டேப்பரிங் என்கிற புலி

அமெரிக்காவில் 2007-08ஆம் ஆண்டுகளில் பொருளாதார சரிவின் தாக்கம் துவங்கியது. பின்னோக்கி நகர்ந்த பொருளாதாரத்தின் நடையை சீராக்க,
Updated on
3 min read

அமெரிக்காவில் 2007-08ஆம் ஆண்டுகளில் பொருளாதார சரிவின் தாக்கம் துவங்கியது. பின்னோக்கி நகர்ந்த பொருளாதாரத்தின் நடையை சீராக்க, அந்நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், வழக்கமாக பின்பற்றப்படும் பாரம்பரிய பொருளாதார சூத்திரங்களிலிருந்து சற்று விலகி, "குவான்டிடேடிவ் ஈஸிங்' என்ற ஆயுதத்தை கையாள முடிவு செய்தது. அது புலி வாலை பிடித்தது என்றும் சொல்லலாம்.

ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு, பண வீக்கம் (Inflation)ஒரு காரணியாக இருப்பதுபோல், சில சமயங்களில் பணம் மற்றும் பொருள்களின் தேவை சுருக்கமும்(Recession)முக்கிய காரணியாக அமைகிறது. சந்தையிலிருந்து நீண்ட கால கடன் பத்திரங்களை மத்திய வங்கி தொடர்ந்து வாங்கும்போது, அதற்கான தேவை அதிகரித்து, அதன் சந்தை விலையும் உயர்கிறது.  பத்திரங்களின் விலை உயர்வு, அதை தாங்கி நிற்கும் நீண்ட கால வட்டி விகிதத்தை குறைக்கிறது. கடன் வாங்கி கல்யாணத்தை களை கட்ட செய்வது போல், அரசாங்கம் கடன் வாங்கி, பண புழக்கத்தை அதிகரித்து, பொருளாதாரத்தை களை கட்ட செய்யும் வித்தைதான் "குவான்டிடேடிவ் ஈஸிங்' ஆகும். இதன் மூலம் ஏற்படும் அதிக பணப்புழக்கம்,  பெரிய செயல் திட்டங்களுக்கு (Projects), வங்கிகள் குறைந்த வட்டியில், அதிக அளவில் கடன் வழங்குவதற்கு வழி வகுக்கிறது.

இந்த செயல் திட்டங்கள் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் பணப் புழக்கத்தை அதிகரிக்கிறது. இதனால், நுகர் பொருட்களின் (Consumer durables)விற்பனை சூடு பிடித்து, அதை சார்ந்த துணை தொழில்கள் வளர்கின்றன.

2008ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2012 வரை, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், நீண்ட கால கருவூல பத்திரங்கள்(Treasury Bonds)மற்றும் சொத்து பாதுகாப்புடன் கூடிய கடன் பத்திரங்களை சந்தையில் தொடர்ந்து வாங்கி, பல பில்லியன் டாலரை புழக்கத்தில் விட்டது. ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. வங்கிகள், பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து, கடன் வழங்குவதை பெருமளவில் அதிகரிக்காதது அதற்கு முக்கிய காரணமாகும்.

குறைந்த வட்டிக்கு கிடைத்த பணத்தை, பல அமெரிக்க நிதி நிறுவனங்கள், வளரும் நாடுகளில், அதிக ஆதாயத்துடன் கூடிய பங்கு சந்தை, கடன் பத்திரங்கள் போன்ற துறைகளில் முதலீடு செய்து, அந்தந்த நாடுகளில் பணப்புழக்கத்தையும், சொத்துகளின் மதிப்பையும் அதிகரித்தன. அந்த கட்டத்தில், தன் முயற்சியை சற்றும் தளரவிடாமல்,  மாதம்தோறும், 85 பில்லியன் டாலர் மதிப்புக்கு சந்தையில் கடன் பத்திரங்களை தொடர்ந்து வாங்குவதென்று, ஃபெடரல் ரிசர்வ் முடிவு செய்து, அதை செய

லாக்கியது.

ஃபெடரல் ரிசர்வின் இந்த தொடர் நடவடிக்கைகளால், தள்ளாடிய அமெரிக்க பொருளாதாரம் சற்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய ஆரம்பித்துள்ளன. வேலை வாய்ப்பின்மை கடந்த காலத்தைவிட ஒரு சதவீதம் குறைந்து ஏழு சதவீதமானதும், பணவீக்கம் இரண்டு சதவீதத்தில் நிலையாக நிற்பதும் இதற்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன. "குவான்டிடேடிவ் ஈஸிங்'கை தொடரப்போவதில்லை என்று கடந்த வருடம் மே மாதம் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சூசகமாக தெரிவித்தபோது, உலக பொருளாதார சந்தைகள் ஆட்டம் காண துவங்கின. ஆனால், உடனடியாக அப்படி எதுவும் நடக்காததால், அவை சுதாரித்துக்கொண்டு எழுந்தன.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையின்படி, பண வீக்கம், 2.5 சதவீதம் அதிகமாகாத வரையில், வேலை வாய்ப்புகள் மேலும் நிலையாக பெருகும் வரையில், 2015ஆம் ஆண்டு வரை குறைந்த வட்டி விகித கொள்கையை நீட்டிக்கப் போவதாக ஃபெடரல் ரிசர்வ் கொள்கை முடிவை எடுத்திருக்கிறது. அத்துடன், 2014 ஜனவரி மாதத்திலிருந்து, சந்தையில் கடன் பத்திரங்கள் வாங்கும் அளவை, மாதம் 85 பில்லியன் டாலரிலிருந்து 75 பில்லியன் டாலராகக் குறைத்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளது. மேலும், படிப்படியாக இந்த நடவடிக்கைகள் குறைந்து 2014க்குள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.  தாராள பணப்புழக்க ஊக்குவிப்பு நடவடிக்கைகளை, அமெரிக்க மத்திய வங்கி சிறிது சிறிதாக குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கு பெயர்தான் "டேப்பரிங்'(Tapering)ஆகும். தான் பிடித்த புலி வாலை தவணை முறையில் விடுவதற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது என்றும் இதனை கருதலாம்.

