மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கட்டணம் உண்டு; சுகாதாரம் இல்லை

ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை பயணங்களை மேற்கொள்வதும், அந்தப் பயணத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டண கழிவறைகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதும் இயலாத ஒன்று.

Updated On :19 டிசம்பர் 2013, 1:34 am IST

ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை பயணங்களை மேற்கொள்வதும், அந்தப் பயணத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டண கழிவறைகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதும் இயலாத ஒன்று. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களாலும் பராமரிக்கப்படும் கழிவறைகள் கட்டணக் கழிவறைகளாகவே உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி மட்டும் விதிவிலக்கு.

அரசியல் பிரமுகர்கள், அடியாள் பலம் கொண்டவர்களின் ஆளுமையின் கீழ்தான் இந்த கட்டணக் கழிவறைகள் பெரும்பாலானவை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் எடுக்கப்படுகின்றன. போட்டியின் காரணமாக ஏலத்தில் அதிக தொகைக்கு ஒரு சில கழிவறைகள் எடுக்கப்படுவதும் உண்டு.

இதனால், பெரும்பாலான கழிவறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, கூடுதல் வசூல் உண்டு. குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சம் ரூ.5 வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது நடுத்தர மற்றும் உயர் வகுப்பினருக்கு சாதாரணத் தொகையாக இருக்கலாம். ஆனால் அன்றாட கூலிகள் மற்றும் மிகக் குறைந்த வருவாய் பிரிவினருக்கு இந்தத் தொகையை செலவிடத் தயக்கம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் பெயரளவில் இலவச கழிவறைகள் இருந்தாலும், அவை பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது கண்கூடு. பல இடங்களில் இக்கழிவறைகளைப் பயன்படுத்த இயலாத நிலைக்கு, கட்டணக் கழிவறைகளை டெண்டர் எடுத்தவர்கள் செய்துவிடுவதும் உண்டு.

இதனால் பல நேரங்களில் பஸ் நிலைய வளாகத்தை திறந்தவெளிக் கழிவறையாகப் பயணிகள் பயன்படுத்தி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இத்தகைய சீர்கேடு இல்லாத பஸ் நிலையப் பகுதிகள் கிட்டத்தட்ட இல்லை என்று கூட சொல்ல முடியும்.

இரவு நேரங்களில் பஸ் பயணத்தை மேற்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்கூட கட்டணக் கழிவறைகளில் அதிக கட்டணம் செலுத்துவதற்கு தயங்கி பொது இடங்களை பயன்படுத்தும் உண்டு. அத்தகைய நேரங்களில், கழிவறைகளை ஏலத்தில் எடுத்தவர்களால் கடுமையான ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாவதும், சில நேரங்களில் தாக்குதலுக்கு ஆளாவதும் கூட உண்டு.

கட்டணக் கழிவறைகளில் வசூலிக்கும் அதிகப்படியான கட்டணத்தை தடுக்க எந்த உள்ளாட்சி அமைப்பாலும் முடியாத ஒன்றாகிவிட்டது.

அதேபோல் பொது இடங்களை கழிவறைகளாக சிலர் மாற்றிவிடும் நிலையில் அவற்றை அவ்வப்போது தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே உள்ளே சுகாதாரம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான கழிவறைகளுக்குள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்.

கழிவறைகளில் தண்ணீர் பற்றாக்குறை, கழிவறைகளின் கதவுகளில் ஓட்டைகள், சுவர்கள், கதவுகளில் ஆபாச கிறுக்கல்கள், தண்ணீர் பிடிப்பதற்கு குவளைகள் இல்லாமை என ஏராளமான குறைபாடுகள் இந்த கழிவறைகளில் நிலவுகின்றன.

பஸ் நிலைய கழிவறைகளை ஒருசில குடிமகன்கள் அவசரமாக குடித்துவிட்டு, புகைத்துவிட்டு செல்லும் அறையாகக் கூட பயன்படுத்துவதுதான் எல்லாவற்றிலும் பெரிய கொடுமை. இதை எல்லாவற்றையும் மீறிதான் இயற்கை உபாதைக்கு இந்த கழிவறைகளை நாம் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதையெல்லாம், கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு அன்பளிப்பும், கவனிப்பும் ஆட்டிப் படைக்கிறது.

சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் விதமாக அனைத்து கட்டணக் கழிப்பிடங்களும் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ளது நல்ல விஷயம்.

தலைநகரில் மட்டும் இந்த நிலை ஏற்பட்டால் போதாது, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டணக் கழிவறைகள் இலவச கழிவறைகளாக மாற்றப்பட வேண்டும்.

மக்களுக்கு எத்தனையோ இலவச திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசு, இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சுகாதாரத்தில் மற்றொரு மைல் கல்லை எட்ட முடியும். சுகாதாரத்திற்காக அரசு சில கோடிகளை இழக்க தயாராவதில் ஒன்றும் தவறில்லை.

உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டணக் கழிவறைகள் மூலம் பெறும் வருவாயைவிட பஸ் நிலைய சுகாதார பராமரிப்புக்கு செலவிடும் தொகை பல மடங்காக உள்ள சூழலில் இது சாத்தியமான ஒன்றுதான் என்பதை அதிகாரிகள் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நகர்புறங்களில் இலவச கழிவறைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க முன்வரும் வணிக, கல்வி, மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சுகாதாரத்தை பொது இடங்களில் எளிதாகப் பராமரிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.