தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வேளாண் கடன் தள்ளுபடி ஊழல்

விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு போதிய அக்கறையே கிடையாது என்பதை, வேளாண் கடன்

Updated On :19 மார்ச் 2013, 9:56 pm

விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு போதிய அக்கறையே கிடையாது என்பதை, வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

 விவசாயிகளின் நலன்கருதி அரசு எடுத்ததாகக் கூறப்படும் கடன் தள்ளுபடி நடவடிக்கையானது அரைமனதுடன் மேற்கொள்ளப்பட்ட அரைகுறை நடவடிக்கை என்பதையும் பல சந்தர்ப்பங்களில் வேளாண் குடிகளின் நலன்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டதையும் அறிக்கை தெளிவாக்குகிறது.

 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட "வேளாண் கடன் தள்ளுபடி - கடன் நிவாரண திட்டம்' பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டதை அறிக்கை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

 இந்த திட்டத்தின் கீழ், கடன் நிவாரணம் பெற்றதாகக் கூறப்படும் 4 கோடி விவசாயிகளையும் தனித்தனியாக ஆராய்ந்து இத் திட்டத்தை மதிப்பிடும் சக்தியோ நேரமோ தலைமை கணக்குத் தணிக்கையாளருக்கு இல்லை. ஆயினும் மாதிரிக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவுகளில் விவசாயிகளின் பெயர், ஊர், கடன் தொகை போன்றவற்றைப் பெற்று ஆராய்ந்து பார்த்ததில் தெரியவந்திருப்பது "கடலில் மூழ்கி மிதக்கும் பனி மலையின் கூர்முனையை"ப் போன்றது. ஊழலின் அடிப்பரப்பை ஊகித்துத்தான் அறிய முடியும்.

 வெளியில் தெரியும் கூர்முனையே பிரம்மாண்டமாக இருக்கிறது! தெரியவந்த சில கணக்குகளிலேயே ஏகப்பட்ட முறைகேடுகள், ஊழல்கள். சி.ஏ.ஜி. சாம்பிளுக்கு எடுத்துக் கொண்ட கணக்குகளிலேயே, 13.6 விழுக்காடு "தகுதியுள்ள விவசாயிகளுக்கு'க் கடனே தரப்படவில்லை! ஆய்வு செய்யப்பட்டவர்களில் 8.5 விழுக்காடு பேருக்குக் "கடன்பெறும் தகுதியே' இல்லை.

 இந்தக் கடன் நிவாரண திட்டத்தின்கீழ், "சிறு கடன்' வழங்கும் (மைக்ரோ ஃபைனான்ஸ்) நிறுவனத்துக்கு 164.40 கோடி ரூபாயைத் தனியார் வங்கியொன்று தந்திருக்கிறது. (சிறு கடன் நிறுவனங்களின் பணி, நோக்கம், செயல்பாடு ஆகியவற்றை இங்கே விவாதித்தால் கட்டுரை மேலும் விரிவடைந்துவிடும்.)

 அரசுடைமை வங்கிகளிலும் அரசின் வேளாண் கடன் நிறுவனங்களிலும் கடன் வாங்கியவர்கள், நிவாரணம் பெற்றவர்களின் பெயர்கள், முகவரி, கடன் தொகை போன்றவை அடித்தும், திருத்தியும், ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் பெயரைச் சேர்த்தும் இஷ்டப்படி திருத்தப்பட்டுள்ளன.

