கனியிருப்பக் காய் கவர்ந்தற்று...
ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளும், தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் லட்சக்கணக்கானோரின் இனிமையான வாழ்க்கையைத் துன்பப்படுத்திக்


ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளும், தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் லட்சக்கணக்கானோரின் இனிமையான வாழ்க்கையைத் துன்பப்படுத்திக் கொண்டு வருகின்றன. இல்லற வாழ்க்கையை இழந்தும், குழந்தைகளைக் கவனிக்க முடியாமலும் இருந்துவருவோர் எண்ணில் அடங்காதோர்.
சமூக வலைதளங்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தோர் ஒன்று கூடினர் என்றெல்லாம் சுட்டிக் காட்டினாலும் ஒற்றுமையாக இருந்தவர்கள் பிரிந்தனர் என்றச் செய்திகள் வந்ததில்லை.
வெளிச்சத்துக்கே வராத "லெட்டர் பேட்' கட்சியின் கிளை உறுப்பினர் முதல் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர் முதல் பிரதமர், குடியரசுத் தலைவர் வரை மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு நிர்வாகங்களும் சமூக வலைதளங்களை ஊக்குவிப்பதால் இதுவே உயர்வானது என்று கருதும் போக்கு வளர்ந்துவிட்டது.
கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த சில நொடிகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் முதல் கல்லறையில் சடலம் அடைக்கம் செய்யப்படும் நேரம் வரையில் செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் ஆண்ட்ராய்டு வாயிலான இணையதளத்துடன் கூடிய செல்லிடப்பேசியில் அனுப்பிவைக்கப்படுகின்றன.
சிறுவர்கள், சிறுமிகள் முதல் முதியவர்கள், மூதாட்டிகள் கூட இன்று சுட்டுரை (டுவிட்டர்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூல் (பேஸ் புக்).... என எண்ணிலடங்கா வலைப்பூக்களில் முகவரிகளைத் தொடங்கிக் கொண்டு, தூங்கும் நேரத்தைத் தவிர்த்து பல மணி நேரம் பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முகநூலிலே விழிப்பவர்கள்; கட்செவி அஞ்சலிலே காலத்தைக் கடத்துபவர்கள், சுட்டுரையிலே வாழ்க்கையைச் சுட்டுக்கொள்பவர்கள்... என இனிமையான வாழ்க்கையை இணையதளத்திலேயே தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் லட்சக்கணக்கானோர்!
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் இல்லத்தரசிகள் (ஆண்கள் கூட விதிவிலக்கல்ல..) கவனத்தைச் செலுத்தி, கண்ணீரும், கவலையுமாக காலத்தைக் கடத்துபவர்கள் ஏராளமானோர்.
ஒரு காலத்தில் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தோரின் பிரச்னைகளையும், கவலையையும் கேட்டு ஆறுதல் அளிப்பவர்களாகப் பெண்கள் இருந்தனர்.
ஆனால், இப்போது தொலைக்காட்சி நாயகிகளின் (வில்லிகள்தான்!) வில்லத்தனமான நடிப்பையும், அவர்களது போராட்டமான வாழ்க்கையையும் பார்த்து, ரசித்து, கேட்டு, பேசி காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
காவல் நிலையமும், நீதிமன்றமும் இடம்பெறாத சின்னத் திரை நெடுந்தொடர்கள் இல்லை; உறவினர்களையும், நண்பர்களையும் பழிவாங்கத் துடிக்காத சின்னத்திரை நாயகிகள் இல்லை.
சொத்துக்காக கொலையும் செய்யத் தயங்காத பெண்கள்: உறவுகளை வீழ்த்த நினைக்கும் பெண்கள்... என்றுதான் தொடர்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறாக, சின்னத்திரையில் சித்திரிக்கப்படும் காட்சிகளைப் பார்த்து, தங்களது குடும்பத்தில் இவ்வாறாக இடம்பெற்றுவிடுமோ என்ற அச்சத்தோடு இனிமையான வாழ்க்கையைப் பெண்கள் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
திருமணத்துக்குப் பின்னர் குடும்ப உறவு இப்படித்தான் இருக்குமோ என்ற ஐயத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தும் பெண்களும் உண்டு.
இடையில் மின்நிறுத்தம் ஏற்பட்டாலும், உறவுப் பெண்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு நேரடி ஒளிபரப்பாக சின்னத்திரையின் ஒளிபரப்பை ஒலிபரப்பாகக் கேட்கும் பெண்களும் உண்டு. அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூட பணிநேரத்தில் விட்டுபோன தொடர்களை "யூ டியூப்' வலைதளத்தில் பார்ப்பதும் உண்டு.
ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியின் வாயிலாக உலகம் உள்ளங்கையில் சுருங்கிவிட்டது என்பது உண்மையே. செய்திகள், அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என்பது நல்ல விஷயம்தான்.
இருந்தாலும், ஆபாசப் படங்களைப் பார்த்தல், காதலையும், கள்ளக்காதலையும் ரகசியமாக வளர்த்தல்.. என்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்தான் கணிசமானோர் உள்ளனர்.
பெற்றோர் சின்னத்திரை தொடர்களிலும், ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியிலும் மூழ்கிவிட, சிறார்கள் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியிலும், கணினியிலும் மூழ்கிவிட்டுத் தவறான நடவடிக்கைக்குச் சென்றுவிடும் நிலையும் ஏற்படுகிறது.
சமூக வலைதளங்களிலும், நெடுந்தொடர்களிலும் எந்த நேரமும் மூழ்கிக் காணப்படுவதும் ஒருவிதமான மன நோய்தான் என்பது மருத்துவர்களின் கருத்து.
வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள் வந்தால் இல்லத்துப் பெரியோர் பேசிக் கொண்டிருக்க, செல்லிடப்பேசியிலும், நெடுந்தொடர்களிலும் நடுத்தர வயதுடையவர்களும், இளைஞர்களும் மூழ்கிவிடுவது உண்டு.
உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ள நண்பர் அனுப்பும் தகவலுக்கு "லைக், ஷேர்..' கொடுப்போர், பக்கத்து வீட்டில் உள்ள சக வயது நண்பர்களுக்கு "ஹலோ' கூட சொல்லாத நிலைதான் இப்போது உள்ளது.
இந்த இரு ஆபத்துகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளான இரண்டிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்பார் திருவள்ளுவர்.
ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியிலும், சின்னத்திரையிலும் அறிவியல் ரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. அன்னப் பறவை எப்படி பாலைத் தனியாகப் பிரித்து அருந்துமோ, அதுபோன்று ஆறறிவு படைத்த நாம்தான் இவற்றிலிருந்து நல்ல விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...