திரையுலகமும் சமுதாயமும்

இன்றைய உலகம் பணம், பதவி, புகழ் என்னும் திசையை நோக்கி ஓடுகின்றது. இந்த மூன்றும் தரும் ஆற்றல்மிக்கத் துறைகளாக இப்போது இருப்பவை அரசியல் துறையும், திரைப்படத் துறையும் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. இந்த இரண்டும்தான் இன்று நாட்டையும், வீட்டையும் ஆட்டிப் படைக்கிறது.
Updated on
3 min read

இன்றைய உலகம் பணம், பதவி, புகழ் என்னும் திசையை நோக்கி ஓடுகின்றது. இந்த மூன்றும் தரும் ஆற்றல்மிக்கத் துறைகளாக இப்போது இருப்பவை அரசியல் துறையும், திரைப்படத் துறையும் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. இந்த இரண்டும்தான் இன்று நாட்டையும், வீட்டையும் ஆட்டிப் படைக்கிறது.

"பணம் பத்தும் செய்யும்', "பணம் பாதாளம் மட்டும் பாயும்', "பணம் இல்லாதவன் பிணம்' என்னும் பழமொழிகள் செல்வத்தின் செல்வாக்கைப் புலப்படுத்தும். பதவி என்பது உதவிக்கானது என்ற நிலை மாறி, சிலரை உயர்த்திக் கொள்ளுவதற்குப் பயன்படுகிறது; புகழ் என்பது வாழ்வின் எச்சமாகும்.

""புகழெனில் உயிரும் கொடுக்குவர்

பழியெனில்

 உலகுடன் பெரினும் கொள்ளலர்...''

என்பது புறநானூறு காட்டும் புகழின் பெருமை.

இதனைத் தரும் ஆற்றல் மிக்க சாதனமான திரையுலகம் மூன்று முதலமைச்சர்களை அரசியல் களத்திற்கு அனுப்பியுள்ளது. இன்னும் சில நடிகர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். அந்த அளவுக்கு அரசியலும், திரையுலகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக விளங்குகின்றன.

ஆட்சி அதிகாரத்துக்கு யார் வந்தாலும் அவர்கள் திரைப்படத் துறையை அரவணைத்துக் கொள்வதற்கே விரும்புகின்றனர். திரைப்படத் துறையினரும் ஆட்சியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இந்த நிலையில் எந்த ஆட்சியும் திரையுலகுக்கு எதுவும் செய்யவில்லை என்று சிலர் பேசுவது எப்படிச் சரியாகும்?

திரையுலகம் என்றால் நடிகர்கள் மட்டும்தானா? வெளிப்படையாகத் தெரியும் நடிகர்களை விட, திரைக்குப் பின்னால் செயல்படுபவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

திரைப்படத்தின் எல்லாப் பொறுப்பும் ஏற்று நடத்துபவர் இயக்குநர். மற்ற நாடுகளில் நடிகர்களைவிட இயக்குநருக்கே செல்வாக்கு மிகுதியாகும். இயக்குநரைப் பொருத்தே படத்தின் வணிகமும், வெற்றியும் அமையும்.

நமது நாட்டில்தான் நடிகர்களில் - கதாநாயகருக்கு மட்டுமே பெயரும், புகழும், பணமும் கொடிகட்டிப் பறக்கிறது. அவர்களுக்கு மட்டுமே ரசிகர் மன்றங்கள் அமைக்கப்படுகின்றன. தங்கள் வேலைகளை விட்டு விட்டு நடிகர்களின் புகழ் பாடுவதும், கட் அவுட்டுகள் வைப்பதும், பாலாபிஷேகம் செய்வதும் நமது நாட்டில் மட்டுமே.

இவ்வளவையும் மீறி சத்யஜித் ரே இயக்கிய படங்கள் உலகப் புகழ் பெற்றன. தமிழ்த் திரையுலகிலும் பலர் இயக்குநர்களுக்குரிய முத்திரை பதித்தனர்.