 இந்த திட்டத்தின்படியான கடன் நிவாரணப் பயன்கள் "6 விழுக்காடு உண்மையான' விவசாயிகளுக்குப் போய்ச்சேரவில்லை. சில வங்கிகள் அளவுக்கு அதிகமாகவே தொகையைப் பெற்றுள்ளன. கடன் நிவாரண காலத்துக்கு உள்படாத காலத்தில் வழங்கப்பட்ட கடனுக்குண்டான வட்டியைக்கூட சில வங்கிகள் இந்தக் கணக்கில் சேர்த்து தொகையைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

 34.28 விழுக்காடு விவசாயிகளுக்கு, "அவர்கள் வாங்கிய கடன் தள்ளுபடி  செய்யப்பட்டுவிட்டன, நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது' என்பதற்கான சான்றிதழ்கூட  வழங்கப்படவில்லை. கடன் நிவாரணச் சட்டத்தின் கீழ் இப்படி சான்றிதழ் தருவது கட்டாயம் என்றாலும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தக் குறைகள் எல்லாம் கடன் நிவாரணத்தை அமல்படுத்தியபோது நடைபெற்றவை. ஆனால் இந்தக் கடன் நிவாரண திட்டமே முழுக்க முழுக்க ஓட்டைகளும், வழக்கத்துக்கு மாறான நடைமுறைகளையும் கொண்டிருந்தது.

 2008-09-ஆம் ஆண்டு மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் இந்தக் கடன் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. 3.69 கோடி சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளும் 60 லட்சம் இதர விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டது. மொத்தத்தில் சுமார் 4.29 கோடி விவசாயிகளுக்கு நாடு முழுக்கக் கடன் நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

 இந்தக் கடன் நிவாரணத்தின் மொத்த மதிப்பு ரூ.71,680 கோடி; 2008 ஜூன் 30-க்குள் கடன் நிவாரணம் வழங்கி முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு 2010 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. நேரடி விவசாயக் கடன்கள், வேளாண் சார்ந்த குறுகிய கால உற்பத்திக் கடன்கள், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த முதலீட்டுக் கடன்கள் போன்றவை வழங்க முடிவு செய்யப்பட்டது.

 2007 மார்ச் 31 வரை வழங்கப்பட்ட கடன்கள் 2008 பிப்ரவரி 29 வரையில் திருப்பிச்  செலுத்தப்படாதிருந்தால், நிலுவையில் இருப்பதாக 2010 டிசம்பர் 31-ல் அறிவிக்கப்பட்டிருந்தால், கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளைப் பற்றியது.

 ஒவ்வொரு விவசாயியும் தான் வாங்கிய கடனில் 75 விழுக்காட்டைத் திருப்பிச் செலுத்திவிட்டால் 25 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்பது போன்ற, விவசாயிகளால்  எளிதில் புரிந்துகொள்ள முடியாத, சலுகை பெற முடியாத நிபந்தனைகளுடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

 கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் தரப்படுவதாக அரசு பீற்றிக்கொண்டாலும் இந்த திட்டத்தைக் கூர்ந்து ஆராய்ந்தால் அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துவிடவில்லை என்பதும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ள வேளாண்மையை அதிலிருந்து மீட்கப் பெருமளவு உதவவில்லை என்பதும் புலனாகும்.

 முதலாவதாக, அரசுடைமை வங்கிகள் உதவியுடன் கடன்பெற்று விவசாயம் செய்யும் பெரும் பணக்கார விவசாயிகளுக்காகத்தான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. சொந்த சேமிப்பையோ, இதர வருவாயைக்கொண்டோ விவசாயம் செய்தவர்களும், தனியார் "லேவா-தேவிக்காரர்களிடம்' கடன் வாங்கியோரையும் இந்த திட்டம் ஒதுக்கிவிட்டது. இவர்களுடைய எண்ணிக்கைதான் மிக அதிகம். அரசு நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கி விவசாயம் செய்வோர் எண்ணிக்கை மொத்த விவசாயிகளில் 27 விழுக்காடுதான்.

 தனியாரிடம் கடன் வாங்கியோ, யாரிடமும் கடன் வாங்க முடியாமல் சொந்தமாக நகைகளை அடைமானம் வைத்தோ, வீடு அல்லது நிலத்தை ஒத்திக்கு கொடுத்தோ, உறவினர்கள், நண்பர்களிடம் பணம் பெற்றோ விவசாயம் செய்தோருக்கு இந்தக் கடன் நிவாரணம் கிடைக்கவில்லை. அடுத்தவர் நிலத்தில் விவசாயம் செய்த குத்தகைதாரர்களுக்கு இந்த நிவாரணம் அறவே கிடைக்கவில்லை.

