தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வறுமையை "ஒளிக்க' முயற்சிக்கும் அரசு!

நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறித்த பொருளாதார நிபுணர்களின் கருத்துகள் பல நேரங்களில் யதார்த்த நிலையுடன் ஒத்துப்போவதில்லை. ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள் என்பதைக் கேட்டாலே சில பொருளாதார நிபுணர்களுக்கு

Updated On :31 டிசம்பர் 2013, 9:40 pm

நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறித்த பொருளாதார நிபுணர்களின் கருத்துகள் பல நேரங்களில் யதார்த்த நிலையுடன் ஒத்துப்போவதில்லை. ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள் என்பதைக் கேட்டாலே சில பொருளாதார நிபுணர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. அப்படியில்லை என்ற தங்கள் கருத்துக்கு வலுசேர்ப்பதற்காக அவர்கள் சில புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். (உ-ம்) டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி வெளியான பேராசிரியர் அலோக் ராய் எழுதிய "விவாதம் தொடர்கிறது' என்ற கட்டுரை.

இவரைப் போன்றவர்களுக்கு நேர் எதிரான கருத்துக் கொண்ட வேறு சிலரோ, ஏழ்மை நிலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை அவர்களும் புள்ளிவிவரங்களுடன் எடுத்துக் கூறுகின்றனர். (உ-ம்) எகானமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி என்ற பத்திரிகையில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியான பேராசிரியர் உட்சா பட்நாயக் எழுதிய "2004-05 முதல் 2009-10 வரை இந்தியாவில் ஏழ்மை நிலையின் போக்கு' என்ற கட்டுரை.

பொருளாதார நிபுணர்களின் கருத்துகளை சாதாரண மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனினும், அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளின் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தோமானால், அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் மிகவும் குறைபாடுள்ளதாகவும், உண்மை நிலவரத்தை மறைப்பதற்காகவே தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவருகிறது.

ஓர் உதாரணத்துக்காக திட்ட கமிஷனின் 2013 ஜூலை 22-ம் தேதியிட்ட அறிக்கையைப் பார்ப்போம். பொருளாதார நிபுணர் சுரேஷ் டி.டெண்டுல்கர் வகுத்தளித்த முறையில் கணக்கிட்டதன்படி 2010-11இல் இந்தியாவில் 21.9 சதவீதம் (26.93 கோடி) பேர்தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்கிறது திட்ட கமிஷன் அறிக்கை.

அதே கணக்கீட்டின்படி 2004-05இல் இந்தியாவில் 37.2 சதவீதம் (40.71 கோடி) பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்துள்ளனர். அதாவது 7 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் (13.78 கோடி) பேர் குறைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை.

கிராமப் பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ரூ.816-க்கும் குறைவாகவும் (ஒரு நாளைக்கு ரூ.27.20), நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு ரூ.1,000-க்கும் குறைவாகவும் (ஒரு நாளைக்கு ரூ.33.33) வருவாய் ஈட்டுவோரே ஏழைகளாகக் கருதப்படுவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள் ஏழைகளாகக் கருதப்படமாட்டார்கள். அதன்படி நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 27 கோடியைத் தாண்டவில்லை. ஆனால், இந்தியாவில் 53 சதவீதம் பேருக்கு (சுமார் 64 கோடி) சொந்தமாக கழிப்பறை வசதி இல்லை என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அரசின் புள்ளிவிவரமோ 27 கோடி பேர்தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்று கூறுகிறது.

உலக வங்கியின் அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி மீதமுள்ள 37 கோடி பேர் ஏழைகளாக இல்லாதபோதும், சொந்த கழிப்பறை கூட இல்லாதது விந்தையாக இல்லை? இது தொடர்பாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு மேலும் பல விவரங்களைத் தெரிவிக்கிறது. 53.1 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும், கழிப்பறை உள்ளவற்றில் 47 சதவீதம் வீடுகளில் வாட்டர் கிளாசெட்டுகள் (நீர் உள்ள பீங்கான் அமைப்பு) கிடையாது என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

அரசு புள்ளிவிவரத்தின்படி ஏழைகளாக இல்லாதோர் பலவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதையே பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பின் ஆய்வின்படி ஊட்டச்சத்து குறைபாடால் 48 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் உலக அளவில் 30 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகளாக உள்ளனர். அரசின் கூற்றுப்படி ஏழைகளாக இல்லாத லட்சக்கணக்கானோரால், தங்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவைக் கூட கொடுக்க முடியவில்லை என்பதை யுனிசெப் புள்ளிவிவரம் எடுத்துக் காட்டவில்லை?

2005-06இல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-3 இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது. 6 மாதம் முதல் 35 மாதம் வரை வயது உள்ள குழந்தைகளில் 78.9 சதவீதம் பேரும், திருமணமானவர்களில் 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 56.2 சதவீதம் பேரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது. வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களில் லட்சக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களின் வீடுகளில் கான்கிரீட் தளம் இல்லை என்பதும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த வீடுகளில் 29 சதவீதம் வீடுகளுக்கு மட்டுமே கான்கிரீட் தளம் உள்ளது. மற்ற 71 சதவீத வீடுகளின் தளங்கள் ஓலை, மஞ்சு (ஒருவகைப் புல்) போன்றவற்றால் வேயப்பட்ட கூரையாகவோ, செம்மண், களிமண் போன்றவற்றால் கட்டப்பட்ட தளமாகவோ உள்ளன.