ஆரம்பக் காலங்களில் நாடக உலகமும், திரையுலகமும் சமூக மாற்றம் மற்றும் சுதந்திரப் போராட்டத்துக்குச் செய்த பங்களிப்பை மறந்துவிட இயலாது. தமிழ் நாடகத்தின் தலைமையாசான் என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள், "நாடகத் தந்தை' எனப்படும் பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் மக்கள் கலைக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

நாடக மேடைகளில் தமது பாடல்களால் ஆங்கில அரசையே அச்சமடையச் செய்தார் விஸ்வநாத தாஸ். அவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வள்ளித் திருமணத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே உயிர் துறந்த உண்மையான மக்கள் கலைஞர்.

புராணமும், பக்தியும் ஆட் கொண்டிருந்த திரையுலகை திசை திருப்ப சமூக சீர்திருத்தம், சுதந்திரப் போராட்டம் என திருப்புமுனையை உண்டாக்கிய பெருமை இயக்குநர் கே. சுப்பிரமணியத்தையே சாரும். 1938-இல் வெளிவந்த "சேவாசதனம்' சமூகப் பிரச்னைகளைச் சாடிய முதல் படமாகும்.

1939-இல் இவர் இயக்கித் தயாரித்த கல்கியின் "தியாக பூமி' அன்றைய ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டது. பி.ஆர். பந்துலு உருவாக்கிய "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்' இவற்றை மக்கள் மறந்துவிட இயலுமா?

பாடல்களால் நிறைந்திருந்த திரையுலகைத் தம் வசனத்தினால் மாற்றியமைத்தவர் இளங்கோவன். அவரது "கண்ணகி' ரசிகர்களால் மறக்க முடியாத படம்.

அவருக்குப் பிறகு அண்ணாவின் "வேலைக்காரி'யும், கருணாநிதியின் "பராசக்தி'யும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின.

பிறக்கும் போதே சாதாரண மக்களின் உரிமையாகப் பிறந்த திரைப்படம் இன்று இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் கற்பனைக்கும், கனவுக்கும் எட்டாத உயரத்திற்குப் போய்விட்டது.

சிந்திக்கவும், செயல்படவும் கண்டுபிடிக்கப்பட்ட திரைப்படம் "மாபெரும் பொழுதுபோக்கு சாதனம்' என்று மக்களைத் திசை திருப்பிவிட்டது.

நல்ல கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று வந்த இளைஞர்கள் இந்த பிரம்மாண்டங்களின் முன்பு போட்டியிட்டுத் தோற்றுப் போனார்கள். சிலர் வணிக சமரசம் செய்து கொண்டு அழிந்து போனார்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் சத்திய ஆவேசத்தோடு எடுத்த படம்தான் "உன்னைப் போல் ஒருவன்'. 1964-ஆம் ஆண்டு மத்திய அரசால் அகில இந்திய மூன்றாவது சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த வெற்றிப் பயணம் தொடரவில்லை.

நமது தொடக்க காலத் திரைப்படங்கள் புராணம், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவற்றிலும் கூட அன்றைய தேசிய பக்தியை நம்மவர்கள் வெளிப்படுத்தினர்.

தீண்டாமை ஒழிப்பு, வரதட்சிணை எதிர்ப்பு, குழந்தைத் திருமணக் கொடுமைக்குக் கண்டனம், குடியினால் வரும் கொடுமை என்று படங்கள் எடுக்கத் தொடங்கினர்.

இந்த நலமான போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. பணம் கொட்டும் இந்தத் துறையை சிலர் வணிகமாக மாற்றத் தலைப்பட்டனர். பணம் மட்டுமே குறியாகக் கொண்ட சிலர் இந்த லாபகரமான தொழிலைக் கைப்பற்றிக் கொண்டனர். பொழுதுபோக்குப் படங்களை அதிக அளவில் தயாரித்து சிறிய படத் தயாரிப்பாளர்களை ஒதுங்க வைத்தனர்.