 உலக வங்கியின் அறிக்கைப்படி பார்த்தால், விளிம்புநிலை விவசாயிகளில் 87 சதவீதம் பேரும் சிறு விவசாயிகளில் 70 சதவீதம்பேரும் இந்தியாவில் அரசுடைமை வங்கிகள் மூலம் விவசாயக் கடன்பெற்று விவசாயம் செய்வதில்லை.

 மத்திய அரசு நியமித்த யு.சி. சாரங்கி கமிட்டிகூட, நாட்டில் உள்ள மொத்த விளிம்புநிலை விவசாயிகளில் வெறும் 14 சதவீதம்பேர்தான் வங்கிகளிடம் கடன்பெற்று விவசாயம் செய்கின்றனர் என்று கூறுகிறது.

 விளிம்பு நிலை மற்றும் குறு விவசாயிகளில் பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கடன் நிவாரண திட்டம் எந்தவிதப் பயனையும் தரவில்லை என்பதையே தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் ஆய்வறிக்கை சுட்டுகிறது.

 அடுத்ததாக, இந்தக் கடன் நிவாரணம் அளிப்பதற்கே 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாதவர்களுக்குக் கடன் நிவாரணம் வழங்கப்படவில்லை. 1997 மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2007 மார்ச் 31 வரையில் கடன் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; 2007 டிசம்பரில் கடன் தவணைக் காலம் முடிந்திருக்க வேண்டும். 2008 பிப்ரவரி 29-க்கு முன்னால் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தியிருக்கக்கூடாது என்பது முதல் நிபந்தனை.

 அதாவது, மான அவமானத்துக்கு அஞ்சி நகைகளை, சொத்துகளை விற்றோ, வேறெங்காவது கடன் வாங்கியோ விவசாயக் கடனை அடைத்த விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடையாது! "புதிய கடன் வேண்டும் என்றால் பழைய கடனை அடைத்தால்தான் தருவேன்' என்று நிபந்தனை விதிக்கப்படுவதால் அதற்காகக் கடனைத் திருப்பிச் செலுத்தியிருந்தாலும் அவர்களுக்கு நிவாரணம் கிடையாது.

 இதில் இன்னொரு வேதனையும் இருக்கிறது. விவசாயிகள் கடனைத் திருப்பிச்செலுத்தாவிட்டாலும் சில வங்கிகள் ஆண்டுக் கடைசியில், தங்களுடைய பற்று - வரவு கணக்குககளைச் சமப்படுத்துவதற்காக, சில கடன்கள் வசூலிக்கப்பட்டதைப் போல வரவு வைத்துவிடுவது வழக்கம். அப்படி விவசாயியின் கடனில் அவருக்குத் தெரியாமலே வரவு வைக்கப்பட்டிருந்தால் அவருக்கு "நிவாரணம் பெறும் தகுதி' போய்விடும். (வாராக் கடன்களைக் குறைத்து காட்டுவதற்காக வங்கிகள் இந்த வேலையைச் செய்வதுண்டு.) அந்த வகையிலும் பலருக்குக் கடன் நிவாரணத் தகுதி போயிருக்கிறது!

 கடனைத் தீர்க்க விவசாயிகளுக்குக் காட்டப்பட்ட சலுகையும் விவசாயிகள் ஏற்கும்படியாக இல்லை. அவர்கள் வாங்கிய கடன் தொகையில் 75 சதவீதத்தை குறிப்பிட்ட நாளுக்குள் திருப்பிச் செலுத்தியிருந்தால், மீதமுள்ள 25 சதவீதத்தொகை தள்ளுபடிசெய்யப்படும் என்பது  மூன்றாவது நிபந்தனையாகும். குறிப்பிட்ட நாளுக்குள் 75 சதவீதக் கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் விவசாயிகள் இருந்தால் அவர்கள் 100 சதவீதத்தையும் திருப்பிச் செலுத்திவிட மாட்டார்களா? அரசின் சலுகையையா எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்?

