அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மொழிக் கல்வியும் கல்வி மொழியும்

அண்மையில் வெளிவந்த பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், அதையொட்டி தினமணியில் வெளிவந்த ஆழமான தலையங்கமும்,

News image
Updated On :10 ஜூன் 2015, 8:06 pm

கா.செல்லப்பன்

அண்மையில் வெளிவந்த பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், அதையொட்டி தினமணியில் வெளிவந்த ஆழமான தலையங்கமும், மொழிக் கல்வி பற்றியும், கல்வி மொழி பற்றியும் மேலும் சிந்திக்க வைக்கின்றன.
 மொழியும் கணிதமும் அறிவுத் துறைகள் மட்டுமன்றி மற்ற அறிவுத் துறைகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்குகள் என்பார் கன்டா நாட்டு அறிஞர் நார்த்ராப் ஃப்ரை. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற வாசகமும் இதே கருத்தைத்தான் கூறுகின்றது.
 மொழி, ஒரு மனிதன், சமுதாயத்தின் விழி. அது மக்களை இணைக்கும் சங்கிலி மட்டுமன்றி, நம்மை அறிவுலகத்தோடும், கடந்த காலத்தோடும் இணைக்கும் கருவி. மேலும், அதுவே சிந்திக்கும் ஆற்றலின் மூல ஊற்று.
 இதைத் தாய்மொழிதான் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை. ஏனென்றால், குழந்தை உலகை முதலில் உணர்ந்து கொள்வது தாய்மொழியில்தான். குழந்தைகள் தாய்மொழியை தாயின் அன்போடு மட்டுமன்றி, வாழ்வோடும் இணைந்து கற்றுக்கொள்கிறது.
 அது மொழியைக் கற்றுக் கொள்வதற்காகப் பேசுவதில்லை; அதன் அடிப்படைத் தேவைகளை வெளிப்படுத்தவும், மற்றவர்களோடு உறவாடவும் பேசும்போது மொழியையும் துணை நிகழ்வாகக் கற்றுக் கொள்கிறது.
 குழந்தைகளின் மொழி வளர்ச்சி முதல் ஆண்டிலேயே நிகழ்வதாகவும், இரண்டாம் ஆண்டின் இறுதியில், தன்னைச் சுற்றிப் பேசப்படும் மொழியின் பெரும் பகுதியை உள்வாங்கிக் கொள்வதாகவும் கூறுவர்.
 இந்த மொழி வளர்ச்சி இல்லத்தில் தொடங்கி, அதன் அண்மைச் சூழலில் (neighbourhood) விரிந்து, பள்ளிப் படிப்பில் ஒழுங்கு பெற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இப்போது தெரிந்து கொள்ளும் திறனும் மொழித் திறனும் இணைந்தே வளர்கின்றன.
 முதலில் வார்த்தை, வாழ்க்கைக்கு ஒளிபாய்ச்ச, வாழ்க்கை வார்த்தைக்கு தெளிவு தருகிறது. பள்ளியில் படிப்படியாக அனுபவ (experiential) அறிவு, பகுத்தாயும் அறிவாக (analytical knowledge) வளர்கிறது.
 பள்ளிகளில் மாணவர்கள், மொழிக் கல்வியையும், மொழிவழிக் கல்வியையும் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழும் ஆங்கிலமும் மொழிகளாகக் கற்பிக்கப்படுகின்றன. மற்ற பாடங்களை பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழிலும் தனியார், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில மொழி வழியாகவும் கற்கின்றனர். இது ஒரு அப்பட்டமான சமுதாயப் பாகுபாட்டு வேலையாகும்.
 ஆங்கில வழிக் கல்வியால் மாணவர்கள் அறிவாற்றலில், பாடங்களில் சிறந்து விளங்குவதாகக் கருதுவது ஒரு மாயையே. என்றாலும், அந்த மாயைக்கு மதிப்பளிப்பதுபோல் நமது கல்வி முறை இயங்குவது ஒரு நவீன காலனிய (Neo-colonial) சிந்தனையின் வெளிப்பாடே.
