அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

என்று மடியும் இந்த அடிமை மோகம்?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது வெட்டவெளிச்சமாகி நிரூபணம் செய்யப்பட்டுவிட்ட நிலையில்,

News image
Updated On :20 ஜூலை 2015, 8:01 pm

பாரத் தி. நந்தகுமார்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது வெட்டவெளிச்சமாகி நிரூபணம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இனிமேலாவது கிரிக்கெட் மீதான கோடிக்கணக்கான மக்களின் மோகம் குறையுமா? நமது பாரம்பரிய விளையாட்டுகளின் பக்கம் அரசுகள், மக்களின் பார்வை திரும்புமா?
 கிரிக்கெட் போட்டிகள் நடந்தால், கல்வி நிலையங்களில் மாணவர்களின் எண்ணிக்கையும், அரசு, தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்திருக்கும்.
 பணியில் இருப்போரும் நவீன மின்னணு சாதனங்கள் வாயிலாக நேரடி ஒளி(லி)பரப்பைப் பார்த்தும், கேட்டும், பேசியும் கொண்டிருப்பர். சாலைகள் வெறிச்சோடிக் காணப்படும்.
 இந்திய அணி வெற்றி பெற்றால் ஆரவாரம் இருக்கும். குடியரசுத் தலைவர் முதல் வெளிச்சத்துக்கே வராத அரசியல் கட்சித் தலைவர்கள் வரை வாழ்த்துப் பரிமாற்றம் இருக்கும். உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் தோல்வி அடைந்தால் கதறி அழுவோரும் உண்டு; தற்கொலை செய்துகொள்வோரும் உண்டு. அந்த அளவுக்கு கோடிக்கணக்கானோருக்கு கிரிக்கெட் மீது மோகம்.
 இதுதவிர, பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சிகள், ஊடகங்கள், இணையதளங்கள்... அனைத்திலும் கிரிக்கெட்டுக்கு அதிகப்படியான முக்கியத்துவம்.
 குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரையில், விடுமுறை நாள்களில் மைதானங்களில் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் விடலைகள் முதல் முதியவர்கள் வரை கிரிக்கெட் விளையாடுவதுண்டு.
 அரசியல், திரையுலகப் பிரமுகர்களைக் காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். போட்டிகள், விளம்பரப் படங்கள் என ஆயுள் முழுவதும் வருவாய் கொட்டும். சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து, கீர்த்தி ஆசாத், சேதன் செüஹான் உள்ளிட்ட வீரர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் கால் பதித்துள்ளனர்.
 "11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்' என்றார் ஜார்ஜ் பெர்னாட் ஷா. ஆனால், இன்று "பணம் பண்ண வழி தெரிந்த 11 புத்திசாலிகள் விளையாடும் விளையாட்டை 110 கோடிக்கும் அதிகமான ஏமாளிகள் பார்க்கிறார்கள்' என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகப் பெரிய மோகம், வெறி...!
 உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க ஆட்சிக்குள்பட்ட பகுதிகளில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமடைந்துள்ளது.
 மக்களின் வாழ்வில் பிணைந்துவிட்ட கிரிக்கெட் அணியை வழி நடத்துவது மத்திய, மாநில அரசுகள் அல்ல! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எனும் தனியார் அமைப்பு.
 இதன் தலைவராகவும், நிர்வாகிகளாகவும் ஆவதற்கு கோடீஸ்வரர்களும், பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளின் தலைவர்களும் களம் காண்கின்றனர். இந்த அமைப்பின் தேர்தல்களில் கோடிக்கணக்கான ரூபாய் பணப் புழக்கமும் உண்டு.
 பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்தல், போட்டிகளை நடத்துதல், விளம்பர வருவாய், பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம், வீரர்கள் தேர்வு, தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பு உரிமம் என சட்டப்பூர்வமான செயல்பாடுகளோடு, பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் சூதாட்டம் வேறு!
 கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியபோது, கிரிக்கெட் மீதான மோகம் மேலும் சூடுபிடித்தது. வீரர்களை பல கோடி ரூபாய்களுக்கு கூட ஏலத்தில் எடுத்தனர்(!).
 இந்த அளவு மக்களை மயக்கிய போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் அண்மையில் வெட்டவெளிச்சமாகியது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளை 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தும், சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரர் ராஜ் குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்க வாழ்நாள் முழுவதும் தடை விதித்தும் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
 இந்தத் தீர்ப்பு 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி பற்றியது மட்டுமே. இதற்கு முன்னரும், பின்னரும் நடைபெற்ற போட்டிகளைப் பற்றி ஆராய்ந்தால் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம்.
 இந்தத் தீர்ப்பு அணியின் நிர்வாகிகளே சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்ததானது. இதுதவிர, வீரர்களுக்கும், நிர்வாகத்துக்கும் தொடர்பில்லாத ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு போட்டியின்போதும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்குகிறது. இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸôர் கைது செய்ததும் அவ்வப்போது பத்திரிகைகளில் வந்துள்ளன.
 இவ்வளவு நடந்த பிறகும் கூட, அடுத்த ஐ.பி.எல். போட்டி பெரும் வெற்றி பெறும் என்று அதன் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். எந்த நம்பிக்கையில் இதைக் கூறுகிறார் என்பதை விளக்கத் தேவையில்லை.
 உலகில் சில நாடுகள் மட்டுமே விளையாடும் இந்த விளையாட்டில் இருந்து கவனம் திரும்ப வேண்டுமென்றால், நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கும், தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான கபடிக்கும், மற்ற பல விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
 மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளின் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.