மக்கள் எப்போதும் அமைதியையே விரும்புகின்றனர்; அழிவை விரும்புவதில்லை. அழிவைத் தரும் வன்முறைகளையும், கலவரங்களையும் விரும்புவதில்லை. அப்படியிருக்கும்போது போரை விரும்புவார்களா?
இரண்டு உலகப் போர்களைப் பார்த்தவர்கள், படித்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் அச்சமும், அதிர்ச்சியும் அடைவார்கள். இப்படிப்பட்ட போர்களை ஆதிக்கச் சக்திகளும், அழிவு சக்திகளுமே ஆரம்பித்து வைக்கின்றன. இதனால் அழிவது அப்பாவி மக்களே. சிதைவது நல்ல உள்ளங்களே. சீரழிவது நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும்.
இரண்டாம் உலகப் போர் 1939-இல் தொடங்கி 1945-இல் முடிவு பெற்றது. இந்தப் போரைத் தொடங்கி வைத்த ஜெர்மனி 1945 மே 9-ஆம் நாள் சரணடைந்தது. நிபந்தனையற்ற சரணடையும் ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்வாதிகாரி ஹிட்லரின் ஆதிக்கப் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பான் சரணடையவில்லை.
இந்த நிலையில்தான் நேச நாடுகளின் தலைமையான அமெரிக்கா தமது வல்லரசுத் தன்மையை நிலைநாட்டிக் கொள்வதற்காக ஜப்பான் நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசியது. அந்தக் கருப்பு தினங்களை உலகம் ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது.
1945 ஆகஸ்ட் 6-இல் ஹிரோஷிமாவின் மீதும், ஆகஸ்ட் 9-இல் நாகசாகியின் மீதும் இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. உலக வரலாற்றில் அன்றுதான் முதன்முறையாக அந்த அதிபயங்கரத்தை அறிய முடிந்தது. அன்று அந்த நகரங்கள் எப்போதும் போல துடிப்புடனும், பரபரப்புடனும் இருந்த நேரத்தில்தான் அந்த ஆபத்து அவர்களின் தலைக்கு மேலாகப் பறந்து வந்தது.
காலை 7 மணிக்கு ஹிரோஷிமாவின் மேலே வானில் ஒரு அமெரிக்க விமானம் பறந்து வந்தது. அங்குள்ள தட்பவெப்ப நிலை பற்றி ஆராய்வதற்காக வந்த விமானம் அது. தாக்குதல் எதுவும் நடத்தாமல் திரும்பிப் போனது. போகும்போது "தட்பவெப்ப நிலை ஏற்றதாக இருக்கிறது' என்று சொல்ல வேண்டியவர்களிடம் தகவல் தந்தது.
மக்கள் அமைதியாக அவர்களது கடமைகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் தலைக்கு மேல் மூன்று விமானங்கள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு விமானத்தில்தான் அணுகுண்டு இருந்தது. அந்த அணுகுண்டின் பெயர் "லிட்டில் பாய்'.
அந்தச் "சின்னப் பையன்' மூன்று மீட்டர் நீளமும், 4,400 கிலோ கிராம் எடையும் இருந்தான். அவனைச் சுமந்து கொண்டிருந்த விமானத்துக்கு விமானியின் அம்மாவின் பெயரை வைத்திருந்தனர். அணுகுண்டுத் தாக்குதலுக்குத் தலைமை ஏற்றிருந்தவர் லெப்டினன்ட் கர்னல் பால் டபிள்யூ டிபெட்ஸ் (Paul W. Tibbets) என்பதாகும்.
அம்மாவின் பெயருள்ள விமானத்தில் "சின்னப் பைய'னுடன் டிபெட்ஸ் ஹிரோஷிமாவின் வான்வெளியில் பறந்து வருவதை ராடார் திரையில் கண்ட ஜப்பான் படை வீரர்கள் வானொலி அறிவிப்பு செய்தனர். அதைக் கேட்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. நொடிப் பொழுதில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.
