தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புரிந்துகொள்ள முடியாத உலக வறுமை

உலகில் வறுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்ற உண்மையை அறியவோ ஒப்புக்கொள்ளவோ உலக அரசுகளும் சர்வதேச முகமைகளும் தயாராக இல்லை.

Updated On :4 பிப்ரவரி 2013, 11:01 pm

உலகில் வறுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்ற உண்மையை அறியவோ ஒப்புக்கொள்ளவோ உலக அரசுகளும் சர்வதேச முகமைகளும் தயாராக இல்லை. ஏன் என்றால், அதை ஒப்புக்கொண்டால் அதற்கேற்ப அவர்கள் வறுமை ஒழிப்புக்கு அதிக நிதியைச் செலவிட வேண்டும். அவர்களுடைய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருப்பதுடன் உண்மைகளை மறைப்பவையாகவும் இருக்கின்றன. அப்படியிருந்தும், வறுமையை ஒழிப்பதே தங்களுடைய முன்னுரிமைக் கடமை என்று அவர்கள் முழங்கத் தவறுவதே இல்லை.

வறுமையை ஒழிக்க அவர்கள் உண்மையிலேயே விரும்பினால் உண்மைகளை மறைக்கக்கூடாது. நோயை ஆதியோடு அந்தமாகக் கண்டுபிடிக்காவிட்டால் அதற்கு மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாது.

 வறுமை என்பது நோய்களிலேயே கொடியதாகும்; சொல்லப்போனால் பல நோய்களுக்கு அதுதான் தாய். சமூக, பொருளாதார ரீதியான பல தீங்குகளுக்குக் காரணியே வறுமைதான். அதுவே "காரணமாகவும்' அதுவே "விளைவாகவும்' இருப்பதும் அதன் மற்றொரு சிறப்பு. அப்படியிருப்பதால் வறுமை மேலும் பலப்பட்டுக்கொண்டே வருகிறது.

உலக அரசுகளும் சர்வதேச முகமைகளும் தரும் புள்ளிவிவரங்கள் முழுமையானவையாகவோ முழுக்க உண்மையாகவோ இல்லை என்றாலும், அவை தெரிவிக்கும் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்தோமென்றாலும்கூட மனித குலத்தில் இத்தனை கோடிப்பேருக்கு அடிப்படையான வசதிகளைக்கூடச் செய்து தர இந்த உலக சமுதாயத்தால் முடியவில்லையா என்கிற ஆதங்கமே மேலோங்குகிறது.

 உலகின் சுமார் 700 கோடி மக்கள் தொகையில் சுமார் 103 கோடிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய அன்றாட சராசரி வருமானம் சுமார் 65 ரூபாய் அல்லது அதற்கும் கீழேதான். மேலும் 206 கோடிப்பேர் ஒரு நாளைக்கு சுமார் 100 ரூபாய்க்கும் கீழே வருமானம் பெறுகின்றனர். முன்னர் குறிப்பிட்டவர்களைவிட "பரவாயில்லை' என்கிற ரகம்.

 யூனிசெஃப், உலக வங்கி, உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவை கூட்டாகத் திரட்டிய  புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், உலகில் 5 வயதுக்குக் குறைவான 16 கோடிக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். இது மொத்த குழந்தைகள் தொகையில் 26 சதவீதம். இது 2010-இல் எடுக்கப்பட்ட கணக்கு.  1990-இல் எடுக்கப்பட்ட கணக்கில் இந்த அளவு 35 சதவீதமாக இருந்தது. பல நாடுகள் எடுத்த சத்துணவு வழங்கும் திட்டங்கள் காரணமாக இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக "உணவு, வேளாண்மை ஸ்தாபனம்' 2010-12-இல் திரட்டிய தகவல்களின்படி, 87 கோடிப்பேர் மிகக் கடுமையாக ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 வறுமையில் வாழும் உலக மக்களின் எண்ணிக்கை நாம் நம்பும்படியாக இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் வளரும் நாடுகளில்தான் வசிக்கின்றனர். வளரும் நாடுகளில் 85 கோடிப்பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதமாகும். ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகள் 1990-களுக்குப் பிறகு 2007-08-க்கு முன்னர் வேகமாக இருந்தது. அதற்குப் பிறகு இதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

