வாழ்வியலை அதன் விளிம்புவரைச் சென்று தொட்டுக் காட்டியவர் திருவள்ளுவர். ஒத்துணர்வு இல்லாதவர்கள் ஒன்றுகூடி வாழ்வதென்பது, ஒரு குடிசைக்குள் பாம்போடு வாழ்வது போன்றதாகும் என்றார் (குறள்:890).
மணவினை பேசுகின்றபோது முதலில் வாழப் போகின்றவர்களின் குணங்களை ஆராய்ந்துவிட்டுப் பிறகு குலம் பேசவேண்டும் என்றார் சேக்கிழார் பெருமான். திலகவதியாருக்குக் கலிப்பகையாரை மணமகனாக்கப் பார்க்கும்போது, "குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்' எனப் பாடுவார் சேக்கிழார்.
சூது என்றால் என்னவென்று தெரியாதவன் துரியோதனன்; சூதாடத் தெரியாத துரியோதனனுக்காகத் தான் ஆடி, அவனுடைய வம்சத்தையே அழித்துவிட்டான், காந்தார நாட்டு மன்னன் சகுனி. சேர்க்கக்கூடாதவனைச் சேர்த்துக் கொண்ட துரியோதனனைப் பாரதியார், "சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனைத் தான் சரண் எய்தினான்' என்று எழுதுவார். பாஞ்சாலி சபதத்தில் திருதராட்டிரன் சகுனியை நேரடியாகவே "அட, புள்ளையை நாசம் புரியவே - ஒரு பேயென நீ வந்து தோன்றினாய்' என வசை பாடுவார்.
இலக்கியம் இரண்டு பக்கமும் எஞ்சின்கள் கோக்கப்பட்ட தொடர்வண்டியைப் போன்றதாகும். முன்னாலே இருக்கின்ற எஞ்சின் இழுக்கும்; பின்னாலே இருக்கின்ற எஞ்சின் தள்ளும்.
அதுபோல, இலக்கியம் முன்னாலே இருக்கின்ற எஞ்சினைப் போன்று மூத்தோர்களுக்கு விலகிச் செல்ல வழி சொல்லும்; பின்னாலே இருக்கின்ற எஞ்சினைப் போன்று; இளைஞர்களுக்கு முதியோர்களைத் தாங்கிப் பிடிக்கக் கைகாட்டும்.
அப்படி இலக்கியம், இருபுறமும் எச்சரிக்கும் ஓர் அதிசய இயந்திரம்.
ஆட்சிக்கலையின் மாட்சியை நன்குணர்ந்த தசரதனை யாரும் பதவியை விட்டு இறங்கு எனச் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பதவியில் உட்கார்ந்து இருப்பது, சாப்பிட்ட எச்சிலையே மீண்டும் மீண்டும் சாப்பிட்டுக் கொண்டிருப்பது போன்றது என அவன் எண்ணினான் ("நெடிதுநாள் உண்ட எச்சிலை நுகர்வது இன்பம் ஆகுமோ').
மூப்பு வந்த பிறகும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பது, ஒரு தட்டு நிறைய அமுதம் இருக்கும்போது, மற்றோர் இடத்தில் இருக்கும் நஞ்சினைத் தின்பது போலாகும் என்றான் அம்மன்னன் ("குழைத்த ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ?').
நம் முன்னோர்கள் வகுத்த வானப்பிரத்த நிலையைத் தான்
தசரதன் கடைப்பிடித்தான். அதனால் அக்காலத்தில் முதியோர் இல்லங்கள் வராமல் போயின. வானப்பிரத்தம் என்பது ஒரு கோட்பாடு மட்டுமன்று; முதியோர்
இல்லங்களை உடைத்துப் போட்ட கோடரியும் ஆகும்.
மேலும், தசரதன் தமக்குப் பிள்ளையில்லாத காலத்துப் பிள்ளை இல்லையே என்று ஒருநாளும் வருத்தப்பட்டது இல்லை. தனக்குப் பின்னால் அம்மண்ணை ஆள்வதற்கு மன்னன் இல்லையே என்று தான் வசிட்டரிடம் வருந்துகின்றான் ("பிறிதொரு குறையிலை; என்பின் வையகம் மறுகுவது என்பது மறுக்கம் உண்டரோ?... இருந்துயர் உழக்குநர் என்பின் என்பது, ஓர்அருந்துயர் வருந்தும் என் அகத்தை').