அரசு புள்ளிவிவரங்கள் 21.9 சதவீதம் பேர்தான் ஏழைகள்  என்று தெரிவித்துள்ளதால், பணக்காரர்கள் கூட குடிசைகளில் வாழ்கிறார் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும் போலும்.

அதேபோல, 47.5 சதவீதம் வீடுகள் மட்டுமே செங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. மற்ற வீடுகள் களிமண்ணாலோ, சாதாரண கற்களாலோதான் கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் தரையை எடுத்துக் கொண்டோமானால், 10.8 சதவீதம் வீடுகளில்தான் மொசைக் அல்லது டைல்ஸ் தரை உள்ளது. 46.5 சதவீத வீடுகளில் களிமண் தரைதான் உள்ளது. மீதமுள்ள மற்ற வீடுகளில் சிமென்ட் அல்லது மற்ற பொருள்கள் தரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3.9 சதவீத வீடுகளில் அறைகள் என்பதே கிடையாது. 37.1 சதவீத வீடுகளில் ஒரே ஓர் அறையும், மேலும் 31.7 சதவீத வீடுகளில் 2 அறைகளும் மட்டுமே உள்ளன.

குடிநீரை எடுத்துக் கொண்டோமானால், 32 சதவீத மக்கள் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் பெறுகின்றனர். 47 சதவீத வீடுகளில் மட்டுமே அவர்கள் வசிப்பிடங்களிலேயே ஏதோவொரு வகையில் குடிநீரைப் பெறுகின்றனர். 18 சதவீத வீடுகளைச் சேர்ந்தவர்கள் கிராமங்களில் அரை கிலோமீட்டருக்கு மேலும், நகரங்களில் 100 மீட்டருக்கு மேலும் சென்றே குடிநீர் பெறும் அவல நிலை உள்ளது.

மற்றொரு வருத்தம் தரும் உண்மை என்னவெனில், 37.5 கோடி மக்கள் (31.4 சதவீத வீடுகள்) விளக்கெரிப்பதற்கு மண்ணெண்ணையைதான் பயன்படுத்துகின்றனர். அரசின் கணக்கின்படி வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களில் 10 கோடிக்கும் அதிகமானோர் வீட்டை வெளிச்சமாக்க மண்ணெண்ணெயையே பயன்படுத்துகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட 0.5 சதவீதம் மக்கள் (சுமார் 60 லட்சம் பேர்) வீடுகளில் விளக்கே இல்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 42 சதவீதம் வீடுகளில் (சுமார் 50.8 கோடி பேர்) குளியலறை என்பதே கிடையாது. மீதமுள்ள 58 சதவீதம் வீடுகளில் குளியலறை இருந்தாலும், அவற்றில் 16.4 சதவீதம் வீடுகளில் குளியலறைக்கு மேற்கூரை கிடையாது. 49 சதவீத வீடுகளுக்கு பாதாள சாக்கடை வசதி இல்லை. 56 சதவீத வீடுகளில் மட்டும்தான் சமையலறை உள்ளது. 28.5 சதவீத வீடுகளில் மட்டும்தான் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர்.

மீதமுள்ள 70 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகளில் சமையலுக்கு சுள்ளிகளையோ, விறகுகளையோ, வரட்டிகளையோதான் பயன்படுத்துகின்றனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 5 சதவீதம் பேர் மட்டுமே கார் வைத்துள்ளனர். 21 சதவீதம் பேர் மட்டுமே  இருசக்கர வாகனங்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். மோசமான சுகாதார நிலைமை, பள்ளியில் இடைநிற்றல் உள்ளிட்டவை குறித்த ஏராளமான புள்ளிவிவரங்கள் உள்ளன.

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உணர்த்துவது என்ன? ஏழ்மையின் உண்மையான முகத்தை அரசின் புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கவில்லை என்பதுதான். எனவேதான், ஏழ்மையின் உண்மை நிலையை அறிய வேறு சில அமைப்புகளின் புள்ளிவிவரங்களை நாட வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, 2009-ல் நாட்டில் 77 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளதாக அர்ஜுன் சென் குப்தா கமிட்டி குறிப்பிட்டது.

உலக வங்கியின் அறிக்கையும் அரசின் புள்ளிவிவரங்களைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகக் குறிப்பிட்டது. இந்தியாவில் 2010-ல் 32.7 சதவீதம் பேர் (சுமார் 40 கோடி) தினசரி 1.25 டாலருக்கும் (சுமார் ரூ.62) குறைவாகவும், 68.7 சதவீதம் பேர் (சுமார் 84.1 கோடி) 2 டாலருக்கும் (சுமார் ரூ.100) குறைவாகவும், 81.1 சதவீதம் பேர் (சுமார் 99.2 கோடி) 2.5 டாலருக்கும் (சுமார் ரூ.125) குறைவாகவே வருவாய் ஈட்டுவதாக உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

ஏழைகளின் உணவு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு செலவழித்து வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகமானால், அரசு செலவழிக்க வேண்டிய தொகையும் அதிகரிக்கும். அதனால்தான், இந்தத் தொகையைக் குறைப்பதற்காகவே, ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களை கைதூக்கி விடுவதற்கு பதிலாக வறுமைக் கோட்டையே மாற்றி அமைக்கும் மோசமான தந்திரத்தை மத்திய அரசு கையாள்கிறது. அதனால்தான், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்று அரசால் கருதப்படுபவர்கள் குடிசைகளில் வசிக்கிறார்கள்; திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். இதுபோன்று தகிடுதத்தம் செய்யும் அரசு உண்மையிலேயே மக்கள் நல அரசாக இருக்க முடியுமா என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.