வறுமை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது:  இப்போது எங்கு பார்த்தாலும் வறுமைதான். பிரசவம் தொடர்பாக மட்டும் அன்றாடம் சுமார் 800 பெண்கள் உயிரிழக்கின்றனர். இதற்குக் காரணம் வறுமைதான். வறுமை என்றால் என்ன என்று புரிந்துகொள்ள இந்தப் புள்ளிவிவரங்கள் அவசியமே இல்லை; கண்களும் இதயமும் நன்றாக இருப்பவர்களால் பார்க்க முடிகிற அளவுக்கு வறுமையானது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

 ஆள் அரவமற்ற கிராமங்களில், நகர்ப்புற சேரிகளில், பணக்கார நாடுகளில், ஏழை நாடுகளில் என்று எல்லா  இடங்களிலும் வறுமை நிலவுகிறது. குப்பை, கூளங்கள், சாக்கடை துர்நாற்றம், கொசு - ஈ படையெடுப்பு ஆகிய மனிதன் வாழ்வதற்கே லாயக்கற்ற சூழலில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சாரம் ஆகிய எதுவுமே அவர்களுக்குக் கிடையாது.

 சில நாடுகளிலும் சில பிராந்தியங்களிலும்தான் வறியவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகிலேயே வறியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியாதான் உதாரணம் காட்டப்படுகிறது.

 உலகில் ஊட்டச்சத்து குறைவானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எதியோப்பியா ஆகிய ஏழே நாடுகளில் வசிக்கின்றனர்!

 உலகின் வறியவர்கள் எண்ணிக்கை சுமார் 103 கோடி என்றால் அதிகம்போலத் தெரிகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையும் உண்மையான ஏழைகளின் எண்ணிக்கையைத்  தெரிவிக்கவில்லை. குறைத்தே காட்டுகிறது. இந்த 103 கோடிப்பேர் "ஏழைகளிலும் ஏழைகள்' என்று வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.

 கடந்த பத்தாண்டுகளைவிட இந்த பத்தாண்டுகளில் கணிசமான அளவுக்கு வறுமையைக் குறைத்துவிட்டோம் என்று சர்வதேச முகமைகளும் பல நாடுகளும் மார்தட்டுகின்றன. 1990-களில் இப்போதிருப்பதைப் போல இரு மடங்கு வறியவர்கள் இருந்தனர். திட்டமிட்ட காலத்தைவிட 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறியவர்கள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட்டதாக அவை கூறுகின்றன.

 1990-களில் இருந்த வறியவர்களின் எண்ணிக்கையை 2015-இல் பாதியாகக் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்தது.

 வறியவர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பதில் சாதனை புரிந்திருந்தாலும் மெத்தனமாக இருந்துவிட முடியாது; ஒரு நாளைக்கு 65 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் ஏழ்மையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலகில் 22 சதவீதமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 100 ரூபாய்கூட சம்பாதிக்க முடியாதவர்கள் எண்ணிக்கை 205 கோடியாக இருக்கிறது. இவர்கள் முதல் பிரிவினரைவிட "பரவாயில்லை' என்றாலும் இவர்களும் வறுமையில்தான் ஆழ்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை மட்டும் பார்த்தால் 1950-களில் உலக மக்கள் தொகையே இந்த அளவுக்குத்தான் இருந்தது. அதாவது மொத்த மக்கள் தொகையுடன் சதவீதக் கணக்கில் ஒப்பிட்டால் வேண்டுமானால் வறியவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதைப்போலத் தெரியலாம், உண்மையில் வறியவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.

பெருத்த இடைவெளி:  வறுமை அதிகரிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியதாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு சுமார் 550 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களே. உலகில் செல்வமும் சமமற்ற முறையில்தான் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

 உலக மக்கள் தொகையில் வெறும் 0.6 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் 39.3 சதவீதத்தை அனுபவிக்கின்றனர். அதன் மதிப்பு சுமார் 87.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்!

 உலக மக்கள் தொகையில் வெறும் 8.1% பேர் மொத்த செல்வத்தில் 82.3% வைத்துள்ளனர். சுமார் 92.9% மக்கள் 17.7 சதவீத செல்வத்தைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்கின்றனர்!