 அண்மையில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 773 மாணவர்களில் தமிழ்வழியில் படித்தவர்கள் 23 பேர் மட்டுமே என்பதை "தினமணி' தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது ஆங்கில வழிக் கல்வியின் மேன்மையையும் தமிழ்வழிக் கல்வியின் தரமின்மையையும் காட்டவில்லை.
 முதலாவதாக, தேர்வு முறையிலே குறையிருப்பதாகத் தோன்றுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பது பெருமைக்குரிய செய்தியாகத் தோன்றவில்லை. ஏதோ கணக்கு போல் எல்லாப் பாடங்களிலும் புள்ளிவிவரங்களைச் சோதிப்பதாக தேர்வு இருந்தால்தான் இது சாத்தியம். மாணவர்களின் பகுத்தாய்வுத் திறன், சிக்கல்களை அவிழ்க்கும் திறன் போன்றவை இத்தகையத் தேர்வுகளில் சோதிக்கப்படுவதில்லை.
 இரண்டாவதாக, ஆங்கில வழிப் பயின்ற மாணவர்கள், பாடங்களின் அடிப்படைகளை ஆழமாக அறிந்து, உணர்ந்து உள்வாங்க வாய்ப்பில்லை. ஏனென்றால், நம் அடிப்படைச் சிந்தனைக் கூறுகள் தாய்மொழியோடு இணைந்தவை.
 இயல்பாக வாழ்வோடு இணைந்து உலகையும், தாய்மொழியையும் ஒருசேர கற்றறிந்ததுபோல, தாய்மொழி வழியாக வாழ்வின் விளக்கங்களான பாடங்களைக் கற்கும்போதுதான், கற்பவர்களின் நெஞ்சில் தெளிவாகவும் ஆழமாகவும் பதியும். மேலும், அவற்றை அறிவோடு அலசிப் பார்க்கவும் முடியும். தாய்மொழியில்தான் சொல்லும் பொருளும் இணைந்திருப்பதாக நாம் உணர்வதாக கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.
 இரண்டாவது, மொழி வழியாக பாடங்களைக் கற்கும்போது, இளைய நெஞ்சங்களிலே இரண்டுபட்ட நிலை ஏற்படுகிறது; அல்லது தாய்மொழியின் சிந்தனைத் தளம் நசுக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் சூழலிலிருந்தும், ஏன் தங்களிடமிருந்தே அன்னியப்பட்டுப் போகிறார்கள்.
 ஏழை, நடுத்தர வகுப்புப் பெற்றோர்கள், ஆங்கில வழிக் கல்வியால் தங்கள் பிள்ளைகளும் சிறந்த நிலையை அடைய முடியும் என்ற தவறான நம்பிக்கையில் தங்கள் பிள்ளைகளையும் சிரமப்பட்டு பணக்காரப் பள்ளிகளில் சேர்த்து, பணத்தை மட்டுமன்றி தங்கள் பிள்ளைகளையும் இழக்கிறார்கள்.
 ஏனென்றால், அந்தப் பிள்ளைகளின் குடும்பச் சூழலும் பள்ளியின் ஆங்கிலச் சூழலுக்கும் உள்ள முரண்பாடு அவர்களைப் பிளவுபட்ட (split) மனிதர்களாக்குகிறது. அறிவியல், பொறியியல் முதலிய எல்லாத் துறைகளிலும் பள்ளிகளில் தாய்மொழி வழிக் கற்றவர்கள் தலைசிறந்து விளங்குவதும் தமிழ்வழிக் கல்வியின் சிறப்பையே காட்டுகிறது.
