மகளிருக்கு இடம் கொடுப்போம்

அந்த விரைவுப் பேருந்தின் பெரும்பகுதி ஆண் பயணிகளால் நிறைந்திருந்தது. பேருந்தின் பின்பகுதியில் சில இருக்கைகள் காலியாக இருந்தன.
Updated on
2 min read

அந்த விரைவுப் பேருந்தின் பெரும்பகுதி ஆண் பயணிகளால் நிறைந்திருந்தது. பேருந்தின் பின்பகுதியில் சில இருக்கைகள் காலியாக இருந்தன. முன்பகுதியில் இருவர் அமரும் இருக்கைகள் பலவற்றில் ஒருவர் மட்டுமே வசதியாக அமர்ந்திருந்தார்.

ஒரு நிறுத்தத்தில் ஐந்து பெண்கள் பேருந்தில் ஏறினர். அவர்களில் இருவர் முதியவர்கள்; இருவர் நடுத்தர வயதை எட்டியவர்கள்; ஒருவர் கல்லூரி மாணவி போல

இருந்தார்.

ஏற்கனவே, பேருந்தின் முன்பகுதியில் பல பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அந்தப் பெண்களின் கண்கள் இருக்கை கிடைக்காதா என்று ஆவலுடன் தேடியபடி இருந்தன.

இருவர் அமரும் சில இருக்கைகளில் தலா ஒரு ஆணே அமர்ந்திருப்பதைக் கண்டதும், அவர்களிடம் சென்று இடம் மாறி அமருமாறு முதிய பெண்மணி ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் அந்தப் பெண்மணியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஒருவர் அப்போதுதான் மும்முரமாக செய்தித்தாளில் மூழ்கினார்; மற்றொருவர் அலைபேசியில் பேசியபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார்; ஒருவர் தூங்குவது போல பாவனையில் இருந்தார்.

அருகிலிருந்த மூவர் அமரும் இருக்கையிலும் சில இடங்கள் காலியாக இருந்தன. அந்த இருக்கைகளில் மிகவும் செüகரியமாக கால்களை விரித்துவைத்து அமர்ந்திருந்தனர் சில ஆண் பயணிகள்.

இவர்கள் யாருக்குமே சக பெண் பயணிகளின் கஷ்டம் தெரியவில்லை. அந்தப் பெண்களும் ஆண்களுடன் அருகில் அமரத் தயங்கியடி நின்றிருந்தனர்.

இதைப் பேருந்தின் நடத்துநரும் கண்டுகொள்ளவில்லை. ஆக, பேருந்தில் பல காலியிடங்கள் இருந்தும்கூட, அந்தப் பெண்கள் நின்றபடியே பயணித்தனர்.

சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பெண்களில் ஒருவர் இதே பேருந்தில் பயணித்த ஆணின் தாயாகவோ, மனைவியாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ இருந்திருந்தால், இந்த ஆண் பயணிகள் இவ்வாறு கண்டு கொள்ளாமல் இருந்திருப்பார்களா?

தற்போதைய உலகில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். சொல்லப்போனால், ஆண்களைவிட பெண்கள்தான் கடுமையாக உழைக்கின்றனர்.

வீட்டில் சமையல் உள்ளிட்ட இல்லப் பணிகளை முடித்துவிட்டு, கணவனையும் குழந்தைகளையும் வீட்டிலுள்ள முதியோரையும் கவனித்துவிட்டு, அவசர அவசரமாக அலுவல் பணிக்கு ஆலாய்ப் பறக்கும் பெண்கள் ஏராளமானோர்.

இயல்பில் மென்மையான உடல்வாகு கொண்ட பெண்கள், வீட்டிலும் அலுவலகத்திலும் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால், அவர்கள் பேருந்துப் பயணமாயினும், ரயில் பயணமாயினும் இரண்டாந்தரப் பிரஜையாகவே நடத்தப்படுகின்றனர்.

தவிர, தங்களுக்கே உரித்தான சில பிரத்யேகப் பிரச்னைகளையும் தாங்கிக்கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். பணியிடங்களில் ஆண்களின் காமப் பார்வையையும் சகித்துக்கொண்டு அவர்கள் பணிபுரிவது எதற்காக?

தங்கள் குடும்ப நலனுக்காக பல சங்கடங்களைத் தாங்கிக் கொண்டுதான் பேருந்துகளில் பயணிக்கின்றனர் பெண்கள். இதை ஏன் அந்தப் பேருந்தில் பயணித்த எந்த ஆணும் கருத்தில் கொள்ளவில்லை?

சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்துகளின் ஒருபுறம் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் ஆண்களின் அருகில் அமர பெண்கள் தயங்குவதில்லை.

எனவே, அவர்களுக்கு பேருந்து இருக்கைப் பிரச்னை ஏற்படுவதில்லை. ஆனால், கிராமப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் இன்னமும் அத்தகைய சமநிலை உருவாகவில்லை.

ரயில்களிலும் கூட பெண்களுக்கென்று பிரத்யேகப் பெட்டிகள் உள்ளன; அவை பெண்களின் கூட்டத்திற்கு ஏற்ற எண்ணிக்கையிலும் இருப்பதில்லை. பெருநகரங்களில் ரயிலில் நெரிசலில் பயணிக்கும் பெண்களின் பாடு சொல்லி மாளாது.

பெண்களை சக மனுஷியாக மதிக்கும் மனப்பாங்கு ஆண்களிடம் குறைந்துவருவதையே, அவர்களின் பயணக் கஷ்டங்கள் காட்டுகின்றன. பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது பொய்யாகிவிட்டது.

பயணங்களிலும் பெண்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்குவது அவசியம் என்று தோன்றுகிறது.

இந்த ஆண்களை உலகிற்கு வழங்குவதும் பெண்கள்தான்; குடும்பங்களின் ஆணிவேராக இருப்பவர்களும் பெண்கள்தான். இதை ஆண்கள் உணர்ந்து பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கினால் நன்றாக இருக்கும்.

இல்லாவிடில் கட்டாயச் சட்டங்களை அமல்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com