 உலக நாடுகளுக்கு இடையிலும் இதே போன்ற சமமற்ற பங்கீடே காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பையும் மக்கள் தொகையையும் கொண்டு மதிப்பிட்டால் இந்த ஏற்றத்தாழ்வு நன்றாகப் புரியும். உலக மக்கள் தொகையில் வெறும் 4.46% பேர் வசிக்கும் அமெரிக்கா உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 21.56%-ஐ அனுபவிக்கிறது. செல்வ வளத்தில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் மொத்த உற்பத்தி மதிப்பில் 53.78 சதவீதத்தைப் பெறுகின்றன. இந்த நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் 14.33 சதவீதம்தான் வரும்.

 மக்கள் தொகை அதிகம் நிறைந்த நாடுகளில் குறைந்த செல்வமே இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 17.73 சதவீதம் உள்ள இந்தியா உலக  செல்வத்தில் 2.64%-ஐ மட்டுமே அனுபவிக்கிறது.

ஏழை நாடுகளில் பணக்காரர்கள்:  இந்தப் புள்ளிவிவரம் இப்படி இருந்தாலும் ஏழை நாடுகளில் பணக்காரர்களே இல்லை என்ற நிலையும் இல்லை; பணக்கார நாடுகளில் உள்ளவர்களைவிட பெரிய பணக்காரர்கள் ஏழை நாடுகளில் இருக்கின்றனர்! இந்தியாவிலேயே எடுத்துக்கொண்டால் மிக அதிக செலவில் கட்டப்பட்ட பணக்காரர்களின் ஆடம்பர பங்களாக்கள் நிறைய இருக்கின்றன.

 தொழிலதிபர் முகேஷ் அம்பானி மும்பையில் தன் குடும்பத்தினருக்காகக் கட்டியுள்ள 27 மாடி பங்களாவின் மதிப்பு சுமார் 5,500 கோடி ரூபாய்க்கும் அதிகம்! இந்த வீட்டைப் பராமரிக்க 600 முழு நேர ஊழியர்கள் தேவைப்படுகிறார்களாம்.

 ஜெய்ப்பூரில் உள்ள ராஜ் பேலஸ் ஹோட்டலில் "பிரசிடென்ஷியல் சூட்' என்கிற பிரத்யேக தங்குமிடத்தில் ஓரு நாள் இரவு தங்குவதற்கு சுமார் 25 லட்ச ரூபாய் வாடகை.

இதிலிருந்து தெரிவது, "இந்தியா பணக்கார நாடு' - ஆனால், "இந்தியர்கள்தான் ஏழைகள்'. இந்தியாவின் செல்வ வளம், பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களிடமே குவிந்து கிடக்கிறது. இதுதான் உலக நியதியும்.

 உலகில் உள்ள அனைவரும்  உண்பதற்கு உணவு தானியங்கள் இருந்தும் வறுமையும் பட்டினிச் சாவுகளும் தொடர்கதையாகவே இருக்கின்றன.

 முப்பதாண்டுகளைவிட இப்போது நபர்வாரியாக 17% அதிகமான கலோரிகளுடன் உணவு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஏழ்மை காரணமாக மக்களால் உணவு தானியங்களை வாங்கிச் சாப்பிட முடியவில்லை.

 கோடிக்கணக்கான மக்கள் பசியிலும் நோயிலும் ஆழ்ந்திருக்கும்போது, சில ஆயிரம் பேர்கள் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்க முடியும் என்றால், நாம் நாகரிகம் அடைந்துவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்வதில் அர்த்தமே இல்லை.

 அடையவே முடியாத இலக்குகளை நிர்ணயித்து, நீண்டகால திட்டங்களைத் தீட்டிக்கொண்டு வறுமை ஒழிப்பை இப்படி ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்க முடியாது.

 அனைவருக்கும் உணவு தானியங்கள் உடனே கிடைக்கவும், குறைந்தபட்சத் தேவைகள் பூர்த்தியாகவும், அனைவருக்கும் கண்ணியமான வேலை கிடைக்கவும் குறுகிய கால, நீண்டகால திட்டங்களைத் தீட்டி நிறைவேற்ற வேண்டியது அரசுகளின் கடமை.

 உறுதியான  நடவடிக்கைகள் மூலம்தான் வறுமையை ஒழிக்க முடியுமே தவிர, புள்ளிவிவரங்களை மறைப்பதாலோ குறைத்துக் காட்டுவதாலோ ஒழிக்கவே முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.