மக்களை வருமான வரித்துறை துன்புறுத்துவது என்பது மனிதனை நாய் கடித்தது என்பது போன்ற செய்தியாதலால் அது பரபரப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், வரி செலுத்துவோருக்கு பெரும் தொகையை வருமான வரித்துறை வட்டியாக அளிக்கிறது என்பது நாயை மனிதன் கடித்தான் என்பது போன்றுள்ளதால் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
2006-07 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக வரி வசூல் செய்ததால் வரி செலுத்தியவர்களுக்கு வட்டியாக மட்டும் ரூ.36,365 கோடியை வருமான வரித்துறை திருப்பி அளித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை செலவழித்ததற்காக அண்மையில் பொதுக் கணக்குக் குழுவின் கண்டனத்துக்கு வருமான வரித்துறை ஆளாகி சங்கடத்தை சந்திக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.
சட்டப்படி, குறிப்பிட்ட செலவுகள் தவிர, பிற காரணங்களுக்காக இந்தியாவின் தொகுப்பு நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 114 (3)ஆவது பிரிவு தடை விதித்
துள்ளது.
தலைமை கணக்குத் தணிக்கையாளரின் கணிப்பின் அடிப்படையில், இத்தடையை மத்திய அரசு மீறியுள்ளது என்று பொதுக் கணக்குக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொது நிதியை மக்களின் அனுமதி இல்லாமல் செலவழிக்க இந்திய ஜனநாயகம் அனுமதிப்பதில்லை என்பது உண்மைதான். இதை மாற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பொது மக்களின் சார்பில் அந்த அதிகாரம் உள்ளது.
அதனால்தான், அரசியலமைப்புச் சட்டத்தின் 112 (1)ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்காக, தற்போது பரவலாக அறியப்படும் "பட்ஜெட்' என்கிற நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
2001-02ஆம் ஆண்டு பட்ஜெட் தவிர, வருமான வரிச் சட்டம் அமலுக்கு வந்த 1961ஆம் ஆண்டிலிருந்து கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் வட்டி செலவினமாகக் கருதாமல் ஒட்டுமொத்த வரி வருவாயில் கழிவாகவே கருதப்பட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாத முறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என நிதி அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி வரி வீதமும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரிக்கு வட்டி அளிப்பதற்கான உரிமையும் நிர்ணயிக்கப்படுகின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112 (1)இன் படி, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரிக்கு அளிக்கப்படும் வட்டி என்பது செலவினம் அல்ல என மே 2013இல் அட்டர்னி ஜெனரல் தெரிவித்த கருத்தையும் நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கூடுதல் வரிக்கான வட்டியை அளிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டுமென்றால், அதை அளிப்பதற்கான கால அவகாசம் மேலும் அதிகரிக்கும் என்றும், அது வரி செலுத்துவோரை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கும் என்றும் விளக்கம் அளித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, வரி செலுத்துவோருக்கு 6 சதவீத வட்டி அளிக்கப்படுவதை, அரசை விமர்சனம் செய்வோர்கூட மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வரி செலுத்துவோர் சிலரும், அவர்களின் ஆதரவாளர்கள் சிலரும் எழுப்பும் வரவேற்பு ஓசையில், பொது மக்களின் பணம் இவ்வாறு வீணடிக்கப்படுவது குறித்து எழுப்பப்படும் கேள்விகளும், பொதுக் கணக்குக் குழு மற்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் கண்டனங்களும் வெளியே தெரியவேயில்லை.
இவ்வளவு பெரும் தொகையை வட்டியாக தரவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பது அடிப்படையான கேள்வியாகும். கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு வட்டியைத் தருவதில் ஏற்பட்ட தாமதம்தான் இதற்கு காரணம்.
அப்படியெனில், அந்த தாமதம் ஏன் ஏற்பட்டது? வருமான வரித்துறை பணியாளர்களின் பொறுப்பற்ற தன்மைதான் தாமதத்துக்கு காரணமா? அல்லது அவர்களது எல்லைக்கு உள்படாத வேலைப் பளுதான் காரணமா? இதுதான் காரணம் என்றால், இதைக் களையாததற்கு யார் பொறுப்பு?
இது தனிநபரின் குற்றமா அல்லது அமைப்பின் குற்றமா என்பதை பொது மக்களின் நலன் கருதி தீர்மானமாக முடிவு செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு, கஜானாவில் இழப்பு ஏற்பட்டதற்கு பொறுப்பாளி யார் என்பது கண்டறியப்பட
வேண்டும்.
நியாயமாகப் பார்த்தோமானால், வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்ட வட்டித் தொகையை, தாமதம் ஏற்படக் காரணமானவரிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும்.
வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் தொகை பெரும் தொகையாக இருப்பதால், இந்தக் கேள்விகளை புறக்கணிக்க முடியாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.33,000 கோடியும், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்துக்கு ரூ.21,700 கோடியும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்துக்கு ரூ.15,184 கோடியும், குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்கு ரூ.15,260 கோடியும் மட்டுமே இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாங்கள் செலுத்த வேண்டியதை விட அதிக வரி செலுத்தியோருக்கு அளிக்கப்பட்ட வட்டித் தொகையோ ரூ.36,365 கோடி.
வரி செலுத்துவோரிடம் இருந்து சில ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.70,000 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரிடம் இருந்து அதிகமான தொகை வசூல் செய்யப்படுவது ஏன் என்ற கேள்வி எழுவது நியாயமானதே. நமது நாட்டில் வரி செலுத்தாமல் ஏய்ப்பதே வாடிக்கை என்ற புகார் எப்போதும் உண்டு.
அது உண்மை எனில், பலர் வருமான வரி செலுத்துவதற்கே தயாராக இல்லாத நிலையில், சிலர் மட்டும் அவர்கள் செலுத்த வேண்டியதை விட அதிகமான தொகை செலுத்தும் நிலை ஏன் ஏற்படுகிறது?
தாற்காலிக அடிப்படையானதாக இருப்பினும், பணப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக வலுகட்டாயமாக இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறதா?
அதிகப்படியாக செலுத்தப்பட்ட தொகையைத் திருப்பி வழங்கும் செயலை "சிறிது தாமதப்படுத்துமாறு' சில ஆண்டுகளுக்கு முன் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு.
இது சட்டரீதியாக சரியானதுதானா? இந்த முறைகேட்டைத் தடுப்பது யார்? தங்களது தவறுக்கு மக்களின் வரிப் பணத்தை விரயம் செய்யும் அரசுகள், மக்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டாமா?
சிக்கலாகவும் தாமதப்படுத்துவதாகவும் உள்ள வருமான வரித் துறை நடைமுறைகள் காரணமாக, செலுத்த வேண்டியதை விட அதிக வரி வசூலிக்கப்படுகிறதா, அல்லது ஊதியம் வழங்கும் இடத்திலேயே பிடித்தம் செய்யப்படுவதாலும் மற்ற சில நடவடிக்கைகளாலும் இது நிகழ்கிறதா?
எவ்வளவோ வரி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படி நிகழ்வது வருமான வரித்துறையின் செயல்பாடுகளில் குறைபாடுகளும், ஓட்டைகளும் இருப்பதைத்தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மக்களின் பிரதிநிதிகள் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவார்கள் என்பதால்தான், நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறும் நடைமுறை அமல்படுத்தப்படுவதில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கடமை அரசுக்கு உள்ளது. பதில் பெறும் உரிமை மக்களுக்கு உள்ளது.
ஆனால், அரசு தனது கடமையைச் செய்யுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

