந்த விலையின் விகிதத்திலேயே கடனைத் திருப்பிச் செலுத்துகின்றனர்.
இந்த நடைமுறைக்கு மாறாக, கடன் பெறும் நடவடிக்கைகளைத் தவிர்க்கும் விவசாயிகள், உற்பத்தி விலைக்கும், சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அரசிடம் இருந்து நேரடியாக பணமாகவே பெற்றுக் கொள்ளலாம். தங்கள் கடன்களை அடைப்பதற்கு விளைபொருள் சான்றிதழ்களையும் அமெரிக்க விவசாயத் துறையிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தாங்கள் விளைவித்த பொருள்கள் முழுவதையும் அரசிடமே சமர்ப்பித்து, கடன் கணக்கை முடிப்பதற்கான வாய்ப்பையும் விவசாயிகள் பெற்றுவருகின்றனர்.
அமெரிக்காவின் இந்தத் திட்டங்களை இந்தியாவிலும் பின்பற்றலாம். சந்தை விலை உச்சத்தில் இருக்கும்போதும், உற்பத்தியால் நஷ்டம் ஏற்படாதபோதும் விவசாயிகள் தங்கள் கடன்களைத் திருப்பச் செலுத்தலாம். மற்ற சமயங்களில், அவர்கள் விளைவித்த பொருள்களை அரசே மொத்தமாகக் கொள்முதல் செய்து, கடன் தொகையை விவசாயிகள் முழுவதுமாகச் செலுத்திவிட்டதாகக் கருதலாம். இதுபோன்று மொத்தமாகக் கொள்முதல் செய்வதால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதும் சுலபமாக இருக்கும்.
இதன் மூலம் கடன் தள்ளுபடிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். ஒவ்வொரு அறுவடை முடிந்தவுடனும் கடன் விவகாரம் தீர்க்கப்பட்டுவிடும். புதிய நடைமுறையின் மூலம் செலவழிக்கப்படும் தொகை, இப்போது செலவழிக்கப்படும் தொகையைவிட அதிகமாகிவிட்டால், சமூக நலன் கருதி அதை அத்தியவாசிய சமூகச் செலவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் உள்ள 127 கோடி மக்களுக்கு விவசாயம்தான் இதுவரை உணவளித்து வருகிறது; இனியும் உணவளிக்கப் போகிறது. நம் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக விவசாயம்தான் விளங்கி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் விவசாயக் கடன் தள்ளுபடி பிரச்னையை அரசு அணுக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