ஆனால், அந்த நாட்டின் பணப்புழக்க கொள்கையால் இதுவரை குறுகிய கால முதலீடுகள் மூலம் பயனடைந்த பல வளரும் நாடுகள், பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரும் அபாயத்துக்கு  தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளில், தாற்காலிகமாக அதிகரித்த சொத்து மதிப்புகள், திடீரென பெருமளவில் மதிப்பினை இழக்கும் (Asset bubble)அபாயம் காத்து நிற்கிறது. அவற்றுள், ஆசிய நாடுகளில் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவும் ஒன்றாகும்.

"டேப்பரிங்' மூலம் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சந்திக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதாக, நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கியின் கவர்னரும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம், ரிசர்வ் வங்கி எடுத்த சில சமயோசித ஊக்குவிப்பு நடவடிக்கைகளால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமிருந்து, 34 பில்லியன் டாலர் அளவில் டெபாஸிட்டுகளை(FCNR(B)வங்கிகளால் பெறமுடிந்தது. இது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயர்த்துவதற்கு பெரிதும் உதவியது. ஏற்றுமதியில் முன்னேற்றம் மற்றும் குறைவான தங்க இறக்குமதி ஆகிய நிகழ்வுகள் நடப்புக் கணக்கு இடைவெளியை கணிசமாக குறைத்தன. மொத்த உள்நாட்டு தொழில் உற்பத்தியில் (ஜி.டி.பி) 4.8 சதவீத நிலையிலிருந்த இந்த இடைவெளி, கடந்த செப்டம்பர் மாத இறுதியில், 1.2 சதவீதமாக குறைந்திருப்பது மனதிற்கு இதமளிக்கும் விஷயம்தான்.

இந்தியாவைப் பொருத்தவரை, ரிசர்வ் வங்கி, பணப்புழக்கத்தை(Demand side)குறைக்கும் நடவடிக்கைகள் மூலம், பண வீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், அம்மாதிரி நடவடிக்கைகள் ஓரளவுதான் பலன் அளிக்கும். உற்பத்தி பொருட்களின் புழக்கத்தையும்(Supply side)சீராக்கினால்தான், பணவீக்கத்தை முழுவதும் கட்டுப்படுத்த முடியும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம்தான் மேற்கொள்ளவேண்டும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல, நாட்டின் தொழில் உற்பத்தி அதிகரிப்பதற்கு தேவையான கூடுதல் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவற்றின் மேம்பாடு, பெரிய செயல் திட்டங்களில் (Projects)முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக கொள்கைகளை மாற்றி அமைத்தல், அம்மாதிரி திட்டங்களுக்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்கும் வகையில் நிர்வாக சீர்திருத்தங்கள் சார்ந்த நடவடிக்கைகள் போன்றவை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. இவைதான், "டேப்பரிங்' போன்றவற்றிலிருந்து நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்கும் வலுவான கேடயங்களாகும். அண்மையில் வெளியான புள்ளி விவரம் ஒன்று (IIP data), நவம்பர் மாதத்தில் நாட்டின் தொழில் உற்பத்தி அக்டோபரை விட 2.2 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கிறது. புதிய முதலீடுகள் எதுவும் இந்த காலத்தில் இல்லாமலிருப்பதும் கவலையளிக்கும் விஷயமாகும். 

கடந்த வருடத்தில், அரசாங்க செலவுகள் அதிகரித்து, செலவு கணக்கில் அதிக விரிசலை(Deficit Finance) ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த செலவினங்கள் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் சாதனங்களை மேம்படுத்த பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை என்பது தொழில் உற்பத்தி புள்ளி விவரங்கள் மூலம் தெரிகிறது. நாடு பொது தேர்தலை சந்திக்கவிருக்கும் தருணத்தில், உற்பத்திக்கு பயனளிக்காத மேலும் பல செலவுகளை சந்தித்தாக வேண்டும். இந்த நிலைமையை சீராக்குவது, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சவாலாகவே அமையும்.

நிலைமையை சமாளிக்க, அமெரிக்கா மற்றும் மற்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தை பயன்படுத்தி, நம்முடைய ஏற்றுமதியை ஊக்குவித்து, மேம்படுத்த தேவையான நடவடைக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விற்பனைக்கு ஏற்ற, புதிய உலக சந்தைகளை கண்டறிந்து, அவற்றை ஏற்றுமதியாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது. ஏற்றுமதி துறை மேம்பாட்டுக்கு உதவும் விதமாக அமைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களின் பங்கு இதில் முக்கியம் வாய்ந்ததாகும். அதிக ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்றுமதியாளர்களுக்கு அமைத்துத் தரவேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

"டேப்பரிங்' என்ற புலி வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த காலம் கடந்து, அந்த புலி தற்போது வந்தே விட்டது. அது, நம் பொருளாதாரத்தை தாக்க முற்படுவதற்கு முன்பு, அதன் விளைவுகளை அலசி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான், இந்திய குடிமகன்கள், இன்னொரு பொருளாதார சுனாமியிலிருந்து தப்பிக்க முடியும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com