இது தவிர மேற்கத்தியப் படங்கள் நமது தியேட்டர்களை ஆட்சி செய்ய வந்தன. அத்துடன் இந்திப் படங்களும் அதன் சாயலைப் பெற்று நுழைந்தன. இந்தப் படங்களோடு தமிழ்ப் படங்கள் போட்டியிட்டுத் தோற்றன. அத்துடன் அந்தச் சீரழிவுப் போக்குகளை தங்களுக்குள் ஈர்த்துக் கொண்டன.

இதனால் தமிழ்க் கலை பண்பாடுகள் புறம் தள்ளப்பட்டு ஆங்கில, இந்திப் பண்பாட்டுக் கலப்போடு அதுவரை இருந்த எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாகிவிட்டது.

இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு எழ வேண்டும் என்று சில இளைஞர்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். சாண் ஏறினால், முழம் சறுக்கும் நிலைதான் நீடிக்கிறது.

உருவத்திலும், உள்ளடக்கத்திலும் தமிழ்த் திரையை மாற்றிட பல கலைஞர்கள் முயன்றனர். 1960ஆம் ஆண்டு வாக்கில் நிமாய் கோஷ் என்ற கலைஞர் புதிய சினிமாவைக் கொண்டு வந்தார். அதே காலகட்டத்தில் வங்கத்தில் சத்ய ஜித்ரேயின் "பதேர் பாஞ்சாலி'யும் வெளிவந்தது. அங்கே அதுவே வெற்றிப் பயணமாய்த் தொடர்ந்தது. இங்கே...? கேட்கவே வேண்டாம்.

இந்திய சினிமாவின் பொன்விழா ஆண்டான 1981 ஜூலையில் மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது:

""முற்போக்கான, சமுதாய மாற்றத்திற்கான கருத்துகளைப் படம் பார்ப்போர் மனதில் பதிய வைக்காத திரைப்படங்களை ஊக்குவிக்கக் கூடாது.''

இந்த அறிவிப்பை, விடுதலைக்குப் பின்னர் வந்த இந்திய மற்றும் தமிழ்நாட்டுச் சினிமாக்களின் நோக்கு பற்றிய விமர்சனமாகவே நாம் பார்க்க வேண்டும்.

இப்போதும் மக்களுக்கானத் திரைப்படங்களின் வருகை குறைவாகவே இருக்கிறது. காலம் மாறிய போதிலும் பாமர மக்களும், இளைய தலைமுறையினரும் படம் பார்த்து திரையுலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் கோடிகளில் ஊதியம் பெற்று, மாடமாளிகையில் புரளுகிற திரையுலகம் தன் பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிடக் கூடாது.

தமிழ் திரையுலகில் சமூகக் கடமையுடன் படம் பண்ணுகிறவர்கள் இல்லாமல் இல்லை. அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பணம் வருகிறது என்பதற்காக மக்களுக்கு விரோதமான விளம்பரங்களில் நடிப்பதும், கலைநிகழ்ச்சிகளை நடத்துவதும் கலைஞர்கள் தங்கள் சமுதாயக் கடமையை மீறும் செயல் இல்லையா?

சினிமா ஓர் ஆற்றல் வாய்ந்த சாதனம். இந்தக் கனவுலகில் மின்னும் நட்சத்திரங்களை சமுதாயம் வியப்போடு பார்க்கிறது. அவர்கள் பேசும் வார்த்தைகளை உண்மை என்று நம்புகிறது. அவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து நோக்குகிறது. அவர்கள் பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா?

திரையுலகத்துக்கு மக்கள் தந்த - தந்து கொண்டிருக்கிற ஆதரவு அதிகம். திரையுலகுக்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்கு முன், திரையுலகம் மக்களுக்கு செய்தது என்ன என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com