கம்பன் அடித்த எச்சரிக்கை மணி, எந்தக் கிழட்டுக் காதிலும் விழவில்லையே! இதனால் பாதிக்கப்பட்ட மனிதர்களைவிட, அதனைக் கேட்ட பரிவுகொண்ட மனங்கள் அல்லவா பரிதவிக்கின்றன.
தசரதனைப் போன்று விலகத் தெரியாத மன்னன் ஒருவன் சங்ககாலத்தில் இருந்தான்! அவன் பெயர் கோப்பெருஞ்
சோழன்! ஆளவேண்டிய காலத்தை முழுமையாகக் கோப்பெருஞ்சோழன் ஆள்
வதற்கு, அவர்களுடைய பிள்ளைகள் அனுமதிக்கவில்லை. சிம்மாசனத்தின்மீது எம்பி எம்பியாவது உட்கார்நதுவிடு முகத்தான், தகப்பனாகிய கோப்பெருஞ்சோழனையே போருக்கு அழைத்துவிட்டனர்.
அப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் கடும்போர் மூளுவதற்கு முன்னர் புல்லாற்றூர் எயிற்றியனார் எனும் புலவர், கோப்
பெருஞ்சோழனைச் சந்தித்து அறிவுரை கூறுகின்றார்.
"சோழ மன்னா! உன்னை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியிருப்பவர்கள் சேரனோ, பாண்டியனோ அல்லர்; நின் புதல்வர்கள். னக்குப் பின்னர் ஆட்சியை அடையப் போகின்றவர்களும் அவர்களே!
ஒருவேளை அவர்கள் தோற்று மாண்டுவிட்டால், நீ யாரிடம் அரசைக் கொடுக்கப் போகின்றாய்? மறுபுறம் நீ தோற்று விட்டாலோ, பழிதானே மிஞ்சும்! இனி மறச்செயல் போதும்; அறச்செயலிலே ஈடுபடுக' (புறநானூறு: 213ஆவது பாடல்) எனப் புலவர் நெறிப்படுத்தியவுடன், கோப்பெருஞ்சோழன் மானம் போய்விட்டதென்று கருதி, வடக்கிருந்து உயிர் துறந்தான்!
இலக்கியம் தந்த எச்சரிக்கையைத் தசரதன் தொடக்கத்திலேயே உணர்ந்தான்; ஆனால், கோப்பெருஞ்சோழன் தம்முடைய அடக்கத்தின்போது தான் உணர்ந்தான்!
வாழ்வியலை வரன்முறையின்றித் தொலைத்துவிட்ட "வைப்பர் போன்' காலத்து மனிதர்களுக்காக, வாழ்வியலைச் சட்டம் போட்டு எழுதி வைத்திருக்கிறான் கம்பன்! "வாழ்க்கையில் பாடாய்ப் படுத்தும் துயர்களைக் கடந்தவர்கள் யார் தெரியுமா? மன்னர் ஆனவர் அல்லர்; தேவலோகத்து இந்திரனும் அல்லன்; மாதவம் இருக்கும் மாமுனிவர்களும் அல்லர்; தாய்தந்தையர்க் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள் தாம், அருந்துயர்களைக் கடந்தவர்' (பாடல் 67 - அயோத்தியா மந்திரப்படலம்) என்று அன்று அவன் சொன்னது, அர்த்தமுள்ளது; ஆழமானது!
இலக்கியம் முன்னோக்கியும் எச்சரிக்கை மணியை ஒலிக்கும்; பின்னோக்கியும் எச்சரிக்கை மணியை எழுப்பும். மகாபாரதத்தில் சந்தனு மகராசனுக்காக அவனுடைய முதல் மனைவியின் மகன் தேவவிரதன் என்ற பீஷ்மர் தம்முடைய வாழ்க்கையையே சர்வபரித் தியாகம் செய்கிறார். தந்தைக்குச் சிற்றன்னையைத் தேடுவதற்காகத் தம் இளமையை, வம்சவிருத்திக்குரிய தாதுக்கள் அனைத்தையும் துறக்கின்றார்.
"பீஷ்மர்' என்ற சொல்லுக்கே "பயங்கரமான விரதத்தையுடையவர்' என்று பொருள். தம் மகன் செய்த மகத்தான தியாகத்தை வியந்த சந்தனு மகராசன், "வீடுமனே! ஒரு மகன் தந்தைக்கு ஆற்றக்கூடிய உதவி
களைக் காட்டிலும் நீ, எனக்கு நூறு மடங்கு அதிகமாக உதவியிருக்கிறாய்!
