புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனுபவம் புதுமை

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், "விளம்பரத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல; வாராணசி தொகுதியில் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும்' என்று முழங்கியுள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2014, 8:50 pm

தி. நந்​த​கு​மார்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், "விளம்பரத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல; வாராணசி தொகுதியில் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும்' என்று முழங்கியுள்ளார்.

இதேபோல், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மியின் வேட்பாளராக குமார் விஸ்வாûஸ களம் இறக்கியுள்ளார். இவ்விருவரையும் தோற்கடிப்பதே தனது லட்சியம் என்றும் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் அறிவிக்கப்பட்ட பிரதமர் வேட்பாளராக மோடியும், காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளராக ராகுலும் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.

இவ்விருவரையும் தோற்கடிப்பதாக அரவிந்த் கேஜரிவால் முழங்குவதைப் பார்க்கும்போது, நல்ல அரசியல் தலைவராக இல்லாமல் வெறும் விளம்பரப் பிரியராக அவர் இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இல்லையென்றால், இவர் போட்டியிட வேறு தொகுதிகளா இல்லை?

வழக்கமாக, அரசியல் களத்தில் எலியும், பூனையுமாக இருக்கும் அரசியல் கட்சிகள் கூட அக்கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பரஸ்பரம் வேட்பாளர்களை நிறுத்தாது என்பது ஒரு மரபாக இருந்து வருகிறது.

நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யவும், தேர்தல் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடவும் வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தொகுதியில் மட்டுமே முடங்கி விடாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருந்துவிடுகின்றனர்.

எழுதப்படாத இந்த மரபுகளை உடைத்தெறியும் வகையில், கடந்த ஆண்டு புது தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அப்போதைய முதல்வரும் காங்கிரஸின் மூத்தத் தலைவருமான ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிட்டு கேஜரிவால் வெற்றியும் கண்டார்.

அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், தங்களால் தோற்கடிக்கப்பட்ட கட்சியே தனக்கு ஆதரவு அளித்தும் 48 நாள் மட்டுமே முதல்வர் பதவியில் இருந்து பின்னர் விலகியும் விட்டார்.

"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்' என்றொரு பழமொழியை கிராமத்தில் கூறுவர்.

அள்ளிவிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், சாக்கு போக்கு கூறிவிட்டு புது தில்லியின் முதல்வராக சில நாள்கள் மட்டுமே இருந்துவிட்டு இப்போது பிரதமர் பதவியை எதிர்பார்த்து களத்தில் இறங்கியுள்ள இவருக்கு மேற்கண்ட பழமொழி பொருத்தமாகவே அமையும்.

1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத சூழல்தான் நம் நாட்டில் நிலவுகிறது.

கூட்டாட்சி எனும் பெயரில் ஒன்றிரண்டு மக்களவை உறுப்பினர்களை பெறும் கட்சிகள் கூட பிரதமரிடமே முரண்டு பிடித்து தங்களுக்குத் தேவையான இலாகாக்களை பெறுவதும், மத்திய அரசில் தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொள்வதும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

25 ஆண்டுகளாக கூட்டாட்சி முறையில், அதாவது ஸ்திரமற்ற நிலையில் மத்திய நிர்வாகம் இருந்துவருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போது நடைபெறும் தேர்தலில், முக்கியமான தலைவர்களை எதிர்த்து மாநிலங்களில் பிரபலமாக உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளவர்களை ஆம் ஆத்மியின் வேட்பாளர்களாக அரவிந்த் கேஜரிவால் அறிவித்துவருகிறார்.

மேலும், பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அடுத்து அமரவுள்ள இரு கட்சிகளின் தலைவர்களைத் தோற்கடிப்பேன் என முழங்குவது என்பது அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு என்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்?

வாக்குகளைச் சிதறடித்து, முக்கியத் தலைவர்களைத் தோற்கடிப்பதாக முழங்குவதால் பயன் ஒன்றும் இல்லை.

விளம்பரத்துக்காக இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் கூறலாம். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியாதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.