அவசர சிகிச்சை தேவை
அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.


அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
நெருக்கடி நிலை பிரகடனத்துக்குப் பின் 1977-இல் நடைபெற்ற தேர்தலிலும், 1990-களில் நடைபெற்ற தேர்தல்களில் கூட ஓரளவு வெற்றியாவது கிடைத்து வந்தது. ஆனால், இப்போது பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
1998-இல் காங்கிரஸ் கூடாரமே கலகலத்துப் போனபோது, கட்சியை உயிர்ப்பிக்க சோனியாவை கட்சிப் பணிக்கு அழைத்துவந்தனர். இதற்கான பலனும் 2004-இல் கிடைத்தது. மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலர்ந்தது.
பின்னர், ராகுலும் தீவிர அரசியலுக்கு வர, அவரை ஊடகங்களும், தலைவர்களும் வரவேற்று மகிழ்ந்தனர்.
இருப்பினும், 2010ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தல்களில் பிரசார வியூகத்தை வகுத்த ராகுலுக்கு கிடைத்திருப்பது தோல்வி மேல் தோல்வியே. கஜினி முகம்மது இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து, ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஆனால், ராகுலோ பலமுறை பிரசார வியூகங்களை மாற்றியமைத்தும், பலனில்லை. தோல்விகளும், சறுக்கல்களும்தான்.
பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன் சிங் நேரடியாக அழைப்பு விடுத்தும் எந்தப் பொறுப்பையும் ஏற்காத ராகுலின் பிரதமர் கனவு தவிடுபொடியானது.
மக்களவைத் தேர்தலுக்கு அடுத்து வந்த மகாராஷ்டிரம், அரியாணா, தில்லி உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தோல்வியே.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை (நூறு நாள் வேலைத் திட்டம்) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியபோது, இதன் மூளையாக இருந்தவர் ராகுல் காந்திதான் என்று ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டினர். இன்றோ காங்கிரஸின் மூத்த தலைவர்களே விமர்சனம் செய்யும் நிலைக்கு ராகுல் உள்ளார்.
உள்கட்சித் தேர்தலே முறையாக நடத்தப்படாத காங்கிரஸில், இளைஞர், மாணவர் அமைப்புகளுக்கு ராகுல் நடத்திய தேர்தல்களில் கட்சியின் மூத்தத் தலைவர்களின் ஆசி பெற்றவர்கள்தான் பொறுப்புகளுக்கு வந்தனர். இளைஞர் காங்கிரûஸ வலுப்படுத்தும் முயற்சி கானல் நீராகவேதான் உள்ளது.
அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்ற ராகுலின் அழைப்பு ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸிலும், ஆட்சி அதிகாரங்களிலும் வாரிசுத் தலைவர்கள் அங்கம் வகிப்பது தொடர்கதையாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.
கட்சி நிர்வாகத்தை ராகுல் முழுமையாக ஏற்ற நேரத்திலேயே, ஜெகன்மோகன் ரெட்டி, ரங்கசாமி, ஜி.கே.வாசன் போன்றோர் தனிக் கட்சிகள் தொடங்கினர். இப்போது பலரும் காங்கிரஸில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகின்றனர்.
ஊழல் முறைகேடுகள் காங்கிரஸ் மீது அவநம்பிக்கையை மக்களிடையே விதைத்துவிட்டன. முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் கொள்கைகளில் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டதை மறுக்க இயலாது.
மத்திய ஆட்சியில் இருந்தபோது அன்னிய முதலீட்டை அதிக அளவில் காங்கிரஸ் அனுமதித்தது என்பதே உண்மை.
மாநிலங்களில் பலம் பொருந்திய தலைவர்கள் இல்லை என்பது நிதர்சனம். மாநிலங்களில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருக்கக் கூடாது என்பதற்காக போட்டிக்குச் சில தலைவர்களை வளர்த்துவிடும் போக்கையே கட்சித் தலைமை அவ்வப்போது கடைப்பிடித்து வருகிறது.
ராகுல் புகழின் உச்சத்தில் இருந்தபோது, அவருடைய போர்ப்படை என்று சில இளம் தலைவர்கள் வர்ணிக்கப்பட்டனர். ஆனால், இப்போது தோல்விக்கு ராகுல் மீது குற்றம் சாட்டப்படும்போது, அந்த இளம் தலைவர்கள் ராகுலுக்கு ஆதரவுக் கரம் நீட்டவோ, குரல் கொடுக்கவோ முன்வரவில்லை.
இளைஞர், மாணவர் அமைப்புகளுக்கு முறையாக நடத்திய தேர்தல்களால் வளர்ச்சி பெற முடியாததை மறைத்து, கட்சிக்கு தேர்தல் நடத்தாததால்தான் தோல்வி என்று கட்சியின் மூத்தத் தலைவர்கள் மழுப்புகின்றனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் தொண்டர்களைப் பார்க்கும் காங்கிரஸ் தலைவர்கள், தங்களது சொந்த ஊரில் கூட கிளைகளை ஏற்படுத்தவோ, வாக்குச் சாவடிக்கு முகவரை நியமிக்கவோ முடியாத நிலையே உள்ளது.
காங்கிரஸ் கட்சி மீண்டும் உயிர்பெற வேண்டுமானால் சாதாரண சிகிச்சை போதாது; அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் பின்புலமே இல்லாத சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களான நரேந்திர மோடியை பிரதமராகவும், அரவிந்த் கேஜரிவாலை தில்லி முதல்வராகவும் மக்கள் ஆக்கியுள்ளனர்.
ஆனால், காங்கிரஸிலோ கிராமக் கிளை முதல் தேசியத் தலைமை வரை வாரிசுத் தலைவர்களும், ஒரே தலைவர்களும்தானே தொடர்ந்து அதிகாரங்களிலும், பதவிகளிலும் அட்டையாக ஒட்டிக் கொண்டுள்ளனர்.
செல்வந்தர்களும், தொழிலதிபர்களும், மிட்டாமிராசுதாரர்களும், நிலச்சுவான்தார்களும்தானே காங்கிரûஸ வழிநடத்தும் இன்றைய தலைவர்கள்.
சாதாரணமானவர்களின் "கை'கள் என்றைக்கு காங்கிரஸில் உயர்பதவிக்கு வரும் நிலை ஏற்படுகிறதோ, அன்றுதான் காங்கிரஸூக்கு விடிவுகாலம்.
இல்லையெனில், சுதந்திரம் பெற்றவுடன் காங்கிரûஸ கலைக்க வேண்டும் என்று கூறிய மகாத்மா காந்தியின் எண்ணம் நிறைவேறிவிடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...