விமானங்கள் ஹிரோஷிமாவுக்கு மேலே 9,500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. அவை அங்கே வந்ததை அறிவிக்கவோ, அபாய அறிவிப்பு செய்யவோ, வேறு எச்சரிக்கை செய்யவோ யாருக்கும் நேரம் கிடைக்கவில்லை. அதிவேகமாக கீழே குதித்த "சின்னப் பையன்' 43 நொடிகள் கடந்தவுடன் மிகப் பெரிய அளவில் வெடித்துச் சிதறினான்.
நொடிக்கும் குறைவான நேரத்தில் அங்கே ஒரு மின்னல் ஏற்பட்டது. ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்துச் சிதறியது போல நீல நிற வெளிச்சம் எங்கும் பாய்ந்தது. கண் கொண்டு பார்க்க முடியாத மின்னல் பெருக்கம். அடுத்த அரை நொடியில் அங்கே அதி பயங்கரமான வெப்பம் விரைந்தது. வெடிப்பு நடந்த மையத்துக்குக் கீழே வெப்பநிலை 3,000 டிகிரி சென்டிகிரேடு முதல் 4,000 சென்டிகிரேடு வரை அதிகரித்தது.
பூமியில் இதற்கு முன்பு எந்த வெடிகுண்டாலும் ஏற்படுத்த முடியாத வெப்பத்தால் ஹிரோஷிமா கொதித்தது. அளவற்ற சக்தி கொண்ட அழிவுத் தாண்டவத்துக்கு ஆள்பட்டவர்கள் அந்த நொடியே இறந்தார்கள் என்பதைவிட "ஆவி'யாகிப் போனார்கள் என்பதே சரியாக இருக்கும். நின்ற நிலையிலேயே இல்லாமல் போனார்கள். மிருகங்களும், தாவரங்களும் பொசுங்கிப் போயின. எல்லாமே அழிந்து போயின.
அரை நொடியில் கரைந்து காணாமல் போனவர்கள் பாடு தேவலாம். அவர்கள் இறவாமல் வாழ்ந்து நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதில்லை அல்லவா! வெடித்த இடத்தில் இருந்து சற்று விலகியிருந்தவர்கள் சாகாமல் செத்துக் கொண்டிருப்பதே வாழ்க்கையாயிற்று.
அணுகுண்டு என்றால் என்னவென்றே அதுவரை யாரும் அறிந்ததில்லை. அந்த குண்டுவெடிப்பு வெப்பமும், தீயுமாக மட்டும் இருக்கவில்லை. அது வெளியே துப்பிய கதிர்வீச்சுகள் உயிர்க்கொல்லிகளின் உச்சம்; மனித உடல்களில் எதிர்பாராத நோய்களை உற்பத்தி செய்தன. அதன் விளைவுகளை அறிவதற்குப் பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அந்தக் கொடுமையான நோய்களின் வேதனையும், விளைவுகளும் இப்போதும் ஹிரோஷிமாவில் நிலைத்திருக்கின்றன என்றும், இன்னும் பல தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
ஹிரோஷிமாவில் இவ்வாறு அழிவு நேரிட்டபோதும் ஜப்பான் அடிபணியத் தயாராக இல்லை; அதனால், ஜப்பான் மீது இரண்டாவது குண்டு வீசுவது என்று முடிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டாவது அணுகுண்டின் செல்லப் பெயர் "குண்டு மனிதன்'. "சின்னப் பையனை'விடப் பெரிதாக இருந்ததால் இந்தப் பெயர் வைத்திருக்கலாம். 4,500 கிலோ கிராம் எடையும், 3.5 மீட்டர் நீளமும் கொண்டது. ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணிக்கு இது நாகசாகி நகரில் போடப்பட்டது. ஹிரோஷிமாவில் நிகழ்ந்ததே இங்கும். இதற்கு மேல் கூற என்ன இருக்கிறது?