ஆனால், ஒரு தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய உதவியில் ஒரு சிறிதும் ஆற்ற நான் மாதவம் செய்திலேன் என்றாலும், உனக்கு ஒரு வரம் தருகின்றேன். நீயாக விரும்பி அழைத்தாலொழிய உனக்குக் காலன், தானாக வரமாட்டான்' (பாடல் 110 - குருகுலச் சருக்கம்) என வரமும் கொடுத்தான். இன்றைய பாரதத்திற்கு, மகாபாரதம் தந்த மாபெரும் எச்சரிக்கை இது!
இலக்கியம், காலத்திற்கேற்ற எச்சரிக்கையைத் தந்து கொண்டிருப்பதோடு, வரலாறும் அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை இயம்பிக் கொண்டுதான்
இருக்கிறது.
ஒளரங்கசீப் தன் தந்தை ஷாஜகான், தாஜ்மகாலைக் கட்டுவதிலேயே கஜானாவைக் காலியாக்கிவிட்டான் எனக் கருதி, தாஜ்மகாலுக்கு எதிர்ப்பார்வையிலேயே தந்தையைச் சிறையில் அடைத்தான். சிறைக்குப் பக்கத்திலேயே யமுனை ஓடினாலும், தன் தந்தைக்கு யாரும் தண்ணீர் தரக்கூடாது என்று ஆணையும் பிறப்பித்தான்!
ஷாஜஹானின் மூன்று மகள்களில் மூத்தவளாகிய ஜெஹானரா பேகம், யமுனையிலிருந்து குழாய் வழியாகச் சிறைக்குத் தண்ணீர் செல்லும் மார்க்கத்தை ஏற்பாடு செய்து, தந்தையின் மரணத்தைத் தள்ளிப் போட்டாள். தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்துக் கட்டிய ஷாஜகான், கடைசி வரையில் பார்த்துக் கொண்டே செத்தான்.
கடைசிக் காலத்தில் தன் தந்தைக்குச் செய்த கொடுமைகளை எல்லாம் எண்ணி கண்ணீர் விட்டு, அனைவரையும் கூட்டி ஓர் அறிவிப்புச் செய்தான்!
"நான் செய்த பாவங்களை எல்லாம் அல்லா மன்னிக்கவே மாட்டார். அதனால் என்னைப் புதைக்கும்போது, எந்தவித மதச் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்காமல், வெறுமனே புதைத்துவிடுங்கள்' எனப் பணித்து உயிர் துறந்தான்!
இப்படி வரலாற்றிலும் நாம் படிக்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன.
இலக்கியத்திலே ஆராய்ச்சி மணிகள் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்தாலும், கவியரசர் கண்ணதாசன் எழுப்பிய எச்சரிக்கை மணி ஏட்டுவழி மட்டுமன்றி, பாட்டுவழியும் வந்து "கணீர்! கணீர்! என நம்மை அடித்து எழுப்புகின்றது.
மற்ற இலக்கியவாதிகள் எழுப்பிய எச்சரிக்கைகள் ஆகாய வழி வந்திருக்கலாம்; ஆனால், கண்ணதாசன் எழுப்பிய எச்சரிக்கைகள், அவர் பட்ட காயங்களில் இருந்து வந்தனவாகும்.
"கண்வழி சொரியும் உப்பு, கடவுளால் வருவதில்லை; மண்வழி வரலாம்! பெற்ற மகன்வழி வரலாம் - சேர்ந்த பெண்வழி வரலாம்! செய்த பிழைவழி வரலாம், ஆனால் நண்பர்கள் வழியிலே தான், நான் கண்டேன் கண்ணீர் உப்பு' எனும் எச்சரிக்கைகளில், கண்ணதாசன் காயங்களின் ரணம் தெரிகிறது; கண்ணீரின் கனம் தெரிகிறது.
இலக்கியம் ஓர் எச்சரிக்கை! அது பழுத்த மட்டைகளை விலகச் சொல்லும்; குருத்துமட்டைகளை விழுகின்ற மட்டைகளை ஏந்தச் சொல்லும்!
கட்டுரையாளர்: பேராசிரியர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