  அரசு 25 சதவீதம் கடன் சலுகை தருகிறதே என்பதற்காக 75 சதவீதத் தொகையை திரட்டிச் செலுத்தும்சக்தி சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளிடம் இருக்குமா? 25 சதவீத சலுகைக்காக 75 சதவீதத் தொகைக்கு அவர்கள் எங்கே போவார்கள்?

 இறுதியாக, இந்தக் கடன் நிவாரண திட்டத்தை அமல் செய்வதற்குத் தேர்ந்தெடுத்த வழிமுறைகளும் காலக்கெடுக்களும் நிபந்தனைகளும் குழப்பமானவை, விவசாயிகளால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. நிபந்தனைகளும் வழிமுறைகளும் புரியாததால் தகுதியுள்ள விவசாயிகள்கூட வங்கிகளுக்குச் சென்று கடன் நிவாரணம் பெறவில்லை.

 வேளாண்துறைக்கு ஆண்டுதோறும் கடன் தொகையை அதிகப்படுத்துவதாக அரசு கூறுவதெல்லாம் உண்மையில் விவசாயிகளுக்குப் பலன் தரவில்லை. இது களத்தில் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

 விவசாயத்துறைக்கு அளித்துவரும் கடனை இரு மடங்காக அரசு உயர்த்தும் என்று 2004-ல் அறிவிக்கப்பட்டது. பிறகு அந்த இலக்கை 2 ஆண்டுகளில் எட்டப் போவதாக அறிவித்தது. அதன் பிறகு மத்திய பட்ஜெட்டில் ஆண்டுதோறும் விவசாயத்துக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகை குறிப்பிடப்பட்டதுடன் அதிகரித்தும் காட்டப்பட்டது. வங்கிகள் வழங்கும் விவசாயக் கடனுக்கும் மத்திய பட்ஜெட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; வங்கிகள் தங்களிடமுள்ள தொகையைக் கொண்டுதான் வழங்குகின்றன. அரசு இலக்கை நிர்ணயம் செய்வதோடு சரி, நிதியெல்லாம் ஒதுக்காது.

 இந்த நிதியாண்டில் வேளாண்துறைக் கடன் இலக்கு 7 லட்சம் கோடி ரூபாய் என்று அறிவித்த அமைச்சர் கடந்த ஆண்டு இது ரூ.5,75,000 கோடியாக இருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்தப் புள்ளிவிவரமெல்லாம் உண்மை நிலையைப் பிரதிபலிப்பவை அல்ல; உண்மையிலேயே அரசு அறிவிக்கும் இந்தத் தொகை முழுவதும் விவசாயிகளுக்குச் சென்றால் அவர்கள் கடனுக்காக அரசு வங்கிகளைத் தவிர வேறு நிறுவனங்களையோ தனியாரையோ நாடவேண்டிய அவசியமே கிடையாது. தனியார் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி தூக்கில் தொங்கவேண்டிய அவசியமும் விவசாயிகளுக்கு வந்திருக்காது.

 வங்கிகள், வேளாண் கடன் நிறுவன அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கடனுதவியில் பெரும்பகுதி பண்ணைக்காரர்கள், பெருந்தோட்ட அதிபர்கள், வணிகப் பயிர் செய்வோர், "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்குத்தான் செல்கின்றன. மொத்த வேளாண் கடனில் 6 சதவீதத் தொகை மட்டுமே சிறு, விளிம்புநிலை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

 அதாவது விவசாயத்துக்காக 7 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படப்போகிறது என்றால் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு இதில் அதிகபட்சம் 42,000 கோடி ரூபாய்தான் கிடைக்கப்போகிறது.

கட்டுரையாளர்: பொருளாதார அறிஞர்.  ஊரக வளர்ச்சி திட்ட ஆர்வலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.