ஹிரோஷிமாவில் குண்டு வெடித்தபோது ஒரு லட்சம் பேர் இறந்தார்கள். ஓர் ஆண்டுக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,40,000 ஆக உயர்ந்தது. நாகசாகியில் குண்டு வெடித்த உடனே 74 ஆயிரம் பேர் இறந்தனர்; பின்னர் இறந்தவர் பற்றிய கணக்கே இல்லை. இவ்வளவுக்குப் பிறகு, நிபந்தனையின்றி சரணடையும் அறிவிப்பை ஜப்பான் ஆகஸ்ட் 15-இல் வெளியிட்டது.
சர்வாதிகாரிகளின் ஆதிக்கப் போக்கே போரையும், அழிவையும் உண்டாக்குகின்றன. இந்த உலகப் போரிலிருந்து நாடுகள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
மக்களுக்கு அளவற்ற துன்பத்தையும், சுமைகளையும், இழப்புகளையும் இரண்டாம் உலகப் போர் கொண்டு வந்தது. இந்தப் போரில் 5 கோடிக்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர். 4 லட்சம் கோடி டாலர் மதிப்புக்குப் பொருள் சேதம் ஏற்பட்டது. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
மனித மேதைமையின் ஏராளமான மதிப்புமிகு படைப்புகள் அழிந்து போயின அல்லது மறைந்து போயின. காயங்கள், நோய்கள், பசி பட்டினியால் வாடி பல லட்சம் மக்கள் ஆதரவற்றோர் ஆனார்கள்; அகதியானோர் தொகை கணக்கில் அடங்காதவை. இவ்வாறு மதிப்பிட முடியாத அழிவுப் பட்டியலை வரலாற்றின் பக்கங்களில் காணலாம்.
அணு ஆயுதம் இல்லாத அக்காலத்திலேயே இவ்வளவு அழிவு ஏற்பட்டுள்ளபோது இந்த அணு ஆயுதக் காலத்தில் போர் ஏற்படுமானால் என்னவாகும்? உலகம் அழிவதைத் தவிர வேறு வழியில்லை. இது தெரிந்தும் தங்களை வல்லரசு நாடாகக் காட்டிக் கொள்வதற்காக அணு ஆயுதங்களைத் தயாரிக்கவே ஆலாய்ப் பறக்கின்றனர்.
அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து என்னும் இந்த அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், பாகிஸ்தானும் கூட சேர்ந்திருக்கின்றன. கேட்டால், "பாதுகாப்புக்காக' என்று கூறுகின்றனர். அணுகுண்டு போட்டால் அழிவு என்று தெரிந்த பிறகும், யாரைப் பாதுகாக்கப் போகிறார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?
அணுகுண்டு தோன்றக் காரணமாய் இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அணுகுண்டு தயாரிப்பின் தாரக மந்திரமான சமன்பாடு ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையின் ஒரு பிரிவேயாகும்.
அணு யுகத்தின் தந்தையான ஐன்ஸ்டீன் போரைக் கடுமையாக வெறுத்தார். நல்லவர் பலரின் உயிரைக் "காவு' வாங்கும் போரை அநாகரிகத்தின் அதிசய உரு என்றும், மனிதத் தன்மைக்கு மாறானது என்றும் கூறியுள்ளார்.
அந்த விஞ்ஞானியிடம் அவரது நண்பர், "மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?' என்று கேட்டார். அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? "மூன்றாவது உலகப் போரைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்...'
இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் மனித இனமே முழுமையாக அழிந்துவிடும். அதன்பின், புதிய மனித இனம் உருவாக வேண்டும். அந்தக் கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்.
அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதை அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு எச்சரித்தார். ஆனால், இந்த எச்சரிக்கை யார் செவியிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன. வல்லரசுகளின் கைப்பாவையாகவே ஐ.நா. சபை செயல்படுகிறது.
வெள்ளைப் புறாக்களைப் பறக்க விடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாக்களை பறக்க விடுவதும் நாம். அதனைப் பின் தொடர்ந்து சென்று வேட்டையாடுவதும் நாம். இந்த நிலைமை மாறாமல் உலகில் சமாதானம் உருவாகாது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.