 ஆங்கில வழிக் கல்வியால், ஆங்கில மொழி அறிவு பெருகும் என்பதும் சரியல்ல. இரு மொழி அறிவு, அறிவுக் கூர்மைக்கு வழிவகுக்கும் என்று கன்டா நாட்டு அறிஞர்களின் ஆய்வு நிறுவியுள்ளது. ஆனால், ஆங்கில வழிக் கல்வியால், மாணவர்களின் ஆங்கில அறிவு பெருகவில்லை என கேரளப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று காட்டுகிறது.
 வெல்ஷ் மொழி பேசுபவர்கள், ஆதிக்க மொழியான ஆங்கில மொழி வழியாகக் கற்கும்போது, தங்கள் மொழியை இழந்து விடுவோமோ என்ற அடிமன அச்சத்தால் ஆங்கிலத்தையும் நன்கு கற்க முடியாமல் தவிக்கின்றனர்.
 ஆங்கிலம் வழியாக பாடங்களைக் கற்கும்போது அதிக அளவு ஆங்கிலம் பேசப்படுவதால், மாணவர்கள் தங்களை அறியாமலே ஓரளவு ஆங்கிலத்தையும் உள்வாங்கினாலும், அது உரையாடும் மொழியாவதில்லை.
 அதற்கு ஆங்கில மொழிக் கல்வியை, நவீன உத்திகள், சாதனைப் பட்டறைகள், பல்ஊடக (multimedia) சாதனங்கள் வழியாகச் சிறப்பாகச் செய்வதே சரியான வழி. மேலும், தமிழ்வழி கற்கும் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் 1-இல் கருத்தாடல், பாடம் சம்பந்தமான ஆங்கில நூல்களைக் கற்க உதவும் வகையில் பால வகுப்புகள் (bridge courses) நடத்தப்பட வேண்டும். கல்லூரிகளிலும் தொடக்கத்தில் இவற்றை நடத்தலாம்.
 அதேபோல தமிழ் மொழிக் கல்வியும், தமிழ்வழிக் கல்வியும் தரம் உயர்த்தப்பட வேண்டும். மொழியியல், சமூக இயல்களின் துணையோடு தமிழ் மொழிக் கல்வி மாற்றப்பட வேண்டும்; அது வெறும் இலக்கியக் கல்வியாக இருக்காமல், அறிவுத் துறைகளுக்கு இட்டுச் செல்லும் கல்வியாகவும் இருக்க வேண்டும்.
 தமிழ்வழிக் கல்வி சிறக்க, பாட நூல்கள் ஆங்கில வழி நூல்களுக்கு இணையாக, ஆனால் வெறும் மொழிபெயர்ப்புகளாக இல்லாமல் இருக்க வேண்டும். இவற்றுக்குத் துணையாக உயர்நிலையில், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பெரிய அளவில் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும்.
 பாவேந்தர் கூறுவதுபோல், "வெளியுலகில், சிந்தனையில் விளைகின்ற ஒவ்வொன்றுக்கும் தெளிவுறுத்தும் படங்களோடு சுவடிகள் செய்து, செந்தமிழைச் செழுந் தமிழாக்கிவிட வேண்டும்'.
 அனைத்துக்கும் மேலாக, தமிழில் எல்லாத் துறைகளிலும், நிலைகளிலும் சுயசிந்தனை வளர்க்கப்பட வேண்டும்.
 முடிவாக, ஆங்கில வழிக் கல்வி படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்; ஆங்கில மொழிக் கல்வி வலுப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மொழிக் கல்வியும், தமிழ்வழிக் கல்வியும் தரம் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்த் தளத்திலே வேரூன்றி நாம் உலகோடு உயர முடியும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 ஆங்கில வழிக் கல்வி படிப்படியாக குறைக்கப்பட வேண்டும்; ஆங்கில மொழிக் கல்வி வலுப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மொழி
 கல்வியும், தமிழ்வழிக் கல்வியும் தரம் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்த் தளத்திலே வேரூன்றி நாம் உலகோடு உயர முடியும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.